07

07

“இறந்த உறவுகளை நினைவுகூர்ந்தவர்களை கூட கைதுசெய்து சிறையில் அடைக்கும் ஈவிரமக்கமற்ற மிலேச்சத்தனமானது ஸ்ரீலங்கா அரசு .” – கஜேந்திரன் காட்டம் !

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸிற்கு அதிகாரிகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ,
கொரோனா வைரஸ் சூழ்நிலையை காரணம் காட்டி அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த போது ,
மே 19 நினைவேந்தலை முன்னெடுத்தமைக்காக பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இங்கே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புகைப்படங்களை பயன்படுத்தியமைக்காக கைதுசெய்யப்பட்டவர்களும் இங்கே உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குடும்பங்கள் மத்தியிலேயே இவர்கள் தொடர்பில் ஆழமான கவலை காணப்படுகின்றது ,அவர்கள் போதிய கொவிட் பாதுகாப்பு இல்லாமல், நெருக்கமான இடங்களிலே, தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் மத்தியில் அச்சம் பரவியுள்ளது.
இன்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வருகை தந்து இங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் தற்போதுள்ள கொவிட் சூழல்காரணமாக கைதிகளை பார்வையிட முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகைப்படங்களை பயன்படுத்தியவர்களும்,முள்ளிவாய்க்காலில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களை நினைவுகூர்ந்தவர்களும் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை என்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என நாங்கள் பார்க்கின்றோம்.
உலகலாவியரீதியில் கொவிட் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற இந்த சூழலில் கூட அரசாங்கம் தமிழர்களிற்கு எதிரான அரசியல் பழிவாங்கலை நிறுத்தாமல் வேண்டுமென்றே தமிழர்களின் ஜனநாயக குரலை நசுக்காமல் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்தவர்களை கூட கைதுசெய்து சிறையில் அடைக்கும் ஈவிரமக்கமற்ற மிலேச்சத்தனமான ஒரு செயற்பாட்டை ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கின்றது.
சர்வதேச சமூகமும் இது தொடர்பில் அமைதியாக வாய்மூடி மௌனமாகயிருப்பது என்பது வேதனைக்குரிய விடயம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளின் காரணமாகவே எமது நாட்டிற்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.” – இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா குற்றச்சாட்டு !

“எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளின் காரணமாகவே எமது நாட்டிற்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.” என  கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ஐந்து மேம்பாலங்களின் நிர்மாணப்பணிகள் இன்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் வைத்து இணையவழியின் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ,

வீதி அபிவிருத்தி செயற்திட்டங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளின் நிதியுதவியுடனேயே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே அவற்றை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படும்பட்சத்தில், அதனை மக்களின் நிதியூடாகவே மீளச்செலுத்த வேண்டிய நிலையேற்படும்.

ஆகவேதான் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காணப்பட்டாலும்கூட, இந்த செயற்திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவிவகித்துபோது ‘மகிந்த சிந்தனை’ வேலைத்திட்டத்தின் கீழேயே நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தாமதப்படுத்தப்பட்ட இந்த செயற்திட்டங்களைத் தற்போது தொடர்ந்து முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம்.

அரசாங்கம் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாம் சீனாவிடமிருந்து சைனோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு முற்பட்டபோது, அதற்கு எதிராகப் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

சைனோபாம் தடுப்பூசிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அதனை உட்செலுத்துவதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்கள். எனினும் கொவிட் – 19 தடுப்பூசிகளில் சீனாவின் உற்பத்தியான சைனோபாம் தடுப்பூசி மிகச்சிறந்ததாகும் என்று தற்போது அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளின் காரணமாகவே எமது நாட்டிற்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

இன்னும் இருமாதகாலத்திற்குள் நாட்டில் நூற்றுக்கு எழுபது சதவீதமானோருக்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரெஞ்ச் ஓபன் தொடர் – தகர்க்கப்பட்டது செரீனா வில்லியம்ஸின் சாதனைக்கனவு !

