11

11

5 ஆம் வகுப்பு முதல்  12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வரை பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சாமியார் – சாமியாருக்கு உதவிய ஆசிரியர்கள் !

இந்தியாவின் தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது, இந்தப் பள்ளியின் நிறுவனர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த இவர் 30 வருடங்களுக்கு முன்பு பிழைப்புதேடி சென்னை வந்தார்.

காவி உடை அணிந்து பூஜைகள் செய்து வந்த நிலையில், சிவசங்கர் பாபா என தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டு ஆன்மீக உரையாற்ற ஆரம்பித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யாகவா முனிவருடன் நடந்த விவாதத்தில் கைகலப்பான வீடியோ காட்சி பரபரப்பானதையடுத்து, சில தனியார் தொலைக்காட்சிகளில் ஆன்மிக செற்பொழிவின் மூலம் பிரபலமானார்.

அரசியல் தொடர்புகள் மூலம் தன் செல்வாக்கை உயர்த்திக்கொண்ட சிவசங்கர் பாபா, கேளம்பாக்கம் அருகே சுஷில் என்ற பக்தர் வழங்கிய நிலத்தில், ராமராஜ்ஜியம் என்ற பெயரில் ஒரு நகரை உருவாக்கினார். அதில் நிலத்தை தானமாக வழங்கியவரின் பெயரையும், தனது அவதாரத்தின் பெயரையும் இணைத்து சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்ற ஆசிரம பள்ளியை நிறுவி நடத்தி வருகிறார்.

பாலியல் புகாரில் சிக்கிய குருஜி! யார் இந்த சிவசங்கர் பாபா!?நடிகர் ரஜினியின் பண்ணை வீடு அருகே சுமார் 64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் பக்தர்கள் என்ற பெயரில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 30 ஆண்டுகளாக தன்னை கடவுளின் அவதாரம் எனக் கூறி வரும் சிவசங்கர் பாபா, ஆனந்த நடனம் ஆடிய போதெல்லாம் அவரை கடவுளின் அவதாரமாக நினைத்து வணங்கி வந்தனர்.

இந்த நிலையில்தான் அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் அவர் மீது பரபரப்பு பாலியல் புகார்களை கூறியுள்ளனர். 5 ஆம் வகுப்பு முதல்  12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வரை பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் தங்கள் புகாரில் குற்றம்சாட்டியுள்ளனர். ஆன்மிகம் என்ற போர்வையில், தன்னை கடவுள் கிருஷ்ணர் என்று கூறிக் கொண்டும் தான் குறிவைக்கம் மாணவியை கோபிகா என்று கூறியும், சிவசங்கர் பாபா இந்த கொடூர செயல்களை அரங்கேற்றி வருவதாக மாணவி சமூகவலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு குளிர்பானம் என்ற பெயரில் மதுபானங்களை கொடுத்து அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை தாம் நேரடியாக பார்த்ததாகவும் மாணவி தமது புகாரில் கூறியுள்ளார். சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் கூறிய அடுக்கடுக்கான புகார்கள் சமூகவலைதளங்களில் பூதாகரமாக வெடித்ததையடுத்து, முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம் திகதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார்.

அடுத்தநாள் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கௌரி அசோகன் நான்குபேர் கொண்ட குழுவுடன் விசாரணை நடத்தினார். அடுத்தகட்டமாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆசிரமத்தில் சிவசங்கர்பாபா இல்லாத நிலையில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வருகின்ற 11ம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேர் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மனு அனுப்பியுள்ளனர். எனினும் இன்றைய விசாரணைக்கு சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகத்துக்கே கலாச்சாரத்தை கொடுத்தோம், மொழிகளை கொடுத்தோம் என வீண் தம்பட்டம் அடிப்பதை விடுத்து தமிழ்நாட்டு புத்திஜீவிகள் முதலில் தங்கள் சார்ந்த சமூகத்தை திருத்த முன்வரவேண்டும். கடவுளின் பெயரால் போலிசாமியார்கள் போடுகின்ற ஆட்டம் அளவுக்கதிகம். தெரிந்த ஒரு சாமியார் தான் இவர். தெரியாத ஆயிரம் சாமியார்களும் உள்ளனர்.

பார்ப்போம் என்ன செய்யப்போகிறார்கள் என்று..!

“2007 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு என்னை தலைவராக தெரிவு செய்வார்கள் என எண்ணினேன்.” – யுவராஜ் சிங்

2007-ம் ஆண்டு முதலாவுது  20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

அதே வருடம் நடைபெற்ற   50 ஓவர் உலக கோப்பை போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அதன்பின் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. தலைவராக டோனி முதல் முறையாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டோனி வெற்றிகரமாக கேப்டனாக அசத்தினார்.

