27

27

“இலங்கையிலுள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். தீவிரவாதத்தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு.” – அமெரிக்கா எச்சரிக்கை !

இலங்கையில் தீவிரவாதத்தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கர்களை அவதானமாக இருக்குமாறும் அமெரிக்கதூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலிலே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். இலங்கையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே இலங்கை செல்ல விரும்பும் மக்களுக்கு அமெரிக்கா நோய் தடுப்பு மையம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதை பின்பற்ற வேண்டும்.

மேலும் இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், மன்றங்கள், விளையாட்டு, கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையின் தொலை தூர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர கால உதவிகளை வழங்க குறைவான வளங்களே இருக்கிறது. அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் 3 ஹோட்டல்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அதில் வெளிநாட்டவர்கள் உட்பட 267 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

“எந்த சந்தர்ப்பத்திலும் சீனா, இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் நன்மை தரும் விடயங்களில் சீனா நிச்சயம் ஈடுபடும்.”- இலங்கைக்கான சீன தூதுவர் உறுதி !

“எந்த சந்தர்ப்பத்திலும் சீனா, இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் நன்மை தரும் விடயங்களில் சீனா நிச்சயம் ஈடுபடும்.” என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்தார்.

சீனாவிலிருந்து நாட்டை வந்தடைந்த 5 இலட்சம் தடுப்பூசிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மார்ச் 31 ஆம் திகதி இலங்கைக்கு சீனா இலவசமாக வழங்கிய 6 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக மீண்டும் சீனாவிலிருந்து வந்த மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கையின் வைரஸ் தடுப்புப் பணிக்கு முக்கிய பங்காற்றும் என்று நம்புகின்றோம்.

கொரோனா வைரஸ் பரவல், முழு மனிதகுலத்தின் பொது எதிரியாகும். சுகாதாரமான எதிர்காலத்தை உருவாக்குவது எமது பொது இலக்காகும். ஒற்றுமையுடன் உதவியளிப்பது வைரஸ் தடுப்பிலான மிக வலிமையான ஆயுதமாகும். அதற்கமைய தடுப்பூசி பகிர்வானது சிறந்த வைரஸ் தடுப்பு வழிமுறையாகும்.

சீனா வளரும் நாடுகளுக்கு 200 கோடி அமெரிக்க டொலரையும் 80 க்கும் அதிகமான நாடுகளுக்கு தடுப்பூசி உதவியையும் வழங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 300 கோடி டொலர் சர்வதேச உதவியை வழங்கும் என்று கடந்த 21 ஆம் திகதி சீன ஜனாதிபதி உலக சுகாதார உச்சி மாநாட்டில் அறிவித்தார்.

உலக நாடுகளுக்கு மேலதிக தடுப்பூசிகளை இயன்ற அளவில் விநியோகித்து, சீன தொழில் நிறுவனங்கள், வளரும் நாடுகளுக்குத் தொழில் நுட்பங்களை சீனா விநியோகிக்கும். மேலும், பரிமாற்றம் செய்து இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளுடன், ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

வைரஸ் பரவல் ஏற்பட்டது முதல், சீனாவும் இலங்கையும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இரு நாட்டு நட்புறவு மேலும் வளர்ந்துள்ளது. இலங்கையின் சிறந்த அண்டை நாடாகவும், நண்பராகவும் சீனா உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் நன்மை தரும் விடயங்களில் நிச்சயம் ஈடுபடும்.” என்றார்.

“ஆடைத்தொழிற்சாலையை மூடிவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என எண்ணவேண்டாம்.” – பிள்ளையான்

“ஆடைத்தொழிற்சாலையை மூடிவிடமுடியும். ஏதோ இதை தடைசெய்துவிட்டால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என எண்ணவேண்டாம்.” என பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்  மாநாட்டிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,
இன்று பலரிடம் இருந்து ஆடைத்தொழிற்சாலையில் இருந்து தொற்று வருகின்றது முறைப்பாடுவருகின்றது. ஆடைத்தொழிற்சாலையை மூடிவிடமுடியும் அதில் அதிகமான பிள்ளைகள் அதிகமாக பணியாற்றுகின்றார்கள் என்பதற்காக கொரோனா தொற்றாது என்பதற்கல்ல.

