25

25

“பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்தலாம் ஆனால் இறந்தவர்களை மீட்க முடியாது.” – நாட்டை 14 நாட்களுக்காவது முடக்குங்கள் என வேலுகுமார் வலியுறுத்தல் !

“நாட்டின் பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்தலாம் ஆனால் இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் வேலு குமார் மேலும் கூறியுள்ளதாவது,

“கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரிக்கும் வேளையில் உரிய தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் தவறிவிட்டது. மேலும் கொரேனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை எற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஊகிக்கப்படுகின்றது. எனவேதான் சுகாதார துறை சார்ந்த பிரதான நான்கு அமைப்புகள் ஒன்றான இணைந்து வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருக்கின்றன.

அதாவது நாட்டை குறைந்த பட்சம் 14 நாட்களுக்காவது முடக்கி, மக்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டுமென அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச ரீதியான சில ஆய்வுகளின் ஆலோசனையாகவும் இவ்விடயமே முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதியோ அல்லது கொவிட் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியோ இதனை கருத்திற்கொள்வதாக தெரியவில்லை.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாட்டை ஒரு நாள் முடக்கினால் 140 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுமென கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறுவதின் அடிப்படையில் பார்த்தால் கூட 14 நாட்களுக்கு 1960 கோடி ரூபாய் நட்டமே ஏற்படும். சமீபத்தில் சீனி மோசடியில் 1950 கோடி ரூபாய் நட்டம் அரசுக்கு ஏற்பட்டிருந்தமை அனைவருக்கும் தெரியும்.

மேலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கின்றப்போது. மக்களின் உயிர்களை அலட்சியமாக பார்க்கும் நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் உள்ளது.அதாவது மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்களாயின் நாட்டின் பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள கிராம சேவகர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் !

நாடு முழுவதிலும் உள்ள கிராம சேவகர்கள் இன்று (25.05.2021) நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டியவர்கள் தவிர்க்கப்படுவதாக தெரிவித்து  அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இன்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்தார்.

மேலும் கிராம சேவகர்கள், சமூர்த்தி, கிராம அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமாக பணியாற்றும் விவசாய அதிகாரிகள் போன்றவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும்வரை போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

இது ஒருபுறமிருக்க இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ள பயணத்தடை காலங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மரக்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவது குறித்து கிராம சேவகர்களுடன் இணைந்து திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ஷ அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சீன துறைமுக கட்டுமான நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம் – அமைச்சரவை அனுமதி !

நெடுஞ்சாலை ஒன்றினை அமைப்பதற்கு சீனா நிறுவனம் ஒன்றுடன் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய முதல் களனிய வரையிலான நெடுஞ்சாலையை அமைப்பதற்கான சீனா நிறுவனம் ஒன்றுடனான கட்டுமான ஒப்பந்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் சீன துறைமுக கட்டுமான நிறுவனத்துடன் (China Harbour Construction Company) குறித்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான எதிர்ப்புகளின் அலை இன்னும் ஓய்ந்திராத நிலையில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆளும்தரப்பினர் நாட்டின் பொருளாதார விருத்தி , இலாபம் என்பன அதிகரிக்கும் என குறிப்பிடுகின்ற அதே நேரம் இலங்கை சீனாவிடம் விற்கப்படுவதாக குற்றம்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறான போதும் துறைமுகநகர சட்டமூலம் பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேறியமை குறிப்பிடத்தக்கது.

“ஐ.நாவுக்கு கடிதம் எழுதும் கூட்டமைப்பினர் ரணில் மைத்திரி அரசிடம் இருந்து பெற்றுகொண்ட சொத்துக்களையும்,சலுகைகளையும் ஐ.நாவில் ஆவணப்படுத்த தவறிவிட்டனர்.” – திருமதி பத்மநாதன் கருணாவதி குற்றச்சாட்டு !

