23

23

மூன்று முக்கிய உலகக் கிண்ண போட்டிகளை இலங்கையில் நடாத்த கிரிக்கெட் செயற்குழு ஆர்வம் !

2024 – 2031 வரை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் நடத்தும் மூன்று முக்கிய உலகக் கிண்ண போட்டிகளை இலங்கை நடத்த ஏலம் கோருவதற்கு ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

மே 20 இலங்கை கிரிக்கெட் தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா தலைமையிலான செயற்குழுவின் புதிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 18 ஆம் திகதி நடைபெற்ற செயற்குழுவின் அமர்வின் போது, இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சி குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தி மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

19 வயதுக்குட்பட்ட இளைஞர் அணிக்கான பயிற்சி முகாம், ‘ஏ’ மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு நிதியளித்தல் போன்ற முடிவுகள் எட்டப்பட்டன.

அதேசமயம் 2024 – 2031 வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணம், ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை நடத்த ஏலம் எடுக்க இலங்கை கிரிக்கெட் எதிர்பார்த்துள்ளது.

சில நேரங்களில் ஏலம் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுடன் கூட்டு முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன்.” – ஈரானின் புதிய அதிபர் இப்ராஹிம் ரைசி உறுதி !

ஈரான் அதிபா் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றவர்  தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி.  ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பதவி விலகவுள்ளள்ள நிலையில் 60 வயதான இப்ராஹிம் ரைசி இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றியை தொடர்ந்து டெஹ்ரானில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது,
“இல்லை. ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன். ஈரானுக்கு எதிரான அனைத்து அடக்குமுறை தடைகளையும் நீக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மூடப்படுகின்றது ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி !

ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி, அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக சனிக்கிழமையன்று மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் ஆப்பிள் டெய்லி அலுவலகம் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட சொத்துக்கள் 18 மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் பின்னர் முடக்கப்பட்டன. அதன் தலைமை ஆசிரியரையும் ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

செய்தித்தாள் நீண்ட காலமாக சீனாவின் பக்கத்தில் ஒரு எதிரியாக இருந்து வருகிறது, இது ஹொங்கொங்கில் ஜனநாயக சார்பு இயக்கத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறது. ஆப்பிள் டெய்லியின் வெளியீட்டாளரும் ஹொங்கொங் ஊடக அதிபருமான ஜிம்மி லாய் கடந்த ஆண்டு இதே சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் ஆப்பிள் டெய்லி முன்னதாக வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் வெளியீட்டை மூடலாமா வேண்டாமா என்று முடிவினை அறிவிப்பதாக கூறியது.

எனினும் அதற்கு முன்னதாகவே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“பாடசாலைகளை மீள திறந்தால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து.” – ஜீ.எல் பீரிஸ்

தற்போதைய கொவிட் தொற்று அச்சுறுத்தலில் பாடசாலைகளை மீள திறந்தால் மாணவர்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படுமென கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  உரையாற்றியபோதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கொவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்ற பாடசாலைகள் தற்போதைய நிலைமையில் திறக்க முடியாது. மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதே நேரம் கல்வியமைச்சின் செயலாளர் அண்மையில் பாடசாலை திறப்பு தொடர்பாக பேசிய போது பாடசாலை ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்பே பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கவணனம் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ஆம், நான் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாய்தான்.” -கூட்டமைப்பு போல இருப்பதற்கு இது பரவாயில்லை என சுரேன் ராகவன் பெருமிதம் !

அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று  நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.

அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த சுரேன் ராகவன் எந்த நடவடிக்ககைகளையும் எடுக்கவில்லையென சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, கைதிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய சுமந்திரன் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சுரேன் ராகவன் கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதையடுத்து, சுமந்திரன் ஒரு கட்டத்தில் சுரேன் ராகவனை ஒரு நாய் போல குரைப்பதை நிறுத்துமாறுக் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் ,

அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என  தெரிவித்துள்ளார்.

