19

19

காட்டுத்தீயாய் பரவும் புதிய வகை கொரோனா – கட்டுப்படுத்த முடியாது திணறும் லத்தீன் அமெரிக்கா !

கொரோனா பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் குறைய தொடங்கியபோது அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் வெவ்வேறு வகையில் உருமாற்ற கொரோனா வைரஸ் பரவியது தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாற்ற வைரஸ் லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவி உள்ளது என்றும், இதற்கு லாம்ப்டா என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்தகொரோனா வைரஸ்  பெரு நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வகையான வைரஸ் 29 லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அர்ஜென்டினா, சிலி போன்ற நாடுகளில் வைரஸ் பரவி இருக்கிறது.

இந்த உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரசின் தாக்கம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு புதிய வகை கொரோனா வைரசை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது.

இதற்கிடையே டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அந்த வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் மாறி வருகிறது என்றும், அதன் பரவும் தன்மை அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.

அதிகளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் ரஷ்யா – அமெரிக்கா முன்னிலை !

உலகிலேயே ரஷ்யா மற்றும் அமெரிக்‍கா நாடுகள் அதிகளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம், பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு குறித்து, ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2021′ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில், அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய 9 நாடுகள் அணு ஆயுதங்களை அதிகளவில் வைத்திருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

உலகளவில் குவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 80 என்றும், இவற்றில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா வசமே உள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதில், 6 ஆயிரத்து 375 அணு ஆயுதங்களுடன் உலகிலேயே ரஷ்யா முதலிடத்தில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, 5 ஆயிரத்து 800 அணு ஆயுதங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனா 320 – ஃப்ரான்ஸ் 290 – இங்கிலாந்து 225 – பாகிஸ்தான் 160 – இந்தியா 150 – இஸ்ரேலிடம் 90 மற்றும் வடகொரியா 50 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அந்த ஆய்வு அறிவிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் !

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

72 வயதான ஆன்டனியோ குட்டரெஸின் பதவிக்காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் ஆன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொது செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச்செயலாளரான போர்த்துகல் முன்னாள் பிரதமஐ.நா. பொதுச்செயலாள ஆன்டனியோ குட்டரெஸ், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறாஐ.நா. பொதுச்செயலாள என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்களோடு சேர்த்து எங்கள் பிள்ளைகளும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாது இருக்கிறார்கள்.” – மலையக மக்கள் ஆர்பாட்டம் !

நீண்ட நாட்களாக அமுலில் உள்ள பயணத்தடை காரணமாக சாதாரண குடும்பங்கள் மிகப்பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. முக்கியமாக உணவு தொடர்பான பிரச்சினை பல குடும்பங்களை வாட்ட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அரசினால் வழங்கப்பட்டிருந்த 5000 ரூபாய்கூட மக்களை ஒழுங்காக போய்ச்சேரவில்லை. கடந்த வருட ஊரடங்கு நேரம் தேர்தல் காலம் என்பதால் பலருடைய உதவிகள் மக்களுக்கு கிடைத்திருந்தது. ஆனால் இந்நத வருடம் அப்படியான உதவிகள் கூட இல்லாது போயுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மக்களுடைய அதிருப்தி வௌிப்பட ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக  நுவரெலியா- வட்டவளை, கரோலினா தோட்டத்திலுள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி, ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூறியதாவது,

“பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக வெளியிடங்களுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாம் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது நிர்க்கதியாகி உள்ளோம். மேலும் குறித்த காலகட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் நிவாரணம் கூட இதுவரை எமக்கு கிடைக்கவில்லை.

இதனால் எம்முடன் சேர்ந்து எங்களது பிள்ளைகளும் ஒருவேளை உணவுக்காக கஸ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட  எங்களது பகுதிக்கு வருகைத்தந்து எமது நிலைமைகள் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை.

