05

Monday, June 21, 2021

05

2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு !

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்  இருந்த  தோல்வியடைந்தார்.
ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7-ம் திகதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு-டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். மேலும், தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்கள் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ கணக்குகளை முடக்கின.
டொனால்டு டிரம்பின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை கோடிக்கணக்கானோர் பின்பற்றி வந்தனர். இந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து டிரம்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது. ஆனால், பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக மூடாமல் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் டிரம்பின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டொனால்டு-டிரம்ப் கூறுகையில், 2 ஆண்டுகள் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது, தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என தெரிவித்துள்ளார்.

பயணத்தடை நாட்களிலும் 2000க்கு குறையாத தொற்றாளர்கள் – 2இலட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று – ஏன்..? எதற்காக ..? யாருக்காக..? இந்த பயணத்தடை ?

கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த தவறிவிட்டது என்பதே உண்மை. 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதற்கே அரசு நாட்டை முழுமையாக பல மாதங்கள் முடக்கியது. ஆனால் நாளாக நாளாக அது தொடர்பாக கவனம் செலுத்தப்படாமலேயே போய்விட்டது.

50,000 தொற்றாளர்களை அண்மித்த போதே இலங்கை மருத்துவ சங்கத்தின் அதிகாரிகள் பலரும் 14 நாட்கள் முழுமையான ஊரடங்கை அமுல்படுத்துமாறு வேண்டிய போதும் கூட பொருளாதாரத்தை காரணம் காட்டி அரசு முடக்க பின்வாங்கியது.

ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 600 ஆக பதிவாகி வந்த தொகை ஒரு கட்டத்துடன் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது. பின்பு நாளொன்றுக்கு 1000 தொற்றாளர்களும் அதனை தொடர்ந்து 2000 , 3000 என தொற்றாளர்கள் அதிகரித்துக்கொண்டே சென்றனர்.

May be an image of motorcycle, road and street

இந்த கட்டத்தில் கூட அரசு சுதாகரித்துக்கொண்டதாக தெரியவில்லை. பயணத்தடை அமுலில் இருப்பதாக கூறுப்படுகிறதே தவிர அது முழுமையான நடைமுறையில் என்பதே உண்மை. இங்கு காட்டப்பட்டுள்ள இந்தப்படம்  வெள்ளவத்தையில் எடுக்கப்பட்ட படமாகும். நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் இது போன்ற பல படங்களை காண முடிந்தது. இவ்வளவுக்கு அலட்சியமாக தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது இலங்கையின்  இந்த பயணத்தடை.

 

இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணி வரை 2,280 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் நாட்டில் இன்று மாலையுடன் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 1,656 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பயணத்தடை விதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களை அண்மிக்கின்ற நிலையில் கூட தொற்றாளர்களின் தொகை 2000க்கு குறைந்தபாடில்லை. அப்படியானால் ஏன்..? எதற்காக ..? யாருக்காக..? இந்த பயணத்தடை என்ற வினா எழுகின்றது.

எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதை போலவே கொரோனா கட்டுப்படுத்தல் என்ற விடயத்தில் அரசு தோற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். பாராளுமன்ற தேர்தலை அண்மித்த காலம் வரை அவ்வளவு கட்டுப்பாடாக கொரோனா தொடர்பான விடயங்கள் கண்காணிக்கப்பட்டன. ஆனால் இன்று எல்லா விடயங்களும் கண்துடைப்பாக மாறிப்போயுள்ளது. இந்த பயணத்தடை கூட கண்கெட்ட பிரகான சூரியநமஸ்காரம் போன்றதே.

