15

15

தன்னை கைதட்டி உற்சாகப்படுத்திய சிறுவனுக்கு நோவக் ஜோகோவிச் அளித்த அதிர்ச்சி பரிசு !

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீரரான சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
தனது போட்டி முடிந்ததும் ரசிகர்கள் கேலரியில் அமர்ந்து ஆட்டத்தை பார்த்த சிறுவனான  ரசிகருக்கு தன்னுடைய டென்னிஸ் பேட்டை (ரக்கெட்) ஜோகோவிச் பரிசாக வழங்கினார். எதிர்பாராத இந்த பரிசினால் திகைத்து போன அந்த ரசிகர் எல்லையில்லா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். டென்னிஸ் பேட்டை பரிசாக வழங்கியது ஏன்? என்பது குறித்து ஜோகோவிச் கூறுகையில்,
‘இறுதிப்போட்டி முழுவதும் அந்த ரசிகரின் உற்சாக குரல் எனது காதில் ஒலித்து கொண்டே இருந்தது. குறிப்பாக நான் முதல் 2 செட்களை இழந்து பின்தங்கி இருக்கையில் அவர் என்னை ஊக்கப்படுத்தினார். உண்மையாகவே பயிற்சியாளர் போன்று ஆட்டத்தின் தன்மைக்கு தகுந்தபடி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை சொன்னார். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அந்த நபருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எனது பேட்டை வழங்கினேன்’ என்றார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து எதிரொலி – பச்சையாக மீன்களை சாப்பிட்டு காட்டும் மீனவர்கள் !

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்கு உள்ளான காரணத்தால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து இந்நாட்டு மீன் வியாபாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

´நாம் தினம் தோறும் பச்சையாக மீன்களை சாப்பிட்டு காட்டுகிறோம். எனினும் மீன் வியாபாரம் குறைவடைகிறது. குறித்த ஆமைகள் இன்று நேற்று உயிரிழக்கும் விலங்குகள் இல்லை. பல வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்து தற்போது கரையொதுங்கி வருகின்றன. என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இன்றைய தினமும் நாட்டின் பல கடற்கரைகளில் உயிரிழந்த நிலையில் விலங்குகளின் சடலங்கள் கரையொதுங்கி இருந்தமையை அவதானிக்க கூடியதாய் இருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா புதிய வடிவில் உருமாற்றம் – டெல்டா ப்ளஸ் !

இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான “டெல்டா” மீண்டும் உருமாற்றம் அடைந்து, “டெல்டா ப்ளஸ்”-ஆக மாறியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.2 என்ற உருமாறிய கொரோனா, மிக வேகமாக பரவக் கூடியதாகவும், மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் அமைந்தது. டெல்டா என பெயர் வைக்கப்பட்ட இந்த வைரஸ், இந்தியாவில் ஏராளமான உயிரிழப்பை ஏற்படுத்திய நிலையில் இங்கிலாந்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

தற்போது, இந்த டெல்டா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். B.1.617.2.1 என வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்த வகை வைரசிற்கு டெல்டா ப்ளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. வைரசின் புரதத்தில் இந்த உருமாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வகை வைரஸ் மோனோகுளோனல் ஆண்டிபாடி சிகிச்சைக்கு எதிராக செயலாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 12, 14 வயதுடைய சிறுவர்கள் !

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 12, 14 வயதுடைய இரு சிறுவர்களை நேற்று (14) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை வீடு ஒன்றில் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்தகாரம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததை அடுத்து குறித்த இரு சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

