27

27

“ பெருந்தோட்ட கம்பனிகளின் சர்வாதிகாரத்தை அரசும் அவர்களுடன் உள்ள மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்கின்றார்களா? – இராதாகிருஸ்ணன் கேள்வி !

“ பெருந்தோட்ட கம்பனிகளின் சர்வாதிகாரத்தை அரசும் அவர்களுடன் உள்ள மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்கின்றார்களா? என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்று பெருந்தோட்டங்களில் ஒவ்வொரு நாளும் பெருந்தோட்ட கம்பனிகளினது நிர்வாகம் முகாமைத்துவமும் சர்வாதிகார போக்குடனேயே நடந்து கொள்கின்றார்கள். இது ஒரு நல்ல சூழ்நிலை அல்ல. எந்த நேரத்திலும் தொழிலாளர்கள் தங்களுடைய பொறுமையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே இதனை உடனடியாக பெருந்தோட்ட கம்பனிகள் முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று தினந்தோறும் பல சிக்கல்களை நிர்வாகத்தின் மூலமாக சந்தித்து வருகின்றார்கள். இதனை அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் கண்டு கொள்வதில்லை. நாங்கள் எதிர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் தெளிவாக விடயங்களை தெரிவித்து வருகின்றோம்.

ஆனால் ஆளும் கட்சியுடன் இணைந்திருக்கின்ற அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயங்கள் தொடர்பாக எங்கேயும் குரல் கொடுப்பதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு அலுத்தம் கொடுப்பதில்லை. அப்படியானால் அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் செய்கின்ற சர்வாதிகாரத்தை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா? என்ற கேள்வி எனக்கு எழுகின்றது.

20வது திருத்த சட்டத்திற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளித்த பொழுது அதற்கு காரணமாக கூறியது நாங்கள் மக்கள் நலன் கருதியே வாக்களித்தோம் என்று. ஆனால் இன்று அந்த மக்கள் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி தனது உரையில் பெருந்தோட்டங்கள் மூலமாக அதிக அந்நிய செலவாணி கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றார். ஆனால் அந்த மக்கள் இன்று எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை அவரால் பெற்றுத் தர முடியவில்லை. ஆகக் குறைந்ததது இந்த கொரோனா காலத்தில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்ற எங்களுடைய தொழிலாளர்களுக்கு ஒரு நன்றியை கூட அவரால் கூற முடியவில்லை.

இதனை நினைத்து நாங்கள் வேதனைப்படுகின்றோம். எனவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றவர்கள் இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்திற்கு அலுத்தம் கொடுக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எங்களுடன் இணைந்து தொழிலாளர்களுக்காக போராட முன் வர வேண்டும். மறந்து விடாதீர்கள். இந்த பதவியையும் அந்தஸ்தையும் நமக்கு கொடுத்தவர்கள் இந்த பெருந்தோட்ட மக்களே தவிர அரசாங்கம் அல்ல. என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

“இரட்டை குடியுரிமை தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.” – பேராசிரியர் திஸ்ஸ விதாரண

“இரட்டை குடியுரிமையினை உடையவர்கள் அரச நிர்வாகத்தில் உயர் பதவி வகிப்பதற்கும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கும் புதிய அரசியலமைப்பின் ஊடாக தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்.” என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பஷில்ராஜபக்ஷவை பாராளுமன்றம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரச தரப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் பஷில்ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பது மீள இரட்டை பிராஜாவுரிமை தொடர்பான பிரச்சினைகளை இலங்கை அரசியலில் கிளப்பிவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இரட்டை குடியுரிமையினை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் தடை விதிக்கப்பட்டது. இதனை சிறந்த ஒரு செயற்பாடு என வரவேற்றோம். இத்தடை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்ததில் நீக்கப்பட்டது.

இரட்டை குடியுரிமையினை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன், அரச உயர் பதவிகளில் தலைமைத்துவம பதவி வகிக்கலாம் என அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டது. இதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பிரதான பங்காளி கட்சியினர் கடுமையான எதிர்ப்பை ஒன்றிணைந்து வெளிப்படுத்தினோம்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை தற்காலிக ஏற்பாடாக மாத்திரம் கருத வேண்டும். இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு 20 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட சலுகை புதிய அரசியமைப்பின் ஊடாக நீக்கப்படும். அத்துடன் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் முரண்பாடற்ற யோசனை உள்வாங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கினார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையிலான முரண்பாடுகள் நாளாந்தம் தீவிரமடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை. பல விடயங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தியுள்ளன. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு சிரேஷ்ட தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தும் பயனற்றதாக உள்ளது என்றார்.

இந்திய ஜனாதிபதியின் பயணத்துக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து – உரிய நேரத்துக்கு வைத்தியசாலை செல்ல முடியாது உயிரிழந்த பெண் !

