23

23

“கொரோனா பலி எண்ணிக்கை அதிகாரப்ப்பூர்வ எண்ணிக்கையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்” – உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி அறிக்கை !

உலகம் முழுவதும் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைவிட அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “ அதிகாரப்பூர்வ எண்ணிக்கைப்படி உலகம் முழுவதும் கொரோனாவினால் இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை அதிகாரப்ப்பூர்வ எண்ணிக்கைவிட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்த நிலையில் 34, 59,294 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா இரண்டாம், மூன்றாம் அலைகள் மிகத் தீவிரமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக இந்தியா, பிரேசிலில் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும்,  பிரேசில்  இரண்டாம் இடத்திலும்,  இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இதே நேரத்தில் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“கொரோனா தொற்று தொடர்பாக மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.” – ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல் !

“கொரோனா தொற்றுப் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.” என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட விசேட அறிவிப்பொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டின் பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தி, மக்களை பலியிட வேண்டாம்.கொரோனா தொற்றுப் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி மருந்தை செலுத்துவதற்கு 30 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும் இவ்வாண்டுக்குள் அதனைப் பெற்றுக்கொள்வது கடினமானது. ஆகவே கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதிய சிந்தனை அவசியம் என்பதுடன், புதிய திட்டங்களை வகுக்க வேண்டும்.

முதல் கட்டத்தில் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டவர்களுக்கு

இரண்டாவது கட்டமாகும் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்தே வழங்கப்பட வேண்டும். கடந்த நவம்பர் மாதம் தடுப்பூசி மருந்து கொள்வனவிற்கென 200 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்திருந்தால் தற்போது தடுப்பூசி மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது.

அரசாங்கத்தினால் இந்தியப் பிரஜைகள் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில், இந்திய வகை மரபணு மாற்றமடைந்த வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி !

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்தில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் குறித்து சிசிரிவி கெமராக்களில் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனூடாக அவருடன் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

தனக்கும் தன்னுடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தம்மை சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளதுடன் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது.” – புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

“இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது.” என  புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

”ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.  இந்த சந்தேகநபர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் அவர்களை மனிதாபிமான முறையில் விடுதலை செய்வதற்கு, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி  உள்ளிட்டோர் இணங்கியுள்ளனர்.

ஆனாலும் ராஜீவ் காந்தியின் இழப்பு, நாட்டிற்கும் மட்டுமன்றி காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும்.  இருப்பினும் அவரை கொன்றவர்களை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இவை சில அரசியல் கட்சி மற்றும் பொது நலவாதிகளின்  கோரிக்கையாக இருக்கலாம்.

எனினும் காங்கிரஸின் தொண்டன் என்றதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள்  நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும்.  ஆகவே அவர்களை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு – மக்கள் கொண்டாட்டம் !

இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டதையடுத்து, அந்நாட்டு மக்‍கள் தங்களது நண்பர்களுடன் மதுபான விடுதிகள் மற்றும் ஹோட்டல்களுக்‍கு சென்று குதூகலமடைந்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் கொரோனாவைக்‍ கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டது. பொதுமக்‍கள் கூடுவதை தவிர்க்‍கும் வகையில், முழு ஊரடங்கை அந்நாட்டு பிரதமர் Boris Johnson அமல்படுத்தினார். ஊரடங்கை மீறியவர்களுக்‍கு அபராதம் விதிக்‍கப்பட்டது. எப்போதும் சுதந்திரமாக இருக்‍கும் இங்கிலாந்து மக்‍கள், இந்த ஊரடங்கால் கடுமையான மன உளைச்சலுக்‍கு தள்ளப்பட்டனர். இதனால் ஊரடங்கை தளர்த்துமாறு ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளது. வெளியே செல்லும் பொதுமக்‍கள் எச்சரிக்‍கையுடனும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் உற்சாகமடைந்த அந்நாட்டு மக்‍கள், தலைநகர் லண்டனில் உள்ள மதுபானக்‍ கடைகளில், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சென்று ஆனந்தமாய் மது அருந்தி மகிழ்கின்றனர். மேலும், ஹோட்டல்களுக்‍கு சென்றும் குதூகலமடைந்து வருகின்றனர்.

“துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார்.” – சந்திரிகா பண்டாரநாயக்க

“துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். எனவும் கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச் சீனாவின் கொலனியாக்கிவிட்டனர்.” எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றங்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது நாட்டுக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தது. அதன்பின்னர் 1972 இல் நாடு முழுமையாக சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில், கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச் சீனாவின் கொலனியாக்கிவிட்டனர்.

இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அவர் மொட்டு கட்சியிடம் அடகு வைத்துள்ளார். கட்சி கொள்கை மற்றும் ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்துவிட்டார்” – என்றார்.