…………………………………………………………………………………………………………………………………..
சிறுவர்களை கைது செய்வதை விடுத்து நாம் இங்கு செய்யவேண்டியது முதலில் பிள்ளைகளை முறையாக வளர்க்க தவறிய  பெற்றோரையும் அடுத்து அந்த சிறுவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் சுகாதார ஆசிரியரையும் கேள்விக்குட்படுத்த வேண்டும். இன்று வரை எங்கள் சமூகங்களில் பாலியல் கல்வி கற்பிக்கப்படும் போது அது தொடர்பாக முறையாக கற்பித்து கொடுக்கப்படுவதில்லை. ஏதோ புள்ளிக்காக இவையெல்லாம் இணைக்கப்பட்டு்ள்ளது போலவே இணைக்கப்பட்டுள்ளன.
பாலியல் தொடர்பான கல்வியே பலாத்காரங்களுக்கான முற்றுப்புள்ளி. இங்கெல்லாம் பல சுகாதார ஆசிரியர்கள் ஆண்குறி பற்றி பேசும் போதோ அல்லது பெண் உடல் மாற்றங்கள் பற்றி பேசும் போதோ கற்பிக்கின்ற முறையை பார்த்தாலே விளங்கிவிடும் எவ்வளவு ஆரோக்கியமாக கற்பித்து கிழிக்கிறார்கள் என்று. முறையான பாலியல்கல்வி கொண்டுபோய் சேர்க்கப்படும் வரை சில விடயங்கள் மாறப்போவதில்லை.
பெற்றோர் இதில் முக்கியமான குற்றவாளிகள். பெண்கள் மீது எப்படியான வன்முறையை ஆண் கக்கினாலும் அது தவறில்லை என சிறுவர்களே எண்ணுமளவிற்கு எங்கள் சமூகங்களில் குடும்பச்சூழல் காணப்படுகின்றது. இவை அனைத்தும் மாற்றப்படுவதற்கு முறையான வழிகாட்டுதல்கள் அவசியமாகிறது . அது வரை இது ஒரு செய்தி அவ்வளவே..!

புதிய அரசியலமைப்பு தொடர்பான கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்தி வைத்த ஜனாதிபதி !

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

நாளை புதன்கிழமை நான்கு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது. புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசுவதற்காக இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்தது.

இந்நிலையில், குறித்த சந்திப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியை நாளை சந்திக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு !

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் கட்சிகளின் தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக மட்டும் கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, கோட்டாபாய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

சீனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ‘ஜி-7’ – ஜி-7 போன்ற சிறிய குழுக்கள் உலகை ஆள முடியாது என சீனா பதிலடி !

உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு செயல்படுகிற ‘ஜி-7’ அமைப்பின் உச்சிமாநாடு, இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகுதியில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நேற்று இந்த மாநாடு முடிந்தது.

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி

பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள காா்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டடிருந்தது. கொரோனா வைரசுக்கு எதிராக உலகமெங்கும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது, பெரிய நிறுவனங்கள் தங்கள் நியாயமான வரிகளை செலுத்தச்செய்வது மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பணத்தின் உதவி கொண்டு பருவநிலை மாற்றம் பிரச்சினையை சமாளிப்பது என தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

இது எல்லாம் ஒரு புறமிருக்க இந்த கூட்டத்தொடர் முழுவதும் அதிகம் பேசுபொருளாகவிருந்த விடயம் சீனா தொடர்பானதே.

இதே நிலையில் , மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின் ஏழு பெரிய மேம்பட்ட பொருளாதார நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ‘சீனாவை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தின. இது உய்குர் முஸ்லீம் சிறுபான்மைக் குழுவிற்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவையை உள்ளடக்கியதாகும்.

இதே நேரம் இந்த மாநாட்டில், சீனா முன்வைத்துள்ள `பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்துக்கு ஜி-7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்துள்ள `பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட்’ (பி3டபிள்யூ) எனும் திட்டத்தை செயல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஏழை மற்றும் மத்திய தர நாடுகள் கட்டமைப்பில் பயன்பெறும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரித்தானியாவிலுள்ள சீனாவின் தூதரகம், ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த முடிவு தொடர்பாக பிரிட்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர், “ஒருசில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் முடிவு எடுக்கும் காலம் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டது. சிறு குழுக்கள் இனியும் உலகை ஆள முடியாது.

சீனாவைப் பொறுத்தவரை அளவில் பெரிய நாடோ அல்லது சிறிய நாடோ, பலவீனமானதோ அல்லது பலமான நாடோ, ஏழையோ அல்லது பணக்கார நாடோ அனைத்தும் சமமே.

சர்வதேச விவகாரங்களில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஐ.நா.,கொள்கையை ஒட்டிய சர்வதேச முடிவுகள் எட்டப்பட வேண்டும்.ஜி-7 போன்ற குழுக்கள் உலகை ஆள முடியாது” என்று கூறியிருக்கிறார்.

………………………………………………………………………………………………………………………………….

