21

21

சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோபனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் !

சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன், பிரதமர் ஸ்டீபன் லோபனுக்கு (வயது 63) எதிராக இன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை  கொண்டு வந்தது.
பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில், 181 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய அரசு அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும்.
சுவீடன் நாட்டில் எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் பிரதமர் ஸ்டீபன் லோபன் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றம் முடங்கியுள்ள நிலையில், லோபன் பதவி விலகினால், யார் தலைமையில் புதிய அரசாங்கத்தை சபாநாயகர் அமைப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தனது கட்சி ஸ்டீபன் லோபனுக்கு எதிராக வாக்களித்திருந்தாலும், ஒருபோதும் வலதுசாரி தேசியவாத அரசாங்கம் அமைவதற்கு ஆதரவு அளிக்காது என இடதுசாரி கட்சி தலைவர் நூசி தாட்கோஸ்டர் தெரிவித்தார்.
சுவீடன் தற்போது புதிய அரசாங்கம், அல்லது இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்றாலும் அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வரை மட்டுமே பொறுப்பில் இருக்கும்.

174 கிலோ கஞ்சாவுடன் யாழ் மற்றும் முல்லையை சேர்ந்த இருவர் கைது !

தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட பயணத்தடையும் – மதுபானக்கடைகளிலும் – அடகு நிலையங்களிலும் அடுத்தவன் பற்றி கொஞ்சமும் சிந்திக்காது குவிந்து நின்ற சுயநல மக்கள் கூட்டமும் !

இலங்கையில் கொரோனா பரவல் கொஞ்சம் கூட கட்டுப்படுத்தப்படாத நிலையில் இன்றைய தினம் நாடு திறக்கப்பட்டது. எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக புற்றீசல்களை போல கொரோனா – சமூக இடைவெளி எதைப்பற்றியும் சிந்திக்காது பொருட்களை கொள்வனவு செய்வதில் அதீத ஆர்வம் காட்டியு்ளனர்.

Gallery

இதற்கிடையில் அரசின் நிலைப்பாடு தொடர்பாகவும் – அரசு கொரோனா விடயத்தில் தோற்றுவிட்டதாகவும் வெட்டிப்பேச்சு பேசிய நூற்றுக்கணக்கானோருடைய சமூகப்பொறுப்பு தெளிவாக இன்றைய தினம் தெரிந்தது. முக்கியமாக மதுபானக்கடைகளிலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. வடக்கின் முக்கியமான நகரங்களில் அளவுக்கதிகமான மதுபானக்கொள்வனவில் ஈடுபட்டோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டும் – எச்சரிக்கப்பட்டுமுள்ளனர்.  இதெல்லாம் பெருமையாக சொல்லக்கூடிய விடயங்கள் அல்ல. வெட்கித்தலை குனிய வேண்டிய விடயங்கள்.  ஆனால் நமது இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த தகவல்களை பதிவிட்டு நகைப்பாக கடந்து செல்வது வேதனை தருகின்றது.

இது ஒருபக்கமிருக்க நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,633 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பயணத்தடை முழுமையாக அமுலில் இருந்த காலமான  ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மொத்தம் 53 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முக்கிய குறிப்பு நாட்டை திறந்து விட்டிருந்த காலங்களில் கூட நாளொன்றுக்கு சராசரியாக 1000 வரையான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அரசாங்கத்திடம் வேறு வழியில்லை. திறைசேரி வெறுமையாகிவிட்டது. நாடு முழுக்க கடனில் தான் ஓடுகின்றது என அரசு தரப்பு அறிவித்தாகி விட்டது. இது நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டிய காலம்.  இன்றைய தினமும் சரி – பயணக்கட்டுப்பாட்டு காலங்களிலும் சரி கடைகளில் அலை மோதிய கூட்டம் பணம் உள்ள கூட்டம். அவர்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பண பலமும் உள்ளது – பொருளாதார வலிமையும் உள்ளது.

ஆனால் நாட்கூலிகளை நினைந்து பாருங்கள். திறந்திருந்தால் தான் அவர்கள் தங்களுக்காக ஏதாவது செய்ய முடியும். அதற்கு நாடு முழுமையாக இயல்பான நிலைக்கு திரும்புவது அவசியம். சற்று நாம் பொறுப்புடன் செயற்பட பழக்கப்படுத்திக்கொள்வோம். இருப்பவர்கள் தான் மேலும் மேலும் பொருடகளை வாங்கிக்குவித்து கொரோனாவை பரப்புகின்றோம். கொரோனா  தொகை அதிகரிக்க அதிகரிக்க நாடு முடங்கும். நாடு முடங்கினால் உள்ளவன் வாழ்வான். இல்லாதவன் ..? என்ன செய்வான்..! சற்று சமூக சிந்தனையுடன் செயலாற்றுங்கள்.

இந்த பயணத்தடை காலங்களில் கூட வெளியே சுற்றித்திரிந்தவர்கள்  இருக்கக்கூடிய வசதிபடைத்தவர்கள் தான். இல்லாதவன் தான் வீட்டிலே படுத்துக்கிடந்து என்ன செய்வதென தெரியாது இல்லாமையை நினைந்து நொந்துகொணடிருந்தவன். அவன் வெளியே வந்தால் கொரோனா பயம் ஒருபக்கம் –  பொலிஸார் – இராணுவத்தினர் பயம் இன்னொரு பக்கம்.  பாவம் வேறு வழி தெரியாது அவர்கள் போராட்டத்தில் இறங்கி வாய்விட்டு உணவு கேட்கும் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டோம்.  புரிந்து கொள்ளுங்கள்.

 

குறித்து வைத்துக்கொள்ளுங்கள் கொரோனாவால் சாவது எல்லாம் ஒரு விடயமேயில்லை –  நம் கூடவே வாழும் ஒருவன் பசியால் இறந்தான் என்றால் அது போல வேதனையான விடயம் வேறெதுவும் இல்லை. அந்தப்பாவத்துக்கு நாம் ஒவ்வொருவருமே பொறுப்பேற்க வேண்டும்.

உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா ..? எதிர்ப்பதா..? நாளையே தீர்மானம் !

எரிபொருள் விலையேற்றத்தை மையமாக வைத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக நாளை இடம்பெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே முடிவு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எரிபொருள்களின் விலைகளை திடீரென அதிகரித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான அரசின் தீர்மானத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அரசின் இந்த முடிவு நாட்டு மக்களை மேலும் கஷ்டப்படுத்தும் செயலாகும்.

இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வருகின்றது.

இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமானால் அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்குமா? இல்லையா? என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவே கூடித் தீர்மானிக்கும்.

இந்தப் பிரேரணையை ஆதரிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை எம்மிடம் கேட்டுக்கொண்டது. அவர்களுக்கும் நாம் மேற்படி பதிலையே கூறினோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(22) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்குள் செல்ல முற்பட்டவர் துப்பாக்கிச்சூட்டில் பலி !

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாக  ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

Gallery

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோதே மெய்ப் பாதுகாவலரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்ப் பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, படுகாயமடைந்தவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG 20210621 191033

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.ஜி.என்.விஜயசேன உட்பட பொலிஸார் குறித்த விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.