June

June

சர்வதேச கிரிக்கெட்டின் கெளரவமான கோல் ஒப் பேம் விருது பெறும் இலங்கை வீரர் !

சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் கெளரவமான கோல் ஒப் பேம் விருதுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளது.

குறித்த கௌரவமானது சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளையாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு வழங்கப்படுகின்றது.

Kumar Sangakkara: The greatest hero of our time – Groundviews

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில், சிறந்த விக்கெட் காப்பாளராகவும் சிறந்த துடுப்பாட்ட வீரருமாக விளங்கிய ஒரு சில வீரர்களுள் குமார் சங்கக்காரவும் உள்ளடங்குவதாக சர்வதேச கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் இந்த கெளரவ நாமத்தை பெறும் இலங்கை கிரிக்கெட் அணியின் 2 ஆவது வீரராக குமார் சங்கக்கார விளங்குகின்றார்.

இதற்கு முதல் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 2016 ஆம் ஆண்டு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக இந்த கெளரவ நாமத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அரசுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் தாங்கியொன்றின் விலை 20 டொலர் வரை குறைவடைந்த போதிலும், அதன் மூலம் பயன்பெறக் கூடிய சலுகையை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஊடாக நிதியமொன்றை ஸ்தாபித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தனவந்தர்களுக்கு வரி சலுகையை வழங்கியமையின் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது அந்த சுமையை மக்கள் மீது இறக்க முயற்சிக்கின்றனர். இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் ஊடாக மிகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, தேவையேற்படின் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதற்கும் எதிர்க்கட்சி என்ற ரீதியில் பின்வாங்கப் போவதில்லை. இதுவே எமது எதிர்பார்ப்பாகும்.

எந்தவொரு விடயத்தையும் முறையாக செய்து முடிக்க முடியாத மற்றும் முக்கிய தீர்மானங்களை ஸ்திரமாக எடுக்க முடியாத அரசாங்கத்தின் இயலாமை எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக வெளிப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒரு விடயத்தைக் கூறுகின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வெளிநபர் அல்ல. அதே போன்று பொதுஜன பெரமுனவும் அரசாங்கமும் வெவ்வேறானவை அல்ல. அவ்வாறிருக்கையில் இவர் பிரிதொரு கதையைக் கூறுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் உண்மை பிரச்சினையான எரிபொருள் விலை விவகாரம் மறைக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. மக்களுக்காக தொடர்ந்தும் போராடுவோம் என்றார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக 8 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்து !

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் மீது மாத்திரம் சுமத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியை நாம் நிராகரிப்பதாக தெரிவித்து அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் 8 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் மத்தியில் அரசாங்கம் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையிலான இவ்வாறான செயற்பாடுகளை தோல்வியடைச் செய்வது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது பொறுப்பாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அறிக்கையில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் , தேசிய சுதந்திர முன்ணியின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணி சார்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜ கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தேசிய காங்ரஸ் சார்பில் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, ஸ்ரீலங்கா கம்யூனிச கட்சி சார்பில் ஜி.வீரசிங்க , ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் டிரான் அலஸ், ஸ்ரீலங்கா மக்கள் கட்சி சார்பில் அசங்க நவரத்ண ஆகியோர் இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் மீது மாத்திரம் சுமத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியை நாம் நிராகரிக்கின்றோம். அதற்கான காரணம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான தீர்மானம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் கூடிய வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவிலேயே எடுக்கப்பட்டதாகும்.

இன்று ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்த தீர்மானத்திற்கான பொறுப்பை அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்தி , அரசாங்கத்தை மக்கள் மத்தியில் அநாவசிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் எடுக்கப்பட்ட தீர்மானம் சவாலுக்கு உட்படுத்தி , அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் காணப்படுவதாக சித்தரித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகளை தோல்வியடைச் செய்வது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொறுப்பாகும் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

முடிவுக்கு வந்தது பெஞ்மின் நேதன்யாகுவின் 12 வருட ஆட்சி – இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் !

இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி  பெஞ்மின் நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்-நேதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.
இதற்கிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கரம் கோர்த்து ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இந்தக் கூட்டணியில் யேஷ் அதிட் (17 இடங்கள்), காஹோல் லாவன்- புளூ அண்ட் ஒயிட் (8 இடங்கள்), இஸ்ரேல் பெய்டெய்னு (7 இடங்கள்), தொழிலாளர் கட்சி (7 இடங்கள்), யமினா கட்சி (7 இடங்கள்), நியூ ஹோப் (6 இடங்கள்), மெரேட்ஜ் (6 இடங்கள்), அரபு இஸ்லாமிக் ராம் (4 இடங்கள்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு இடம் (மொத்தம் 62 இடங்கள்) பெற்றுவிட்டன.
இந்த கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும். முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட்  (49), பிரதமர் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர். அதில் 9 பெண்களும் அடங்குவர்.
இஸ்ரேலில் நப்தாலி-பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

“எமது இளைஞர்கள் இன்றும் ஆபத்தான வழிகளில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு அரசாங்கமே காரணம்.” – எம்.ஏ.சுமந்திரன்

“நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே எமது இளைஞர்கள் இன்றும் ஆபத்தான வழிகளில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்கின்றனர். இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட 61 இலங்கையர்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்த நாட்டில் முன்னர் அரசியல் நெருக்கடி காரணமாகவே எமது இளைஞர்கள் இங்கிருந்து வெளியேறினார்கள். ஆனால், தற்போது அதிக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறுகின்றார்கள்.

முகவர்களிடம் அதிக பணத்தை வழங்கி உயிர் ஆபத்தான வழிகளிலேனும் பாதுகாப்பாக சுதந்திர நாடுகளில் தொழில் செய்வோம் என்ற மனநிலையில் அவர்கள் தப்பிச் செல்கின்றனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் எனக் கருதப்படுபவர்கள்தான் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான வழியிலாவது நிம்மதியாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டும் என்ற ஆசையில் பெருந்தொகைப் பணத்தைத் திரட்டி முகவர்களிடம் வழங்கி பயணித்தவர்கள் இன்று பணத்தையும் இழந்து சிறையில் வாடும் அவலம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. அரசின் தவறான கொள்கைகளால் தொடர்ந்தும்  எமது இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகின்றது . என்றார்.

…………………………………………………………………………………………………………………………………….

இந்தியா தான் இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தரும் என்ற கோணத்தில் தான் இன்றுவரை கூட்டமைப்பின் அரசியல் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன. அரசினுடைய நகர்வுகள் இருக்கட்டும் ஒரு பக்கம். இந்தியா தான் தமிழர்களின் நண்பன் ஆகிட்டே. கதைத்து நிலையை புரிய வைத்து அவர்களை விடுதலை செய்துகாட்டுங்கள் பார்க்கலாம். அது கடினம். நல்லாட்சி அராங்கத்துக்கு முட்டுக்கொடுத்த போது இங்கு தொழில்வாய்ப்புக்கான அதிதிவாரங்களை சரி இட்டிருக்கலாம். அதுவுமில்லை. இன்று பொருளாதார சரிவு – சீனச்சார்பு என்று புதிதாக ஏதோ பேசிக்கொண்டிருக்கிருக்கிறீர்கள்.

இதில் இன்னுமொரு முக்கியமான விடயம். ஆளும் அரசை விமர்சித்தால் போதுமானது என்ற பேச்சுப்பல்லக்கு அரசியல் தான் இங்கு நடந்துகொண்டிருக்கிறது. இவ்வளவு பேசிய சுமந்திரன் அந்த இளைஞர்களுடைய விடுதலை தொடர்பாக ஒன்றும் பேசவில்லை. அது ஏன்..?

சிந்தியுங்கள்..!

50 ஆண்டுகளாக: அமிர்தலிங்கம் முதல் அடைக்கலநாதன் வரை ஆடும் முறை மாறவில்லை! ஆனால் ஆட்டம் தொடர்கிறது!! – த.ஜெயபாலன் .

கிரேக்கத் தத்துவஞானி சாக்கிரட்டீஸ் தன்னை ஒரு மேதை என்றார். அவர் தான் அவ்வாறு எண்ணியதற்கு என்ன காரணம் என்பதையும் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, “எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியுமாதலால்  நான் ஒரு மேதை – I know that I am intelligent, because I know that I know nothing” என்கிறார் சாக்கிரட்டீஸ். தனக்கு ஒரு விடயம் தெரியாது என்பதை உணர்ந்த ஒருவரே அந்த விடயத்தைத் தேடுவதற்கும் அறிவதற்கும் தூண்டப்படுவார். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வார். ஆனால் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நம்புவவர்களிடம் தேடல் இருக்காது அறிவும் வளராது. இன்றும் சிறந்த விஞ்ஞானியாகக் கருப்படும் ஐசாக் நியூட்டன் கூட எமது மூதாதையர் குறிப்பிட்டது போல கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு என்றே கூறுகின்றரர். இன்னும் கற்பதற்கும் அறிவதற்கும் நிறைந்த விடயங்கள் இருக்கின்றன என்பதையே அது குறிக்கின்றது.

