June

June

“பௌத்த தர்ம போதனைகள் உள்ள நாட்டில் வாழும் நாங்கள் எவரையும் பழிவாங்கும் படலத்தை மேற்கொள்ளமாட்டோம்.” – நாடாளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்ரி !

“பௌத்த தர்ம போதனைகள் உள்ள நாட்டில் வாழும் நாங்கள் எவரையும் பழிவாங்கும் படலத்தை மேற்கொள்ளமாட்டோம்.” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதற்கான யோசனை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த விடயத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலுமு் கூறிய போது ,

சட்டத்தின் படியே எவருக்கும் எதிராக குற்றவியல் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் பலரும் நீண்டகாலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பில் உள்ள நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பலர் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர். சிலர் தடுப்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பௌத்த தர்மம் மற்றும் பல தர்மப் போதனைகள் உள்ள நாட்டில் வாழும் நாங்கள் எவரையும் பழிவாங்கும் படலத்தை மேற்கொள்ளமாட்டோம்.

இந்த விவகாரத்தை அரசியலுக்குள் இழுக்கக்கூடாது. இந்த வழக்குகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இதுபற்றி சட்டமா அதிபர் மற்றும் அரச தலைவர், பிரதமர், நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களுடன் பேச்சு நடத்தியிருக்கின்றேன். அதற்கமைய வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.

வழக்கு இல்லாவிட்டால் எவரையும் நீண்டகாலமாக தடுப்பில் வைத்திருக்க முடியாது. அதற்கமைய எதிர்வரும் நாட்களில் பேச்சு வழக்கிலல்ல – செயற்பாட்டில் நாங்கள் காண்பிப்போம்.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மாத்திரமல்ல, அதுபற்றி நாங்கள் நேற்று அமைச்சரவையில் பயங்கரவாத தடைச்சட்டம் பல வருடங்களாக திருத்தப்படாத காரணத்தினால் அதனை மீளாய்வு செய்வதற்கும் இணங்கியிருக்கின்றோம். ஆனால் சர்வதேசத்திற்கு அவசியமான வகையில் அல்லாமல் எமது நாட்டிற்கு அவசியமான வகையில் அதனைத் திருத்தியமைப்போம். என்றார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்டனத்துக்கு அரசாங்கம் பதில் !

இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பெச்சலெட் நேற்று (21) கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 47ஆவது அமர்வு நேற்று (21) ஜெனீவாவில் ஆரம்பமானது. இதில் தமது அறிக்கையை வெளியிட்ட போதே  அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் நட்டயீட்டுக்கான அலுவலகம் என்பவற்றுக்கான புதிய நியமனங்கள் வருத்தமளிக்கின்றன. மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் என்பவற்றையும் மிச்சல் பெச்சலெட் தமது அறிக்கையில் வன்மையாக கண்டித்துள்ளார். குறிப்பாக யுத்த காலத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழ் மக்களுக்கு அனுமதிக்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் தொடர்பாடல்களை மேற்கொண்டு, இந்நிலைமைகள் குறித்த முன்னேற்றத்தை செப்டெம்பர் மாத அமர்வில் வைத்து அறிவிக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, காவல்துறை தடுப்பில் வைத்து கைதிகள் உயிரிழக்கின்ற சம்பவங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதே நேரம்  இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் கேள்வி யெழுப்பிய போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில்,

இது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். இவ்வாறு முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் தேவையானளவிற்கு தெளிவுபடுத்தல்களையும் செய்திருக்கின்றோம்.  குறிப்பாக தற்போது தெரிவிக்க வேண்டிய விடயம் யாதெனில் , இந்த விடயம் தொடர்பில் நம்பமான ஆதாரங்கள் இன்றி முன்வைக்கப்படுகின்றன.

எனினும் பொறுப்பு கூற விடயங்கள் தொடர்பில் நம்பத்தகுந்த சாட்சியங்களுடன் தெரிவிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் நாம் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அடிக்கடி முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு வெற்றிகரமாக எமது சார்பில் வழங்க வேண்டிய பதில்களையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்கியிருக்கின்றோம். இது தொடர்பில் தொடர்ச்சியாக எமது அவதானம் செலுத்தப்படும். வெளிநாட்டலுவல்கள் அமையும் இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.

“அரசாங்கம் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாமும் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்” – சரத் பொன்சேகா

“அரசாங்கம்அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாமும் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று (22.06.2021) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது,

“நான் கடந்த காலத்தில் கைது செய்யப்பட்டபோது, என்னை 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதியன்று நள்ளிரவு 12 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுசென்றார்கள்.

