29

29

“சீனாவின் பூனைகளையும் , புறாக்களையும் வேட்டையாடுங்கள்.” – வட கொரிய அதிபரின் ஆணையால் கொன்று குவிக்கப்படும் புறாக்கள் !

“சீனாவின் பூனைகளையும் , புறாக்களையும் வேட்டையாடுங்கள்.”  என வட கொரிய அதிபர் கிம் ஜோங் – உன் அறிவித்துள்ளார்.

வட கொரியாவின் அண்டை நாடான சீனாவிலிருந்து வரும் புறாக்கள் தமது நாட்டில் கொரோனாவை பரப்புவதாக அவர் நம்புகிறார்.

இதனால் சீனாவில் இருந்து வரும் புறாக்கள் கொரோனாவைப் பரப்புவதாக கூறி வடகொரியாவில் அவற்றை வேட்டையாட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சீன எல்லையில் வசிக்கும் எல்லை நகரவாசிகள் துப்பாக்கிக்கியால் புறக்களை சுட்டு கொன்று குவித்து வருகிறார்கள்.

அதேபோல் பூனைகளும் கொரோனாவைப் பரப்புவதாக கூறப்பட்டு அதனையும் வேட்டையாட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹைசன் மற்றும் சினுஜு ஆகிய நகரங்களில் உள்ள அதிகாரிகள் புறாக்களையும் பூனைகளையும் வேட்டையாட நகர மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் உயிரிழப்பு !

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியை சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவர், யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் உடலை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

“வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை.” – செல்வம் அடைக்கலநாதன்

“வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று (29.05.2021) வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க தவறிவிட்டது. அதாவது அரசாங்கத்தின் முறையான திட்டமின்மை காரணமாகவே நாடு மோசமான நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் இலங்கைக்கு இலவசமாக வழங்கும் தடுப்பூசியினை மாத்திரமே அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. அதனைத்தான் வாங்கப்போகின்றோம் என்றும் கூறுகிறது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடு, நாட்டு மக்களை பாதுக்காக்குமா..? என்பது கேள்விக்குறியே ஆகும். அத்துடன் இதுவரையும் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீட்டை செய்யவில்லை.

இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.

மேலும் வடக்கிற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள் ஆனாலும் அவை போதுமானதாக இருக்காது. இந்த அரசாங்கத்துக்கு ஒட்டுமொத்த மக்களின் மீது அக்கறை கிடையாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

…………………………………………………………………………………………………………………………

ஆரம்பகாலங்களில் கொரோனா தடுப்பு நிலையங்கள் வடக்கில் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழர்களை இலக்கு வைத்து தடுப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆனால் தொற்றாளர்களுடைய தொகை வடக்கில் அதிகரித்ததை தொடர்ந்து தமிழர்களை கவனிக்காது விட்டுவிட்டனர் என்றனர் அதே தலைமைகள்.

இந்த தடுப்பூசி தொடர்பான கதைகளும் அவ்வாறானதே. சன அடர்த்தியான,  தேவையுள்ள பகுதிகளுக்கு வழங்கப்பட்ட பின்பே ஏனைய பகுதிகள் பற்றி சுகாதாரத்துறை அமைச்சு சிந்திப்பதாக தெரிவித்திருந்தது. இரத்தினபுரிக்கு அடுத்து யாழில் தொற்றாளர்கள் அதிகரிப்பதால் யாழில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க வடக்கில் முதல் டோஸை பெற்றுக்கொண்ட 500பேருக்கு அதிகமானோர் இரண்டாவது டோஸை பெறாது அதனை தவிர்த்து வருகின்றனர் என வடமாகாண சுகாதார அமைச்சு கருத்து வெளியிட்டிருந்தனர். இங்கு சில விடயங்களை நல்ல கண்ணோட்டத்துடன் சிந்திக்க நம்மவர்கள் முன்வரவேண்டும். சில வார்த்தைப்பிரயோகங்கள் அரசியல் இலாபமீட்ட தேவையானவையே தவிர நடைமுறைக்கு சாத்தியமற்றவை.

இந்நிலையில் , யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (சனிக்கிழமை)  இடம்பெற்ற போது “யாழ்ப்பாணத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  அமமாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

“பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

எக்ஸ் – பிரஸ்’ பேர்ல்’ கப்பல் தீப் பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

கப்பல் தீ விபத்தால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கண்டறிய உஸ்வெடகெய்யாவ கடற்கரைக் பகுதியில் இன்று கண்காணிப்புச் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டபோதே   பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

கடல் சூழலைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்குப் பிரதமர் அறிவுறுத்தினார். இது போன்ற பேரழிவுகளைச் சமாளிக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகளைக் கொள்வனவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

கப்பல் தீ விபத்துக்குள்ளானமையால் பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் அன்றாட மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அறிவித்தார்.