ஆனால் தங்கள், தங்கள் கிணற்றுக்குள் வாழும் தமிழ் தேசிய வாதிகளோ தாங்கள் அனைத்தும் அறிந்துவிட்ட தோரணையில் அறிக்கைவிடுவதும் முடிந்த முடிவாக கருத்துக்களை முன்வைப்பதும் வேடிக்கையாக உள்ளது. இது ஒருவகை அதிமேதாவித்தனக் கோளாறு – superiority complex. பட்டும் இன்னமும் புத்தியில் தெளிவில்லை. சில சமயம் இது இவர்களுக்கு தீர்க்க முடியாத மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருக்கலாம்.

இந்தப் பழமொழி அரசியல் அடிப்படையில் தவறு என்றாலும் தமிழ் தேசியத்திற்கு பொருத்தமாக இருப்பதால் குறிப்பிடுகிறேன். ‘குருடன் பெண்டிலுக்கு அடித்தது போல’ தமிழ் தேசிய வாதிகள் எப்போதாவது சொல்லவது, கத்துவது சரியாக இருந்துவிடுவதும் உண்டு. அதை வைத்துத்தான் அவர்களது அரசியல் பிழைப்பு நடக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு இவர்களால் எப்போதுமே இழப்புத்தான். உயிரை வகைதொகையின்றி இழந்தனர். அளவில்லாத உடைமைகளை இழந்தனர். இப்போது எஞ்சியிருக்கின்ற உரிமைகளை இழக்கின்றனர். பொருளாதாரத்தை இழக்கின்றனர். கல்வியை இழக்கின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை, பொருளாதாரத்தை, கல்வியை அழிக்கின்ற விடயத்தை மிகச்சிரத்தையாக செய்துவருகின்றனர், தமிழ் தேசிய வாதிகள். பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் இவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டு மக்களை அழித்தனர். அரசியல் என்பதன் அடிப்படையே இயலாததை இயலுமாக்கும் திறன் – politics is the art of making imposible posible என்பதை உணராமல், தங்களை வளர்க்கும் திறன் என்று புரிந்து வைத்துள்ளனர். இவ்வளவு காலத்தில் இவர்கள் தங்களையும் ஒன்றும் பெரிய அளவில் வளர்த்துக் கொண்டதாகத் தெரியவில்லை. வைக்கோல் பட்டறையைச் சுற்றிச் சுற்றி வந்து குரைப்பவர்களாகவே உள்ளனர்.

இந்த லட்சணத்தில் மாவை சேனாதிராஜா வாரிசு அரசியலுக்கும் மகனைக் களமிறக்கி உள்ளார். மாவை சேனாதிராஜா ஒன்றும் தன் திறமையால் முன்னுக்கு வந்தவரல்ல. தனக்கு மேலுள்ளவர்கள் சுட்டுக்கொல்லப்பட படிப்படியாக முன்னுக்கு நகர்ந்தவர். இதே பாணியில் இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி எப்போது பாடையில் ஏறுவார் தான் எப்போது பதவியேற்கலாம் என்று லண்டனில் இருந்து வந்த சாதிமான் எஸ்.அரவிந்தன் கிளிநொச்சியில் காத்துக்கிடக்கின்றார். இவருக்கு அரசியலுக்கு வர உள்ள ஒரே தகுதி யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையனை தன்னுடைய நண்பர் தங்கமுகுந்தனோடு சேர்ந்து அடித்ததே.

தங்கமோ பித்தளையோ முகுந்தன் யாழ்பாண நூலகம் எரிக்கப்பட்ட நாளை மாற்றி வைப்பேன் என்று சன்னதம் ஆடுகின்றார். மே 31 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை யூன் 1இல் எரிக்கப்பட்டது என்று எழுதி நூலக எரிப்பின் சூத்திரதாரிகளான காமினிதிஸ்சநாயக்காவைவும் சிறில் மத்தியூவையும் காப்பாற்ற முனைகின்றார். அ அமிர்தலிங்கம் மே 31 முதல் யூன் 2 வரை நடந்த சம்பவங்களை தொகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் அ.அமிர்தலிங்கத்திற்கே எந்த நாள் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது என்பதில் உறுதி இருக்கவில்லை. அப்போதைய ஈழநாட்டின் தவறான செய்தியின் அடிப்படையிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இவ்வாறு தான் தமிழ் தேசியம் புனைவுகளையே வரலாறாக்க கொக்கரிக்கின்றது. இப்படி சொந்த விடயங்களிலேயே விவரம் போதாதவர்கள் தற்போது வெளிவிவகாரம் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர்.

