June

June

இன்றைய பாராளுமன்ற அமர்வில் சலசலப்பு – எதிர்க்கட்சியினர் எதிர்ப்புக்கோஷங்கள் !

எரிபொருள் விலையேற்றை கண்டித்தும், அதிகரிக்கப்பட்ட விலையை குறைக்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியினர், சபைக்குள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கோஷங்களையும் எழுப்புகின்றனர். இதனால், சபைக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சபைக்குள் எழுந்துநின்றும், சிலர் சபைக்கு நடுவே அமர்ந்திருந்தவாறும் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

எரிபொருள்களின் விலைகளை குறைக்குமாறு கோரியும் அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

“மாகாணசபைகளின் கீழுள்ள வைத்தியசாலைகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். சுகாதார அமைச்சு நிதி தராது.” – சார்ஸ்சுக்கு அமைச்சர் பவித்ரா பதில் !

“மாவட்டங்கள் விரும்பாதுவிட்டால் நாம் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்கமாட்டோம். அதேவேளை, மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கவும் மாட்டாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் , ” வடக்கில் மாகாண சபையின் கீழுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் எடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவே அவ்வாறு மத்திய அரசின் கீழ் எடுக்கப்படுவதாக காரணம் கூறப்படுகின்றது. ஆனால், உண்மையான நோக்கம் அதுவாக இருக்க முடியாது. இந்த வைத்தியசாலைகளை இதுவரை மாகாண சபைதான் அபிவிருத்தி செய்து வந்தது. வடக்கில் மாகாண சபையின் கீழுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் எடுப்பதனை ஏற்க முடியாது. அரசிலுள்ள வடக்கு மாகாண பிரதிநிதிகள் கூட இதனை ஏற்கமாட்டார்கள் என்றே நான் கருதுகின்றேன்’ என தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும்போதே, “மாவட்டங்கள் விரும்பாது விட்டால் நாம் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம். அவர்களே அதனை வைத்திருக்க முடியும். அதேவேளை, மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு மூலம் நிதி ஒதுக்கபடவும் மாட்டாது” என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

 

“முதலீட்டாளர்களுடனான கூட்டத்தில் இராணுவத் தளபதிக்கு என்ன வேலை..?” – முதல் நாள் அமர்விலேயே ரணில் கேள்வித்தாக்குதல்..? 

மிக நீண்டநாட்களாக வெறுமையாக இருந்த நாடாளுமன்றின்  ஐக்கிய தேசியக்கட்சிக்கான நாடாளுமன்ற ஆசனம் இன்றைய தினம் ரணில்விக்கிமசிங்ஹவின் வருகையுடன் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று முன்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பக்கம் முன்வரிசையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் உரையாற்றிய அவர்,

தேசிய கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. கொரோனா தடுப்புக்கான செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரவையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.  அரசியலமைப்பின் பிரகாரம், செயற்படுவது அவசியம். நாடு தற்போது இராணுவ மயமாக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. அது பாரிய தவறான விடயம்.

நாட்டின் பிரதான மூன்று கட்டமைப்புக்கள் காணப்படுகின்றது. இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசியல் அதிகாரம், அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்ட சிவில் அதிகாரம் மற்றும் இராணுவ அதிகாரம் என்பனவே அவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் நிபுணர்களைக் கொண்டே கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கையில் மட்டுமே இராணுவத் தளபதியிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுடனான கூட்டத்திலும் இராணுவத் தளபதி வந்து அமர்ந்து கொள்வதாகவும் அவ்வாறான கூட்டங்களில் நிதி அமைச்சர் இராஜாங்க அமைச்சர் பங்கேற்பது நியாயம் என்ற போதிலும் இராணுவத் தளபதிக்கு அங்கு வேலையில்லை. இவ்வாறான கூட்டங்களில் இராணுவத் தளபதி வந்து அமர்ந்து கொண்டால் வரும் முதலீட்டாளர்களும் ஓடி விடுவார்கள்.

நாட்டை இராணுவ மயமாக்கல் நோக்கி நகர்த்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமைச்சரவை, நாடாளுமன்றம் தீர்மானங்களை எடுக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின் விருப்பஙகளுக்கு மாறாக வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கக்கூடாது..” – நாடாளுமன்றில் கஜேந்திரன் !

வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின் விருப்பஙகளுக்கு மாறாக வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கக்கூடாது. தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடமே மீளக் கையளிக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(23.06.2021)  நடைபெற்ற காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன அபிவிருத்தி திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போரின் பின்னர் வடக்கு, கிழக்கில் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் படையினரால் பல ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காணிகளில் சில பகுதி சீனாவுக்குத் குத்தகைக்கு வழங்க தற்போது திட்டமிடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் யாழ். கீரிமலைப் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” – என்றார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாமல்ராஜபக்ஷ பேசிய கருத்தை ஆதரித்த சுமந்திரன் – பானையை போட்டுடைத்த சாணக்கியன் !

நேற்யை நாடாளுமன்ற அமர்வின் போது  “ 10 – 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை அரசு செயற்படுத்த வேண்டும்’ என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச,   தெரிவித்திருந்தார்.  நீண்டகாலமாக தீர்க்கப்படாது இருந்த தமிழருடைய பிரச்சினைகளுக்கான தொடக்கப்பபுள்ளியாக இது அமைந்திருந்தது.  அதே நேரம் இது தொடர்பில் பேசியிருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகாவும் அதற்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற கருத்தையே பதிவு செய்திருந்தார்.

 

இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சபையில் நேற்று தெரிவித்தார்.

நேற்று  உரையாற்றும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பான நிலைப்பாட்டை ஆவணப்படுத்துகின்றேன். அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கருத்தை வரவேற்கின்றோம். இந்த விடயத்தில் அரசியல் வேறுபாடு இன்றி எமது ஆதரவு உண்டு.

மேலதிகமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அண்மையில் சமூக ஊடகப் பதிவுகளுக்காக இந்தச் சட்டத்தில் கைதுசெய்தவர்களையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

இந்த விடயத்தினை எம்.ஏ.சுமந்திரன் பதிவு செய்த  விதம் ஆக்கபூர்வமானதாக இருந்தது. எனினும் இது தொடர்பில் பேசியிருந்த கூட்டமைப்பின் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் பேசிய போது “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலை செய்யப்பட்டமை போன்று குறித்த இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.” என நாமல் ராஜபக்ஷவிற்கு எதிர்வாதம் செய்திருந்தார். உண்மயிலேயே அது ஆரோக்கியமற்றவாதமேயாகும். இது வரை தீர்க்ப்படாத மிகப்பெரும் பிரரச்சினை ஒன்றுக்கான முதல் நகர்வு அரசின் வாயாலேயே கிடைத்துள்ளது. ஆக்கபூர்வமானது. அதனை அப்படியே முன்நகர்த்திச்செல்வதை விடுத்து ஆளும்தரப்பினை வழமை போல வசைபாடும் போக்கினை நேற்றைய சாணக்கியனின் பதிவில் அவதானிக்க முடிந்தது. எனினும் சாணககியன் சொன்ன அதே விடயத்தை சுமந்திரன் சாமர்த்தியமாக பதிவுசெய்திருந்தார்.

மேலும் சாணக்கியன் உரையினை தொடர்ந்து பேசிய நாமல் “ அரசியல்கைதாிகளின் பிரச்சினை முடிந்து விட்டால் உங்கள் அரசியலும் முடிந்துவிடும்.” எனக்கூறியிருந்தமை நோக்கத்தக்கது.

 

 

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கையாக லாரல் ஹப்பார்ட் சாதனை!

மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே, நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் அவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆறாண்டுகளுக்கு முன்பு, போட்டியாளர்களின் தேர்வு முறை தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதிகளில் மேற்கொண்ட மாற்றத்தின்படி, இவர் தகுதிவாய்ந்த நபராக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2013 ஆம் நடந்த பளு தூக்குதல் போட்டிகளில் இவர் ஆண்கள் பிரிவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

“நியூசிலாந்து மக்கள் எனக்கு காட்டிய கருணை மற்றும் ஆதரவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்” என்று ஹப்பார்ட் கூறியதாக நியூசிலாந்து ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்களின் 87 கிலோ பிரிவில் லாரல் ஹப்பார்ட் போட்டியிட உள்ளார்.