கடல் மாசுபாட்டைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கடற்படை உள்ளிட்ட அனைவருக்கும்  பிரதமர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். பிரதமரின் இந்தக் கண்காணிப்புச் சுற்றுப் பயணத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான நாலக கொடஹேவா, கஞ்சன விஜேசேகர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உளுகேதென்ன, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷான் த சில்வா, பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

“எமது பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை வழங்கப்பட்ட பின்புதான் தடுப்பூசியை நான் பெற்றுக் கொள்வேன்.” – யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்

“எமது பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை வழங்கப்பட்ட பின்புதான் தடுப்பூசியை நான் பெற்றுக் கொள்வேன்.” என யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றுப் பரவல் தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழில் ஏறத்தாழ 3000 பிசிஆர் மாதிரிகள் ஒவ்வொருநாளும் சேகரிக்கப்படுகிறது. யாழில் போதனா வைத்தியசாலையிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் மருத்துவ பீடத்தில் பிசிஆர் பரிசோதனை இடம்பெறாமல் செயலிழந்ததாக செய்திகள் வந்தது.

அதன் காரணமாக இங்கு பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகள் தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் பெறப்படுகின்றது. இது தேவையற்ற கால தாமதத்தை ஏற்படுத்துகிறது . இதன் காரணமாக கொரோனாத்  தொற்று மேலும் பரவ வழிவகுக்கும். பிசிஆர் பரிசோதனை  செய்யப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பது தெரியவர பல நாட்களாகின்றன .பி.சி.ஆர் மாதிரிகளை வழங்கியவர்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுவதால் தொற்றுப்பரவல் அதிகரிக்கிறது.

இதனால் யாழ் மாநகரசபை பிசிஆர் இயந்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. பிசிஆர் இயந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக பிசிஆர் பரிசோதனைகளை எதிர்காலத்தில் செய்யலாம் என எதிர்பார்க்கின்றோம். இதனால் மிக வேகமாக பரிசோதனை முடிவுகளை அறிவிக்க கூடியதாக இருக்கும். இது கொரோனாத் தொற்றுப் பரவலை  கட்டுப்படுத்த பாரியளவில் உதவும் என்று நம்புகிறோம்.

ஒரு நன்கொடையாளி ஒருவரிடம் பிசிஆர் இயந்திரத்தை பெறுவதற்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளேன் . இதேபோல் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் யாராவது மாநகர சபைக்கு பிசிஆர் இயந்திரமொன்றை அன்பளிப்பு செய்வார்களாக இருந்தால் எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த பணியை முன்னெடுக்க இலகுவாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட காரணத்தால் மாநகரசபை பணியாளர்களும் உறுப்பினர்களுக்கும் சுகாதார தொண்டர்களுக்கும் கொரோனா தொற்று வீதம் அதிகமாக உள்ளதன் காரணமாக நாம் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி வழங்க சுகாதாரத் தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

எமது பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை வழங்கப்பட்ட பின்புதான் தடுப்பூசியை நான் பெற்றுக் கொள்வேன். நல்லூர் பின்பகுதியில் உள்ள அரசடி பகுதி தற்போது முடக்கப்பட்டுள்ளது இந்த முடக்கம் 10 நாட்களுக்கு தொடரும். அதிக கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது . அப்பகுதிக்கு நீர் விநியோகத்தை யாழ் மாநகரசபை செய்துகொண்டிருக்கிறது. தேவை ஏற்படின் கிராமசேவகர் ஊடாக நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படும்  என்றும் தெரிவித்தார் .

கனடாவில் 1978-ல் மூடப்பட்ட பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் – முழுமையான விசாரணை ஆரம்பம் !

கனடாவில் கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி 1890-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டுவரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரசு அந்த பள்ளியை பொறுப்பில் எடுத்தது. 1978-ல் பள்ளி மூடப்பட்டுவிட்டது.

ஆரம்பத்தில் பள்ளியை நடத்தியபோது பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது வேறு வகையிலோ உயிரிழந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அவர்களது உடல்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ரேடார் உதவியுடன் அந்த எலும்புக்கூடுகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். மேலும் அங்கு பலரது உடல்கள் இருக்கலாம் என தேடப்பட்டு வருகிறது. இந்த குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் இல்லை. இது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

ஐரோப்பியர்கள் அமெரிக்க நிலப்பரப்பை கண்டுபிடித்து வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள். அப்போது  அந்த நாடுகளில் பூர்வ குடிமக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். அவர்கள் நாளை பிரச்சினை ஏதும் செய்துவிடக் கூடாது என்பதற்காக அந்த மக்களை ஐரோப்பியர்கள் இனப்படுகொலை செய்தனர். இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் அமெரிக்க கண்டங்களில் பல இனங்கள் வேரோடு அழிந்தன. இதேபோலத்தான் கனடா நாட்டிலும் பூர்வ குடிமக்கள் ஏராளமானோரை கொன்று குவித்தார்கள். அங்கு நாகரிக ஆட்சி வந்த பிறகும்கூட பூர்வ குடிமக்களை ஒழிப்பது நிற்கவில்லை.

