06

06

கன்னட மக்களிடம் மன்னிப்பு கோரிய கூகுள் நிறுவனம் !

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்ட விவகாரத்தில், எதிர்ப்பு கிளம்பியதால், கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

கூகுள் தேடலில் இந்தியாவின் மோசமான மொழி எது என தேடுதலில் பதிவிட்டால் அது கன்னடம் மொழி என காட்டியது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும், கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடு தளத்தில் தவறாக வெளியான பதிவுகளையும் கூகுள் நீக்கியுள்ளது.

“அல்-கொய்தா அமைப்பு தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி உயிருடன் தான் இருக்கிறார்.” – ஐ.நா.சபை அதிர்ச்சி தகவல் !

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்புக்கு அய்மான் அல்-ஜவாகிரி பொறுப்பேற்றார்.

10 ஆண்டுக்கு முன்பு பொறுப்பேற்ற அவர் அமெரிக்காவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அல்-ஜவாகிரியை கொல்வோம் என்று அமெரிக்கா தெரிவித்தது.

இதற்கிடையே அய்மான் அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக சமீப காலங்களாக தகவல் வெளியானது. ஆனால் அதை அல்-கொய்தா அமைப்பு உறுதிப்படுத்தவில்லை.

இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது. இந்த நிலையில் அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி இறந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.சபை தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான எல்லை பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இதில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் அல்-கொய்தா அமைப்பு தலைவர் அய்மான் அல்-ஜவாகிரியும் உள்ளார். அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் பயங்கரவாதிகளின் பிரசார வெளியீடுகளில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக முன்னர் வெளியான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அல்-கொய்தா அமைப்புடன் தலிபான் மற்றும் சில வெளிநாட்டு பயங்கரவாதிகளும் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-கொய்தா மத்திய தலைமையுடன் இணைந்து இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அல்-கொய்தா, தலிபான் தலைவர்களின் உரையாடல்களை சில நாடுகள் இடைமறித்து கேட்டுள்ளன. சமீப காலமாக இந்த உரையாடல்கள் குறைந்து உள்ளன. இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானின் காந்தஹார், ஹெல் மந்த், நிர்முஸ்பில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

இங்கிலாந்துடனான 20 ஓவர் போட்டித்தொடருக்கு இலங்கை அணிக்கு புதிய தலைவர் !

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணியின் 20 ஓவர் போட்டி தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான அவர் ஏற்கனவே ஒருநாள் போட்டிக்கு தலைவராக உள்ளார்.

குசல்பெரரா இலங்கை அணிக்காக 22 டெஸ்ட், 104 ஒருநாள் போட்டி மற்றும் 47 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

THAMILKINGDOM: ஊக்கமருந்து பரிசோதனை வலையில் சிக்கினார் குசால்

இலங்கை 20 ஓவர் அணிக்கு மலிங்கா தலைவராக செயல்பட்டு வந்தார். அவர் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் தசுன் ‌ஷனகா தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நீக்கப்பட்டு குசால் பெரேரா தலைவராக தேர்வாகி உள்ளார்.

இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டிகள் வருகிற 23, 24 மற்றும் 26-ந்தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் 29, ஜூலை 1 மற்றும் 4-ந்தேதிகளில் நடக்கிறது.

“பயணக் கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் இருந்தாலும், வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படாது. முழு ஊரடங்கே தீர்வு.” – சுகாதார பரிசோதகர் சங்கம்

தற்போதைய சூழ்நிலையில் கொவிட் தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறையும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

பயணத் தடைகள் விதிக்கப்படுவது பெயரளவுக்கு மாறிவிட்டது என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான கவலையுடன் தெரிவித்தார்.

இது தொடர்பில் உபுல் ரோஹன கூறுகையில்,

சாதாரண நாட்களில் அத்தியாவசிய சேவைகள் என்று கூறி பல நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும், ஏராளமான மக்கள் தேவையில்லாமல் சமூகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டவிரோத டிஸ்டில்லரிகளும் இயங்குகின்றன, அவை அத்தியாவசிய சேவைகள் என்று கூறிக்கொள்கின்றனர். எனவே பயணத்தடைகாலத்தில் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படவில்லை.  மேலும் தொற்றுநோய் நிலைமையைக் குறைக்க ஊரடங்கு உத்தரவு விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த ஆண்டு நடந்ததைப் போலவே ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது உட்பட கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகளில் பலர் கூடும் இடங்கள் கூட சாதாரணமாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆடைத் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் தொற்றுநோய்களின் கொத்துகள் இருக்கின்றது.