அதாவது, பின்கதவு வழியாக கொண்டுசென்று, முன்பக்க வாயிலுக்கு என்னைக் கொண்டுவந்தபோது, பேருந்தில் இருந்த சில தமிழ் இளைஞர்கள் என்னைப் பார்த்து, போர் செய்த நாம் வெளியே போகிறோம். ஆனால் யுத்தத்தை முடித்த தளபதி சிறைக்குள் வந்துள்ளார் என கூறினார்கள்.

அதேபோன்று, வெலிக்கடையிலிருந்து நீதிமன்றுக்கு நான் வந்தபோது எனது இடது பக்கத்தில், தற்கொலைத் தாக்குதல் மூலம் என்னைக் கொல்ல வந்த பெண்ணை அழைத்து வந்தவர் அமர்ந்தார்.

மொரிஸ் எனும் குறித்த இளைஞர் என்னை கொலை செய்ய வந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாம் இருவரும் அன்று பேசிக்கொண்டோம். அவர் இன்னமும் சிறையில்தான் உள்ளார். எனக்கு எப்போதாவது தொலைப்பேசியிலும் அவர் உரையாடுவார்.

கடந்த 2006 ஏப்ரல் மாதமளவிலேயே என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து ஒரு வருடத்தில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டாலும் இன்னமும் அந்த வழக்கு முடிவடையாமல் உள்ளது.

நானும் இப்படியாக நீண்ட காலம் சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். குறித்த இளைஞன் 15 வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். இதுவே அவருக்கான போதுமான தண்டனையாகவே நான் கருதுகிறேன்.

எனவே, அரசாங்கம் இதுதொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாமும் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்பட்டால் உங்கள் அரசியல் முடிவுக்கு வந்துவிடும் என அஞ்சுகிறீர்களா..?” – சாணக்கியனுக்கு நாமல் ராஜபக்ஷ பதிலடி !

மிக நீண்ட காலமாக தமிழர் தரப்பினரால் கைது செய்யப்பட்டு சிறைகளிலுள்ள அரசியலட கைதிகள்தொடர்பில் எந்த ஒரு ஆரோக்கியமான நகர்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை. கைது செய்யப்பட்டுள்ளவர்களை காணாமலேயே அவர்கள் விடுதலையை வலியுறுத்தி போராடிய உறவுகள் பலரும் இறந்து போயுள்ளனர்.

இந்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில்  பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சி பீடமேறியுள்ள அரசின் பிரதிநிதியான நாமல்ராஜபக்ஷ நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்து பேசியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ,

“பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாகவும் இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலை செய்யப்பட்டமை போன்று குறித்த இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரினார்.

மேலும் இந்த விவகாரம் குறித்தும் ஏற்கனவே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் எடுக்கும் முயற்சியை சீர்குலைக்க வேண்டாம் என்றும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உள்ள நிலையில் நேற்று மட்டும் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்றும்  கேள்வியெழுப்பினார்.

மேலும் அரசியல்கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது, சாணக்கியன் போன்றவர்களின் அரசியல் செயற்பாடுகள் நிறைவுக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் கருத்து வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றில் வலியுறுத்திய நாமல்ராஜபக்ஷ – ஆக்கபூர்வமாக பயன்படுத்துமா..? தமிழர் தரப்பு !

“பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.” என  வியைாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (22.06.2021) உரையாற்றிய போதே  விளையாட்டுத்துறை அமைச்சர்  ஒரு கோரிக்கையாக இதனை முன்வைத்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

நாடாளுமன்றம் இன்றைய தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இந்த சந்தர்ப்பத்தில் எழுந்து கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்ச, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் பலர் இன்றும் சிறைகளில் உள்ளனர். வழக்கு விசாரணைகளின் பின் 35 பேரே தண்டனை பெற்று தொடர்ந்தும் சிறையில் இருப்பதோடு அவர்கள் பெற்ற தண்டனைக் காலத்திற்கும் மேலதிகமாகவே தண்டனை கிடைக்கும் முன்னர் சிறையில் களித்துவிட்டனர். அத்துடன் 20 வருடங்களுக்கும் மேலதிகமாக சிலர் தடுப்பில உள்ளனர். எந்த வழக்கும் தொடரப்படாத நிலையி்ல 13 பேர் உள்ளனர். வழக்கு விசாரணை நிறைவுபெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத 116 பேர் உள்ளனர். அவ்வாறு பல இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிவுறுத்த வேண்டும். அல்லது விடுவிக்கப்பட வேண்டும். கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 12000ற்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு 3500 பேருக்கு சிவில் பாதுகாப்புப் பிரிவில் தொழில் வாய்ப்பும் பெற்றுள்ளனர்.