ஐரோப்பியர்கள் பூர்வ குடிமக்களுக்காக பள்ளிகளை நடத்தினார்கள். இது விடுதியுடன் கூடிய பள்ளி ஆகும். அவ்வாறு நடத்தப்பட்ட பள்ளிகளில் பல குழந்தைகள் மாயமான சம்பவங்கள் பலவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இரத்தினபுரியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு தடுப்பூசி வழங்கப்படும்.” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

கொரோனா நோயாளிகள் பதிவாகும் உயர் ஆபத்துள்ள மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை (30) தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதன்  பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“உலகில் தடுப்பூசிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஒரு தடுப்பூசி கூட பெறாத 45 நாடுகள் உலகில் உள்ளன. இலங்கையில், தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க பல அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று இந்த மாவட்டங்களில் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, சமீபத்திய பாதிப்புகளின் எண்ணிக்கை, இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் அப்பகுதியின் தன்மையை பொருத்ததாகும்.

இதை கருத்தில் கொண்டு தான் எந்த மாவட்டங்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம்.

அதன்படி, நாங்கள் தற்போது தடுப்பூசி வழங்கிவரும் மாவட்டங்களுக்கு அமைய நாளை இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இரத்தினபுரியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

“இலங்கை கடற்பரப்பிற்குள் இதுபோன்ற ஆபத்தான கப்பல் வரும் வரை ஏன் அரசு அமைதியாக இருந்தது..? ” – சஜித் பிரேமதாஸ கேள்வி !

X-Press Pearl கப்பல் மூலம் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தி உண்மையை வௌிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
Container ship X-PRESS PEARL May 26 UPDATE total loss? | X PRESS PEARL -  FleetMon Maritime News
அமிலக் கசிவைத் தொடர்ந்து கப்பல் கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்திற்குள் நுழைய முயன்றுள்ளது. எனினும், அமிலக் கசிவு காரணமாக கட்டார் அரசு கப்பலை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.

அவ்வாறாயின், இவ்வாறு அபாயம் நிலவும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் கடற்பரப்பிற்குள் திடீரென எவ்வாறு பிரவேசித்தது என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு குறித்து பலமுறை பேசும் அரசாங்கம், இலங்கை கடற்பரப்பிற்குள் இதுபோன்ற ஆபத்தான கப்பல் வரும் வரை ஏன் அமைதியாக இருந்தது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கை மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

X-Press Pearl கப்பலில் அமிலக் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து கட்டார், இந்தியா ஆகிய பகுதிகளில் பிரவேசிக்க கேட்கப்பட்ட போதும் கூட விடயத்தின் தீவிரத்தன்மை கருதி குறித்த நாடுகள் கப்பல் பிரவேசிக்க தடைவிதித்தமை குறிப்பிடத்தக்கது.

“கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும்..” – திஸ்ஸ விதாரண

கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும். ஆய்வுகளில் அதற்கான எந்த சான்றும் இல்லை என வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்

வைரஸ் சாதாரண உஷ்ண நிலையில் அது அழிந்துவிடும். நம் உடலுக்கு வெளியே இருந்தால் அது சுமார் 3 மணி நேரங்களில் இறந்துவிடும். அதனால் வைரஸ் எமது உடலுக்குள் செல்லாமல் அனைவரும் பாதுகாத்துக்கொண்டால் இந்த வைரஸை அழித்துவிடலாம்.

வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கும் நபரின் உமிழ் நீர் துளிகளினூடாக வைரஸ் வேறு நபரது சுவாசப்பை வழியாக உடலுக்குள் செல்வதற்கு முடிகின்றது. அதனால் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பேணிவருவதன் மூலம் வைரஸ் இவ்வாறு உடலுக்குள் செல்வதை தடுத்து நிறுத்தலாம். எமது கண்களினூடாகவும் வைரஸ் உடலுக்குள் செல்ல முடிகின்றது.

என்றாலும் வைரஸ் ஒருசில மேற்பரப்புகளில் குறிப்பிட்ட காலத்துக்கு தங்கி இருக்க முடியும். கைகளை சவர்க்காரமிட்டு கழுவுவதன் மூலம் வைரஸ் அழிந்துவிடும். அதனால் சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்காக கிராம மட்டங்களில் கொவிட் குழுக்களை நிறுவி விழிப்பூட்டும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றார்

“நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது அவர்களின் சுயமரியாதை மற்றும் சமூக அந்தஸ்தை பாதிக்கும் செயல்களை செய்யாதீர்கள்.” – காவற்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன

வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என காவற்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்

அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில காவற்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அசௌகரியம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்வதை ஊடக காணொளிகள் மூலம் காணக்கூடியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்த நபர்களின் சுயமரியாதை மற்றும் சமூக அந்தஸ்து பாதிக்கப்படுவதாக காவற்துறை மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது இவ்வாறான செயல்களை தவிர்க்குமாறு காவற்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறித்த சுற்றுநிருபம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.

எனினும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் பதிவானால் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்