How LTTE killed TULF leader Amirthalingam - NewsIn.Asiaதமிழ் தேசியம் எப்போதும் பிரச்சினைகளைத் தணிக்க அல்லது தீர்த்துவைக்க விரும்புவதில்லை. எப்போதும் முரண்பாடை மோசமடையச் செய்யும் வகையிலேயே செயற்படும். அதற்கு அவர்களது அரசியல் போதாமை முக்கியகாரணம். 1980க்களில் அவர்களுடைய சமன்பாடு ‘எதிரியின் எதிரி, தங்களின் நண்பன்’. இந்த உலுத்துப்போன சமன்பாட்டைத் தான் அவர்கள் இன்றும் கடைப்பிடிக்கின்றனர். இலங்கை அமெரிக்காவின் நண்பன். இந்தியாவின் எதிரி. அதனால் இந்தியாவுக்கு சேவகம் செய்து, இந்தியாவை தமிழர்களின் நண்பனாக்கினால் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா தீர்த்து வைக்கும். இதுதான் அன்று முதல் இன்று வரை தமிழ் தேசியம் பின்பற்றுகின்ற சமன்பாடு.

இந்தியாவின் அரசியல் வாரிசான ராஜீவ் காந்தியயைப் படுகொலை செய்த பின்னரும் கூட இந்தக் கூட்டம் இந்தச் சமன்பாட்டை மாற்றவில்லை. ராஜீவ் படுகொலை ஒரு துன்பியல் சம்பவம். ”கள்ளத்தோணிகள், தோட்டக்காட்டான்கள், வடக்கத்தையான்’ என்றெல்லாம் நாங்கள் செல்லமாகத்தான் கூப்பிடுகிறோம்.  மற்றும்படி நாங்களும் நீங்களும் நண்பர்கள் தான். எங்களுக்கு ஒன்றென்றால் தமிழகம் கொந்தளிக்கும்” என்றெல்லாம் இவர்கள் சில பஞ்டயலக் வைத்து அரசியல் செய்ததைவிட இவர்களிடம் ஒரு துளி அரசியல் தெளிவும் இருந்ததில்லை.

சங்கானை நிச்சாமத்தில் சாதியப் போராட்டத்திற்காக குண்டெறிந்த பொழுது அ அமிர்தலிங்கம்  சங்கானையயை சங்ஹாய் ஆக்குகிறார்கள் என்று புலம்பினார். இன்றோ யாழ்ப்பாணத்தில் சீனா பனிப்போர் தொடுக்கிறது என்று முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி அறிக்கைவிடுகின்றார். கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மாறியிருக்கிறார்களே அல்லாமல் அவர்களுடைய அரசியலில் எந்தவித மாற்றமும் இல்லை.