அதிலும் கொடுமை இரண்டாவது கொரோனா அலைக்கு காரணமான ஆடைத்தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்குவதாகும். பலரும் ஆடைத்தொழற்சாலைகளை மூடுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் அரசு கவனம் செலுத்தியதாய் தெரியவில்லை. செலுத்தப்போவதாயுமில்லை. தடுப்பூசி விடயத்தில் கூட முன்களப்பணியாளர்களான வைத்தியசாலைத்தாதியர்களை அரசு கவனத்தில் கொண்டதாய் தெரியவில்லை.  இதனாலேயே அவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சருடைய நகர்வுகள் இன்னும் கேலிக்குரியதாக மாறிவருகின்ற நிலையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. களனியில் கொரோனாவை விரட்ட சடங்கு செய்தமை , சித்தவைத்தியரின் கொரோனாப்பாணியை ஆதரித்தமை மற்றும் அதனால் அங்கு அலை மோதிய மக்கள் கூட்டம் என பல முன்யோசனையற்ற செயற்பாடுகளுக்கு அவர் பொறுப்பு கூற வேண்டியவர். ஆனாலும் அவர் புரிந்து கொள்வதாயில்லை. அண்மையில் கூட அவரை குறித்த பொறுப்பிலிருந்து மாற்றுமாறு சில வைத்தியர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தமையும் நினைவிற்கொள்ளத்தக்கது.

சரி மக்களாவது பொறுப்புடன் நடந்து கொள்கிறார்களா என்றால் சிறிதளவு கூட சிந்திப்பதாயில்லை. ஒரு நாள் பயணத்தடை எடுத்தால் கூட கடைகளில் குவிந்து மொய்த்து விடுகிறார்கள். சரி என்னிடம் ஓரளவு பயணத்தடை நாட்களை தாக்குப்பிடிக்க கூடியளவிற்கு பொருட்கள் உள்ளன. போதும் என்ற திருப்தியில் யாராவது இருக்கிறார்களா என்றால் .., ஆகச்சிலரே நிலையயை உணர்ந்து செயற்படுகின்றனர். ஏனையோர் கொரோனாவை ஒரு விடயமாகவே பொருட்படுத்தவேயில்லை. சரி நம்மில் எத்தனை பேர் முகக்கவசங்களையேனும் முறையாக அணிகின்றோம்..,? நாம் முகக்கவசம் அணிவதும் , தலைக்கவசம் அணிவதும் பொலிஸாருக்காகவே தவிர நமது நன்மைக்காக என நாம் எண்ணும் வரை சில விடயங்கள் மாறப்போவதில்லை.

அரசியல் தலைமைகளும் மக்கள் மத்தியில் இது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவோராயில்லை. முடியுமானவரை வழமையான காழ்ப்புணர்ச்சி அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனரே தவிர மக்களை விழிப்பூட்டுவதாயில்லை.

அண்மையில் “கொரோனா பரவலின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது, இலங்கையின் நிலைமையானது இந்தியாவை விட மோசமானது” என சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் கலாநிதி சஞ்சய பெரேரா தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

தனித்து அரசாங்கத்தை மட்டுமே விமர்சிப்பவர்களாயிராது நாம் பாதுகாப்பாக இருப்பதுடன் நம் சார்ந்தவர்களையும் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டும். விழிப்புணர்வுடன் இருங்கள். அரசாங்கங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கும். நம் சார்ந்த அன்பானவர்கள் பற்றி நாம் தான் சிந்திக்க வேண்டும். ஆகவே பொறுப்புடன் செயற்படுவோம்..!

சுயநலம் காப்பது  பொதுநலன் பேணுதற்கே..!

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை !

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டு ஜனாதிபதி மொஹமட் புஹாரி அண்மையில் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து நீக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Rage as Nigerians report Buhari's "genocidal tweet" en masse

மொஹமட் புஹாரிக்கு எதிராக நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுவது போன்று அவர் பதிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களது விதிகளை மீறும் வகையில் அவர் கருத்து வெளியிட்டதாக அறிவித்த டுவிட்டர் அவரது பதிவையும் நீக்கியது.

இந்நிலையில் காலவரையன்றி அந்நாட்டில் டுவிட்டர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

“இந்த அரசை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.” – வலுப்படுத்த ஒன்றிணையுங்கள் என சஜித் அழைப்பு !