அண்மைய நாட்களில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருமாறி வருகின்றது.  முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவின் ஆதிக்கம் வேகமாக வளர ஆரம்பித்துள்ளதையும் அறிய முடிகின்றது. முக்கியமாக கொரோனா தடுப்பூசி தொடர்பான விநியோகம் இன்றைய உலக அரசியலின் மிகப்பெரும் சக்தியாக மாற்றமடைய ஆரம்பித்துள்ளது.

சீனா முதற்கட்டமாக பல நாடுகளுக்கு தடுப்பபூசி விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளமை மூலம் சீனச்சார்பு நாடுகளின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைய ஆரம்பித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே மேற்கத்தேய நாடுகள் கொரோனாவை பரப்பிய பழியை வலுக்கட்டாயமாக சீனாவை  ஏற்க வைக்க முற்படுகின்றன. சீனாவும் ஏற்றுக்கொள்வதாயில்லை. ட்ரம்ப் அடுத்து வந்த பைடன் எல்லோரும் சீன எதிர்ப்பு என்ற கோணத்தில் ஒரே முகத்தையே காட்டுகின்றனர்.

இவ்வளவு நாள் தடுப்பூசி தொடர்பான மட்டுப்பாடுகளை அறிவித்து வந்த அமெரிக்கா , பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் வறுமைப்பட்ட நாடுகளுக்கு 100 கோடி டோஸ்களை கொடுக்க முன்வருவதாக தெரிவித்துள்ளமை கூட சீன எதிர்ப்பின் ஒரு நீட்சியே தவிர மற்றும் படி உலக நாடுகள் மீது கொண்ட கரிசனை என்று கூறமுடியாது. அவ்வளவு அக்கறை இருப்பின் தடுப்பூசி உற்பத்திக்கான அனுமதியை பல நாடுகளுக்கு வழங்க முடியும். எனினும் அதில் கூட கட்டுப்பாட்டை இந்த நாடுகள் விதித்து வைத்திருப்பது இல்லாத நாடுகள் இவர்களிடம் இரந்து வாழ வேண்டும் என்பனாலேயே தவிர வேறு ஒன்றுமில்லை.

 

பொருத்திருந்து பார்ப்போம். சீனா இவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு  பணிந்து போகுமுா..? அல்லது தன்னுடைய பெல்ட் அன்ட் ரோட் திட்டத்தை இன்னும் முனைகப்பாக நடத்துமா என்று.

 

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது.” – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி !

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிசொகுசு வாகன இறக்குமதி தொடர்பான பிரச்சினை அண்மையில் பெரும் பூகம்பமாக மாறியிருந்தது. எதிர்கட்சியினர் உட்பட பல அரசியல் தலைவர்கள் இதனை வன்மையாக கண்டித்திருந்தனர். முக்கியமாக ஜே.வி.பி. வாகன இற்குமதியிலும் பாரிய ஊழல் மோசடி நடந்துள்ளதாக கடுமையாக சாடியிருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், இந்த நேரத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யக்கூடாது என்பதே அனைவரினதும் முடிவு என கூறினார்.

ஆகவே குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்கும் வகையில் அவற்றினை இறக்குமதி செய்வதற்கான முடிவு சபாநாயகரால் எடுக்கப்பட்டது என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

“துப்பாக்கிகளை பயன்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது.” – இரா.சாணக்கியன்

“துப்பாக்கியைப் பயன்படுத்திக் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. மாறாக அதற்கேற்றவாறான செயற்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.” என  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை இராணுவத்தின் மூலம் இந்தத் தொற்று நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதியும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் நம்பியதிலிருந்துதான் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தோல்வியடைய ஆரம்பித்தன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுடனான நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான குழுக்கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் என்பது தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு ‘அரசியல் கருவி’யாகப் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டில் இந்தத் தொற்றுநோய் பரவத்தொடங்கியபோது, ‘போரை வெற்றிகொண்ட எமக்கு இதனைக் கையாள்வது பெரிய விடயமல்ல’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அதுவே தொடக்கப்புள்ளியாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து இந்த கொவிட் – 19 பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தவொரு தரப்பினருக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவே இருந்துவருகின்றன. இந்த சவாலை எதிர்கொள்வத்றகு ஆளுந்தரப்பினரால் முறையான கொள்கைகளும் செயற்திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.

