June

June

இந்தியாவில் மதுபான விற்பனைக்காக ஒன்லைன் செயலிகள் !

இந்தியாவின் டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அமுல்படுத்தியது. இதனால், மருந்தகங்கள், பால் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்களிக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு 50 சதவீதம் என்ற அளவிலேயே அனுமதி வழங்கப்பட்டது.  தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்ற தடை விதிக்கப்பட்டது. மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
இதேபோன்று மக்கள் ஓரிடத்தில் அதிகம் கூடுவது தவிர்க்கப்பட, மதுபான விற்பனைக்கும் அரசு தற்காலிக தடை விதித்தது. இதனால், மதுபானங்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் அவதியடைந்தனர்.
இந்த நிலையில், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக டெல்லி அரசு ஒன்லைன் வழி மதுவிற்பனைக்கு அனுமதி அளித்து உள்ளது. இதன்படி, மதுபானம் வாங்க விரும்புவோர் வீட்டில் இருந்தபடியே, தங்களுடைய மொபைல் போனில் அதற்கான செயலியை கொண்டு அல்லது இணையதளம் வழியே மதுபானத்தை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
எனினும், எல்லா மதுபான கடைக்காரர்களும் மது விற்பனையில் ஈடுபட முடியாது.  டெல்லி கலால் (திருத்தம்) விதிகள், 2021ன்படி, மதுபான கடைக்காரர்கள் எல்-13 என்ற லைசென்ஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அவர்களே வீட்டிற்கு மதுபானம் விநியோகிக்க முடியும். அதுவும், மொபைல் செயலி அல்லது ஆன்லைன் வழியே ஆர்டர் செய்திருக்க வேண்டும். இதற்கேற்ப அவை மேம்படுத்தப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
இதேபோன்று, வீடுகளை தவிர, விடுதிகள், அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மதுபான வினியோகம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்றும் டெல்லி அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

“நாடாளுமன்ற கொரோனா கொத்தணி ஏற்பட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே காரணம்.” – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு !

“நாடாளுமன்ற கொரோனா கொத்தணி ஏற்பட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே காரணம்.” என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

மக்களின் சடலங்கள் மீது ஏறியேனும் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற இலக்கில் அரசாங்கம் இருந்ததால் தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நாளுக்குநாள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்திலும் கொரோனா கொத்தணி ஏற்பட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே காரணம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடிமிக்க நிலைமைக்கு அவரே காரணம்.

சபாநாயகரது அலுவலகம், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் மற்றும் படைக்கள சேவிதர் அலுவலகம் என கொரோனா தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டிருப்பதால், நாடாளுமன்ற அமர்வினை ஒத்திவைக்கும்படி எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகரிடம் கேட்டபோது அதனை அவர் நிராகரித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“ஒருவரை தகனம் செய்வதற்கு 7 ஆயிரம் ரூபாய், வவுனியா நகர சபையினால் அறவிடப்படுகின்றது.” – பிரதமர் மஹிந்தவுக்கு செல்வம் அடைக்கலநாதன் கடிதம் !

வன்னியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றபோது, அவர்களின் உறவினர்களிடம் பணம் அறவிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்பாடு தொற்றினால் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகையில் கடிதமொன்றை செல்வம் அடைக்கலநாதன் இன்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய  மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை உடலை தகனம் செய்வதற்கு வவுனியா நகர சபையினால் நிதி அறவிடப்படுகிறது.

அதாவது ஒருவரை தகனம் செய்வதற்கு 7 ஆயிரம் ரூபாய், வவுனியா நகர சபையினால் அறவிடப்படுகின்றது. கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழும் மக்கள், குறித்த தொகையை வழங்க முடியாத நிலைமையிலேயே உள்ளனர்.

ஆகவே மக்களின் இத்தகைய நிலைமையை  கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை  உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த சுமார் 43 ஆயிரம் குழந்தைகள் !

கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் ஏராளமான மக்களின் உயிரை பறித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு இழப்பு உள்ளது.

கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவர், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என உலகின் எங்கு பார்த்தாலும் சோகமாக இருக்கிறது. அமெரிக்காவிலும் பல வீடுகளில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அங்கு சுமார்  43 ஆயிரம் குழந்தைகள் தாய்- தந்தை இருவரையுமோ அல்லது அவர்களில் யாராவது ஒருவரையோ இழந்திருக்கிறார்கள்.

அதிலும் கருப்பின சமூகத்தினரிடம் தான் இழப்பு அதிகமாக இருக்கிறது. அமெரிக்க குழந்தைகளில் கருப்பின குழந்தைகளின் எண்ணிக்கை 14 சதவீதமாகும். ஆனால் பெற்றோரை இழந்த குழந்தைகள் என்று கணக்கிட்டு பார்த்தால் 20 சதவீத கருப்பின குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து இருக்கிறார்கள்.

‘இலங்கை சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறது என்று கூறுவது நகைச்சுவையானது” – கெஹெலிய ரம்புக்வெல்ல

“இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் சீனாவில் இருந்து கரிமக் குப்பைகளை இறக்குமதி செய்து விவசாயிகளிடையே விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.” என ஜே.வி.பி குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில் “ இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிமை) அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இலங்கை சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறது என்று கூறுவது ‘நகைச்சுவையானது’ என தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கூற்றுக்கள் வெறும் வதந்திகள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், எந்தவொரு நாட்டிற்கும் விற்கப்படும் சினோபார்ம் தடுப்பூசியின் விலையை சீனா தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சினோபார்ம் தடுப்பூசி இலங்கைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என இன்றைய ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசியின் விலை குறித்து இலங்கை அரசு முடிவு செய்யவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் உள்ள சீன தூதரகம் அல்லது சீன அரசு மட்டுமே இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் இந்த தடுப்பூசி ஏனைய நாடுகளுக்கு வழங்கப்பட்ட விலையைவிட குறைந்த விலையில் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும்.” – தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் குற்றச்சாட்டு !

“தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும்.” என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார்.

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40ஆவது ஆண்டு நினைவு தினம், வவுனியாவில் பிரத்தியேக இடமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது.

இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“யாழ்.பொது நூலகம் 1981 ஜூன் 1 ஆம் திகதி அதிகாலை  எரிக்கப்பட்டது. இதில் தமிழர்களின் பண்டைய வரலாற்றை ஆதரிக்கும் பல பழங்கால புத்தகங்கள் எரிந்துவிட்டன. இந்த செயற்பாடு இனப்படுகொலைக்கு ஒப்பானதாகும்.

இவ்வாறு யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டு கடந்துள்ளது. ஆனாலும் இன்னும் கூட இனப்படுகொலை நடவடிக்கைகளில் இருந்து தமிழர்களுக்கு உதவ அமெரிக்காவையும் இந்தியாவையும் அழைக்க  எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள்.

இவர்கள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமைகள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும். சாவகச்சேரி மற்றும் பிற மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீன ஆக்கிரமிப்பை தமிழ் அரசியல்வாதிகள் எதிர்க்கவில்லை.  இவ்விடயத்திலும் அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள்.

தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமிக்கும் போது சீனர்களை விரட்ட அமெரிக்கா மற்றும் நேட்டோ போன்ற சக்திவாய்ந்த நாடுகளை தமிழ் அரசியல்வாதிகள் அழைக்க தவறிவிட்டனர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“மாவட்டக்கூட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் கூட எங்களை அழைப்பதில்லை.” – இரா.சாணக்கியன் காட்டம் !

“மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் கொள்ளையடிக்கும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு இன்னும் இன்னும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகின்றனர்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் 19 தொற்றினை அரசியல் செய்யும் வேலைத்திட்டமாகவே இந்த அரசாங்கம் பயன்படுத்துகின்றது. இவ்வாறான விடயங்களை நாங்கள் முன்வைக்கும் போது சமூக வளைதளங்களில் ஒரு சிலர் எங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து நீங்களே எதாவது செய்யலாம் தானே என்று. அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வது ஒன்று தான்.

எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுங்கட்சியுடன் இருந்து கொண்டே இருவரும் ஒன்றும் செய்து கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றார்கள். அவ்வாறிருக்கும் போது நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம். இதன்படி எங்களுக்கான பொறுப்பு என்னவென்றால் எவ்விடத்தில தவறு நடக்கின்றது என்கின்ற விடயங்களை எடுத்துச் சொல்லக் கூடியது தான் எங்கள் பொறுப்பாகும்.

எமது மாவட்டத்தில் தற்போதையை கொவிட் 19 தொடர்பான எந்தவிதமான கூட்டங்களுக்கும் எனக்கும் சக பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களுக்கும் எவ்வித அழைப்புகளும் விடுப்பதில்லை. அரசாங்க அதிபரோ, பிரதேச செயலாளர்களோ இதுவரை காலத்தில் கொவிட் தொடர்பான எவ்வித கூட்டங்களுக்கும் தெரியப்படுத்தியதில்லை. எங்களை அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குக் காரணம் என்னவென்றால் எமது மாவட்டத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நாங்களும் அவ்விடத்தில் எடுத்துக் கூற முடியும்.

எமது மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுந்தரப்பு பிரதிகள் இருவரும் கொவிட் சிகிச்சை நிலையங்களைத் திறப்பு விழாவாகச் சித்தரிப்பதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான சிலருக்குத் தங்குவதற்குக் கூட இடங்கள் இல்லாமல் இருக்கின்றது. துணிச்சலாக ஒரு சிலர் இவற்றை வெளிப்படுத்துகின்றார்கள். இதுபோல் எத்தனை பேர் இருக்கின்றார்களோ தெரியவில்லை.

ஏதோவொரு பழைய கட்டிடத்தில் பத்து பதினைந்து கட்டில்களைப் போட்டு ரிபன் வெட்டி திறப்பு விழா செய்யும்  வியாழேந்திரன் மற்றும் சந்திரகாந்தன் ஆகியோர் எமது மக்களிடம் இவற்றைத் தான் அபிவிருத்தி என்று வாக்குறுதி அளித்தார்களோ தெரியவில்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எங்களது கருத்துகளைச் சொல்வதற்குக் கூட இந்த மாவட்டத்தில் சந்தர்ப்பம் இல்லாத நிலையை அவர்கள் இருவரும் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

எமது மாவட்டத்தில் அரசாங்க அதிபர் ஒரு அடிமையாக, கைதியாகப் பயன்படுத்தப்படுகின்றார். மாவட்ட அரசாங்க அதிபர் தான் இந்த மாவட்டத்தில் முதல் அரசியற் கைதி. அவரை நாங்கள் முதலில் விடுவிக்க வேண்டும். அதாவது மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு அரசியற் கைதியாக பிள்ளையான் மற்றும்  வியாழேந்திரனிடத்தில் சிக்கிக் கொண்டிருகக்கின்றார் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் எமது மாவட்டத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லாமல் கொவிட் ஒழிப்பு செயற்திட்டங்களை அவர்கள் செய்கின்றார்கள் என்றால் அதனை என்னவென்று சொல்வது.

மாவட்டத்தின் பல இடங்களுக்கு ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இறுதியாக எப்போது வந்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அந்த மக்களின் பிரச்சினைகள் எங்களுக்குத் தான் தெரியும். இதனை எடுத்துக் கூறுவதற்கு எங்களுக்கு இடமில்லாமல் இருக்கின்றது.

மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் கொள்ளையடிக்கும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு இன்னும் இன்னும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து திருந்தாமல் செயற்படுகின்றார்கள். இந்த அரசாங்கத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு என்று இதுவரைக்கும் தடுப்பூசிகள் வந்திருக்கின்றனவா? ஆளுங்கட்சியில் இருந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு இதுவரை ஒரு தடுப்பூசியும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் தங்களைப் பிரபல்யமாக்கும் வகையில் சமூக வளைத்தளங்களில் ஊடகங்கள் என்ற சிலவற்றை உருவாக்கி இருக்கின்ற ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் பதிவுகளைப் போடுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

பிள்ளையான் அவர்கள் பாராளுமன்றத்திலே துறைமுக நகரத்தைப் பற்றி சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார். துறைமுக நகரம் பற்றிச் சொல்வதாக இருந்தால் கொஞ்சமாவது பொருளாதாரம் பற்றி அறிந்திருக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில உள்ள இளைஞர்களுக்கும் துறைமுக நகரத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லியிருந்தார். அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட பாசிக்குடா ஹோட்டல்களில் ஒரு தமிழருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. அவ்வாறிருக்க துறைமுக நகரத்தில் வேலைவாய்ப்பு என்பது எவ்வாறு சாத்தியமாகும். அதை எவ்வாறு எமது இளைஞர்கள் நம்ப முடியும்.

சமூக வளைதளங்களில் பதிவிட்டிருக்கின்றார்கள் பிள்ளையான் ஐயாயிரம் தடுப்பூசிகளைக் கொண்டு வந்திருக்கின்றார் என்று. வெறுமனே ஐயாயிரம் தடுப்பூசிகளைக் கொண்டு வருவதற்கு இவர் எதற்கு? ஒரு தடுப்பூசியின் விலை சுமார் இரண்டாயிரம் ரூபா எனக் குறிப்பிடப்படுகின்றது. எமது மாவட்ட மக்களில் சுமார் 80 வீதமானவர்களுக்காவது அந்த இரண்டாயிரம் ரூபாவினைக் கொடுத்து தங்களுக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வருவார்கள் என்று நான் நினைக்கின்றேன். ஆனால் அரசாங்கமும், அரசாங்கத்தில் இருப்பவர்களும் இந்த தடுப்பூசியை வைத்து பணம் உழைப்பதற்கும், தங்கள் அரசியலை நடத்துவதற்குமாகச் செயற்படுவதனை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கொவிட் நிலைமை நிமித்தம் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவினை சில ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் அள்ளக்கைகள் ஏதோ தாங்கள் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்ததைப் போன்று அதிகாரிகளிடம் இருந்து பறித்துக் கொடுக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவது அரசாங்கத்தின் கடமை. ஆகக் குறைந்து துறைமுக நகரத்தை முழு மக்களுக்குமாக கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு கொடுத்திருந்தாலாவது பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

அத்துடன் அரசினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு மத்திய கிழக்கில் இருப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று கூறியிருப்பதாகவும் அறிந்தேன். அந்த நாடுகளில் அவர்கள் இலங்கைக்கு வரமுடியாமல் எத்தனையோ நாட்களாக கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கும் சேர்த்து இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அவர்களை இந்த நாட்டுக்குக் கொண்டு வராமல் உக்ரோனில் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வர இருப்பதாகவும் சொல்லியிருக்கின்றார்கள்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதென்பது எங்களுக்கு விருப்பம் தான். ஆனால் இந்த காலகட்டத்திலே சுற்றுலாப் பயணிகள் என்ற ரீதியில் நோயாளிகள் யாரும் வந்தால் பாசிக்குடா, திருகோணமலை, அருகம்பை போன்ற பிரதேசங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் அது பரவக் கூடும் அவ்வாறே நாடு பூராகவும் நோய் கொண்டுபோகப்படும். இதன்படி இலங்கையில் கொவிட் தொற்றின் நான்காவது அலையை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு இவர்கள் எத்தனிக்கின்றார்களா? என்ற சந்தேகமும் இருக்கின்றது. எனவே இந்த ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு முறையாக வழங்கப்பட வேண்டும். அரசாங்க அதிபரோ பிரதேச செயலாளரோ, அல்லது அரசாங்க அதிபரை அடிமையாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கோ மேற்கொள்ளக் கூடாது.

