June

June

100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு !

அரசாங்கத்தின் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் நகர அபிவிருத்தி யோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருவில, பதவிசிறிபுர மற்றும் குச்சவெளி பிரதேசத்தின் புல்மோட்டை ஆகிய பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

திருகோணமலை மாவட்டம் பல்லின சமூகத்தினரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்கின்ற ஒரு மாவட்டம். இங்கு நீண்ட காலமாக இன ஒற்றுமை பேணப்பட்டு வருகின்றது.

திருகோணமலை, வெருகல் போன்ற பிரதேசங்கள் தமிழ் மக்களை அதிகமாகக் கொண்ட பிரதேசங்கள். கிண்ணியா, மூதூர், குச்சவெளி, தம்பலகமம் போன்ற பிரதேசங்கள் முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்கள். அதேபோல கந்தளாய், சேருவில, மொரவௌ, கோமரங்கடவெல, பதிவிசிறிபுர போன்ற பிரதேசங்கள் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களாகும்.

நாட்டில் வாழ்கின்ற சகல மக்களையும் உள்ளடக்கிய வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கொள்கையாகும். இந்தக் கொள்கை திருகோணமலை மாவட்ட நகரத் தெரிவில் கவனத்தில் கொள்ளப்படாமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.

எனவே, இந்தக் குறையினை நிவர்த்திக்கும் பொருட்டு கிண்ணியா, மூதூர் மற்றும் வெருகல் போன்ற பிரதேசங்களையும் இந்த நகர அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கொரோனா தடுப்பூசிகளின் ஆயுட்காலம் குறைந்த பட்சம் ஒரு வருடம் மட்டுமே ” – பேராசிரியர் அர்ஜுன டி சில்வா

2020 வருடம் முழுமையாக கொரோனா தொற்று அச்சம் நீடித்திருந்த நிலையில் இந்த வருடம் முழுக்க முழுக்க கொரோனாவுக்கான தடுப்பூசியை நுகர்வது தொடர்பாக உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. அமெரிக்கா 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. பிரிட்டன் தங்களிடம் உபரியாக உள்ள சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க இலங்கை ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா என பல நாடுகளிடமிருந்தும் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கான நகர்வுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் , தற்போது காணப்படும் எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதமளிக்கமுடியாது என்று, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு கொரோனாதடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடம் வரை நோயெதிர்ப்பு சக்தி காணப்படும் என கருதப்படுகின்றது.

அத்துடன், குறித்த நோயெதிர்ப்புசக்தி ஒரு வருடத்துக்கு மேல் நீடிக்குமா இல்லையா என்பது குறித்து விஞ்ஞான ரீதியான பதிலொன்று இதுவரை கண்டறியப்படவில்லை.

ஆகவே, கொரோனா தடுப்பூசியை வருடத்துக்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை பெற்றுக் கொள்ள வேண்டியநிலை ஏற்படுமா ? என்பது குறித்து உறுதி கூற முடியாது.

இதேவேளை, சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதன் பின்னரும், நோய் அறிகுறிகள் காணப்பட்ட சிலர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அறிகுறிகள் காணப்பட்ட, 22 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்களு்கு எதிராகவும் குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் .” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் !

“ சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்களு்கு எதிராகவும் குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் .” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்க – இப்போதே செயற்படுங்கள்’ என்பது இந்த ஆண்டுக்கான உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாளுக்கான தொனிப்பொருளாகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், உலகளாவிய நிலைத்தன்மையை இலக்காக கொண்டு 2025ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை உலகில் இல்லாதொழிக்கும் இலக்கை கொண்ட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், குழந்தைகளின் எதிர்காலத்தை ஒரு சிறந்த பாதையில் கொண்டு வருவதற்கு கடந்த காலத்தை அர்ப்பணித்த தாங்கள், இன்றும் அதற்காக இன்னும் கடுமையாக உழைத்து வருவதாக உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆபத்தான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தடுப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் பல சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

தற்போதைய தலைமுறையை மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரை பற்றியும் சிந்தித்தே இன்று தாங்கள் சிறுவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

அதனால் சிறுவர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தடுக்க அதற்கு எதிராக குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் தாம் தயவுடன் கேட்டுக்கொள்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று குணமடைந்த எதிர்கட்சி தலைவர் – முழு சனத்தொகைக்கும் தடுப்பூசி வழங்கப்படும் வரை தடுப்பூசி எடுக்க மாட்டேன் என அறிக்கை !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர். நல்ல விடயம் தான்.

