

“யாரையும் எதிர்பார்க்காமல் வாழக்கூடிய வாழ்வாதாரத்தை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன்.” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று (19.06.2021)மன்னார், இலுப்பைக் கடவைக்கு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் கிராம மக்களின் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கடலட்டை பண்ணை தொடர்பாக, தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதாவது, மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவதனை விரும்பாத சில சுயலாப சக்திகளே கடலட்டை பண்ணை தொடர்பாக, தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முரண்பாடுகள் தீர்த்து, யாரையும் எதிர்பார்க்காமல் வாழக்கூடிய வாழ்வாதாரத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சீனக்குடா காவற்துறை பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வாளால் வெட்டியவரின் 6 மாத குழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று(19) பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெட்டிய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சீனக்குடா காவற்துறையினர் துண்டிக்கப்பட்ட கையை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
எனினும், 43 வயதுடைய குறித்த பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் துண்டிக்கப்பட்ட கையை பொருத்த முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆறு மாத குழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா காவற்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த வருடம் முதல் உலகையே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸினுடைய வீரியம் குறைந்தபாடில்லை. தினமும் புதிய பரிமாணத்தில் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகின்றது கொரோனா. இதன் ஒரு வகையான டெல்டா இந்தியாவில் கண்டறியப்பட்டிருந்ததது. அதனுடைய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்லாது பல நாடுகளில் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
வேகமாக பரவி வரும் இந்திய டெல்டா கொவிட் வகை முதலில் பதிவான தெமட்டகொட பகுதியில் மேலும் 15 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவர்கள் எந்த வகையான கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய தொடர்புடைய மாதிரிகள் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தெமட்டகொட அராமயா சாலை பகுதியில் மொத்தம் 129 பேர் பி.சி.ஆர் சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 15 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஆபத்தை கருத்தில் கொண்டு, தெமட்டகொட அராமய சாலை பகுதியில் உள்ள மக்களுக்கான கொவிட் தடுப்பூசி பிரசாரம் தொடங்கப்பட்டது.
இலங்கையில் இதுவரை காலமும் இரசாயனப்பசளை அதிகம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது தடை செய்யப்பட்டு வேகமாக சேதனப்பசளை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இது இரு வேறு விதமான கருத்துக்களை இலங்கையில் தோற்றுவித்துள்ளது.
நீண்ட காலமாக இரசாயனப்பவளையையே பயன்படுத்தி விளைச்சல் பெற்று வந்த விவசாயிகள் இந்த சேதன பசளை பயன்பாடு மற்றும் அறிமுகம் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்புக்களில் எதிர்க்கட்சியினுடைய குரல்களும் உள்ளடக்கம்.
நேற்று கூட கிண்ணியாவில் இரசாயனப்பசளையை மீள வழங்கக்கோரி விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ “ கடினமாக இருந்தாலும் பரவாயில்லை – நாங்களு் கஷ்டப்படாலும் பரவாயில்லை. எதிர்கால சந்ததிக்காக சேதனப்பசளையை பயன்படுத்துங்கள்.” என எல்லா கூட்டங்களிலும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றார்.
இந்நிலையில் ” ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகியுள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது முக்கியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேதனப் பசளை மற்றும் சேதனப் பயிர்ச்செய்கை தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மத்தியில் இது தொடர்பில் தவறான கருத்து ஏற்படுத்தப்பட்டுள்ளமையால், அவர்களுக்கு விழிப்பூட்டுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று அவசியமாகும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.