“ஏன் அதிகார பரவலாக்கல் வேண்டும் என்று கேட்கின்ற எங்களுடைய தமிழ் இனத்தை பிரித்து பயங்கரவாதிகள் என்று பார்க்கின்றீர்கள்.” என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுத்ததை போல அன்று தமிழர்களுக்கு அதிகார பகிர்வினை வழங்க எதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அன்று அஹிம்சை ரீதியாக போராடியவர்களையும் ஆயுத ரீதியாக போராடியவர்களையும் அடக்கி ஒடுக்கி பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் என அரசாங்கம் முத்திரை குத்தியது.
இன்று சிங்கள மக்கள் கூட இதை எதிர்க்கின்றனர், நாங்களும் எதிர்க்கின்றோம், காரணம் இந்த நாட்டிலே அதிகார பரவல் என்பது சூனியமாக இருக்கின்றது. நாங்கள் கேட்பது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே. கடலை நிரப்பி கட்டிடங்களை கட்டி தனி ஒரு நாட்டைகொடுக்கின்ற அதிகாரங்கள் அனைத்தும் எமது இலங்கை நாட்டில் சம்பந்தம் இல்லாத வகையில் இந்த ஆணைக்குழுவுக்கு குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலே, நீதிமன்றம் தன்னுடைய தலையீட்டால் சில விடயங்களை இந்த நாட்டுக்குள் இருக்கின்ற அதிகாரத்தோடு செயற்படுத்துகின்ற ஒரு வரையறையை கொண்டு வந்ததை இங்கு காணக் கூடியதாக இருக்கின்றது. நீதிமன்றம் தலையிட இல்லை என்றால் இலங்கை நாட்டுக்குள் இன்னுமொரு நாடு சகல அதிகாரங்களோடும் செயற்பட கூடிய வகையிலே இந்த அரசாங்கம் ஆணைக்குழு ஊடக முழு அதிகாரமும் செலுத்துகின்ற வகையில் தான் துறைமுக அதிகார சபை உருவாக்கப்பட்டிருந்தது என்பதுதான் உண்மை.
அகிம்சை போராடத்தில் சமஸ்டியை வேண்டி எங்களுடைய பெரியவர்கள் போராடினார்கள், அகிம்சை வழியிலே போராடி எங்களது பெரியவர்கள் நையப்புடைக்கப்பட்டு இந்த நாடாளுமன்றத்தில் இரத்தங்கள் சொட்ட சொட்ட தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கின்ற போது அந்த அகிம்சை கூட மறுக்கப்பட்டது. ஆயுத போராட்டத்தின் ஊடக எங்களது இனத்தின் விடுதலையை பெற வேண்டும் என்று சொல்லுகின்ற போது பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் என்றெல்லாம் எங்களை எங்களுடைய மக்களை பிரித்தாளுகின்ற அல்லது அவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லுகின்ற சொற்பதத்தோடு இந்த அரசு அல்லது வந்து வந்து போன அரசுகளும் அந்த சொற் பதத்தோடுத்தன் எங்களது மக்களை பார்த்தர்கள்.
இன்று எமது தேசத்தில் இருக்கின்ற நிலைமைகளை பார்க்கின்ற போது எமது பூர்வீகம் சிதைக்கப்படுகின்ற ஒரு நிகழ்வு அங்கு நடைபெறுகின்றது. திட்டமிட்டு நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. வன இலாகா திட்டத்தின் ஊடாக மகாவலியூடாக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. புதை பொருள் என்னும் போர்வையில் எமது பிரதேச காணிகளில் புத்த கோயில்களை கட்ட முனைகின்றனர். பயங்கரவாத தடை சட்டம் என்ற ரீதியில் பல பேரை கைது செய்கின்ற நிகழ்வுகள் இன்று இடம்பெற்று கொண்டு இருக்கின்றது.
ஆனால் இப்பொழுது பேசப்படுகின்ற பொருளாக இருக்கின்ற இந்த துறைமுக விவகாரம் சகல அதிகாரங்களையும் ஒரு நாட்டிலே இன்னொரு நாடு என்று சொல்லுகின்ற வகையிலே எல்லா அதிகாரங்காளையும் கொண்டிருக்கின்றபோது ஏன் அதிகார பரவலாக்கல் வேண்டும் என்று கேட்கின்ற எங்களுடைய தமிழ் இனத்தை பிரித்து பயங்கரவாதிகள் என்று பார்க்கின்றீர்கள்.
இந்த சூழலிலே இன்னொரு நாட்டிற்கு வெளிநாட்டில் உள்ளவர்களும் உள்நாட்டில் உள்ளவர்களும் குழுவாக இணைந்து அந்த அதிகாரத்தை கையாளுகின்ற மாகாண சபை அதிகாரங்கள் இந்த அரசாங்கம் மாகாணசபையை இல்லாதொழிக்கின்ற திட்டங்களுக்கு பல குரல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த மாகாண சபையின் அதிகாரங்கள் ஒன்று பொலிஸ் மற்றது நில அதிகாரம் அனைத்து மாகாண சபைகளுக்கும் அந்த அதிகாரங்களை ஒரு பரவலாக்கல் மூலமாக அதிகாரங்களை கொடுப்பதற்கு அரசு மறுக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.