2009இல் தமிழ் தேசியம் முள்ளிவாய்க்காலில் மண்கவ்வியதை அவர்களால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை. தங்களுடைய அரசியல் போதாமையின் விளைவே இது என்பதை அவர்கள் இன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களும் தமிழ் தேசியப் பூநூல் அணிந்த காலம் அது. மதியுரைஞர் பாலசிங்கத்தின் இடத்தை நிரப்ப கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களுக்கு ஐபிசி இல் நேர்முகத் தேர்வுகள் பல நடந்தன. காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து இவர்கள் தமிழ் தேசியத்துக்கு மார்ஸிய மூலாம் பூசினர். பூசிய மூலாம் கொட்டிண்ண, தமிழ் தேசியம் வேகமாகக் கறள்பிடித்தது. இந்த கீ போர்ட் மார்க்ஸிட்டுகள் இன்று கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் ‘ஓர்கானிக்’  வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். வறுமையில் வாழும் மாணவர்களுக்கு கல்வியூட்டுவதே அரசுக்கு துணைபோகும் என்று புரட்சிகர தமிழ் தேசியம் பேசியவர்கள் இன்று, ஓர்கானிக் தமிழ் தேசியப் புரட்சியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் தேசிய அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள்,  கீ போர்ட் மார்க்ஸிஸ்டுக்களும் அ.அமிர்தலிங்கம் விட்டுப்போன சமன்பாட்டையே பயன்படுத்துகின்றனர். இந்தச் சமன்பாட்டில் எதிரியும் நண்பர்களும் மாறிவிட்டனர். இலங்கைக்கு இப்போதும் இந்தியா தான் எதிரியாம். அமெரிக்கா உட்பட மேற்குநாடுகளும் இலங்கைக்கு எதிரியாம். சீனா தான் இலங்கையின் நண்பனாம். அதனால் சீனாவுக்கு எதிராக தமிழ் மக்கள் கிழர்ந்து எழுந்து இந்தியாவையும்  அமெரிக்க நேசநாடுகளையும் குசிப்படுத்தினால், அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார்களாம். இதுதான் தமிழ் தேசியவாதிகளான பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் முதல் அனைவரதும் முடிவான நிலைப்பாடு. இந்தப் பின்னணியில் தான் இவர்கள் இப்போது கத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் வைத்துத்தான் தமிழ் தேசியவாதிகள் ஏன் அறிக்கை விடுகின்றனர்; கத்துகின்றனர்; ஏன் அறிக்கைவிடவில்லை; கத்தவில்லை என்பதைப் பார்க்க வேண்டும். வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று முற்று முழுதான பொய்யான தகவலை வெளியிட்டது வேறொன்றுக்கும் அல்ல. அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளையும் இந்தியாவையும் குசிப்படுத்தி அவர்களுடைய தூதரகங்களில் கவனத்தைப் பெறவே.

உலகின் செல்வந்த நாடுகளான அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளின் கூட்டத்தொடர் பிரித்தானியாவின் சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசமான கோன்வோலில் நடைபெறுகின்றது. அங்கு  வைத்துத் தான் இந்த நேசநாடுகள் ஒரு பில்லியன் (பத்துக்கோடி) வக்சீன்களை வறிய நாடுகளுக்கு வழங்க முன்வந்தன. இந்த உதவியயைச் செய்ய முன் வந்தமைக்கு காரணமே எங்கே சீனா இந்நாடுகளுக்கு வக்சீனை வழங்கி ராஜதந்திர ரீதியில் தங்களை தோற்கடித்துவிடும் என்ற பயத்தினால் என்பதை பிரித்தானியாவின் முன்னணிப் பொருளியல் பத்திரிகையான ‘பினான்சியல் ரைம்ஸ்’ நேற்று முன்பக்கத்தின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. இன்னும் பல ஊடகங்களும் இதனை வெளியிட்டு இருந்தன. இந்த செல்வந்த நாடுகளின் மாநாட்டில் சீனா இடம்பெறாத போதும், இம்மாநாட்டில் சீனாவே ஆளுமை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்க ஒன்றியம் இந்தச் செல்வந்த நாடுகளின் உதவியயே வரவேற்றிருந்த போதும், இந்நாடுகளின் போக்கை ‘தடுப்பூசி இனவாதம்’ என பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கண்டித்து இருந்தது. நோயைக் கட்டுப்படுத்தும் வக்சீனை ஏனைய நாடுகள் உருவாக்கத் தடைவிதித்துவரும் இந்தச் செல்வந்த நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டதால் பத்துவீதத்தையே வறிய நாடுகளுக்கு கையளிக்க முன்வந்துள்ளன. அதுவும் எப்போது இந்நாடுகளைச் சென்றடையும் என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. சீனாவும் ரஸ்யாவும் தங்களது வக்சீனை வறிய நாடுகளுக்கு வழங்கி வருவதால் தான் இந்தச் செல்வந்த நாடுகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள குறைந்தளவு வக்சீனை அதுவும் காலதாமதமாக வழங்க முன்வந்தன.

யாழ்ப்பாணத்தில் இந்தியா – சீனா இடையே பனிப்போருக்கான வாய்ப்பு என்று அனந்தி சசிதரன் யூன் 11இல் வலம்புரியில் வெளியிட்ட கருத்துக்களும் இந்தப் பின்னணியிலேயே நோக்கப்பட வேண்டும். செல்வந்த நாடுகளின் தூதராலயங்கள் சார்ள்ஸ் நிர்மலநாதன், அனந்தி சசிதரன் போன்ற விபரமும் விவேகமுமற்றவர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளில் தங்களுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.