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் குறைவாக இருந்தால், திருநங்கை விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் ஒரு பெண்ணாக போட்டியிட அனுமதிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) தனது விதிகளை மாற்றியமைத்தது.

அதன்படியே தற்போது 43 வயதான லாரல் ஹப்பார்ட் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

“பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள் இன்று முதல் கைது செய்யப்படுவார்கள்.” –

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வியாபார நிலையங்கள் உட்பட பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள் இன்று முதல் கைது செய்யப்படுவார்கள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

நேற்றைய தினம் (21) பல இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணாது செயற்பட்டதைக் கண்காணித்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவே இன்று முதல் நாடு பூராகவும் விசேட பொலிஸ் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“அரசியல் கைதிகளினுடைய பெற்றோரை, குடும்பத்தினரை கவனிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு  இருக்கின்றது.”  – அருட்தந்தை மா.சத்திவேல்

“அரசியல் கைதிகளினுடைய பெற்றோரை, குடும்பத்தினரை கவனிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு  இருக்கின்றது.” என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்ததுள்ளார்.

அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“தற்போது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், உயிரை பாதிக்கும் ஒரு பயங்கர நோயாக உருவெடுத்துள்ள இக்காலகட்டத்தில் அரசியல் கைதிகளின் மன நிலையை அது பாதிப்பதாகவும், அவர்களுடைய அரசியல் மனநிலையை கொலை செய்கின்ற ஒன்றாகவும் விளங்குகின்றது.

இலங்கைக்கு வந்திருக்கின்ற கொரோனா வைரஸை விட இந்த பேரினவாதம் பெரும் பயங்கரமாக இருக்கின்றது.

முக்கியமாக அரசியல் கைதிகளினுடைய மனநிலையை தக்க வைப்பதற்கான வெளிச் செயற்பாடுகள் எதுவுமில்லாமல் இருப்பது அவர்களுக்கு மன ரீதியாக பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

அரசியல் கைதிகள் இன்று வெளி உலகத்தோடும், குடும்ப உறவுகளோடும் எந்த விதமான தொடர்புகளும் இல்லாமல் இருக்கிறார்கள். இதனைவிட அவர்களின் குடும்பங்களை நினைத்தும் , இந்த கொரோனா காலகட்டத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு பசியை போக்கக்கூடிய ஏற்பாடுகள் இல்லாததன் காரணமாகவும் அதைப் பற்றிய அதீத யோசனையில் உள்ளனர்.

இந்நிலையிலே அரசியல் கைதிகளினுடைய குடும்பத்தாரை கவனிக்க வேண்டிய பொறுப்பும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில் தான் இருக்கின்றது. ஏனென்றால் தமிழ் மக்களினுடைய தேசிய அரசியலுக்கு உயிர்துடிப்பாக, உயிர்நாடியாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள் தான்.

இந்த நிலையில் இந்த கொரோனா காலகட்டத்தில் அரசியல் கைதிகளினுடைய பெற்றோரை, குடும்பத்தினரை கவனிக்க வேண்டிய பொறுப்பும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இருக்கின்றது. அவர்கள் இதையே தம் உறவுகளுக்கு செய்ய வேண்டும் என்பதே அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது” என மேலும் தெரிவித்தார்.

கொரோனாவின் கோர தாண்டவத்தால் 38.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி !

சீனாவின் வுகான் நகரில் பரவ ஆரம்பித்ததாக கண்டறியப்பட்டுள்ள  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  இன்றுவரை புதிய பரிமாணங்களில் அதனுடைய வேட்டை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா-வைரஸ் பாதிப்பில் இருந்து 16.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 82 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா-வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி செலுத்தாவிட்டால் சிறைத்தண்டனை – பிலிப்பைன்சில் அதிரடி அறிவிப்பு !

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வரை 10 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 23 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு 4 கோடி டோஸ் பைசர் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு பொது மக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 11 கோடி பேர் கொண்ட பிலிப்பைன்ஸ் மக்கள் தொகையில் வெறும் 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே  நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.