நான் சிறைச்சாலையில் இருந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த பலரை சந்தித்தேன். அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற காலம் எனது வயதை விடவும் அதிகம். இன்றுவரை அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு முடியாமலிருக்கின்றது. அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

சிறைச்சாலையில் நான் சந்தித்த ஒருவருடைய கதை ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். குறிப்பிட்ட ஒரு பிரபலம் ஒருவரது படுகொலை வழக்கில் இவர் சிறை வைக்கப்பட்டுள்ளார் குறித்த கைதி, செய்த குற்றம் என்னவென்றால், மரமொன்றில் கிளையை வெட்டியமையாகும். கிளையை வெட்டியவர் சிறையில், ஆனால் பிரதான குற்றவாளி வெளியே சுதந்திரமாக உள்ளார்.

அதனால், 12500 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்தமை மற்றும் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க எம்மால் முடியும் என்றால், இந்த விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது புனர்வாழ்வுத்திட்டத்தின் ஊடாக இவர்களுக்கு நீதியை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

இதுவொரு மன உளைச்சல் பிரச்சினையாகும். எமது அரசாங்கம் எவருக்கும் அநீதியை செய்யாது என்பதையும் குறிப்பிடுகின்றேன்” எனத் தெரிவித்தார்.

……………………………………………………………………………………………………………………………………… விமர்சனங்கள் அனைத்துக்கும் அப்பால் அரசியல்கைதிகள் தொடர்பான பிரச்சினை தமிழர் அரசியல் தரப்பினரால் ஒரு பெரும் அரசியல் லாபத்துக்கான விடயமாகவே நீண்டகாலமாக பயன்படுகின்றது.  இந்நிலையில் கடந்த நல்லாட்சி காலத்தில் அரசுடன் கைகோர்த்திருந்த கூட்டமைப்பினர் கூட ஆக்கபூர்வமான எந்த நகர்வையும் இது தொடர்பாக மேற்கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில்சர்வதேசம் தலையிட்டோ – அல்லது இந்தியா தலையிட்டோ எந்த ஒரு மாற்றமும் செய்து விட முடியாது. பெரும்பான்மை மக்களின் அதிக பலத்துடன் ஆட்சி கட்டில் ஏறிய அரசியல் தலைமைகளினால் மட்டுமே அது முடியும் என்பதே உண்மை. அதற்கான நகர்வுகளை முறையாக மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் நம்மவர்கள் இன்னமும் பழைய பஞ்சாங்கம் பாடிக்கொண்டு மக்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் வைத்து அரசியல் மட்டும் செய்கிறார்களே  தவிர வேறு மாற்றங்கள் எவையும் இல்லை.

இவ்வாறானதொரு நிலையில் அரச தரப்பில் இருந்து முக்கியமாக அரச தரப்பின் அடுத்த அரசியல்தலைமையான கருதப்படக்கூடிய  நாமல்ராஜபக்ஷ அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றில் பேசியுள்ளார். இது நல்ல ஒரு வாய்ப்பு. பார்க்கலாம் இந்த வாய்ப்பினையாவது பயன்படுத்தி அரசியல்கைதிகள் விடுதலையை முனைப்போடு நம்மவர்கள் மேற்கொள்வார்களா..?  அல்லது வழமை போல அரசை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு இந்த வாய்ப்பையும் நழுவவிடுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் !

“எனது வீட்டின் முன்பாக இறந்தவருக்கும் எனக்கும், தனிப்பட்ட விதமான பகையோ !  கட்சி சார்ந்த அரசியலோ! இல்லை .” – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

“மட்டக்களப்பு நகர் – மன்ரசா வீதியில் அமைந்துள்ள எனது வீட்டுக்கு முன்னால் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத், மன வேதனையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது, நான் கொழும்பில் இருந்த நிலையில், தொலைபேசி ஊடாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க கூறியதுடன் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை உடன் முன்னெடுக்குமாறும்நீதியை நிலை நாட்டுமாறும், பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவருக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன்.

எனது வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் பிறிதொரு நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் மேற்படி நபர் காயமடைந்து, அதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதில் மிக மிக வேதனை அடைகின்றேன். காலம் தாழ்த்தாது உரிய நீதியை நியாயத்தை நாட்ட கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளேன். அத்துடன் இந்த விடயத்தில் எந்த எனது தனிப்பட்ட விதமான பகையோ !
கட்சி சார்ந்த அரசியலோ! இல்லை என்பதையும் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன் . – எனவும் தெரிவித்துள்ளார்.

வாய்த்தர்க்கம் செய்ததால் இளைஞனை சுட்டுக்கொலை செய்த பொலிஸ் – சுட்டுக்கொலை செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது ..?

