24

24

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 1,25,000 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் !

மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை இராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்படி ஈடுபட்டவர்களில் 1,25,000 பேரை பணி இடைநீக்கம்  செய்து இராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மியான்மர் ஆசிரியர் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர 19,500 பல்கலைக்கழகத்தின் பணியாளர்களும் பணி இடைநீக்கம்  செய்யப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

மியான்மரில் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2 ஆண்டுகளில் 4.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

“அச்சப்படாதீர்கள். கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதற்கான எல்லா மருந்துகளும் கைவசமுள்ளன.” – ப்ரீமாலி ஜயசேகர

கருப்பு பூஞ்சை நோய் என்பது இலங்கைக்கு புதிதானதல்ல. இவ்வாண்டில் இதுவரையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 24 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அவர்களில் யாரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று பூஞ்சை நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ப்ரீமாலி ஜயசேகர தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்நோய் தொடர்பில் மக்கள் வீண் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் , இதற்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான சகல மருந்துகளும் இலங்கையில் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் ப்ரீமாலி ஜயசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.

“நாட்டை முற்றாக முடக்கினால் அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும்.” – அஜித் நிவாட் கப்ரால்

“நாட்டை முற்றாக முடக்கினால் அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும்.”  என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

கொவிட்-19 வைரஸ் வேலைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்த தளபாடங்களை பெற்றுக்கொள்ள பாரிய அளவிலான நிதி தேவைப்பட்டது. அதேபோன்று தற்சமயம் கொவிட் வைரஸ் பரவும் இந்த சந்தர்ப்பத்திலும் சுகாதார உபகரணங்களை கொள்வனவு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாரியளவிலான பொருளாதார வெல்லமே அரசாங்கத்திற்கு அவசியம் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் சனத்தொகையில் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அன்றாடம் வருமானம் ஈட்டுபவர்கள் ஆவர். நாட்டை முற்றாக அடக்குவதன் மூலம் இவர்களின் வருமானம் முழுமையாக தடைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வருடாந்தம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் 4 லட்சம் பேர் நாட்டின் தொழில் படையில் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். துறைமுக நகர சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கத்தின் பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

“பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்.” – இரா.சாணக்கியன்

“பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் ஆடைத்தொழிற்சாலைக்கு இன்று விஜயம் செய்திருந்தார். அங்கு நிலைமைகளை ஆராய்ந்ததன் பின்னர் கருத்து வெளியிடும் போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

பலரின் வேண்டுகோளுக்கு அமைய இன்றைய தினம் மட்டக்களப்பில் இயங்கி வரும் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன். அங்கு சுமார் மூவாயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கொரோனா பயணத்தடை காலகட்டத்திலும் இவர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு ஆடைத்தொழிற்சாலையானது நமது உள்நாட்டு வருமானத்திலும் மற்றும் அனைத்து ஊழியர்களின் குடும்ப வாழ்வாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றது.

எனவே இவ்வாறு பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும். அதிகாரிகள் இதுகுறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா பரவலுக்கான புதிய அலை ஆடைத்தொழிற்சாலைகளில் இருந்தே ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியா , முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள ஆடைத்தொழி்சாலைகளில் பணிபுரியும் பலர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“விசாரணை என்ற பெயரில் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்கிறது அரசு.” – வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு !

“மனித உரிமைகள் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தமது சர்வாதிகார அராஜக ஜனநாயக விரோத ஆட்சியை முன்னெடுக்க அரசு நடத்தும் கபட நாடகமே இந்த விசாரணை நடவடிக்கை.” என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மனித உரிமைகள் சிவில் சமூக செயற்பாட்டாளரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான சபாரட்ணம் சிவயோகநாதனின் திராய்மடு மட்டக்களப்பில் உள்ள இல்லத்திற்கு நேற்று சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த இரு புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் அவரிடம் ஒன்றரை மணித்தியாலங்கள் கடுமையான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றீர்களா? என்ற கோணத்திலும் இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றீர்களா? என்ற கோணத்திலும் சிவயோகநாதனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் அவருடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது வெளிப்படையாக ஜனநாயக வெளியில் செயற்படும் ஒருவருக்கு வழமை போலவே பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு அரசினால் மேற்கொள்ளப்படும் முயற்சியே. மனித உரிமைகள் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தமது சர்வாதிகார அராஜக ஜனநாயக விரோத ஆட்சியை முன்னெடுக்க அரசு நடத்தும் கபட நாடகமே இந்த விசாரணை நடவடிக்கை.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மிக வேகமாக பரவி பல உயிர்களை பலியெடுத்து வரும் அவலம் நிறைந்த சூழலில் அனைவரும் தம் வாழ்வைக்குறித்து கலங்கி நிற்கும் இவ்வேளையில் அரசு தனது அராஜகத்தையும் ஒடுக்குமுறையினையும் எவ்வித மாற்றமோ மனச்சாட்சியோ இன்றி தொடர்கின்றது.

எனவே அரசின் இந்த அராஜக ஜனநாயக விரோத செயற்பாட்டை குறிப்பாக தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்வதையும் விசாரணைகள் செய்வதையும் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறான விசாரணை செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, மனித உரிமைகள், சிவில் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளுக்கு உத்தரவாதமளிக்குமாறு அனைத்துலக மனித உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கும் நீதிக்குமான அமையங்கள், மற்றும் ஐ.நா. மன்றத்தினையும் மிக அவசரமாகவும் அவசியத்துடனும் கோரி நிற்கின்றோம்’ என வேலன் சுவாமிகள் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் !

மட்டக்களப்பு- நாகர்வட்டை கடற்கரையில் கடந்த 18 ஆம் திகதி,  நீதிமன்ற தடை உத்தரவை மீறி தீபச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு வாழசை்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு லவக்குமார் என்பவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெற்ற பொலிஸார். அதனை கையளிப்பதற்கு மூன்று முறை சென்றப்போதும்,  அவர் இல்லாதமையினால் அவருடைய மனைவியிடம் கையளித்தப்போதும் அவரும் பெறுவதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனால் லவக்குமார் வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை பொலிஸார் ஓட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு  நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட அவர்,  கடந்த 18 ஆம் திகதி 10 பேருடன் சென்று, நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குறித்த நிகழ்வினை முகநூலிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் அறிந்த பொலிஸார் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணையை மேற்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் அவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமைபொலிஸார் முன்னிலைப்படுத்தியப்போது, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி – வீணானது வனிந்து ஹசரங்கவின் முயற்சி !

இலங்கை அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் முஸ்பிகூர் ரஹீம் 84 ஓட்டங்களையும், மஹ்மதுல்ல 54 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தமீம் இக்பால் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா 3 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 60 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரியுடன்  74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொண்டார்.

பந்து வீச்சில் மொஹமட் ஹசன் 4 இலக்குகளையும், மொஹமட் ரஹ்மான் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, முதலாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.