அதேபோன்று வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை எதிர்த்தரப்பும் மேற்கொள்ளவில்லை. அதேவேளை இதுவிடயத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கான இயலுமையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. இக்காலப்பகுதியில் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவக்கூடிய பல்வேறு புதிய நடவடிக்கைகளையும் திட்டங்களையும் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இளைஞர், யுவதிகள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

ஆனால் இராணுவத்தின் மூலம் இந்தத் தொற்றுநோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதியும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் நம்பியதிலிருந்துதான் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தோல்வியடைய ஆரம்பித்தன. வைரஸ் பரவலை ஒருபோதும் துப்பாக்கியைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்த முடியாது. மாறாக அதற்கேற்றவாறான செயற்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக இந்த நெருக்கடிமிக்க காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு அடக்குமுறை செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்தே பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளல், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உணவுப்பொருள் வழங்கல், தடுப்பூசி வழங்கல் உள்ளடங்கலாக அனைத்து விடயங்களையும் அரசாங்கம் முறையாகத் திட்டமிடவோ, நிர்வகிக்கவோ இல்லை. இவ்வனைத்து விடயங்களிலும் அதிகளவான அரசியல் தலையீடுகளும் ஊழலுமே காணப்பட்டன.

நாட்டில் அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் தற்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பிற்கு வரும் வாகனங்களில் பெருமளவானவை மணல் ஏற்றும் லொறிகளாகும்.
அவை எவ்வாறு அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடக்கப்பட்டன என்பது புரியவில்லை. அதேபோன்று மணல் அகழும் பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான லொறிகள் நிறுத்தப்பட்டிருப்பதுடன் அவை மணலை ஏற்றிக்கொண்டு நாட்டில் பலபாகங்களுக்கும் செல்கின்றன.

மேலும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையை எடுத்துக்கொண்டால், நாட்டின் பெரும்பாலான மக்களைப் புறந்தள்ளும் நடவடிக்கையாகவே அதனைக் கருதமுடியும். வங்கிச்சேவை அத்தியாவசிய சேவையாக இருக்கும் நிலையிலும்கூட, மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்கி ஊழியர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு மறுப்புத்தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தடுப்பூசியை வழங்குமாறு கடிதங்களைக் கொடுத்திருக்கிறார்.  அவ்வாறிருக்கையில் அதுகுறித்து ஆராயாமல் அத்தியவாசிய சேவையில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசியை வழங்க மறுப்புத்தெரிவிப்பது ஏன்? ஆகவே கொவிட் – 19 கட்டுப்பாட்டைப் பொறுத்தவரையில் அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

“அமைச்சர் உதய கம்மன்பில  ஒரு முட்டாள்.” – சரத் பொன்சேகா சாடல் !

தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்ட நபரை தனக்கு தெரியாது என கூறும், அமைச்சர் உதய கம்மன்பில  முட்டாள்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  மார்சல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்தால் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகள் உருவாகி இருந்தன. இந்த நிலையில், தன்னிலை தொடர்பில் விளக்கமளிக்க ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை கம்மன்பில ஏற்பாடு செய்திருந்தார். அதில் சாகர காரியவசம் என்ற நபரை தனக்கு தெரியாது என்றும், அண்மை நாட்களில் நடந்த சம்பவத்திற்கு முன் ஒருபோதும் அவரை தெரியாது என்றும், அத்தகைய நபரை இதற்கு முன் அறிந்ததில்லை என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா உதய கம்மன்பிலவை முட்டாள் என கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் கம்மன்பிலவின் நியமனப் பட்டியலில் சாகர காரியவசமே கையெழுத்திட்டார். தனது வேட்புமனுவில் கையெழுத்திட்ட நபரைக்கூட அமைச்சர் கம்மன்பில தெரியாது என்று கூறியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

மேலும், கம்மன்பில மற்றும் காரியவசம் இரண்டு குழுக்கள் அல்ல, பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு குழு என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் “ஜனாதிபதி, நான் மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் கூடியே எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவை எடுத்தோம். இதற்கு நிதி அமைச்சர் என்ற வகையில் நான் பூரண அனுமதியை வழங்கினேன். வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவைப் பதவி விலகுமாறு கோருவது வேடிக்கையானது. என பிரதமர் மகிந்தராஜபக்ஷ கூறியுள்ளமை நோக்கத்தக்கது.