தற்போது, ​​ஜூன் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படக்கூடும் என அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உபுல் ரோஹானவின் கூற்றுப்படி, பயணக் கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் இருந்தாலும், வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படாது என்றே தெரியவருகிறது.

“எங்களுக்கு கொரோனா இல்லை. சிகிச்சைக்கு  வர வற்புறுத்தினால்  உயிரை மாய்த்துக்கொள்வோம்.” –  யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம்- சுன்னாகம், மயிலங்காடு பகுதியிலுள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில்  சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த தொற்றாளர்களுக்கு, இவ்விடயத்தில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியபோதும் அதனை ஏற்காது அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பினை  இராணுவத்தினரிடம் சுகாதார துறையினர் வழங்கியுள்ளனர்.

சுன்னாகம்- மயிலங்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு  அழைத்துச் செல்ல இன்று பிற்பகல், அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

இதன்போது அவர்கள், தங்களுக்கு தொற்று இல்லை எனவும் பரிசோதனையிலும் நம்பிக்கை இல்லை எனவும் கூறி சிகிச்சை நிலையத்துக்கு அம்புலன்ஸ் வண்டி ஊடாக செல்வதற்கு மறுத்து விட்டனர்.

மேலும் இந்த விடயத்தில் தங்களை வற்புறுத்தினால்  உயிரை மாய்த்துக்கொள்வோம் என்று எச்சரித்தமையை தொடர்ந்து அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

“காலநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க, அனைத்து நாடுகளினதும் உடனடி ஒத்தழைப்பு தேவை” – ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோத்தாபாய !

காலநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க, அனைத்து நாடுகளினதும் உடனடி ஒத்தழைப்பு தேவைப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 48ஆவது கூட்டத்தொடரின் விவசாய சூழலியல் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

காலநிலை மாற்றம் என்பது மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பாரதூரமான ஒரு பிரச்சினையாகும் என்பதால் அதன் பாதிப்பைக் குறைக்க, அனைத்து நாடுகளினதும் உடனடி ஒத்தழைப்பு தேவைப்படுகிறது.

மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு நாடுகளும் வகுக்க வேண்டும். விவசாயச் சூழலியலைக் கைக்கொள்வதன் மூலம், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் ஒரு முக்கிய பகுதியாகும்.

நாம் வாழும் உலகின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, மனித சமூகத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்ற தயங்கக்கூடாது.

இத்தகைய கொள்கைகள், சூழலியல் பாதுகாப்பை ஆதரிப்பதுடன், உயிர்ப் பல்வகைமை அழிவை எதிர்த்துப் போராட உதவ
வேண்டும்.

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எமது இந்த முடிவு பரந்துபட்ட சூழலியல் பிரச்சினைகள் மற்றும் குறிப்பிடத்தக்க பொதுச்சுகாதார கரிசனைகளை கவனத்திற்கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப்பொருட்களின் பயன்பாடு பொது மக்களிடையே தொற்றா நோய்கள் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக இவற்றை அதிகமாகப் பயன்படுத்தியதன் விளைவாக, இலங்கையின் மையப்பகுதிகளில் நீடித்த நோய்கள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாரியளவில் சந்தைகளை ஆக்கிரமித்துள்ள விவசாய இரசாயனப்பொருட்கள் மற்றும் விவசாயிகளிடையே போதியளவு அறிவின்மை காரணமாக, இலங்கையில் பயன்படுத்தப்படும் நைதரசன் உரங்களில் சுமார் 80 வீதமானவை விரயமாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எஞ்சும் உரங்கள் நிலத்தை மாசுபடுத்தி, நிலத்தடி நீரைச் சென்றடைகின்றன. இது மண்ணின் தரம் குறைவதற்கும் நீர் மாசுபடுவதற்கும் காரணமாக அமைவதுடன், பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கச்செய்கிறது.

