31

31

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை !

யாழ். பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி விசேட அனுமதி வழங்கியுள்ளதாகதெரிவிக்ககப்பட்டுள்ளது.

வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 3ஆம் திகதி வியாழக்கிழமை, 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வரும் வகையில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சகலருக்கும் கொரோனாத் தடுப்பசிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பிய கோரிக்கை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதையடுத்து எதிர்வரும் 3ஆம் திகதி வியாழக்கிழமை, 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகப் பணியாளர்களையும் குறிப்பிட்ட திகதிகளில் வந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கேட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை நிலையம் திறப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஐம்பத்தி நான்கு கட்டில்களைக் கொண்டதான கொரோனா நோயாளிகளுக்கான கொரோனா விடுதி அமைக்கப்பட்டு பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.அன்சார், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சனி, வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

“சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு 70 மில்லியன் டொலர்கள் மோசடி” – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு !

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனாத் தடுப்பூசித் திட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- .

சினோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் என்ற அடிப்படையில் 14 மில்லியன் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவையில் அனுமதி பெற்றுக் கொண்டுள்ள போதிலும் பங்களாதேஷ் குறித்த தடுப்பூசியை 10 டொலர்களுக்குப் பெற்று கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி குறித்த தடுப்பூசி கொள்வனவின்போது 70 மில்லியன் டொலர்கள் மோசடி இடம்பெற்றுள்ளது. நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம் முதலே ஒழுங்காக முன்னெடுக்கப்படவில்லை.

நாட்டில் 60 வீதமானவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமானால் நாட்டுக்கு மொத்தமாக 30 மில்லியன் (3 கோடி ) கொரோனாத் தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படும் நிலையில், அரசு கடந்த 5 மாதங்களில் 3 மில்லியன் (30 இலட்சம்) தடுப்பூசிகளை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளது. இதன்படி நாட்டுக்கு மேலும் 27 மில்லியன் (இரண்டு கோடி 70 இலட்சம்) தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைக்கும் சிறிய அளவு தடுப்பூசிகளையும் அரசில் உள்ள சிலர் தமது பதவிப் பலத்தைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துவரும் நிலையில் பொதுமக்களே தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கு அமைய நாட்டு மக்களிடையே 10 வீதமானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனினும், இலங்கையில் அந்தப் பரிந்துரை மீறப்பட்டுள்ளது. இலங்கையில் இதற்கு முன்னர் தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்கள் இன்று நாடு முழுவதும் தடுப்பூசி தேடிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தடுப்பூசி வழங்கும் கோட்பாடுகளை மீறி அரசு செயற்பட்டு வருகின்றது. மக்களின் உயிரை விசேடமானவர்கள் மற்றும் முக்கியமற்றவர்கள் எனத் தரம் பிரிக்க வேண்டாம் – என்றுள்ளது.

“இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து செயற்படுங்கள்.” – சீன அரச நிறுவனத்துக்கு கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவுறுத்தல் !

இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

துறைமுகநகர வேலைத்திட்டங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இதுதொடர்பாக உத்தியோகப்பூர்வமாக சீனா அரச நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் மொழி பெயர்ப்பலகைகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது அதிகமாகியுள்ள நிலையில் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள்  பலரும் இது தொடர்பில் தங்களுடைய விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து குறித்த நிறுவனத்துக்கு சீன தூதரகமும் மொழிக்கொள்கை தொடர்பில் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.