ஆம், நான் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாய்தான்.

பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையினராக இருப்பதை விட எனது அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

“சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு 50000 தண்டப்பணம் விதித்தேனும் மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவேன்.” – சுகாதார அமைச்சர் !

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்காக நடைமுறையில் விதிக்கப்படும், 5,000 ரூபா அபராதத் தொகையை, வர்த்தமானி அறிவித்தல் மூலமாக 50, 000 ரூபாவாக அதிகரித்தாவது கொவிட் ஒழிப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

250 மில்லியன் ரூபா செலவில் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூட திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் தொற்றை ஒழித்து, நாட்டை பாதுகாப்பதற்கான இயலுமை எமக்கு உள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளை கட்டுப்படுத்த இயலுமானதாக இருந்தால், மூன்றாவது அலையையும் கட்டுப்படுத்துவது கடினமான காரியம் அல்லவென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த இலக்கை அடைவதற்காகவே அனைத்துவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துவதற்கான தேவைப்பாட்டையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பொசன் தினத்தையொட்டி முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் விடுதலை !

பொசன் போயா தினத்தை முன்னிட்டு சிறைகளில் நீண்ட காலம் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அறிய முடிகின்றது.

பல ஆண்டுகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பொசன் பூரணை தினமான நாளைய தினம் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டமைக்காக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 17 பேருக்கு  பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இதில் 7 பேர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எனவும், எஞ்சியுள்ள 10 பேரும் அரசியல் கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி !

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனை ஔடதங்கள் தயாரிப்பு விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் மற்றும் பைசர் தடுப்பூசிகளை கலவையாக வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் மேலும் 78 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படும் என்றும் அவை அடுத்த மூன்று வாரத்திற்குள் இலங்கையை வந்தடையும் என்றும் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மற்றும் பைசர் அல்லது மடர்னா தடுப்பூசிகளின் கலவை பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்களால் தரவு வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான பரிந்துரைகள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் நிபுணர்களின் குழுவின் கிடைக்கும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ஏன் திட்டமிட்டு தமிழ் மொழியை புறக்கணிக்கிறீர்கள்” – நாடாளுமன்றில் சுமந்திரன் வேதனை – மன்னிப்புக் கேட்ட சபாநாயகர் மஹிந்த !

அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மொழியில் வழங்கப்படாதமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் குற்றம் சுமத்தியதுடன், தமிழ் மொழியை அரச மொழியாக அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொண்டும் இன்று வரை எமது மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் ஆவேசப்பட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சுமந்திரனின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தவறுக்கு மன்னிப்புக்கேட்பதாக அறிவித்ததுடன் உடனடியாக இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை சபையில் முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களின் மொழி தெரிவுகள் குறித்து இதற்கு முன்னரும் நாம் இணக்கம் கண்டுள்ளோம், குறிப்பாக அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட அறிக்கையின் மொழி தெரிவுகள் தொடர்பில் இதற்கு முன்னர் கேள்வி எழுப்பப்பட்ட வேளையில், நான் இந்த அறிக்கையின் பிரதியை ஆங்கில மொழியில் பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தேன். அதற்கமைய ஒரு சில பிரதிகள் எனக்கு ஆங்கில மொழியில் கிடைத்தாலும் இறுதியாக சபைப்படுதப்பட்டுள்ள அறிக்கையானது சிங்கள மொழியில் மாத்திரமே உள்ளது. இதில் 2043 பக்கங்கள் உள்ளன. மூன்று பாகங்களாக இவை பிரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான இறுவெட்டும் கையளிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் அறிக்கையில் இறுதிப்படுத்திய பின்னர் தமிழ் மொழியிலும் சில பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற அந்த அறிக்கையையும், சிங்கள மொழி மூலமாக அறிக்கையையும் ஒப்பிட்டுப்பார்த்தேன், அதில் சிங்கள மொழியில் உள்ள அறிக்கையின் சில பகுதிகள் மட்டுமே தமிழில் உள்ளது. உதாரணமாக இந்த அறிக்கையின் இரண்டாம் பாகம் தமிழ் மொழியில் இல்லை. அதேபோல் 167ஆம் பக்கம் தொடக்கம் 554ஆம் பக்கம் வரையிலும், 572ஆம் பக்கம் தொடக்கம் 608 ஆம் பக்கம் வரையிலும், 667 ஆம் பக்கம் தொடக்கம் 1556 ஆம் பக்கம் வரையிலும், 1565 ஆம் பக்கம் தொடக்கம் 2043 ஆம் பக்கம் வரையிலும் அறிக்கை தமிழில் இல்லை. தமிழ் எம்.பிக்களுக்கு மட்டும் ஏன் இவ்வாறான சூழ்ச்சி செய்துள்ளனர். இதற்கு யார் காரணம்?