இன்று இந்த அரசாங்கம் சதொசவை இல்லாமல் செய்திருக்கின்றது. இந்த நிலையில் அரசாங்கம் சொல்லும் விலையில் பொருட்களை எந்தவொரு இடத்திலும் வாங்கமுடியாத நிலைமையே காணப்படுகின்றது. இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். கடன் பிரச்சினை, பசளை பிரச்சனை, மீன்பிடி பிரச்சினை என பல வழிகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

ஏன்..? எதற்காக..? இந்த பயணத்தடை ..? – இன்றும் 2,877 புதிய தொற்றாளர்கள் !

சுமார் 10 நாட்களுக்கு மேலாக  பயணத்தடை உத்தரவு முழுமையாக நடைமுறையில் இருந்தும் கூட கொரோனாத்தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்த பயணத்தடை காலங்களில் கூட பல இடங்கள் வழமையான நாட்களை போலவே இயங்கிக்கொண்டிருக்கின்றன. வழமை போல வாகன இரைச்சல்களும் குறைந்தபாடில்லை. தொற்றாளர்களின் தொகையிலும் மாற்றம் எதுவுமில்லை.

இந்நிலையில் நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 877 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 89ஆயிரத்து 241ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 631 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 371 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 484ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், 34ஆயிரத்து 386 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 16 இலட்சத்து 91 ஆயிரத்து 562 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 49ஆயிரத்து 745பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணத்துக்கு தடுப்பூசி வழங்குவதாக கூறி அரசியல் அங்கஜனும் , டக்ளசும் இலாபமீட்டுகின்றனர்.”- செல்வராசா கஜேந்திரன்

அண்மையில் சிங்கள பகுதிகளுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் தமிழர் பகுதிகள் தடுப்பூசி விவகாரத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் அரசியல் தலைமைகள் முணுமுணுத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் முதல் தடுப்பூசி போடும் பணி யாழில் ஆரம்பமாகியிருந்தது.

இந்நிலையில் “யாழ்ப்பாணத்துக்கு தடுப்பூசி வழங்குவதாக கூறி  அரசியல் இலாபம் தேடும் முயற்சியையே அங்கஜன் இராமநாதனும்,  டக்ளஸ் தேவானந்தாவும் நாமல் ராஜபக்சவும் மேற்கொண்டுள்ளனர்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த  அவர், ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. வடக்கு மாகாணத்துக்கு ஏற்கனவே கொரோனாத் தடுப்பூசிகளை ராஜபக்ச அரசு வழங்கியிருந்தால் இந்தளவு பாரதூரமான விளைவுகளை எமது மாகாணம் சந்தித்திருக்காது. அரசின் பொறுப்பற்ற செயல்களால் தொற்றின் வேகமும் உயிரிழப்பின் எண்ணிக்கையும் இங்கு அதிகரித்துள்ளது.

யானைப் பசிக்கு சோளப்பொரி போல் சிறிய அளவிலான கொரோனாத் தடுப்பு மருந்துகளை யாழ்.குடாநாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டு பெருமளவான ஆட்களைத் திரட்டிக் கொரோனாவைப் பரப்பும் வகையில் அரசின் செயற்பாடு காணப்படுகின்றது. மக்கள் நலன் சார்ந்த செயற்பாடாக அது அமையவில்லை. அரசியல் இலாபம் தேடும் முயற்சியையே அங்கஜன் இராமநாதனும்,  டக்ளஸ் தேவானந்தாவும் நாமல் ராஜபக்சவும் சேர்ந்து செய்துள்ளனர்.

கொரோனாத் தடுப்பூசிகளைச் சுகாதாரப் பிரிவிடம் கையளித்திருந்தால் அவர்கள் அதனைச் சிறப்பாக மக்களுக்கு வழங்கியிருப்பார்கள். நிலைமைகள் மோசமாகச் செல்லும்போது அதற்குள் அரசியல் இலாபம் தேடும் முயற்சியே நடைபெறுகின்றது. தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதனை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களின் சொத்து .

நெருக்கடியான நிலையில் மக்களுடைய நலனுக்காக கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டு இருந்தாலும் கூட அதனைப் பொறுப்பாகக் கையாள வேண்டியது முக்கியமாகும். இதனை வைத்தியசாலை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்” – என்றார்.