இதை எப்படிக் கட்டுப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூயதை கவனமாக கையாளமுடியும் என்பதை ஆராயுங்கள். முடிந்தால் பணியாற்றுபவர்களை அவர்களது வீடுகளில் கவனமாக சென்று வருதற்கான சூழ்நிலை ஏற்படுத்த முடியுமானால் அதை செய்யவேண்டும்.

மக்கள் எல்லாவற்றையும் நிறுத்தவேண்டும் எண்ணமுள்ளவர்கள்., நாங்கள் கிராம பொருளாதாரத்தில் வாழும் மக்கள் ஏன் ஒட்டுமொத்த நாட்டிலேயும் 40 வீதமான மக்கள் அன்றன்று உழைத்து வாழுகின்ற மக்கள் இதனைகருத்தில் கொள்ளாமல் இயங்க முடியாது. பொறுப்பாக சிந்தியுங்கள் ஏதோ இதை தடைசெய்துவிட்டால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என எண்ணவேண்டாம்.

இந்த கொரோனா தொற்றை தடுத்துக் கொண்டு பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்சியடையாமலும் கவனமாக வெற்றி நடைபோடவேண்டும் என்கின்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது எமது கருத்து அதற்காக பொறுப்பு இல்லாமல் யாரும் இயங்கவேண்டாம்.

மட்டக்களப்பிலும் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது கவலையளிக்கின்றது. கொரோனா தொற்று ஆரம்ப காலத்தில் ஏற்பட்டபோது மக்கள் அதிக கவனம் செலுத்தினார்கள் ஆனால் தற்போது அது குறைவாகவுள்ளது. இருந்தபோதும் இப்போது எல்லாவிதமான தடைகளும் இருக்கும்போது மக்கள் கவனமாக தனித்தனி மனிதராக பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கவேண்டும்

உதாரணமாக மருதநகரில் ஒருவருக்கு சந்தேகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு அறிக்கை வருவதற்கு முன்னர் அவர் அங்கு நடந்த மரணவீட்டில் கலந்து கொண்டார். அதன் காரணமாக அந்த மரணவீட்டில் கலந்துகொண்ட 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது எனவே ஒரு தனிநபருக்கு தெரியவேண்டும் எனக்கு சந்தேகம் வந்திருக்கின்றது. பி.சி.ஆர் எடுத்திருக்கின்றேன் அறிக்கை கிடைக்கும் வரைக்கும் நான் வீட்டுக்குள் இருக்கவேண்டும் என.

இப்படியான விடயங்களினால் தற்போது 2 ஆயித்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பரவியுள்ளதுடன் 25 பேர் மரணமடைந்துள்ளனர் இது விரைவாக அதிகரித்தால் எப்படி கட்டுப்படுத்துவது என சுகாதார பிரிவினருக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது ஆகையால் மக்கள் கவனமாக உணர்ந்து செயற்படவேண்டும்

வீடுகளில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏனைய பிரச்சனைகள் வரலாம். இவ்வாறு பல நெருக்கடிகள் இருக்கமுடியும் இந்த நெருக்கடிகளை சமாளித்து கட்டுப்படுத்தினால் மாத்திரம் இதில் இருந்து மீளமுடியும். அரசாங்கம் என்ற அடிப்படையிலே நாங்கள் விரைவாக தடுப்பூசி எற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். அதற்கமைய சில நாட்களில் தடுப்பூசி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற நிர்வாகத்தை இயக்குவதற்கு கிராமம் தோறும் இருக்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு, உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து பணியாற்றுனகின்றவர்கள் மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள் போன்ற நேரடியாக மக்களுடன் கடமையாற்றுகின்றவர்களுக்கும் அடுத்த கட்டமாக வர்த்தகர்கள் வியாபாரிகள் போன்றவாகளுக்கு தடுப்பூசி ஏற்ற முயற்சி எடுத்துள்ளோம் என்றார்.

அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பயணத்தடை காலங்களில் கூட ஆடைத்தொழிற்சாலைகள் இயங்குவது தொடர்பாக தன்னுடைய விசனத்தை சமூக வழலத்தளம் ஊடாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையினரை விடுதலைப் புலிகள் கொன்றனர். அதனால் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டாம்.” இந்திய குடியரசுத்தலைவருக்கு கடிதம் !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் இந்திய  குடியரசுத்தலைவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது குறித்து தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி அவர்களை விடுதலை செய்யக்கூடாது என இந்திய குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ‘இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையினரை விடுதலைப் புலிகள் கொன்றனர். அந்த அமைப்புதான் ராஜீவ் காந்தியை கொலை செய்தது. அந்த படுகொலையில் தொடர்புள்ளவர்களை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யக்கூடாது. அவர்கள் சாகும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

“கொரோனா பரவல் தடுப்புக்காக பவித்ரா வன்னியாராச்சி உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் போலியான நம்பிக்கைகளை ஊக்குவிக்கிறார்.” – இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் குற்றச்சாட்டு !

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின் போது சுகாதாரதுறையை உரிய விதத்தில் நிர்வாகம் செய்யாதமைக்கான பொறுப்பை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியே ஏற்கவேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலானா இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சுகாதார அமைச்சின் முழு நடவடிக்கையும் குழப்பநிலையில் உள்ளது. அரசாங்கம் இதனை சரிசெய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பலர் முன்னெடுக்கின்ற நிலையில் சுகாதார அமைச்சரை மாத்திரம் குறைசொல்ல முடியுமா என்ற கேள்விக்கு அரசியல்வாதிக்கான கடமைமைய ஏனையவர்களுக்கான பொறுப்புகளுடன் ஒப்பிடமுடியாது.

சமூக ஊடகங்கள் தடுப்பூசிவழங்கும் நடவடிக்கைகள் குறித்து பொய் சொல்கின்றனர். தடுப்பூசிவழங்கும் திட்டத்தை பல தரப்பினரும் விமர்சனம் செய்கின்றனர். இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த 1,264,000( புதுடில்லி 500,000 – சேரம் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்தது 500.000 – கொவக்ஸ் திட்டம் மூலம் கிடைத்தது) டோஸ் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை உரிய விதத்தில் கையாளமைக்கு யார் காரணம்.

முதல் சுற்றில் 7,925.000 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அரசாங்கம் 6 லட்சம் தடுப்பூசிகளை பெறுவதற்கு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது இது வேடிக்கையான விடயம். சுகாதார அமைச்சர் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தை இலகுவாக கையாள்கின்றார். ஆனால் ஏனைய மருத்து அமைப்புகள் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பை வழங்கவில்லை.

சுகாதார அமைச்சர் பதவி விலக்கி புதிய அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்ககூடிய சூழ்நிலையை உருவாக்கவேண்டும். சுகாதார அமைச்சர் சுகாதார பணியாளர்களிற்கு தலைமைத்துவத்தை வழங்காமல் அவர்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கினார், ஒரு தொழில்சங்கம் தெரிவிப்பதை மாத்திரம் ஏற்றுக்கொள்கின்றார்.

உரிய துறைகளுடன் இணைந்து செயற்படவில்லை, அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளை ஐக்கியப்படுத்த தவறினார். உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் போலியான நம்பிக்கைகளை ஊக்குவித்தார், கொவிட்டிற்கு எதிரான போராட்டத்தில் ஊழலிற்கு வழிவகுத்தார்.

தொழிலாளர்களை அரசியல்ரீதியில் பழிவாங்கினார், தொலைக்காட்சிகளில் பொய்களை சொல்லும் மருத்துவர்களை அலட்சியம் செய்தார், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை ஒரு வேடிக்கையாக மாற்றினார்.

தனது அமைப்பு ஜனாதிபதியின் தலையீட்டை கோர தீர்மானித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினுடைய நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தியான கருத்துக்களே அண்மைக்காலத்தில் அதிகம் முன்வைக்கப்படுகின்றது. கொரோனா தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துபவராக செயற்பட வேண்டிய அவர் தம்மிகபண்டார என்பவர் கொரோனா தடுப்புமருந்தை கண்டுபிடித்ததாக கூறிய போது அதனை அவர் சென்று பரிசோதித்து பார்த்திருந்தார். பின்பு அவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தார். இது போக கொரோனா ஒழிப்புக்காக களனியில் சில சடங்குகளை செய்தார். இப்படியாக தான் ஒரு சுகாதார துறை அமைச்சர் செயற்பட்டுக்கொண்டிருந்தால் எப்படி இதனை கட்டுப்படுத்துவது என்பது சரியான கேள்வி தானே..!