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.  அதில் காயமடைந்த மகாலிங்கம் பாலசுந்தரம்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவே., அப்பகுதியில் ஒன்று திரண்டிருந்த மக்கள் எதிர்ப்பினை வெியிட்டிருந்தனர். இன்று இது தொடர்பான மேலதிகமான விடயங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.  சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவருடன் பயணித்த அவருடைய நண்பர்  தெரிவிக்கும் போது ,

IMG 20210621 191033

“நானும் பாலசுந்தரமும் நண்பர்கள். சம்பவதினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக பேசி விட்டு முச்சக்கரவண்டியில் சென்று திரும்பிவரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றின் கீழ் குறித்த மெய்பாதுகாவலர் நின்றிருந்தார்.

இதன்போது அவரை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு எனது நண்பன் கோரினான். நான் நிறுத்தாமல் சென்றேன்.   இருந்த போதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்புமாறும் அவர் கூப்பிடுகின்றார் கதைத்துவிட்டு போவோம் என்றும் தெரிவித்தார்.

அதனையடுத்து நான் முச்சக்கரவண்டியை திருப்பிகொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது வீதிக்கு வந்த மெய்பாதுகாவலர், நண்பனிடம்  என்னடா கைகாட்டியும் நிற்காமல் சென்றாய் எனஎன கேட்டார்.  அதற்கு நண்பன் இதைக் கேட்க நீ யார் என்றார்.

அதனையடுத்து இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.  இதனையடுத்து மெய்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டு நான் யாரு என்று தெரியுமா பொலிஸ் என துப்பாக்கியை மெய்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே விழுந்தான்.

இரத்தம் வெளியே வந்தது அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன்.  அதேவேளை நண்பன் முன்று தினங்களுக்கு முன்னர் மெய்பாதுகாவலர் உடன் பிரச்சனை நடந்திருக்கின்றது. ஆனாலும் எனக்கு அதுபற்றி தெரியாது.” எனவும் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கும் போது , “மட்டக்களப்பு சின்னஊறணி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாகவே இன்று (21.06.2021) மாலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை.   சின்ன ஊரணியை சேர்ந்த 35 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார் .  மூன்று நாட்களுக்கு முன்னதாக டிப்பர் சாரதியுடன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலனாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் – குறித்த டிப்பர் சாரதி, முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர், துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இது போலவே மட்டக்களப்பில் இளைஞன் ஒருவர் ஐஸ் போதை உட்கொண்டு இறந்ததாக பொலிஸார் கூறிய போதும் அவர்களுடைய வீட்டு உறவினர்கள் – முக்கியமாக இறந்த நபருடைய தங்கை கூறும் போது “ அண்ணனை பொலிஸார் அடித்தே கொன்றனர்.” எனக்கூறியிருந்தமையும் நோக்கத்தக்கது.

300 டோஸ் தடுப்பூசிகளை உறவினர்களுக்கு வழங்குவதற்காக , தடுப்பூசி மருந்தொன்றை 10 பேருக்கு வழங்கிய மருத்துவர் !

இலங்கை  துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கு அந்த சபையின் மருத்துவர் ஒருவர் , அஸ்ட்ராசெனகா தடுப்பூசி மருந்தொன்றை 10 பேருக்கு வழங்கியிருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் துறைமுக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 டோஸ் தடுப்பூசிகளை துறைமுக அதிகார சபையின் பிரதான வைத்திய அதிகாரி தனது உறவினர்கள் மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் சுயாதீன துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவ கருத்துத்தெரிவித்துள்ள போது,

குறித்த வைத்தியரால் ஒரு டியூபில் இருந்து 12 முதல் 13 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு மீதப்படுத்திக் கொண்ட சுமார் 300 டோஸ் தடுப்பூசிகளை அவரின் உறவினர்களுக்கு மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த வைத்தியர் தற்போது கட்டாய விடுமுறையில் உள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோபனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் !

சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன், பிரதமர் ஸ்டீபன் லோபனுக்கு (வயது 63) எதிராக இன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை  கொண்டு வந்தது.
பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில், 181 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய அரசு அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும்.
சுவீடன் நாட்டில் எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் பிரதமர் ஸ்டீபன் லோபன் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றம் முடங்கியுள்ள நிலையில், லோபன் பதவி விலகினால், யார் தலைமையில் புதிய அரசாங்கத்தை சபாநாயகர் அமைப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தனது கட்சி ஸ்டீபன் லோபனுக்கு எதிராக வாக்களித்திருந்தாலும், ஒருபோதும் வலதுசாரி தேசியவாத அரசாங்கம் அமைவதற்கு ஆதரவு அளிக்காது என இடதுசாரி கட்சி தலைவர் நூசி தாட்கோஸ்டர் தெரிவித்தார்.
சுவீடன் தற்போது புதிய அரசாங்கம், அல்லது இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்றாலும் அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வரை மட்டுமே பொறுப்பில் இருக்கும்.

174 கிலோ கஞ்சாவுடன் யாழ் மற்றும் முல்லையை சேர்ந்த இருவர் கைது !

தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.