இதன் காரணமாக செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கான எனது அரசாங்கத்தின் தீர்மானமானது, ஆரோக்கியமான மற்றும் சூழலியல் ரீதியாகச் சிறந்த சேதன விவசாய முறைக்கு நீண்டகாலத் தேவைப்பாடாக இருந்துவரும் தேசிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

இந்த மாற்றத்தின் போது, குறுகியகாலப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். எனினும் அதற்காக எமது தீர்மானத்தில் மாற்றத்தை கொண்டுவரமாட்டோம் என அவர் தெரிவித்தார்.

அண்மையில் எதிர்க்கட்சிகள் பல சிங்கராஜவனத்தை கோத்தாபாய தலைமையிலான அரசாங்கம் அழிப்பதாகவும் , சீனாவுக்கு விற்பதாகவும், குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. முக்கியமாக ஐக்கியதேசியகட்சி இந்த ஏப்பிரல் மாதம் அரசினுடைய சிங்கராஜவன அழிப்பு தொடர்பாக பெரும் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.

பயணத்தடை காலத்திலும் வாகன விபத்தில் ஆறு பேர் பலி !

போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திலேயே அதிகளவான வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஆறு விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இன்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் நாடளாவிய ரீதியில் ஆறு வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் , அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

குருணாகலை , கல்னேவ, மாவத்தகம, வட்டவல, நுவரெலியா மற்றும் யக்கலை போன்ற பகுதிகளிலேயே இவ்வாறு வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் , இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும், முச்சக்கர வண்டி மற்றும் வேனில் பயனித்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்கள் 35 – 64 ஆகிய வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

தற்போது மழையுடனான காலநிலை நிலவுவதால் , நாட்டின் சில பகுதிகளில் பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விடயத்தை கவனத்திற் கொண்டு வாகன சாரதிகள் செயற்பட வேண்டும். மழை காரணமாக வீதிகள் நீர் தன்மையுடன் காணப்பட்டால் வாகனங்கள் குறைந்தளவிலான வேகத்திலேயே செல்லவேண்டும். அதனை விடுத்து அதி கூடிய வேகத்தில் செல்ல முற்பட்டால் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதென்றார்.

“யாழ் நூலக எரிப்பு வரலாற்றில் நேரடி பற்கேற்பும், சாட்சியும் ஆனவன் நான். திகதி தொடர்பில் குழப்பங்களை திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர்.” – சீ.வீ.கே.சிவஞானம் ஆதங்கம் !

“யாழ் நூலக எரிப்பு வரலாற்றில் நேரடி பற்கேற்பும், சாட்சியும் ஆனவன் நான். திகதி தொடர்பில் குழப்பங்களை திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர்.”  என முன்னாள் வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்நூலக எரிப்பு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாண மாநகர சபையில் பணியாற்ற தொடங்கியதிலிருந்து 1989 ஆம் ஆண்டு முன்கூட்டியே ஓய்வுபெற்ற காலத்தில் மட்டக்களப்பு மாநகர சபையில் கணக்காளராக பணியாற்றிய 1968 – 1972 வரையான நான்கு ஆண்டுகள் தவிர முழுக் காலத்திலும் யாழ்ப்பாண மாநகர சபையில் சேவையாற்றியவன். அதிலும் குறிப்பாக 1975 முதல் 1988 இறுதிவரை ஆணையாளராகவும், விசேட ஆணையாளராகவும் சேவையாற்றியவன். குறிப்பாக 1979 – 1983 நடுப் பகுதி தவிர, முழுக் காலத்திலும் தெரிவு செய்யப்பட்ட சபையின்றி மாநரக சபையை நிர்வகித்தவன். ஆகவே, யாழ்ப்பாண நூலகத்தின் அழிப்பு மற்றும் மீள்விப்பின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருந்தவன் நான். எனவே அதன் வரலாற்றில் நேரடி பற்கேற்பும், சாட்சியும் ஆனவன் என்ற வகையில் கடந்த காலத்தில் வேண்டப்பட்ட சரியான தெளிவுபடுத்தல்களை நான் வழங்கியே வந்துள்ளேன்.
ஆனால் இப்பொழுது உண்மைத் தரவுகள் திட்டமிட்டு திரிவுபடுத்தப்படுவது கவலையளிப்பதும் எரிச்சலூட்டுவதுமாக உள்ளது.