எரியும் எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பலில் இருந்து மிதக்கும் பொருட்களை சேகரித்தவர்களுக்கு ஒவ்வாமை !

எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் மிதந்து வரும் பொருட்களை எடுக்க கடலுக்குச் சென்றவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்து வந்த பொருட்களை தொட்ட பலருக்கு தோல் நோய்? - Pearl One News

இதில் நச்சு இரசாயனங்கள் இருப்பதாக அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், எரியும் கப்பலில் இருந்து மிதக்கும் பொருட்களை சேகரித்த கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் ஒவ்வாமைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என கூறப்படுகிறது.

அவர்களுக்கு தோலின் மேற்பரப்பில் கொப்புளங்கள், புள்ளிகள் மற்றும் அரிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொருட்கள் சேகரிக்கும் போது கைகால்கள் கடல்நீருக்குள் அதிகமாக சென்ற இடங்களில் இந்த கொப்புளங்கள் அதிகம் காணப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், தர்ஷனி லஹந்தபுர தெரிவிக்கையில்,

கடலில் கரையொதுங்கிய கப்பல் பொருட்களை எடுத்துச்சென்ற 8 பேர் கைது |  Virakesari.lk

மக்களை பாதித்த இந்த ஒவ்வாமைகளுக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறினார். கப்பலின் கழிவுகள் தொடர்ந்து கரையை அடையும் என்றும் அது எதையும் தொடவோ தொட முயற்சிக்காது இருக்கவும் என்று வலியுறுத்தினார்.

கரையோர துப்புரவு பணியை அறிவியல் முறையில் மிக விரைவில் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.

“சட்டதிட்டங்களை பொது மக்கள் பின்பற்ற தயார் இல்லையென்றால் கொவிட் வைரஸ் தாக்கத்தை ஒழிக்க முடியாது.” – அமைச்சர் உதய கம்மன்பில

கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியாக கட்டுப்படுத்த முடியாது . வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டாலும் அதை சரியாக பொது மக்கள் பின்பற்ற தயார் இல்லையென்றால் கொவிட் வைரஸ் தாக்கத்தை ஒழிக்க முடியாது என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொஸ்கம வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ள போது வாகனங்களைப் பயன்படுத்தவேண்டாமென கூறுவதால் மக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும். ஆனால் தமது உயிரின் பெறுமதி ஏனையோரை விட தமக்கே தெரிந்திருக்க வேண்டும்.

எனினும் இவ்வாறானதொரு பயணக் கட்டுப்பாடு தளர்வுகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தொற்றை மேலும் பரவச் செய்யும் வகையில் மிகவும் சொற்பமான பொறுப்பற்ற மக்கள் செயற்படுவதாலேயே சில கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடுகின்றது. இது ஏனைய மக்களுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. அந்த பொறுப்பற்ற சொற்பமான மக்கள் ஒழுக்கத்துடன் செய்ற்பட்டால் ஒட்டுமொத்த மக்களும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கான முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்தும் முன்னுரிமைப் பட்டியலில் கிராம மட்டங்களில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள்,குடும்ப நல அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், விவசாய அதிகாரிகள் இணைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

“அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் அரசியல்கட்சிகள் ஒன்றித்து செயல்பட வேண்டும். ” – அருட்தந்தை மா.சத்திவேல்

“அரசியல் கைதிகள் நாட்டில் இருக்கின்றார்கள் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி இவர்கள் அரசியல் ரீதியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்கு இந்த கட்சிகள் ஒன்றித்து செயல்பட வேண்டும். அதில் மட்டுமே தமிழ் மக்களுடைய அரசியல் வெற்றி தங்கியிருக்கின்றது .”என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்களுடைய தேசிய அரசியலில், நேர்கோட்டில் சந்திக்க முடியாத மூன்று தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து, அரசியல் கைதிகளுடைய விடயம் தொடர்பாக அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவுடன் கதைத்திருக்கின்ற விடயம் வரவேற்கத்தக்கது. இதை அரசியல் கைதிகளுக்கான ஒரு கௌரவமாக தான் நாங்கள் கருதுகின்றோம்.

அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக இக் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளின் விபரம் இதுவரை தெரியவரவில்லை என்ற போதும் இந்த விபரத்திலே இவர்கள் அரசியல் கைதிகளுடைய தண்டனை கைதிகள் யார், அதேபோல தண்டனை பெற்ற கைதிகள் யார், விசாரணையில் உள்ளவர்கள் யார், போன்ற விபரங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். இந்த கட்சிகள் கொடுத்ததன்படி பார்த்தால் தண்டனை கைதிகளை விடுதலை செய்யுங்கள், வழக்குகளை துரிதப்படுத்துங்கள் இவ்வாறு கேட்கிற போல் இருக்கிறது.  இது எங்களுக்கு தேவையில்லை. அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு  மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த அரசியல் கைதிகளை நாங்கள் அரசியல் கைதிகளாக மட்டும்  தான் பார்க்க வேண்டும். இவர்களை எந்தவகையிலும் பிரிக்க கூடாது. என்பது தான்  எங்களுடைய வேண்டுகோளாக இருக்கின்றது. இவர்களை பிரிவிற்கு உட்படுத்துவது என்பது அரசியல் கைதிகளுக்கு தோல்வியாக அமைந்துவிடும்.

ஜெனிவாவுக்கு முன்னர் கட்சிகள் ஒன்று கூடியிருந்தார்கள். ஆனால் தனித்தனியாக அவர்கள் பிரிந்துவிட்டார்கள். இதனால் கொள்கை ரீதியாக ஒன்று சேர முடியாமல் போய்விட்டது. தற்போது அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக ஒன்று சேர்ந்திருக்கின்ற இந்த கட்சிகள் மீண்டும்  அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பிலே வேறுபட்ட கருத்துக்கள் காரணமாக பிரிந்து போய்விடுவது என்பது தமிழ் மக்களை, தமிழ் மக்களுடைய  அரசியலை, அரசியல் கைதிகளின் விடுதலையை பாதிக்கின்ற ஒரு செயலாக அமைந்துவிடும். எனவே இதற்கு எந்த வகையிலும் இடம் கொடுக்கக்கூடாது என்பது அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அரசியல் கைதிகளுடைய விடுதலைக்காக தான்  இந்த கட்சிகள் கூட்டாக செயல்பட வேண்டும். வேறு கட்சிகளும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, ஏற்கனவே கடிதங்களை கையளித்து இருக்கின்றன. ஆனால், அரசியல் கைதிகள் இல்லை என்று,நாடாளுமன்றத்திலே கூறியிருக்கின்றார்கள் ஆட்சிதரப்பினர்.

இந்த சந்தர்ப்பத்திலே, அரசியல் கைதிகள் நாட்டில் இருக்கின்றார்கள் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி இவர்கள் அரசியல் ரீதியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்கு இந்த கட்சிகள் ஒன்றித்து செயல்பட வேண்டும். அதில் மட்டுமே தமிழ் மக்களுடைய அரசியல் வெற்றி தங்கியிருக்கின்றது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் என்றார்.

அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்கள் பல காலமாக தமிழர் தரப்பினர்  வலியுறுத்துகின்ற போதும் கூட இது தொடர்பாக  ஆக்கபூர்வமாகன எந்த முன்னெடுப்புக்களுமே முன்னெடுக்கப்படவில்லை. இது ஒரு புறமிருக்க நீதியமைச்சர் அலிசப்ரி அரசியல் கைதிகள் என யாருமே இல்லையென அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் இது தொடர்பான பேச்சுக்கு அமைச்சர் தினேஸ்குணவர்த்தன தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தீர்வுகள் இல்லாத இந்தப்பிரச்சினை அரசியல் நோக்கிலேயே இன்றுவரை முன்னெடுக்கப்படுவது போலவே தோன்றுகிறது.