இலங்கையின் மிக மோசமான அரசான ராஜபக்சக்களின் கூட்டு அரசை விட்டு விரட்டியடிக்க அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.” என  எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

அரசின் கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த அரசு நாட்டைக் கொரோனா பரவல் ஏற்படுகின்றதா, இல்லையா என்று ஆராயும் ஆய்வுகூடமாக மாற்றியுள்ளது. அரசின் தன்னிச்சையான, வினைத்திறனற்ற, குழப்பமான செயற்பாடுகளால் நாட்டின் அனைத்துத்துறைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, தடுப்பூசி வழங்கல் மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் அரசியல் இலாபம் பெற அரச தரப்பினர் ஆரம்பித்துள்ளனர்.  அறிஞர்களின் கூட்டணி என்று கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியவர்கள், மக்களின் சுவாசிக்கும் உரிமையைப் பறிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

பயணக் கட்டுப்பாடுகளில் மக்களை இரு விதமாக நடத்தும் நிலை உருவாகியுள்ளது. அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சரியான திட்டங்கள் இல்லை.

விவசாயிகள் உரம் இன்றி துன்பப்படுகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் பாதிப்பும் காடழிப்பும் தீவிரமடைந்துள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, துறைசார் அமைச்சர் பொறுப்பின்றி இருக்கின்றார். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த அரசை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம். மக்கள் நலனைக் கவனத்தில் எடுக்கும் சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றுள்ளது.

தென்னாசியாவின் அபிவிருத்தியடைந்த இலங்கை வறிய நாடான பங்களாதேஷிடம் கடன் வாங்குகின்றது.” – மங்கள சமரவீர

“மிகவும் வறிய நாடாகக் கருதப்பட்ட பங்களாதேஷிடமிருந்து 200 – 250 மில்லியன் அமெரிக்க டொலர் வரையான கடனை பெற வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது” என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இணையவழி மூலமான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர மேலும் தெரிவித்தத போது,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு இது உகந்த நேரமா என்றும் கேள்வியெழுப்பினார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து பாரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் எமது நாடு சுதந்திரமடைந்த பின்னர் உருவான, மிகவும் வறிய நாடாகக் கருதப்பட்ட பங்களாதேஷிடமிருந்து 200 – 250 மில்லியன் அமெரிக்க டொலர் வரையான கடனை இலங்கை பெறவுள்ளது.

தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக காணப்படும் இலங்கை, தற்போது பங்களாதேஷிடம் கடன் அப்படையிலான நிதிப் பரிமாற்றத்தைச் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பிழையான கொள்கைகள் காரணமாக நாம் மிகப்பாரிய சமூகப் பேரழிவை நோக்கிப் பயணிப்பது புலனாவதாகவும் இப்படியே சென்றால் நாடு சிரியாவின் நிலையையே அடையநேரிடும் என்றும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

பெயர்ப் பலகையில் சிங்கள மொழியை நீக்கி ஹிந்தியை பாவித்த இந்திய துணைத் தூதரகம் !

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பிரதான பெயர்ப் பலகையில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் மட்டுமே துணைத்தூதரகம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து தற்பொழுது துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகையில் சிங்கள மொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 90 விதமான மக்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் சிங்கள மொழியை பெயர்ப்பலகையில் உள்ளடக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை என இந்திய துணைத் தூதரக தகவல்கள் தெரிவித்திருந்தன.

எவ்வாறெனினும், சிங்கள மொழி உள்ளடக்கப்படாமை ஒர் பிரச்சினை எனக் கண்டறிந்து அது திருத்தப்பட்டுள்ளதாக மற்றுமொரு இந்திய துணைத் தூதரகம் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளது.

தற்பொழுது சிங்கள மொழியையும் உள்ளடக்கிய பெயர்ப் பலகை போடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி, பெயர்பலகைகளில் உள்ளடக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“க.பொ.த. உயர்தர கலைத் துறையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாகக் குறைக்க திட்டம்.” – கல்வி அமைச்சு !

பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இத்தகைய பாடசாலைகள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வியை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 % இருந்து 60 % உயர்த்தவும் கலைத் துறையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாகக் குறைக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் கபில பெரேரா கூறினார்.