நூலகம் எரிக்கப்பட்ட நாளை ஒரு விவாதப் பொருளாக்கி பட்டிமன்றம் நடாத்தும் நிலைக்கு ஒரு சிலர் உள்ளாக்கியுள்ளனர். யாழ்ப்பாண பொது நூலகம் பற்றி எழுதும் அநேகமானோர் அது எரிக்கப்பட்டது 1981 யூன் முதலாம் திகதி இராப்பொழுது என்று எழுதும்போது, ஒரு சிலர் இல்லை 1981 மே மாதம் முப்பத்தொராம் திகதி என எழுதி இளைய சந்ததியினரிடையே குழுப்பத்தை உண்டாக்க முயல்கின்றனர்.

சூட்டுச் சம்பவம் நடைபெற்ற நாச்சிமார் கோவிலடி கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் என்றும், இச் சூட்டுச் சம்பவத்துக்கு முன்னரே நூலகம் எரிக்கப்பட்டு விட்டதாகவும், மாவட்ட சபைத் தேர்தல் 1981 மே 31 ஆம் திகதி நடைபெற்றதென்றும் பல குளறுபடியான, பொய்யான பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றது தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டம் என்பதும் யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 யூன் மாதம் முதலாம் திகதி இரவோடு இரவாக எரிக்கப்பட்டதும், யாழ்ப்பாண மாவட்ட சபைத் தேர்தல் 1981 யூன் நான்காம் திகதி நடைபெற்றதும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இதுவரை கூறப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக இரண்டு விடயங்களை எம்முடன் சம காலத்தில் மாநகர சபையில் சேவையாற்றிய தீவிர தமிழ்த் தேசிய உணர்வாளரும், தமிழரசுக்கட்சியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவருமான உரும்பிராய் சா.ஆ.தருமரத்தினம் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் அப்படியே தரப்படுகின்றன.

நூலக எரிப்பு பற்றிய செய்தி வெளியிடப்பட்டமை,
“1981 யாழ்ப்பாணம் அபிவிருத்தி சபைத் தேர்தல் அசம்பாவிதங்களின் போது தேர்தல் கடமை புரிவதற்காக அனுப்பப்பட்டிருந்த விசேட காவல்துறையினர் யாழ்.விளையாட்டரங்கிலும், யாழ். மத்திய கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மே 31 ஆம் திகதி சம்பவத்திருந்த வன்செயல்களைத் தொடர்ந்து ஊடரங்குச் சட்டம் பிறப்பிக் கப்பட்டிருந்தது. அத்தகைய ஒரு சூழ்நிலையில் யாழ். பொது நூலகம் அதனது 98 ஆயிரம் தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளுடனும் 1981 யூன் முதலாம் நாள் நள்ளிரவினில் தீயினால் பொசுக்கப்பட்டது.”

“அப்பொழுது யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டு வந்த ஒரே நாளோடான “ஈழநாடு” பத்திரிகையும் சமகாலத்தில் அதே இரவில் எரிக்கப்பட்டிருந்தமையினால் தலைநகர் கொழும்பில் இருந்த அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஒன்றுதானும் யாழ். பொது நூலகம் தீக்கு இரையாக்கப்பட்ட செய்தியை பிரஸ்தாபியாது இருந்தமையினால் யாழ். நகருக்கு வெளியே யாழ்ப்பாண மாவட்டத்திலும் கூட வெறும் வதந்தியாக அது பரவியிருந்ததே தவிர செய்தியாக பிரஸ்தாபிக்கப்பட்டு இருக்கவில்லை.”

“தீவின் எந்தவோர் ஊடகமும் யாழ்.பொது நூலகம் தகனம் செய்யப்பட்டமையைச் செய்தியாக வெளியிடாதிருந்தமை கட்டுரையாளரைப் பெரிதும் வருத்திற்று. ஆகவே, மனித உரிமை நலன்களின் மீது பெரும் அற்பணிப்புடன் ஈடுபாடு கொண்டவராகப் பணியாற்றி வந்த பண்டத்தரிப்புச் சட்டத்தரணி பி.எவ். சேவியரிடம் கட்டுரையாளர் அது விடயத்தைச் சுட்டிய போது இன்று மாலை 5.00 மணிக்கு முன்பாக யாழ். பொது நூலகத்தின் எரிந்து போன பாகங்களைக் காண்பிக்கும் ஒளிப் படப் பிரதிகளை என்னிடம் தருவாய் ஆகின் அவற்றிற்கான செலவினை யானே உனக்குத் தருவேன் என்றும், யாழ். பொது நூலகம் தகனம் செய்யப்பட்டதை உலகச் செய்தியாக மாற்றித் தருகிறேனா இல்லையா பார் என எனக்குச் சவால் விட்டார் சட்டத்தரணி சேவியர்.”