Selvam Adaikalanathan - Photos | Facebookதிருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கப்படுவது தொடர்பிலும் திருச்சியில் விடுதலை செய்யுங்கள் அல்லது எங்களை கருணைக்கொலை செய்யுங்கள் என்று கூறும் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் தமிழ் தேசியவாதிகள் மௌனமாக இருப்பதும், இதனால் தான். இந்த அகதிகளோடு தொலைபேசியில் உரையாடியதாகக் கூறும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படையாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சமன்பாட்டில் அரசியல் விபரமும் விவேகமுமற்ற அ அமிர்தலிங்கம் முதல்  செல்வம் அடைக்கலநாதன் வரை பிரபாகரனின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசு உட்பட எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் இந்தியாவின் தாளத்துக்கு தப்பாமல் ஆட்டத்தை தொடர்கின்றனர்.
_._._._._._
அகர வரிசையில் அனந்தி முதல் உயிர்மெய் வரிசையில் கடைசியில் வரும் விக்கினேஸ்வரன் வரை தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் தாங்கள் வாழும் கிணற்றுக்கு வெளியே பெரியதொரு உலகம் இருக்கின்றது என்பதை ஒரு போதும் எண்ணிப் பார்க்காமலேயே வாழ்ந்தும் கத்தியும் பழகிவிட்டனர். இந்த இருவருக்கும் இடையேதான் மற்றைய தமிழ் தேசியவாதிகளும் தங்கள் தங்கள் கிணற்றுக்குள் வாழ்ந்தும் கத்தியும் வருகின்றனர். இவர்களது கத்தல்களையும் புலம்பல்களையும் காதுகுத்து மற்றும் மரணச் செய்திகளுக்கிடையே வெளியிடுவதற்கு சில ஊடகங்கள்: உதயன், வலம்புரி, காலைக்கதிர், லங்காசிறி ஜப்னா நியூஸ் என்று காத்திருக்கும் அளவுக்குத் தான் தமிழ் தேசியத்தின் இருத்தல் இருக்கின்றது.

 

தமிழ் தேசியத்துக்கு கிடைத்த ஒரேயொரு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தையும் தலைவர் துரத்திவிட்டதும் அவர் இயற்கை எய்தியதும் வரலாறாகிப் போனபின் அந்த இடம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. அந்த இடத்தை நிரப்ப பலர் போட்டி போட்டாலும் யாராலும் அதனை நிரப்ப முடியவில்லை. இப்போது அதற்குத் தேவையும் இல்லாமல் போய்விட்டது. தமிழ் தேசியம் இப்போது அல்ஸமியர் எனும் ஞாபகமறதி நோய் (தமிழில் அறளைபேர்ந்துவிட்டது என்றும் சொல்வார்கள்) க்கு ஆளாகிவிட்டது. அவர்களுக்கு பழையதும் ஞாபகம் இருக்காது. தாங்கள் என்ன கதைக்கின்றோம் என்பதும் ஞாபகம் இருக்காது. அதனால் அவர்கள் அரசியலில் இருந்து சுகவீன விடுமுறையில் செல்வது அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.

“இந்த அரசாங்கம் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கக் கூடியவர்களிடம் அதனை ஒப்படைத்து விட்டு பதவி விலகுவதே சிறந்தது.” – சஜித் பிரேமதாச வலியுறுத்தல் !

“இந்த அரசாங்கம் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கக் கூடியவர்களிடம் அதனை ஒப்படைத்து விட்டு பதவி விலகுவதே சிறந்தது.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பினை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனை வலியுறுத்தியுள்ளார்.

அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எரிபொருள் விலையை அதிகரித்து மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம் அதன் பழியை தனிநபர் மீது சுமத்த முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எவ்வாறிருப்பினும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கை அரசாங்கத்திற்குள் காணப்படும் பாரிய முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

தமது கட்சியே இந்த நாட்டை ஆட்சி செய்கிறது என்று குறிப்பிடும் வகையில் அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை அபாயம் மிக்கதாகவுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடமும் பொதுஜன பெரமுனவிடமும் கேட்பதற்கு பல கேள்விகள் எழுந்துள்ளன.

அரசாங்கமும் அறியாத வகையில் எரிபொருள் விலையை திடீரென அதிகரிப்பதற்கு அமைச்சரொருவர் மாத்திரம் எவ்வாறு தன்னிச்சையாக தீர்மானித்தார் ? அவ்வாறு அவர் தனித்து தீர்மானமொன்றை எடுத்திருப்பாராயின் அமைச்சரவையின் ஒழுங்கு விதிகளை மீறி தனியொரு அமைச்சரால் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படும் வரை அரசாங்கத்தின் பிரதானிகளான ஜனாதிபதியும் பிரதமரும் என்ன செய்து கொண்டிருந்தனர் ?