இந்த நிலையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

2007-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதால் கடும் கொந்தளிப்புகள் இருந்தது. பின்னர் இரண்டு மாத இங்கிலாந்து சுற்றுப்பயணமும், தென்ஆப்பிரிக்காவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது.

அதன்பின்னர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது. வெளிநாட்டில் 4 மாதம் சுற்றுப்பயணம் இருந்தது. எனவே மூத்த வீரர்கள் தங்களுக்கு இடைவெளி தேவை என்று நினைத்தார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் 20 ஓவர் உலக கோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் டோனி கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் ஆனாலும், அது ராகுல் டிராவிட்டாக இருந்தாலும், கங்குலியாக இருந்தாலும் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் அதை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ்சிங் முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டி தொடரில் தான் யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை இலங்கையில் !

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை இன்றைய தினம் (11.06.2021)  பொலன்னறுவையில் திறக்கப்பட்டுள்ளது.

Gallery

சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

இதில் 200 டயலிசிஸ் வசதிகள் மற்றும் 5 ஒபரேஷன் தியேட்டர் மற்றும் பல துணை பிரிவுகளும் sub specialities உள்ளன.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரய்ச்சி, கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் திடீரென உயர்ந்த கொரோனா மரணங்கள் – மீளவும் நாடு முடக்கம் !

கடந்த ஒரு மாத காலம் வரை பயணத்தடை என அறிவித்தும் கூட கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சி பெருந்தோல்வி அடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.  இந்நிலையில் வருகின் 14ம் திகதி முதல் நாடு வழமைக்கு திரும்பும் என அறிவித்திருந்த போதும் கூட அது 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறுகிய சில நாட்களுக்குள் இலங்கையில் கொரோனா பரவல் மட்டுமன்றி இறப்பு தொகையும் அதிகரித்துள்ளது. கடந்த குறுகிய கால எல்லைக்குள் இறப்பு வீதம் மிக வேகமாகியுள்ளதுடன் நாட்டில் இதுவரையில் 2,011 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

எனினும், நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடலில் எரிந்த கப்பலின் தாக்கம் இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும் !

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமெனவும் குறித்த சேதங்களை டொலர்களிலும் மதிப்பிட முடியாது எனவும்  சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்களின், பெரிய குவியல்களை சேகரித்திருக்கிறோம். இதில் எத்தனை மில்லியன் துகள்களை மீன்கள் சாப்பிட்டுள்ளன என்பது எங்களுக்குத் தெரியாது.

கடற்கரைகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் துகள்கள் சேகரிக்கப்பட்டு, 40 கொள்கலன்களில் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு எவ்வளவு அதிகமான பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை நாம் இப்போது கற்பனை செய்து கொள்ளலாம். 10% க்கும் குறைவான பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு மீதமுள்ளவை சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றன.

ஆகவே எக்ஸ் பிரஸ் கப்பல் மூழ்கியதால் ஏற்பட்ட சேதம், ஈடு செய்யப்பட வேண்டும் என்பதுடன் பொறுப்பான அனைவரையும் அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். சி.ஐ.டி, ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விடுதலை செய்யுங்கள் இல்லையேல் கருணைக்கொலை செய்யுங்கள்.” – தடுப்பு முகாமில் தொடரும் இலங்கை தமிழர் போராட்டம் !

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் இலங்கை தமிழர்களின் போராட்டம் - தமிழ்வின்

எங்களை  விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இன்று(வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாளாகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இன்றைய தினம் போராட்டக்காரர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசி ஊடாக பேசியுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் பேசுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசி ஊடாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.

“மக்களுக்காகவே பாராளுமன்றம் வருகிறேன்.” – ரணில் விக்கிரமசிங்க

மிகப்பரெிய ஒரு இடைவெளிக்கு பிறகு ரணில் மீள அரசியல் களத்தில் காலடி எடுத்து வைக்கிறார். இது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே செல்கிறது.  இதன் ஒரு கட்டமாக “ மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரான ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார். எனவே, அவரின் நாடாளுமன்ற வருகையானது எமக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது.” என ஐக்கிய மக்கள் சக்தி கூறியிருந்தது.

இந்நிலையில் “யார் எதை கூறினாலும் மக்களே இறுதியில் அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். நாட்டினதும் மக்களினதும் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றத்திற்கு செல்ல தீர்மானித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்ற மீள் வருகை குறித்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து கட்சி உறுப்பினர்களுடன் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடி ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்,

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. தனிநபர் பொருளாதாரத்தை வலுப்படுத்தாது தேசிய பொருளாதாரம் வலுவாகாது. எனவே தீர்க்கப்படா பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கொவிட் நெருக்கடி , பொருளாதார பாதிப்பு, இயற்றை அழிவு மற்றும் கப்பல் விபத்து என இலங்கையை சூழ பிரச்சினைகளே உள்ளன.