“கடல் படையினரது பிரசன்னத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி யாழ்.பொது நூலகத்தின் எரிந்து கொண்டிருந்த தோற்றத்தை காண்பிக்கும் ஒளிப்படங்களை தமது உத்தியோகத் தேவையின் பொருட்டாக எடுப்பித்திருந்தார் மாநகர ஆணையாளர் சீ.வீ.கே. சிவஞானம்.”

“அப்போது நிலவிய சூழ்நிலையில் யாரும் ஒளிப்படம் எடுப்பதற்கு யாழ்.பொது நூலகத்தை அண்மித்தல் அசாத்தியம் என்பதைப் புரிந்துகொண்ட கட்டுரையாளர் மாநகர ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானத்தை அணுகி சட்டத்தரணி சேவியர் கட்டுரையாளருக்கு விடுத்திருந்த சவாலை எடுத்துரைத்திருந்தார். உடனடியாகவே தொலைபேசி மூலம் தமக்கு எரிந்து போன நூலகத்தின் பல்வேறு தோற்றங்களையும் ஒளிப்படப் பிரதிகளை எடுத்துத் தந்தவரிடம் அவற்றின் மற்றும் ஒளிப் பிரதியை தமக்கும் தரும்படி அவரை பணித்து விட்டு தமது பாதுகாப்பில் வைத்திருந்த மேற்படி ஒளிப் படங்கள் உள்ளடக்கும் இரு புத்தகங்களையும் கட்டுரையாளரிடம் தந்தார். அவற்றில் இருந்து பெறப்பட ஒளிப்பட பிரதிகள் சட்டத்தரணி சேவியர் மூலம் அன்று மாலையே தலைநகர் கொழும்பு எடுத்துச் செல்லப்பட்டு மறுநாள் விமானத்தில் பயணித்த ஓர் இளம் சட்டத்தரணியிடம் சுங்கப் பரிசோதனைப் பீடத்தை அப்பயணி கடந்து சென்றதும் ஒப்படைக்கப்பட்டன.

சென்னையில் மேற்படி ஒளிப்படங்களைப் பெற்றுக் கொண்ட மறவன்புலவு சச்சி (மறவன்புலோ சச்சிதானந்தன்) அவற்றிலிருந்து மேலும் பல பிரதிகளை அங்கு பெற்றுக் கொண்டதன் பின் தம்மால் கூட்டப்பட்டிருந்த சர்வதேச ஊடகவியலாளர் மாநாட்டில் ஒளிப்படங்களை ஆதாரமாகச் சமர்ப்பித்து தகவல் வெளியிட்டிருந்தார். மறுவிநாடியே தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் பெரிதான திராவிட சிற்பவியல் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த யாழ். பொது நூலகம் அதன் புத்தக சேர்வுகள் 98 ஆயிரம் தேடல்கரிய கையெழுத்து பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டமை உலகச் செய்தியாக மாறிவிட்டது. மேற்படி தகவல் செய்தியாக வெளியிடப்பட்டிராத அச்சு, வானொலி, ஒளிபரப்பு ஊடகங்களே கிடையாது. சர்வதேச சஞ்சிகைகள் யாவும் அதனை முதன்மைச் செய்தியாக பிரஸ்தாபித்திருந்தனர். மாநகர ஆணையாளர் சீ.வீ.கே. சிவஞானத்திடமிருந்து பெறப்பட்ட ஒளிப்படப் பிரதிகள் மூலமே அச்சாதனை நிலைநாட்டப்பட்டிருந்தது.”