ஆகவே, எங்களது இத்தகைய பிரச்சினைக்கு உரிய தீர்வை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என போராட்டத்தில் ஈடுபட்டோர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அரசாங்கத்தின் கொரோனா தடுப்பசி வழங்கலில் சமூக தேவைகளை விட அரசியல் தேவைகளே முன்னிலை பெற்றுள்ளன.”- ஜேவிபி குற்றச்சாட்டு !

“அரசாங்கத்தின் கொரோனா தடுப்பசி வழங்கலில் சமூக தேவைகளை விட அரசியல் தேவைகளே முன்னிலை பெற்றுள்ளன.” என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி  தொடர்பில்  கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் மோசமான நிலை காணப்படுகின்ற சூழலில் மக்கள் தடுப்பூசியை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுகின்றனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இன்று வரும் நாளை வரும் என அமைச்சர்கள் பல திகதிகளை தெரிவித்தனர்.  அமைச்சர் பிரசன்னரணதுங்க மே மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவோம். ஆனால் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. முதலாவது டோஸ் கொரோனாவைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் தங்களிற்கு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.
தடுப்பூசியை அரசாங்கம் பலன்அளிக்க கூடிய விதத்தில் வழங்கவில்லை.
அரசியல்தேவைகள் சமூக தேவைகளை விட முன்னிலை பெற்றுள்ளன. என அவர் தெரிவித்துள்ளார்.

“30 வருடங்களாகியும் மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு இந்தியா எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.” – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு !

“மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு இந்தியா எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.”  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (19.06.2021) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கை- இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்தால், தமிழ் மக்களிற்கு ஏற்ப்பட்ட இழப்புக்களை தடுத்திருக்க முடியும். இவ்விடயத்தில் ஏனைய தமிழ்த் தலைவர்கள் தவறிழைத்துள்ளதுடன் இலங்கை அரசாங்கமும் பாரிய தவறிழைத்துள்ளது.

மேலும் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ளன. அதாவது போருக்கு பின்னரான காலப்பகுதியிலாவது, மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு எந்ததொரு முயற்சிகளையும் இந்தியா எடுக்கவில்லை.

இந்நிலையில் இன்றுள்ள அரசு, மாகாணங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

எனவே இந்தியா, எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தனது முழு முயற்சியினையும் மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

“கருணா தப்பிச்செல்வதற்கு நானே காரணம் என அறிந்து பிரபாகரன் சீற்றமடைந்தார்.” – முன்னாள் நா.உ மௌலானா ரணில் சொல்லியே செய்ததாகவும் ட்வீட் !

“17 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார்,  எனக்கு துரோகமிழைத்தார்.“ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் தெரிவிவித்துள்ளதாவது,

அந்த நாள் ஜூன். 22. 2004

நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து 17 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் அவரது பெயர் ரணில் விக்கிரமசிங்க . எனக்கு துரோகமிழைத்த கட்சி தலைவர் தொடர்ந்தும் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார்.

கருணா தப்பிச்செல்வதற்கு நானே காரணம் என பிரபாகரன் அறிந்ததை தொடர்ந்து சீற்றமடைந்த அவர் தனது அரசியல் பிரிவினை செய்தியாளர் மாநாட்டினை நடத்துமாறும் எனக்கு அதில் தொடர்பிருப்பதை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 20 ம் திகதி அது நடந்தது.
மறுநாள் எனது கட்சி தலைவரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தன தனது அலுவலகத்திற்கு என்னை வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். மங்களசமரவீரவும் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களும் செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தங்கள் குறுகிய அரசியலை முன்னெடுததவண்ணமிருந்தனர்.
எனது நடவடிக்கைக்கு எனது கட்சியே காரணம் என தெரிவித்து சமாதானபேச்சுக்களை குழப்ப நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சி தலைவர் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டார் நான் மிகவும் அமைதியாக உங்கள் உத்தரவின் பேரிலேயே செயற்பட்டேன் என தெரிவித்தேன்.
நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை நாங்கள் எதிர்கட்சியில் இருக்கின்றோம்- சமாதான பேச்சுவார்த்தைகள் முக்கியமில்லை என அவர் தெரிவித்தார். நான் அதிர்ச்சியடைந்து இவ்வாறு பதிலளித்தேன் – சேர் நீங்கள் கொழும்பில் இருந்தவாறு இதனை தெரிவிக்கலாம். நான் மக்கள் யுத்த பயத்தில் வாழும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றேன். நீங்கள் தான் இது நல்ல நடவடிக்கை என தெரிவித்தீர்கள் என்றேன்
நான் தற்போது கட்சியை பற்றி சிந்திக்கவேண்டும் நான் மிகவும் அவமானகரமான சூழலில் இருக்கின்றேன் நீங்கள் பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்தார். நான் அந்த சந்திப்பிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினேன்.
17 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார்,  எனக்கு துரோகமிழைத்தார்.
நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன், நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன்
எனக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன எனது பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