ஆகவே யாருடைய குறைகளை நாம் கூற வேண்டியதில்லை. எனது நாடாளுமன்ற வருகை அவர்களுக்கு தலைப்பு செய்திகளாக இருந்தாலும் நாட்டையும் மக்களையுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உறுதியாகவே நாம் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சி எதை கூறினாலும் இறுதியில் மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகள் குறித்து பேசுவற்கே நான் நாடாளுமன்றம் செல்கின்றேன்.

பேர்ள் கப்பல் அழிவு குறித்து அரசாங்கம் இன்னும் பொறுப்பற்ற வகையிலேயே செயற்படுகின்றது. கப்பலில் நைட்ரிஜன் கசிவு ஏற்பட்டிருப்பதை அவதானிக்கப்பட்டால் துறைசார்ந்தவர்களும் சுங்க பிரிவினர் மற்றும் வைத்தியர்களே முதலில் கப்பலுக்கு சென்றிருக்க வேண்டும். கடும் கடல் காற்றினால் கப்பலில் தீ நிறுவனம் கூறுகின்றது. ஆனால் கடும் காற்றுடன் கூடிய காலநிலை ஏற்படும் என 24 மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.

மறுப்புறம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும் இல்லை. நாடாளுமன்றத்தை கூட்டி இது குறித்து கலந்துரையாடவும் இல்லை. எனவே கொவிட் வைரஸ் தொற்று எந்தளவு நீண்ட காலத்திற்கு இலங்கையை பாதிக்குமோ அதேயளவான காலம் வரை பேர்ள் கப்பல் ஏற்படுத்திய அழிவுகளும் நாட்டை தொடரும் என தெரிவித்தார்.

“மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார்.” – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு !

ஐக்கிய தேசிய கட்சியினுடைய மிகப்பெரும் தேர்தல் சரிவினையடுத்து கட்சி முழுமையாகவு சிதைந்து விட்டது. இந்நிலையில் அந்த கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் நீண்ட நாள் இழுபறியின் மத்தியில் ரணில்விக்கிரமசிங்கவிடம் சென்றுள்ளது. இந்நிலையில் அவருடைய பாராளுமன்ற வருகை பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக எதிர்க்கட்சியினராகிய ஐக்கியமக்கள் சக்தி கட்சியினரிடம் இது தொடர்பான அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவரின் பாராளுமன்ற வருகை தொடர்பாக எதிர்த்தரப்பினரிடம் சலசலப்பு ஏற்படுகின்றது.

இந்நிலையில் , மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரான ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார். எனவே, அவரின் நாடாளுமன்ற வருகையானது எமக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவுக்கு நம்பிக்கை தெரிவித்து ஏன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பிலும், ரணிலின் நாடாளுமன்ற வருகை சம்பந்தமாகவும் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவை குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது, ஒரு குழு தம்முடன் இணையவுள்ளது என்றெல்லாம் ராஜபக்ச அரசும், இந்த அரசுக்குச் சார்பானவர்களும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் போலியானவை என்பதை நிரூபிப்பதற்காகவும், கட்சி உறுப்பினர்கள் சஜித் பக்கமே இருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவுமே நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க என்பவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர். அரசின் தேவைக்கேற்ப செயற்படக்கூடிய ஒருவர். ஏதேனும் ஒரு விதத்தில் பயன்பெறுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை அரசு, பாதுகாப்பு வழங்கி வைத்துள்ளது.

எனவே, ரணிலின் கருத்தை நம்புவதற்கு மக்கள் இனியும் தயாரில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்றம் வருவது எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையாக அமையாது – என்றார்.

“இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும்.” – ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 628 வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றம் !

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நேற்றுமுன்தினம்  நிறைவேற்றியுள்ளது.

மேலும், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தற்காலிகமாக விலக்கிக் கொள்வதற்கான போதிய காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராயுமாறும் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்பெய்ன் – மொக்ரோ எல்லைப் பகுதி, ரஷ்யா மற்றும் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 40 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பிரசன்னமாகவில்லை.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர் எனவும் தீர்மானம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கைவிடுவது, மறு ஆய்வு செய்வது குறித்த தங்களது வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும், சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றும் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே 2017இல் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை மீளப்பெற்றுக்கொண்டது எனவும் தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஒரு செல்வாக்குச் செலுத்தும் விடயமாக ஐரோப்பிய ஆணைக்குழுவும் ஐரோப்பிய வெளிநாட்டு செயற்பாட்டு சேவையும் பயன்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இறுதி முயற்சியாக இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராயுமாறும் தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.