நட்டஈடு வழங்கல் “யாழ்.பொது நூலகத்திற்கு தனிநபர் ஆணைக்குழு (லயனல் பெர்னாண்டோ ஆணைக்குழு) பரிந்துரைத்திருந்த இழப்பீட்டுத் தொகை ஒரு கோடி 20 இலட்சம் ரூபா மட்டும் (ஒரு கோடி 5 இலட்சம்) (அவை போன்று, அவ்வவாறாக) அரசாங்கப் பணத்தில் இருந்து வழங்கப்பட்டிருக்கவில்லை. யாழ். பொது நூலகத்துக்கு அரசின் பணத்திலிருந்து நட்டஈடு தரப்படுவது யாழ். பொது நூலகத்தைத் தகனம் செய்த குற்றப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இருக்கும் என்பதால் போலும் அவற்றுக்கு மாறாக குடியரசு தலைவர் நம்பிக்கையை நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபா தொகையை விடுவித்து வங்கியில் குடியரசுத் தலைவரின் பெயரில் யாழ். பொது நூலகப் புன ரமைப்பு நிதி எனும் ஒரு புதிய கணக்கினைத் திறந்து அதிலிருந்து பெறப்பட்ட 9 இலட்சம் ரூபாவிற்கான காசோலையை குடியரசுத் தலைவரின் நிவாரண நிதியாக அனுப்பியிருந்தார். ஆயின் மாநகர ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் பெறப்பட்ட அத்தொகைக்கான பற்றுச்சீட்டில் “வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டின் ஒரு பாகமாகவே ஏற்றுக் கொண்டிருந்தார். பற்றுச்சீட்டில் அவ்வாறாக குறிப்பிட்டிருந்தார்.” என்று திரு. சா.ஆ. தருமரத்தினம் அவர்கள் 2013 இல் வெளியிட்ட தமது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இவர் இப்பொழுது கொழும்பில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : லயனல் பெர்னாண்டோ விசாரணைக்குழு சிபார்சு செய்த நட்டஈடான ஒரு கோடி 5 இலட்சம் ரூபாவில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து 20 இலட்சம் ரூபாவே மாநகர சபைக்கு வழங்கப்பட்டது என அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – சீனா பகிரங்க எச்சரிக்கை !

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 4 ஆண்டு கால பதவி காலத்தில் சீனாவுடனான அமெரிக்காவின் உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்தது.

வர்த்தகம், தென் சீன கடல் பிரச்சினை, உய்கூர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் கொரோனா வைரஸ் என பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நீடிக்கிறது.

முன்னதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு அப்போதைய ஜனாதிபதி தடை விதித்தார்.

இதனால் சீனாவின் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டி சீனாவின் 31 பெரு நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்க தொழிலதிபர்கள் வாங்குவதற்கு டிரம்ப் தடை விதித்தார். இதன் காரணமாக அந்த சீன நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன.

இந்தநிலையில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் சீன நிறுவனங்களுக்கான தடை பட்டியலை அண்மையில் மதிப்பாய்வு செய்தது. அதன் முடிவில் மேலும் பல சீன நிறுவனங்களை இந்த பட்டியலில் சேர்த்து, தடை பட்டியல் விரிவுபடுத்தப்பட்டது.

அதன்படி ஏற்கனவே தடை பட்டியில் உள்ள நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் உள்பட மொத்தம் 28 சீன நிறுவனங்கள் புதிதாக இந்த தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் தடைவிதிக்கப்பட்ட சீன நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. இந்த 59 நிறுவனங்களிலும் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஜோ பைடன் நிர்வாகத்தின் இந்த புதிய அறிவிப்பால் சீன நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.‌

இந்த நிலையில் தங்கள் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் எனவும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சந்தை சட்ட விதிமுறைகளை மீறும் செயல் என்றும் சீன நிறுவனங்களை அடக்குவதற்கான முயற்சி என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங்கி வெபின் கூறுகையில், ‘‘சீன நிறுவனங்களை அடக்கும் இந்த தடை பட்டியலை அமெரிக்கா உடனடியாக நீக்க வேண்டும்.‌ சீன நிறுவனங்களிடம் அமெரிக்கா நியாயமானதாக மற்றும் பாகுபாடற்றதாக இருக்க வேண்டும். சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியுடன் பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்’’ என கூறினார்.

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 பேர் இறப்பு – 2 இலட்சம் பேர் பாதிப்பு !

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில்,10 பேர் மரணித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதேநேரம், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி 8 மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 19 ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி முதலான மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 528 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 499 பேர் 69 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 612 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 471 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 11 வீடுகள் முழுமையாகவும் 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.