இந்தியாவில் பரவும் கருப்பு பூஞ்சை நோய் இலங்கையிலும் – அச்சம் வழங்கப்பட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர் அம்பாறை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் அதிகரிக்குமாக இருந்தால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி, மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இந்த நோய், கொவிட் வைரஸ் தொற்றுடன் எவ்வாறு இணைந்தது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோய் அம்பாறை பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

திடீரென பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை – மாரத்தான் ஓட்ட பந்தய போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி !

சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது.  இதில், 172 பேர் கலந்து கொண்டனர். மலைப்பகுதியை கடக்கும் சவால் நிறைந்த இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் ஆர்வத்துடன் தங்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்தது. வெப்பநிலையும் கடுமையாக குறைந்தது.
திடீரென தாக்கிய இந்த தீவிர தட்பவெப்பநிலையால் வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். சில வீரர்கள் போட்டி அமைப்பாளர்களுக்கு தகவல் அனுப்பினர்.
சீனாவில் மோசமான வானிலை: மாரத்தானில் பங்கேற்ற 21 பேர் பலி | Dinamalar Tamil  News
இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாரத்தான் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தின் தாக்கம் காரணமாக, 21 போட்டியாளர்கள் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பந்தய தூரத்தின் 20 கிலோ மீட்டரில் இருந்த 30 கிலோ மீட்டர் வரை திடீரென பேரழிவு தரும் வானிலை நிலவியதாகவும், குறுகிய நேரத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்ததால் வெப்பநிலை கடுமையாக குறைந்ததாகவும் பேயின் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களுக்கு தனிநாட்டை வழங்குவதுதான் தேசப்பற்றாளர்களுடைய பிரச்சினை. வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்க ஆதரவளிப்பார்கள்.” – ராஜித சேனாரத்ன

“தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே இந்த தேசப்பற்றாளர்கள் எதிர்க்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்குவதில் இவர்களுக்கு சிக்கல் இல்லை. ” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் .

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (22.05.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

தமிழ் ஈழத்திற்கும் நாடு பிளவடைவதற்கும் எதிரானவர்கள் என்று பாரியளவில் கூச்சலிட்டவர்கள் தான் இன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்றல்லவா கூறினார்கள்? இன்று ஒரே நாடு ஒரே சட்டம் எங்கிருக்கிறது ? இந்த வலயத்திற்கு ஒரு நீதியும் எமது வலயத்திற்கு ஒரு நீதியுமே காணப்படுகிறது.

இதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் சமஷ்டி அதிகாரத்தை விட அதிகமானதாகும். இந்த வலயம் தனி இராச்சியமொன்றாகும். இது தனி ஈழமாகும். இதனை தனி ஈழமாகக் குறிப்பிடுவதற்கு தற்போது குறைவாகவுள்ள ஒரே காரணி அந்நாட்டு பொலிஸார் இந்த வலயத்தில் இல்லாதது மாத்திரமேயாகும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாடு பிளவடையும் என்று கூறினார்கள். 13 இற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வெட்கமின்றி துறைமுக நகர சட்ட மூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கூட , ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரம் பகிரப்பட்டிருக்கும்.

தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே இந்த தேசப்பற்றாளர்கள் எதிர்க்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்குவதில் இவர்களுக்கு சிக்கல் இல்லை. குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த அனைவரும் போலியான தேசப்பற்றாளர்கள். தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மாத்திரமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறது. நாம் தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

1977 இல் ஜே.ஆர்.ஜயவர்தன திரட்டியதைப் போன்று மக்கள் படையை இதற்கு எதிராக நாமும் திரட்டுவோம். அத்துடன் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமில்லை மாறாக கொழும்பு துறைமுகநகர சட்டமூலமே அரசாங்கத்திற்கு முக்கியமான விடயம்.

பல நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் 14 நாள் முடக்கலை கோரியுள்ளன.எனினும் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதிலேயே கவனம் உள்ளது. மக்கள் தடுப்பூசியின் நன்மைகளை அனுபவிக்கவேண்டிய தருணம் இதுவென தெரிவித்துள்ள அவர் மக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்து நீண்ட நாள் முடக்கலை நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சட்டமா அதிபர் திணைக்களத்தில் தமிழ் மொழியுடன் கூடிய புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது.” – அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பெயர்ப்பலகைக்குப் பதிலாக, தமிழ் மொழியுடன் கூடிய புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் சீன அரசின் நிதி உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகத்தை கடந்த 19ஆம் திகதி  இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜெங் கோங் திறந்து வைத்தார்.

இந்த நூலகத்தில் விபரங்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிராகப் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையிலேயே, குறித்த பெயர்ப்பலகையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி கூறியுள்ளார்.