“தமிழர்களை போலவே அநியாயமாக உயிரிழந்த சிங்கள -முஸ்லிம் மக்களும் ஒரே நாளில் நினைவு கூரப்பட ஒரு பொதுவான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.” என ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் க. துளசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களில் தெற்கில் உருவாகிய சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை நசுக்குவதில் தனது வக்கிரமான இராணுவமேலாண்மையை கையாண்ட அப்போதைய இலங்கை அரசு அதில் வெற்றி கண்டிருந்தது. அந்த வெற்றி என்பது மானிட குலத்திற்கெதிரான மிலேச்சத்தனமான படுகொலைகளின் வெற்றியாகவே பார்க்கப்பட வேண்டும்.
தனது அரசையும் இருப்பையும் தக்கவைப்பதற்காக பல ஆயிரம் சிங்கள இளையோர்களையும் புத்திஜீவிகளையும் படுகொலைசெய்த இந்த இராணுவ சிந்தனைவாதம் காலப்போக்கில் தமிழ் சமூகத்தையும் பீடித்துக்கொண்டது. தெற்கின் இராணுவ மனோபாவத்தை எதிர்கொள்ள கூடியதாக தமிழினம் தமது அரசியல், உயிர்வாழ்வதற்கான உரிமைகளை வெற்றிகொள்ளும் பொறிமுறையாக இராணுவ இயற்பியலின் மீது நம்பிக்கைகொள்ள தள்ளப்பட்டனர்.அதுவே அன்றைய காலத்தின் தமிழ் இளைஞர்களின் ஒரே ஒரு முடிவாகவும் இருந்தது. இதன் தொடர்சியும் அதன் முடிவும் பல இலச்சக்கணக்கான உயிர்களையும் உடைமைகளையும் அழித்திருக்கின்றது. பல இலச்சக்கணக்கான தமிழ்மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து வேரோடு வெளியேற்றப்பட்டு பல்வேறு நாடுகளில் தஞ்சமடையவும் காரணமானது.
தமிழர்களை போலவே இலங்கை மண்ணில் அநியாயமாக உயிரிழந்த சிங்கள -முஸ்லிம் மக்களும் ஒரே நாளில் நினைவு கூரப்பட ஒரு பொதுவான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். பெற்றோர் உரித்துடையோர் ஒரே நாளில் அவர்களது மத தலங்களிலும் அவர்கள் உயிரிழந்த இடங்களிலும் ஒன்று கூடி அவர்களை நினைவில் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உள்ளதென்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அன்பான உறவுகளே ஒரு இனத்தின் விடுதலை என்பது ஒரு சில சமர்களையோ சம்பவங்களையோஅடிப்படையாக கொண்டதல்ல. அது தேசவிடுதலையின் ஆன்மாவோடு தசாப்தங்கள் கடந்து பயணிக்க வேண்டியது.நாம் ஒரு திடகாத்திரமான போராட்ட வடிவமைப்பை கொண்டிருந்தவர்கள். அதற்காக அதிஉச்ச தியாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 2009 பின்னரான எமது மக்களுக்கான அரசியல் சமூக விடிவிற்காக எந்தவொரு தத்ரூபமான வடிவங்களையும் நாம் கொண்டிருக்க முயற்சிக்காமையானது துரதிஸ்ட வசமானது.
கனதியான ஒரு போராட்டத்தின் பரிணாமத்தினை எமது மக்களின் நலன்சார்ந்து அதன் வழிவகைகளை கோட்பாட்டு ரீதியில் முயற்சிக்கவில்லை. 2001 தமிழினம் பலமடைந்திருந்த போது பல கசப்புணர்வுகளை தாண்டி ஒன்றினைந்திருந்த தமிழ் அரசியல் தரப்புக்கள். முள்ளிவாய்க்காலின் பின்னர் நாம் பலமிழந்த நிலையில் தமக்குள் தாமே சிதைவுற்று தமிழினத்தின் தேசிய பலத்திற்கு ஊறு விளைவித்தமையினை பேரவலத்தின் ஓலத்தில் இறந்துபோன ஆத்மாக்களும் நெஞ்சுரத்தோடு வீழ்ந்துபோன ஆன்மாக்களும் ஒருபோதும் மன்னிக்காது.
இலங்கைத்தீவில் நீடித்த பெரும்போர் ஆரம்பிக்கப்பட்ட பொழுதுகளில் அதன் காரண கர்த்தாக்களாகவோ அல்லது அந்த போரில் நேரில் சம்மந்தப்பட்ட தரப்புக்களாகவோ நாங்கள் இருக்கவில்லை.ஆனால் முள்ளிவாய்காலில் இந்த போர் முடித்து வைக்கப்பட்டபோது அதன் பிரதான வகிபங்காளர்களாக இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களே போர்க்களத்தில் நின்றிருந்தனர்.
இந்த ஜதார்த்தத்தின் அடிப்படையில் போர் முடிவிற்கு பின்னர். இலங்கையின் பாதிக்கப்பட்டோருக்கான நீதி மீளிணக்கம் மற்றும் மீள் கட்டுமானம் சமூக பொருளாதார அபிவிருத்திஇனங்களுக்கிடையிலான சகவாழ்வு போன்ற இலக்குகளை எட்டுவதற்கானதும் ஏற்றுகொள்ளதக்கதும் ஜதார்த்தபூர்வமானதுமான ஒரு செல்நெறிப்போக்கினை உருவாக்குவதற்கான ஏதுநிலைகளில் அதியுச்ச பொறுப்பும் அதிகாரமும் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் உள்ளதென நாங்கள் திடமாக நம்புகிறோம்.அந்த செல்நெறிப்போக்கினை கட்டி எழுப்புவதற்கான காத்திரமான பங்களிப்பையும் அனுசரணையையும் செய்ய வேண்டிய தார்மீக கடமை இந்தியாவிற்கும் இலங்கை பிரச்சனைகளில் கரிசனையுள்ள சர்வதேச நாடுகளுக்கு உள்ளதென்பதை நாம் வலியுறுத்துகிறோம்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.