இங்கு கேள்வி “கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்ற இவ்விருவரும், சிகிச்சைகளை நிறைவு செய்துகொண்டமையேயாகும்.

என்றுமே இந்த அரசியல் தலைவர்கள் ஏன் அரச மருத்துவமனைகளை நாடுவதில்லை என்ற கேள்வி என்னை துளைத்துக்கொண்டேயிருக்கின்றது. இது போக வழிபாட்டினை தொடர்ந்து ஊடகங்களிடம் பேசியுள்ள எதிர்க்கட்சி தலைவர் “நாட்டின் முழு சனத்தொகைக்கும் தடுப்பூசி வழங்கப்படும் வரை நான் கொரோனா வைரஸ்தடுப்பூசியை பயன்படுத்தமாட்டேன்.” என கூறியிருந்தார்.
மக்கள் மீது அவ்வளவு பற்று உள்ள தலைவராக இருந்திருந்தால் மக்கள் சிகிச்சை பெறும் அதே தடுப்பு நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கலாம். மக்களுக்கு அது ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கும். நம்பிக்கையையும் அளித்திருக்கும்.
ஆனால் அவர் அது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை. அவர் மட்டுமல்ல உயர்மட்டத்திலுள்ள யாருமே அது தொடர்பாக கவனம் செலுத்துவதில்லை. தங்களுக்கு நோய் என்றவுடன் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகள் தான் தஞ்சம். இங்கு ஒரு கேள்வி அவசியமாகிறது..? தனியார் மருத்துவமனைகள் தான் சிறப்பான சிகிச்சையளிக்கின்றன என்றால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்காக முறையான சிகிச்சைகள் இல்லையா..? என்பதே அதுவாகும்.
ஆளும்கட்சியினர், எதிர்கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரும் அரசு மருத்துவ மனைகளை பயன்படுத்த முன்வரவேண்டும். அப்போது தான் அங்கு நடக்கின்ற பிரச்சினைகள் வெளிக்கொண்டுவரப்படும். அவை இன்னும் சிறப்பாக இயங்க வழியேற்படும். அதை விட்டு விட்டு நீங்கள் தனியார் மருத்துவமனைகளில் மருந்து எடுத்து விட்டு மக்களை நேசிகிறேன் என
கூறுவது பேச்சுப்பல்லக்கு அம்பலம் ஏறாது என்பது போன்றதானது தான்.
சரி செய்திக்கு வருவோம்..,  சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸ இருவரும், கொழும்பு-02 கங்காராம விஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய சஜித் பிரேமதாஸ,
நாட்டின் முழு சனத்தொகைக்கும் தடுப்பூசி வழங்கப்படும் வரை நான் கொரோனா வைரஸ்தடுப்பூசியை பயன்படுத்தமாட்டேன் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நான் தடுப்பூசியை பயன்படுத்த மறுத்தமையினாலேயே எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச எனினும் முழுசனத்தொகைக்கும் தடுப்பூசி கிடைக்கும்வரை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளப்போவதில்லை என்ற நிலைப்பாடு தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆபத்தினை தவிர்ப்பதற்காக நாங்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவோம் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள பெரும்பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது,அவர்கள் உணவுகளை பெறமுடியாத நிலையில் உள்ளனர் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்

 

அவதானமாக இருங்கள் – இலங்கையில் 10 நாட்களில் 500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு – உலகில் மிகவும் தோல்வியடைந்த பயணத்தடை முறை இலங்கையில் !

,லங்கையில் கொவிட் நோய் காரணமாக கடந்த 10 நாட்களில் 546 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன என  அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம்  தெரியவந்துள்ளது.

மரணம் ஒன்று சம்பவித்த தினத்தில் அன்றி, அந்த மரணம் கொவிட் நோயால்தான் இடம்பெற்றது என்பதை உறுதிப்படுத்தி பிரிதொருநாளிலேயே அறிக்கை வெளியாக்கப்படுகிறது.