எரிகாயங்களுடன் இறந்த நிலையில் மன்னாரில் கரையொதுங்கிய திமிங்கலம் – இலங்கை கடற்பரப்பில் தொடரும் அச்சமூட்டும் சம்பவங்கள் !

மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று இன்று சனிக்கிழமை (19) காலை கரையொதுங்கியுள்ளது.

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின் மன்னார் மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ச்சியாக கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மன்னார்- முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுளளது.

ஏற்கனவே குறித்த கப்பலின் இரசாயன கழிவுகள் கரை ஒதுங்குவதால் வாழ்வாதாரத் தொழில் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்கள் குறித்த திமிங்கலம் கரை ஒதுங்கியதால் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் தாழ்வுபாடு,வங்காலை மற்றும் சிலாபத்துறை கடற்கரை பகுதிகளில் உயிரிழந்த நிலையிலும்,கடுமையான காயங்களுடனும் கடலாமைகள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்கரையிலும் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்றும் , மட்டக்களப்பு தாழங்குடா கடற்கரை பகுதியில் மேலும் ஒரு டொல்பின் மீன் இனம் உயிரிழந்த நிலையிலும், கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடலில் மூன்று கடலாமைகளும்  கரை ஒதுங்கியுள்ள சம்பவமானது சூழலியளாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் மக்களுக்கான தீர்வை சஜித் பிரேமதாஸ வழங்கியே தீருவார்.”  – ஐக்கிய மக்கள் சக்தி

தமிழ்தேசிய கூட்டமைப்பினரை ஜனாதிபதி கோட்டாபாயராஸபக்ஷ சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் கூட அந்த சந்திப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே இலங்கைக்கான இந்தியத்தூதுவருடன் கூட்மைப்பு பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக ஐக்கியமக்கள் சக்தி தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியவர்கள்தான் ராஜபக்சக்கள். இப்போது பேச்சு என்று அறிவித்துவிட்டு அதனை நடத்தாமலேயே ஒத்திவைத்துள்ளனர். என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ராஜபக்ச அரசு புதிய அரசமைப்பை ஒருபோதும் கொண்டுவராது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும் ஒருபோதும் வழங்கவும் மாட்டாது. இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தெரிந்த விடயம்.

ராஜபக்சக்களின் கடந்த ஆட்சியில் பேச்சு மேசைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல தடவைகள் அழைக்கப்பட்டு இறுதியில் ஏமாற்றப்பட்டனர். அதேபோல் இந்த ஆட்சியில் முதலாவது பேச்சைக்கூட நடத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஏமாற்றியுள்ளார்.

முதலாவது பேச்சுக்கு முதல் நாள் காலை அழைப்பு விடுத்த ஜனாதிபதி செயலகம், அன்று மாலையே பேச்சை இரத்துச் செய்துள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பேச்சு இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி செயலகம் இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால், சர்வதேச அழுத்தத்தைச் சமாளிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச்சுக்கு ஜனாதிபதி அழைத்திருந்தார் என்பது உண்மை. எனினும், இறுதியில் அந்தப் பேச்சை நடத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலர்ந்தால் தமிழர்களுக்கான தீர்வை நாம் வழங்கியே தீருவோம். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவார் – என்றார்.