26

26

இலங்கையில் சற்று குறைவடையத் தொடங்கியுள்ள கொரோனாத்தொற்று – ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 378 பேர் தொற்றிலிருந்து விடுதலை !

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 325 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 72ஆயிரத்து 225ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 203 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 378 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 271ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், 28ஆயிரத்து 578 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 14 இலட்சத்து 58 ஆயிரத்து 50 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 43ஆயிரத்து 277பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

“இஸ்ரேலுடனான மோதலால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவோம்.”- பாலஸ்தீனிடம் அமெரிக்கா உறுதி !

ஜெருசலேமில் தூதரகத்தை மீண்டும் திறப்பதன் மூலம் பாலஸ்தீனியர்கள் உடனான உறவை சரிசெய்வதாகவும் மேலும் மோதலால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனிய தலைவர்களை சந்தித்த பின்னர் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் அண்டனி பிளிங்கன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பாலஸ்தீனிய ஆணைக்குழுவின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பிரதமர் முகமது ஷ்தாயே ஆகியோருடன் ரமல்லாவில் நேற்று (25.05.2021) அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது பாலஸ்தீனியர்களுக்கு அதன் இராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்ள ஜெருசலேமில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மீண்டும் திறக்கும் பணியை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

பாலஸ்தீனியர்களை கோபப்படுத்தும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு தூதரகத்தை மாற்றியபோதும் 2019 இல் தூதரக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில் காஸா போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 11 நாட்களில் நடந்த மோதலில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பல வாரங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீனிய பதற்றம் அதிகரித்த பின்னர் இந்த வன்முறை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா , அமேசன் நிறுவன உரிமையாளர்களை பின்னுக்கு தள்ளி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பிரான்சியர் !

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன.

முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்ததால், மிக குறுகிய நாளில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.

ஆனால் அவரை பின்னுக்கு தள்ளி அமேசன் நிறுவனத்தின் ஜெப் பைசோஸ் முன்னுக்கு வந்த நிலையில் இப்போது இவர்கள் இருவரையும் பின்னு தள்ளி விட்டு மூன்றாவது நபர் உலக பணக்காரர் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

பிரான்ஸின் ஆடம்பர பொருட்களுகான பிரபல குழுமம் LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) 186.2 பில்லியன் டொலர் நிகர சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளதாக, ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த திங்களன்று போர்ப்ஸின் ரியல் டைம் பில்லியனர் தரவரிசைப்படி, அர்னால்ட் அவர்களுக்கு 186.3 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்து உள்ளது.

அமேசன் (Amazon) ஜெப் பெசோஸின் 186 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உடன் ஒப்பிடும் போது, ​​இது 300 மில்லியன் டொலர் அளவிற்கு சொத்து அதிகம் உள்ளது.

டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX )தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk), ஜெப் பெஸோஸ் ஆகியோரை விட அர்னால்ட் முன்னிலையில் இருக்கிறார், எலான் மஸ்கிற்கு 147.3 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்து உள்ளதாக  ஃபோர்ப்ஸ் மேலும் கூறியது.

உலக வர்த்தகம், தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, வர்த்தக நிறுவங்களுக்கு சேவை அளித்து வரும் கன்பேரிசன் என்ற நிறுவனம், உலகின் வளர்ந்த நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், வர்த்தகம் நடவடிக்கைகள் அதிகரித்து.

வேலைவாய்ப்புகளும் பெருகத் தொடங்கியுள்ள நிலையில், ஆடம்பர சந்தையின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளது. இதன் மூலம் பல ஆடம்பர பிராண்டுகளை வைத்திருக்கும் லூயிஸ் உய்ட்டன் (LVMH) நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்ததுள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அமேசான் நிறுவனர் 2026 ஆம் ஆண்டிலேயே உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடும் என்றும், அந்த நேரத்தில் அவருக்கு 62 வயது இருக்கும் என்றும் அந்த ஆய்வு மேலும் கூறியுள்ளது.

“ஜனாதிபதி வாகன எண்ணிக்கையை குறைத்து, எரிபொருள் செலவை குறைத்து 03 பில்லியன் ரூபா வரை நாட்டுக்காக மீதப்படுத்தியுள்ளார்.” – அமைச்சர் உதய கம்மன்பில

செலவுகளை குறைக்கும் மனப்பக்குவம் உள்ள ஜனாதிபதியுள்ள நாட்டில் தேவையற்ற செலவுகளுக்கு இடமளிக்க அனுமதிக்க மாட்டார்.” என அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எம்.பிக்களுக்கு சொகுசு வாகனம் கொள்வனவு செய்ய திட்டமிடப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