இவ்வாறு கடந்த 10 நாட்களில் வெளியாக்கப்பட்ட அறிக்கைகளின் படி, இறுதி 10 நாட்களில் 546 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் முதல் 500 கொவிட்-19; மரணங்கள் பதிவாவதற்கு 347 நாட்கள் சென்றிருந்தன. இரண்டாவது 500 கொவிட் மரணங்கள் 72 நாட்களில் பதிவான அதேநேரம் 13 நாட்களில் மூன்றாவது 500 மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று வெளியான அறிக்கையின் தரவுகளை உள்ளடக்காது, கடந்த 10ம் திகதி வரையான 10 நாள் காலப்பகுதியில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 527 ஆகும். இதன்படி இறுதி 500 மரணங்கள் வெறும் 10 நாட்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக வேகமான கொரோனா மரணங்கள் ஏற்பட்ட காலமானது பயணத்தடை நடைமுறையிலிருந்த காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  “உலகில் மிகவும் தோல்வியடைந்த பயணத்தடை முறையே இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்றது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை முறைமை முற்று முழுதாக தோல்வியடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை நினைவில்கொள்ளத்தக்கது.

5 ஆம் வகுப்பு முதல்  12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வரை பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சாமியார் – சாமியாருக்கு உதவிய ஆசிரியர்கள் !

இந்தியாவின் தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது, இந்தப் பள்ளியின் நிறுவனர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த இவர் 30 வருடங்களுக்கு முன்பு பிழைப்புதேடி சென்னை வந்தார்.

காவி உடை அணிந்து பூஜைகள் செய்து வந்த நிலையில், சிவசங்கர் பாபா என தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டு ஆன்மீக உரையாற்ற ஆரம்பித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யாகவா முனிவருடன் நடந்த விவாதத்தில் கைகலப்பான வீடியோ காட்சி பரபரப்பானதையடுத்து, சில தனியார் தொலைக்காட்சிகளில் ஆன்மிக செற்பொழிவின் மூலம் பிரபலமானார்.

அரசியல் தொடர்புகள் மூலம் தன் செல்வாக்கை உயர்த்திக்கொண்ட சிவசங்கர் பாபா, கேளம்பாக்கம் அருகே சுஷில் என்ற பக்தர் வழங்கிய நிலத்தில், ராமராஜ்ஜியம் என்ற பெயரில் ஒரு நகரை உருவாக்கினார். அதில் நிலத்தை தானமாக வழங்கியவரின் பெயரையும், தனது அவதாரத்தின் பெயரையும் இணைத்து சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்ற ஆசிரம பள்ளியை நிறுவி நடத்தி வருகிறார்.

பாலியல் புகாரில் சிக்கிய குருஜி! யார் இந்த சிவசங்கர் பாபா!?நடிகர் ரஜினியின் பண்ணை வீடு அருகே சுமார் 64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் பக்தர்கள் என்ற பெயரில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 30 ஆண்டுகளாக தன்னை கடவுளின் அவதாரம் எனக் கூறி வரும் சிவசங்கர் பாபா, ஆனந்த நடனம் ஆடிய போதெல்லாம் அவரை கடவுளின் அவதாரமாக நினைத்து வணங்கி வந்தனர்.

இந்த நிலையில்தான் அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் அவர் மீது பரபரப்பு பாலியல் புகார்களை கூறியுள்ளனர். 5 ஆம் வகுப்பு முதல்  12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வரை பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் தங்கள் புகாரில் குற்றம்சாட்டியுள்ளனர். ஆன்மிகம் என்ற போர்வையில், தன்னை கடவுள் கிருஷ்ணர் என்று கூறிக் கொண்டும் தான் குறிவைக்கம் மாணவியை கோபிகா என்று கூறியும், சிவசங்கர் பாபா இந்த கொடூர செயல்களை அரங்கேற்றி வருவதாக மாணவி சமூகவலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு குளிர்பானம் என்ற பெயரில் மதுபானங்களை கொடுத்து அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை தாம் நேரடியாக பார்த்ததாகவும் மாணவி தமது புகாரில் கூறியுள்ளார். சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் கூறிய அடுக்கடுக்கான புகார்கள் சமூகவலைதளங்களில் பூதாகரமாக வெடித்ததையடுத்து, முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம் திகதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார்.