“ ஐ.நாவுக்கு கடிதம் எழுதும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் மைத்திரி அரசிடம் இருந்து பெற்றுகொண்ட சொத்துக்களையும், சலுகைகளையும் ஐ.நாவில் ஆவணப்படுத்த தவறிவிட்டனர் .” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

மக்கள் துயர் துடைக்க பாடுபட்டவர் ஜோசப் ஆண்டகை! – உதயன் | UTHAYAN

நேற்றைய தினம் அந்த அமைப்பால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச  விசாரணையை மூடி மறைத்து ரணில் அரசுக்கு முண்டு கொடுத்துகொண்டு கொலைகார ஆட்சியை கொண்டு வந்து தூபியை இடிக்கவிட்டுப்போட்டு தூபி இடிப்பு தொடர்பில் ஐ.நாவுக்கு போலிக் கடிதம் எழுதி மறுபடியும் மக்களை ஏமாற்றியது கூட்டமைப்பு.பன்னாட்டு அரங்கில் ஒவ்வொரு முறையும் கொலையாளிகளை தப்பவைத்துக்கொண்டு  சிங்கள நாடாளுமன்றில் மட்டும் சர்வதேச விசாரணையென வீரவசனம் கூறிகொண்டு மறு புறத்தில் முள்ளிவாக்கால் தூபி இடிப்பு விடயத்தை ஆவணப்படுத்துமாறு ஐ.நாவுக்கு கடிதம் எழுதும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் மைத்திரி அரசிடம் இருந்து பெற்றுகொண்ட சொத்துக்களையும்,சலுகைகளையும் ஐ.நாவில் ஆவணப்படுத்த தவறிவிட்டனர்

சிறிலங்கா அரசு தமிழின உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்தரித்துக்கொண்டு காலம் காலமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகள் உச்சக்கட்டமாக 2009 முள்ளிவாய்க்காலில் சிறுவர்கள், கர்ப்பிணிப் தாய்மார்கள், முதியவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டும் நூற்றுகணக்கில் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், இளைஞர்கள், யுவதிகள் என ஆயிரக்கணக்கானோர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும், பல ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும்,ஆயிரக்கணக்கில் அங்கவீனர்களாகப்பட்டும்,சுமார் ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படு மோசமாக இனவழிப்பு செய்யப்பட்டனர்.

இவ்வாறு தமிழர்களின் உரிமைப் போராட்டம் சிங்கள பேரினவாத அரசினால் 2009இல் தமிழின அழிப்பு யுத்தம் மூலம்  மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு சர்வதேச நீதிக்கான போராட்டத்தினை அடக்கியொடுக்கும் வகையில் சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் ஒடுக்குமுறைகளுக்கு அடிபணியாது அவற்றுக்கு எதிராகவும், கட்டமைப்புசார் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஜனநாயக வழிமுறைகளில் சிறிலங்கா அரசின்  திட்டமிட்ட(கொவிட்-19) உள்ளிட்ட அனைத்து அச்சுறுத்தல்களையும் தாண்டி வட கிழக்கில் பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம்.

இவ்வாறு எமது அமைப்பு ரீதியாக நாம் முன்னெடுக்கும் போராட்டங்களின் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் எட்டிய போதும் ஒவ்வொரு ஐ.நா அமர்விலும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் நாம் தொடர்ந்தும் தோற்கடிக்கப்பட்டோம்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்,அரசின் முகவர்களுக்கும் வாக்கழிக்கும் ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் நாம் எமது உறவுகளை பல ஆண்டுகளாக தேடி தேடி அலைந்து நோய்வாய்ப்பட்டு மரணித்துக்கொண்டு வருகின்றோம் நீதிக்கான சாட்சியங்கள் சாவுக்குள் நித்தமும் முடங்கி வருகின்றன உண்மையில் எங்கள் பரிதாப நிலையை முடிவு காண ஒவ்வொரு தமிழ் உறவுகளும் விழிப்படைய வேண்டும் .

2009 கூட்டு இன அழிப்புக்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்கும் வடிவத்தில் கொலையாளிகளை நீதிபதிகளாக்கும் பன்னாட்டு சமூகத்தின் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 19/02,தீர்மானத்தையும்  மற்றும் மார்ச் 2013  ,மார்ச் 2014  தீர்மானங்கள் நிறைவேற்றியது. மேலும் தீர்மானங்கள் 30/01 ஒக்டோபர் 2015, 34/01 மார்ச் 2017 மற்றும் 40/01 மார்ச் 2019 ஆகியவற்றிற்கு இலங்கை அரசாங்கம் கூட்டமைப்பின் ஆதரவோடு இணை அனுசரணை வழங்கியது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் ,பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதம் இல்லாமல் கூட்டமைப்பால் கால அவகாசங்கள் வழங்கப்பட்டும்  எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக நீதிக்கான செயன்முறைகளில் எந்தவித முன்னேற்றம் இல்லாது  தொடர்ந்தும் தமிழ் மக்களின் கலாச்சார,பண்பாட்டு அடையாளங்களும் அழிக்கப்பட்டும்,தமிழ் தேசியம் முற்றாக சிதைக்கப்பட்டு, ஒற்றை ஆட்சி தீர்மானம் நிறைவேறி வருகின்றது.