நாடு நெருக்கடியான நிலைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் எம்.பிகளுக்கு அதி சொகுசு வாகனம் எதுவும் கொள்வனவு செய்யப்படமாட்டாது என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் தெளிவான ஊடக அறிக்கை வெளியிட்டது. இவ்வாறான வாகன கொள்வனவு நடைபெறாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சிக்கு வந்தவுடன் தனது ஊழியர் குழாமை குறைத்து வாகன எண்ணிக்கையை குறைத்து, எரிபொருள் செலவை குறைத்து 03 பில்லியன் ரூபா நாட்டுக்காக மீதப்படுத்தியுள்ளார். செலவுகளை குறைக்கும் மனப்பாங்குள்ள ஜனாதிபதியுள்ள நாட்டில் இவ்வாறான செலவுகளுக்கு இடமளிக்கமாட்டாரெனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் வீசிய பலத்த காற்று – முறிந்து விழுந்த 600 இற்கும் மேற்பட்ட பப்பாசி மரங்கள் !

வவுனியா ஒலுமடுப் பகுதியில் நேற்று வீசிய பலத்த காற்றினால் விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த பப்பாசிமரங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளது.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் காற்றுடன் கூடிய மழை பொழிந்துள்ளது.  குறிப்பாக வவுனியா நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் வீசிய கடும்காற்று காரணமாக விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த 600 இற்கும் மேற்பட்ட பப்பாசி செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் 05 இலட்சம் ரூபாய்க்கும்  மேல்  நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.

வடக்கில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்ற 500 பேர் வரை இரண்டாவது டோஸை பெற தயக்கம் – தடுப்பூசி தேவையில்லை என பலர் தெரிவிப்பு !

வடக்கு மாகாணத்தில் 4 இலட்சம் பேருக்குக் கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் அவை இரண்டு வாரங்களுக்குள் வடக்கு மக்களுக்குச் செலுத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதலாவது டோஸ் கடந்த ஜனவரி மாத இறுதியில் ஏற்றப்பட்டது. அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி தற்போது ஏற்றப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தில் முதலாவது டோஸைப் பெற்ற 500 பேர் வரையில் இரண்டாவது டோஸைப் பெறவில்லை. அவர்களில் பலர் தமக்கு தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்து வருவதால், அவர்களிடம் விளக்கம் கோருவதற்கும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி எதிர்வரும் 14ஆம் திகதியுடன் காலாவதியாவதால் அதனைத் திருப்பி கொழும்புக்கு அனுப்ப வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அதன் காரணமாகவே முதலாவது டோஸ் பெற்று இரண்டாவது டோஸை இதுவரை பெறாதவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் சஞ்சய் ராஜரத்னம் பதவிப்பிரமாணம் !

புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார்.

பதவிப்பிரமாணத்தின் போது ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவும் கலந்து கொண்டிருந்தார்.

இங்கிலாந்து – நியுசிலாந்து டெஸ்ட் போட்டி – மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 70 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி !

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18-ந்திகதி தொடங்குகிறது.
இதற்கு முன் நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி எட்ஜ்பாஸ்டனில் ஜூன் 10-ந்திகதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியை காண தினந்தோறும் 18 ஆயிரம் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 70 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு 16 வயது நிரம்பியவர்களாகவும், போட்டியை பார்க்க வருவதற்கு 24 மணி நேரத்திற்குள் கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பொலிஸார் ட்ரோன் கமரா கண்காணிப்பு – 10பேர் கைது !

யாழ். நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்தலில் விதிமுறைகளை மீறிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

இன்று காலை யாழ் நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கமரா கண்காணிப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

முகக்கவசம் அணியாது வீதியில் நின்றமை, பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவிலும் தொடரும் வாள்வெட்டு கலாச்சாரம் – தீர்வு என்ன ..?

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வாள்வெட்டு கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் (25) இரவு 11 மணியளவில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கத்திகளுடன் உட்புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இத்தாக்குதல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கூட வவுனியாவின் மதவுவைத்த குளத்தில் கூட இது போன்றதான சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு புறமாக கல்வி வீழ்ச்சி . மறுவலமாக  போதைப்பொருள் பாவணை என தமிழர் சமுதாயம் பாரிய சரிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இவை தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எவையுமே முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இருப்பவர்கள் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா ..? – ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்..! போன்ற கோசங்ளை விட்டுவிட்டு உள்ளிருந்து சீர்திருத்தத்தை  மேற்கொள்ள அனைவரும் அணிதிரள வேண்டும். மாற்றத்தை நாம் அயல்வீடுகளில் இருந்து தொடங்குவோம். அரசியல்தலைவர்களும் பாராளுமன்றில் உள்ள இனவாதத்தை மேலும் கிண்டி கிளராது சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் களமிறங்க வேண்டியது காலத்தின் தேவயும் கூட..!