பாராளுமன்ற நிருவாகம் இது குறித்து தெரிந்திருக்கவில்லை, அவர்கள் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை என என்னிடம் தெரிவித்தனர். அதேபோல் இந்த அறிக்கையின் தமிழ் மொழியாக்கம் ஜனாதிபதி செயலணியின் மூலமாக செய்வதாகவும் அவர்கள் கூறினர். ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில் எனது சிறப்புரிமை மற்றும் எனது மொழி உரிமையை மீறும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

1987 ஆம் ஆண்டி அரசியல் அமைப்பு திருத்தப்பட்ட பின்னர் தமிழும் அரச மொழி என அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின்னர் 35 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் எமது மொழி புறக்கணிக்கப்படுகின்றது. சம உரிமை மறுக்கப்படுகின்றது. ஆகவே தமிழ் மொழியையும் அரச மொழியாக ஏற்றுக்கொள்ளுங்கள். சிங்களவர்களின் பிரச்சினைகள் தீர்ந்த பின்னர் ஏனைய பிரச்சினைகள் அனைத்தையும் புறக்கணித்து வருகின்றீர்கள். ஆகவே இன்றுவரை எமக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழியும் அரச மொழி என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் என சபையில் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன :- அவ்வாறு ஏதும் தவறு நடந்திருந்தால் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். எனது வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் இந்த பிரச்சினை குறித்து நான் கவனம் செலுத்தி தீர்வு பெற்றுக்கொடுக்கின்றேன் என்றார்.

நாடாளுமன்றில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள தமிழ் அரசியல்கைதிகள் விவகாரம் – சுரேன் ராகவனை ஒரு நாய் போல குரைப்பதை நிறுத்துமாறு கூறிய சுமந்திரன் !

சரி – பிழை , அரசியலாளர்களுடைய விமர்சனங்கள் இவற்றுக்கு அப்பால் நாடாளுமன்றில் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பான விடயங்கள் பேசு பொருளாகியுள்ளமை வரவேற்கத்தக்கது. நாமல்ராஜபக்ஷ தொடக்கிவைத்த இந்த விவாதம் பெரியளவில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் , அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.

அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த சுரேன் ராகவன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, கைதிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய சுமந்திரன் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சுரேன் ராகவன் கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதையடுத்து, சுமந்திரன் ஒரு கட்டத்தில் சுரேன் ராகவனை ஒரு நாய் போல குரைப்பதை நிறுத்துமாறுக் கூறினார்.

அதேநேரம், தமிழ் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசியல் நாடகம் நடத்த வேண்டாம் என்றும் சுமந்திரன் அரசாங்கத்திடம் கூறினார்.

அத்தோடு கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

2015 மற்றும் 2019 க்கு இடையில் 100 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முடிந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அங்கு பேசிய எம்.ஏ. சுமந்திரன் ,

அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யுமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயத்தில் அரசியல் நாடகத்தை நடத்தாமல் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதாக பலமுறை உறுதியளித்திருந்தாலும், அரசியல் கைதிகளை தடுத்து வைக்க இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையில் தீர்வு காண தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருந்தால் முதலில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல் செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.