உலகின்  தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 1999-ம் ஆண்டு முதன்முதலாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து டென்னிஸில் ஜாம்பவானாக திகழ்ந்த இவர், இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடைசியாக 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபனை கர்ப்பிணியாக இருந்தபோதே வென்றார்.
குழந்தை பெற்ற பிறகு சிறிது காலம் விளையாடவில்லை. அவர் தற்போது வரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இன்னும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுவிட்டால், கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அதிகமுறை வென்ற மார்கரெட் கோர்ட் (24) சாதனையை சமன் செய்துவிடுவார்.
தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபனில் எப்படியும் சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார். முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21 வயதேயான இளம் வீராங்கனை ரிபாகினாவிடம் 6-3, 7-5 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.
தோல்வியினை தொடர்ந்து பேசிய அவர்,  “பிரெஞ்ச் போனால் என்ன? விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
23 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செரீனா களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபனை மூன்று முறை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

ஒரு வருடத்திற்கு பிறகு அமெரிக்காவில் குறைய ஆரம்பித்துள்ள கொரோனாதொற்று – இலட்சத்திலிருந்து ஆறாயிரமாக குறைவு !

அமெரிக்காவில் ஒருவருட காலத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு குறைந்துள்ளது.

கடந்த காலங்களில் நாளொன்றில் இலட்சக் கணக்கான பாதிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான உயிரிழப்பு என பதிவாகி வந்த நிலையில், தற்போது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்ததுபோல் நாளொன்றுக்கான பாதிப்பு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஆறாயிரத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 164பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்று மற்றும் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், இதுவரை மூன்று கோடியே 42இலட்சத்து பத்தாயிரத்து 782பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு இலட்சத்து 12ஆயிரத்து 366பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் 54இலட்சத்து 75ஆயிரத்து 679பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 287பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து இரண்டு கோடியே 81இலட்சத்து 22ஆயிரத்து 737பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

‘தி பேமிலி மேன் 2 தொடர் ஒளிபரப்பை அமேசான் நிறுவனம் நிறுத்தாவிட்டால் உலகம் முழுதும் தமிழர்களுடைய எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும்.” – பாரதிராஜா அறிக்கை !

‘தி பேமிலி மேன் 2’ தொடர் ஒளிப்பரப்பை அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து நிறுத்த வேண்டும் எனக் கூறி இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,

image

image

“ எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர்  திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம்,வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை
கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“உலகின் முன்னணி குப்பைக் குவியலாக நம் நாட்டை மாற்ற அரசு முயற்சி.” – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு !

“உலகின் முன்னணி “குப்பைக் குவியலாக” நம் நாட்டை மாற்ற அரசாங்கத்திடம் சதி உள்ளதா..? என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எந்தவொரு திட்டமிடப்பட்ட நடைமுறைகளும் இல்லாமல் இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கத்தின் நோக்கம் மக்களை உயிருடன் வைத்திருப்பது அல்லாமல், மக்களைக் கொல்வது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் இந்த அவசர மற்றும் தன்னிச்சையான முடிவு தவிர்க்க முடியாமல் நாட்டில் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் மாத்திரமல்லாது பயங்கர பஞ்சம் உருவாகவும் வழிவகுக்கும்.

காபனிக் உரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் திடீரென, பொறுப்பற்ற முறையில் எடுக்கப்பட்ட இரசாயன உரங்களுக்கான இந்த தடை விரைவில் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையிலும் பேரழிவு தரும் அடியாக அரசாங்கத்தால் உணரப்படும்.

இரசாயன உரங்களை தடை செய்வதாகவும்,காபனிக் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அரசாங்கம் கூறுகிறது. காபனிக் உரங்களை வழங்குவதில் பற்றாக்குறையும் உள்ளது, இது அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவாகும்.

மறுபுறம், இலங்கையில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் விதைகளுக்கான இரசாயன உரங்களுடன் பழக்கமாகிவிட்டன. நடைமுறையில்லாமல் அறியாமலேயே எடுக்கப்பட்ட முடிவுகளால் இன்று நாட்டின் பேரழிவுக்கே வழிவகுத்துள்ளது. இரசாயன உரங்களை தடை செய்வதாகவும்,காபனிக் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அரசாங்கம் கூறுகிறது. இது ஒரு கடுமையான விபத்துக்குச் சமனானது.