அடுத்தநாள் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கௌரி அசோகன் நான்குபேர் கொண்ட குழுவுடன் விசாரணை நடத்தினார். அடுத்தகட்டமாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆசிரமத்தில் சிவசங்கர்பாபா இல்லாத நிலையில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வருகின்ற 11ம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேர் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மனு அனுப்பியுள்ளனர். எனினும் இன்றைய விசாரணைக்கு சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகத்துக்கே கலாச்சாரத்தை கொடுத்தோம், மொழிகளை கொடுத்தோம் என வீண் தம்பட்டம் அடிப்பதை விடுத்து தமிழ்நாட்டு புத்திஜீவிகள் முதலில் தங்கள் சார்ந்த சமூகத்தை திருத்த முன்வரவேண்டும். கடவுளின் பெயரால் போலிசாமியார்கள் போடுகின்ற ஆட்டம் அளவுக்கதிகம். தெரிந்த ஒரு சாமியார் தான் இவர். தெரியாத ஆயிரம் சாமியார்களும் உள்ளனர்.

பார்ப்போம் என்ன செய்யப்போகிறார்கள் என்று..!

“2007 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு என்னை தலைவராக தெரிவு செய்வார்கள் என எண்ணினேன்.” – யுவராஜ் சிங்

2007-ம் ஆண்டு முதலாவுது  20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

அதே வருடம் நடைபெற்ற   50 ஓவர் உலக கோப்பை போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அதன்பின் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. தலைவராக டோனி முதல் முறையாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டோனி வெற்றிகரமாக கேப்டனாக அசத்தினார்.

இந்த நிலையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

2007-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதால் கடும் கொந்தளிப்புகள் இருந்தது. பின்னர் இரண்டு மாத இங்கிலாந்து சுற்றுப்பயணமும், தென்ஆப்பிரிக்காவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது.

அதன்பின்னர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது. வெளிநாட்டில் 4 மாதம் சுற்றுப்பயணம் இருந்தது. எனவே மூத்த வீரர்கள் தங்களுக்கு இடைவெளி தேவை என்று நினைத்தார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் 20 ஓவர் உலக கோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் டோனி கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் ஆனாலும், அது ராகுல் டிராவிட்டாக இருந்தாலும், கங்குலியாக இருந்தாலும் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் அதை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ்சிங் முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டி தொடரில் தான் யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை இலங்கையில் !

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை இன்றைய தினம் (11.06.2021)  பொலன்னறுவையில் திறக்கப்பட்டுள்ளது.

Gallery

சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

இதில் 200 டயலிசிஸ் வசதிகள் மற்றும் 5 ஒபரேஷன் தியேட்டர் மற்றும் பல துணை பிரிவுகளும் sub specialities உள்ளன.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரய்ச்சி, கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் திடீரென உயர்ந்த கொரோனா மரணங்கள் – மீளவும் நாடு முடக்கம் !

கடந்த ஒரு மாத காலம் வரை பயணத்தடை என அறிவித்தும் கூட கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சி பெருந்தோல்வி அடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.  இந்நிலையில் வருகின் 14ம் திகதி முதல் நாடு வழமைக்கு திரும்பும் என அறிவித்திருந்த போதும் கூட அது 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறுகிய சில நாட்களுக்குள் இலங்கையில் கொரோனா பரவல் மட்டுமன்றி இறப்பு தொகையும் அதிகரித்துள்ளது. கடந்த குறுகிய கால எல்லைக்குள் இறப்பு வீதம் மிக வேகமாகியுள்ளதுடன் நாட்டில் இதுவரையில் 2,011 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

எனினும், நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடலில் எரிந்த கப்பலின் தாக்கம் இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும் !

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமெனவும் குறித்த சேதங்களை டொலர்களிலும் மதிப்பிட முடியாது எனவும்  சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்களின், பெரிய குவியல்களை சேகரித்திருக்கிறோம். இதில் எத்தனை மில்லியன் துகள்களை மீன்கள் சாப்பிட்டுள்ளன என்பது எங்களுக்குத் தெரியாது.

கடற்கரைகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் துகள்கள் சேகரிக்கப்பட்டு, 40 கொள்கலன்களில் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு எவ்வளவு அதிகமான பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை நாம் இப்போது கற்பனை செய்து கொள்ளலாம். 10% க்கும் குறைவான பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு மீதமுள்ளவை சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றன.

ஆகவே எக்ஸ் பிரஸ் கப்பல் மூழ்கியதால் ஏற்பட்ட சேதம், ஈடு செய்யப்பட வேண்டும் என்பதுடன் பொறுப்பான அனைவரையும் அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். சி.ஐ.டி, ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.