வழமையாக இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அது அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானமாகவே கருத்தப்படும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு குறிப்பிட்டவொரு அமைச்சர் மீது மாத்திரம் குற்றம் சுமத்தப்படுகிறது ? மேலும், எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்தது உண்மைக்கு புறம்பாகவா? அவ்வாறெனில் அது கற்பனை கதையா? குறித்த அமைச்சர் இவர்களுக்கு அப்பால் செயற்படுகின்றாரா?

இந்த அரசாங்கத்தால் அண்மைக் காலங்களில் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் பல தீர்மானங்கள் மிகவும் இரகசியமாக சூட்சுமமான முறையில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் திடீரென இந்த தீர்மானத்திற்கு மாத்திரம் பொதுஜன பெரமுன பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளமையானது அரசாங்கத்திற்குள் காணப்படும் பாரிய முரண்பாடுகளை வெளிப்படுத்தவில்லையா?

இவ்வாறான அறிக்கைககள் ஊடாக அரசாங்கமானது தம்மீது தவறில்லை என்று நிரூபிக்க முற்படுகிறது. எனவே எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர இதிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்க கூடாது. இந்த தீர்மானத்தில் மாற்றம் வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கான மக்கள் குரல் தோன்றிவிட்டது. தற்போது அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளனர் என்றார்.

சிரிய வைத்தியசாலையில் ஏவுகணைத்தாக்குதல் – 13 பேர் பலி !

சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

அரசுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகள், குர்தீஸ் படைகள், துருக்கி ஆதரவுப் படைகள் என பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் பல்வேறு பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இதில் ஹதே பகுதி துருக்கி ஆதரவு படைகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள அப்ரின் நகரில் உள்ள வைத்தியசாலையில் 2 ஏவுகணைகள் வந்து விழுந்துள்ளன.

இதில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 4 பேர் மற்றும் நோயாளிகள் என 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. குர்தீஸ் படையினர்தான் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அரசுபடைகள்தான் ஏவுகணைகளை வீசியதாக அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள துருக்கி ஆதரவு படையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

“எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.”  – எம்.ஏ.சுமந்திரன்

“எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கமானது மக்கள் மீது அடக்குமுறைகளை வன்முறைகளைப் பிரயோகித்து மக்களை அடக்கியாள நினைக்கின்றது.  அதாவது குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு பாடுபடுகிறது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அரசாங்கம் எதிர்காலத்திலாவது சரியான முறையில் செயற்படாவிட்டால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாட்டில் நாங்கள் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.

எனவே இந்த அரசாங்கமானது கடும் போக்கை கைவிட்டு அடக்குமுறையை விட்டு குடும்ப ஆட்சி முறையினையும் கைவிட்டு செயற்பட வேண்டும். குடும்ப ஆட்சி தொடரக்கூடாது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினுடைய பங்களிப்போடு அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி நடாத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் .

தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தினால் எந்தவிதமான தகுந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. பயணத்தடை என்கின்றார்கள், ஊரடங்கு என்கிறார்கள் – ஆனால் ஒழுங்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை. வீதிகளில் மக்கள் பயணிக்கிறார்கள், அத்தியாவசிய தேவை எனக் கூறி அனைவரும் வீதிகளில் நடமாடுகிறார்கள். எனவே இந்த அரசானது இந்தக் கொடிய நோயை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.

அதற்குரிய பொறுப்பினை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது சுகாதார அமைச்சு மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட இணைந்த அமைச்சுகளும் இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும். சுகாதார அமைச்சுக்குள்ள அதிகாரத்தினை வேறு யாராவது பாவிக்கிறார்களா?

அல்லது வேறு என்ன நடைபெறுகின்றது என்பது எமக்கு புரியவில்லை. ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் யாராவது ஒருவர் பொறுப்புக்கூற முன்வரவேண்டும். இல்லையென்றால், அவர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யலாம் எனத் தெரிவித்தார்.

“நீங்கள் ஒன்றும் அவ்வளவு நல்ல அரசாங்கம் கிடையாதே” – மனோகணேசன் கிண்டல் !