இதன் மூலம் உலகின் முன்னணி “குப்பைக் குவியலாக” நம் நாட்டை மாற்ற அரசாங்கத்திடம் சதி உள்ளதா என்ற கடுமையான கேள்வி உள்ளது. குப்பைகளான இந்த கழிவு உரத்தை இறக்குமதி செய்வதால், பல்வேறு பூஞ்சை மற்றும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் நாட்டில் பரவ வாய்ப்புள்ளது.

இத்தகைய இறக்குமதிகள விலங்குகள் மற்றும் தாவரச் சட்டத்திற்கும் எதிரானவை. அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு காபனிக் உரங்கள் போதுமான அளவு வழங்கப்படவில்லை.

நடைமுறைத்தன்மையை விலக்கும் அறிவியலற்ற முடிவுகள் பேரழிவுக்கே மீளவும் வழிவகுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சடலங்களில் தங்க நகை தேடி அகழ்வில் ஈடுபட்டோர் கைது – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வை ஊரிக்காடு மயானத்தில் சடலத்தை தோண்டி நகை தேட முற்பட்ட இருவர் கைது |  Muthalvan News

குறித்த சந்தேகநபர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றில், தங்க நகை இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட வேளையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகபர்களை, தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஊரிக்காடு மயானத்தித்திற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

“மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது.” – இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க

“மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போட வேண்டும் என்ற தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது.” என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தல் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிற்போடப்பட்டது. பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிராக காணப்பட்டது.

அரசியல் நோக்கத்திற்காக காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். மாகாண சபை தேர்தலை எத்தேர்தல் முறையில் அதாவது பழைய தேர்தல் முறையிலா அல்லது புதிய தேர்தல் முறையிலா நடத்துவது என்ற சிக்கல் நிலை காணப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை காணப்பட்டது.

மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போட வேண்டும் என்ற தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. ஆனால் அதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது கிடையாது. தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டால் தேர்தலை நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

கடற்கரை ஓரங்களில் கரையொதுங்கும் இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் – எக்ஸ்பிரஸ் பேர்ள் இரசாயனக்கழிவுகளா காரணம்..?

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன.

6 ஆமைகள், டொல்பினின் உடலங்கள் கரை ஒதுங்கின - கப்பல் இரசாயனம் காரணமா? |  Virakesari.lkநேற்று ஞாயிற்றுக் கிழமை இவ்வாறு கரை ஒதுங்கிய 6 கடலாமைகள், ஒரு டொல்பின் மீனின் உடலம் மீட்கப்ப்ட்டுள்ளது. இதில் குறிப்பாக இலங்கையின் கடலாமைகள் தொடர்பில் பிரசித்தமான இடமாக கருதப்படும் கொஸ்கொட பகுதியில் மூன்று ஆமைகள் கரை ஒதுங்கியிருந்தன.

இதுருவ, கொஸ்கொட, வாதுவ, தெஹிவளை மற்றும் பயாகலை கடற் கரைப் பகுதியிலேயே இந்த ஆமைகளும் டொல்பின் மீனும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தன.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக கடலில் கலந்த பல தொன் நிறைக் கொண்ட இரசாயனங்கள் காரணமாக இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இரந்து கரை ஒதுங்குகின்றனவா என அவ்வந்த பகுதிகளின் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்க்ப்ப்ட்டுள்ளன.

இதில் குறிப்பாக கரை ஒதுங்கிய உயிரிழங்களின் மாதிரிகளை பேராதனை பல்கலைக் கழகத்தின் மிருக வைத்திய பீடத்துக்கும் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பயவு நிலையத்துக்கும் அனுப்பி இரசாயனத் தாக்கம் தொடர்பில் உறுதிப்படுத்த வன ஜீவராசிகள் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே தெற்கின் உனவட்டுன கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆமை தொடர்பில் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையம் ஊடாக அரிக்கை பெற காலி நீதிமன்றம் உத்தர்விட்டிருந்த பின்னணியில், பேராதனை பல்கலைக் கழக்த்தின் மிருக மருத்துவ பீடம் ஊடாகவும் இது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்ப்ட்டுள்ளன.

பாகிஸ்தானில் மோதுண்ட இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் – 30 பேர் பலி !

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாகின. தடம்புரண்டு நின்றிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது.
புகையிரத விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கவிழ்ந்த ரெயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்பது கடும் சவாலாக உள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஏராளமானோர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரது உடநிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.