எனவே  கடந்தகால சம்பவங்களையும் ,நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலைமைகளையும் ஆராய்ந்தால் ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ  அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புணர்வை உண்மையாக கையாள எந்த வித வாய்ப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிந்தும், ரணில் அரசின் முகவர்களான சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, நோத் மசடோனியா,மலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கோர்-குழு நாடுகளின் தூதுவர்களை கொழும்பில் மூடிய அறைக்குள் மூடிப்பேசியதன் பின்னரே 46/1 கால நீடிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

இலங்கை அரசை ஒருபோதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு தயார் இல்லை என்பதை பல ஆண்டுகளாக நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இந்த யதார்த்த உண்மையை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும். கூட்டமைப்பின் செயற்பாட்டால் இன அழிப்பு தொடர்கின்றன. தொடர்ந்தும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வட கிழக்கில் திட்டமிட்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். யார் இந்த நிலைமைக்கு காரணமானவர்கள்..? யார்  ரணில் அரசுக்கு முண்டு கொடுத்து கொலைகார அரசை மேடையேற்றியவர்கள்?

கூட்டமைப்பினர் சிங்கள நாடாளுமன்றில் வீர வசன முழக்கங்களை முழங்கி சர்வதேச விசாரணை என உசுப்பேத்தியது போதும் இனியும் மக்கள் இவர்களுக்கு பின்னால் சென்று ஏமாந்தது போதும்.முழக்கங்கள் யாவும் சிங்கள அரசை வேறு வடிவத்தில் திருப்திப்படுத்துவதற்கும், தங்கள் கதிரைகளை தக்கவைப்பதற்கான காய் நகர்த்தல்களாகும்.

சர்வதேச விசாரணைக்கான சட்டரீதியான ஆவணங்களை காணவில்லை,  சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என பொய்யான பரப்புரைகளை கூறிக்கொண்டு தமிழ் தேசியத்தை அடியோடு அழிக்கும் செயல்களை செய்துகொண்டு தமிழரை படுகொலை செய்த சிங்கள சிப்பாய்களுக்கு வீரவணக்கம் செலுத்த கடமைப்பட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டு வீடுவீடாக பொய் பிரச்சாரம் செய்து மக்களை வாக்களிக்க வைத்த ஒவ்வொரு நபர்களும் தாங்கள் விட்ட தவறுகளுக்கு தங்கள் கன்னங்களில் ஓங்கி அறைய வேண்டும்.

இவ்வாறான கட்டங்களில், ஆர்வக்கோளாறு வேலைகளில் சிக்காமல்,சலுகைகளுக்கு விலை போகாமல்  சூழலைப் புரிந்து கொண்டு, அவதானமாக அடுத்த கட்டங்களை நோக்கி நகர்வது தமிழ் மக்களின் பொறுப்பாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பொறுப்புடன் செயற்படுங்கள்.”- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச மக்களிடம் வேண்டுகோள் !

“பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும் நாட்டைக் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மீட்பதற்கு மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச கேட்டுக்கொண்டார்.

நேற்று  ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே 25ஆம் திகதி (நாளை) பயணத்தடைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதே அன்றி, களியாட்டங்களுக்காக அல்ல.

நான் இன்று செயலகத்துக்கு வரும்போது வீதியில் அதிகமான வாகனங்களை அவதானித்தேன்.

நாட்டில் இன்று பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் எவ்வாறு இத்தனை வாகனங்கள் பயணிக்க முடியும்? வைத்தியர்களின் வாகனங்களாக இவை இருக்க முடியாது. இவ்வாறானவர்களை நிறுத்தி விசாரிக்க வேண்டும். வைத்தியர் என்று போலியாக முத்திரைகளைப் பதித்துக்கொண்டு வாகனங்களில் பலர் பயணிக்கின்றனர். நாட்டு மக்கள் உணர்ந்து செயற்படத் தவறினால் பயணத் தடைகளை அமுல்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மரக்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவது குறித்து கிராம சேவகர்களுடன் இணைந்து திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளோம்” – என்றார்.