“தடுப்பூசியை தேடி மக்கள் அல்லோல் கல்லோல் படுகிறார்கள். இவை அனைத்துக்கும் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய இங்கே ஆளில்லை. ஆனால் அரசாங்கம் எரிபொருள் பிரச்சினையில் மட்டும் அரசியல் நாகரிகமானவர்கள் போல நடிக்கிறார்கள்.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மிகப்பெரும் பூதாகர பிரச்சினையாக உருமாறியுள்ளது எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டமையாகும். எதிர்க்கட்சிகளுடைய விமர்சனங்களுக்கு அப்பால் பெரமுன கூட்டணிக்குள் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தொடர்பில்லை என்றும் அது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அவர்களுடைய தன்னிச்சையான முடிவு எனவும் கூறப்பட்டுள்ள நிலையில் “மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்திய அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும்.” என பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத்  தெரிவிக்கும் போதே மனோ கணேசன்  இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பிழை நடந்தால், இப்படி பொறுப்பேற்று ராஜினாமா செய்வது நல்லதே. அது நாகரீக அரசியலே. ஆனால், இந்த அரசின் வரலாறு இப்படி இல்லையே. ஆகவே திடீரென அரசு இவ்வளவு நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது, “நீங்கள் ஒன்றும் அவ்வளவு நல்ல அரசாங்கம் கிடையாதே” என மக்கள் சந்தேகத்துடன் அங்கலாய்கிறார்கள்.

மக்கள் ஏற்கனவே வாழ்க்கை செலவு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது யார்? ஆளுகின்ற பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம்  அரசின் இந்த திடீர் “நன்னடத்தையை” பார்த்து, “உலக மகா நடிப்புப்புடா” என நாடு முழுக்க மக்கள் மயங்கி வாயடைத்து நிற்கிறார்கள்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உரிய வேளையில் தடுப்பூசிகளை வாங்க இந்த அரசு தவறி விட்டது. மிகவும் நட்பு நாடு என்று இவர்களே கூறிக்கொள்ளும் சீன நாடு கூட தங்கள் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை, வங்காளதேசத்துக்கு 10 டொலர் விலையிலும், இலங்கைக்கு 15 டொலர் விலையிலும் தருகிறது.

தடுப்பூசியை தேடி மக்கள் அல்லோல் கல்லோல் படுகிறார்கள். இவை அனைத்துக்கும் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய இங்கே ஆளில்லை. நடுக்கடலில் தீப்பிடித்த இரசாயன பொருள் கொண்ட கப்பலை, கொழும்பு துறைமுகத்தை நோக்கி வரச்சொல்லி, கடல் வளத்தையும், மீனவர் வாழ்வாதாரத்தையும் அழித்தவர் யார் தெரியவில்லை.

“அவரை கண்டால் கூட்டி வாருங்க” என, பாணந்துறை முதல், புத்தளம், மன்னார் வரை மேற்கு கரை முழுக்க மீனவ மக்கள் பொங்கி நின்று கேள்வி எழுப்புகிறார்கள். “இதற்கு நான்தான் பொறுப்பு” என பொறுப்பேற்று ராஜினாமா செய்ய இங்கே ஆளில்லை.

இந்நிலையில் திடீரென அரசு இவ்வளவு நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது, எமக்கு சந்தேகம் வருகிறது. இதற்குள் உள்ள உள்குத்து என்ன என்று கேட்க தோன்றுகிறது. தமிழ் சினிமா சிரிப்பு நடிகர்களின் “நீ ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாதே?” என்ற பிரபல சிரிப்பு சந்தேக வசனம் ஞாபகத்தில் வருகிறது. உண்மையில், அமைச்சரவை தீர்மானத்தின் படியே விலை தீர்மானிக்கப்படுகிறது.

அமைச்சரவையில் வாழ்க்கை செலவு உப குழு இருக்கிறது. அதில்தான் விலைவாசி முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரவை அமைச்சராக இருந்த எனக்கு இதுபற்றி நன்கு தெரியும். அமைச்சரவை பத்திரங்களை யார் முன் வைத்தாலும், முடிவு எடுக்கபட்டால் அதுபற்றி முழு அமைச்சரவையும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த வாழ்க்கை செலவு உப குழுவில் யாரெல்லாம் இருக்கின்றார்கள்? நிதி அமைச்சர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, வர்த்தக அமைச்சர் பந்துல்ல குணவர்த்தன, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால், ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் உள்ளார்கள். ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இந்த குழுவின் செயலாளராக குழுவை கூட்டுகிறார். இங்கேதான் விலையேற்றங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.