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,   உத்தர பிரதேச மாவட்டத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள தான் பிறந்த பகுதியான  கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். கான்பூருக்கு குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்த ஜனாதிபதி, அங்கிருந்து காரில் கிராமத்துக்கு சென்றார். அவரது கார் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வந்தனா மிஸ்ரா (வயது 50) என்ற பெண் உயிரிழந்தார்.  சரியான நேரத்துக்கு  மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம்’ என, வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய அதிர்ச்சியை வெளியிட்டுள்ளதுடன்  வந்தனாவின் குடும்பத்துக்கு, தன் ஆழ்ந்த இரங்கலை நேரில் சென்று தெரிவிக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு, கான்பூர் போலீசார் மன்னிப்பு கோரியுள்ளனர்.

யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை – நாமல் ராஜபக்ஷ திறந்து வைப்பு !

யாழ். வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் 23 கோடி பெறுமதியில் தொழிற்சாலையை திறந்து வைத்த நாமல்! -  ஐபிசி தமிழ்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட இந்த தொழிற்சாலை மூலம் அருகிலுள்ள பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் 9 மாகாணத்துக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்துக்கான திட்டம் கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை இன்று சந்தித்தனர்.

வடமராட்சியின் முள்ளி பகுதியில் இடம்பெற்ற சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்தபோதே நாமல் ராஜபக்ஷவை ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, ஆனந்த சுதாகரின் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதேவேளை அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமலை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

வட – கிழக்கு மக்களையும் மண்ணையும் பாதுகாக்க செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு !

“இராணுவ அடக்குமுறையினூடாக எமது தேசத்தின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டினை அரசு மேற்கொள்கினறது.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ரெலோவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவுள்ள இணயவழி கலந்துரையாடல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வட-கிழக்கில் இலங்கை அரசாங்கம் ஒரு மோசமான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. மாகாண சபையின் அதிகாரங்களை பறித்து, நிலங்களை அபகரித்து பூர்வீகத்தை சிதைக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. அது எமது மக்களிடத்திலும், மண்ணிலும் ஒரு அபாயகரமான நிலைமையை உண்டுபண்ணி கொண்டிருக்கின்றது. இதற்கு நாம் தடைபோடவில்லை என்றால் நிச்சயமாக இராணுவ அடக்குமுறையினூடாக எமது தேசத்தின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டினை அவர்கள் செய்து முடிப்பார்கள்.

அதனை முறியடிக்க வேண்டும் என்றால் எங்களுக்குள் ஒரு ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமையினை வலியுறுத்தி சில கட்சிகளிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தோம். குறிப்பாக மாவை சேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் அதற்கு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் ஐயா ஆகியோர் தமது ஆர்வத்தினை தெரிவித்திருந்தாலும் கூட வேறு சிலரையும் உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்திருக்கின்றார்கள். கஜேந்திரகுமார் தனது பதிலை அறிவிக்கவில்லை. ஆயினும் இந்த அணியில் அவர் தொடர்ந்து செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.

யாரை அழைப்பது என்றவிடயம் தொடர்பாக நாம் அனுப்பிய கடிதத்தில் சில தவறுகள் இருப்பதை குறிப்பிட வேண்டும். எந்தக்கட்சியினை சார்ந்தவர்கள் என்ற விடயத்தினை நாம் பார்க்கவில்லை. விடுபட்டவர்கள் அழைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம். எமது இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாகவேண்டும். அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றது.

இந்த விடயம் பிசுபிசுத்துப்போயுள்ளதாக சில ஊடகங்கள் தமது கருத்துக்களை சொல்கின்றது. ஆரம்பப்புள்ளியினையே நாம் வைத்திருக்கின்றோம். அதில் தவறுகள் இருக்கும். அவற்றை திருத்திக்கொள்வோம். அதனை பெரிதுபடுத்தாது இந்த ஒற்றுமைக்கான வாய்ப்பினை தரவேண்டும். கூட்டமைப்புத்தான் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இதனை நாம் செய்யவில்லை. அத்துடன் இந்த ஒற்றுமையானது புலம்பெயர் உறவுகளோடும் தமிழ்நாட்டு மக்களோடும் பேணக்கூடியவகையில் இருக்கவேண்டும்.

அந்தவகையில் யாரை அழைப்பது யாரை விடுவது என்ற ஆலோசனையை பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்றையே இன்று ஏற்பாடு செய்துள்ளோம். எனவே யாரும் விடுபடமாட்டார்கள். விடுபட்டவர்களையும் அழைத்துக்கொண்டு மிகவிரைவிலே முழுமையான ஒரு கூட்டத்தினை நடாத்துவதற்கான முயற்சியினை மேற்கொள்வோம்.

இது ஒரு கட்டமைப்பாக வருவதே சாலச்சிறந்ததாக இருக்கும். அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. நாம் சோர்ந்து போகமாட்டோம், அதற்கு என்னவிலை கொடுக்கவேண்டுமோ. அதனை செயற்படுத்த தயாராக இருக்கிறோம், எனக்குறிப்பிட்டுள்ளார்.

அரச தரப்புடன் இணைந்து செயற்படும் வடக்கினை சேர்ந்த கட்சிகளையும் இந்த கட்டமைப்பில் உள்வாங்கி செயற்படுவீர்களா என்று ஊடகவியலாளர் கேட்டதற்கு..
அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையே நாம் மேற்கொள்ள இருக்கிறோம். ஆகவே ஒருவலுவான ஒற்றுமையை ஏற்படுத்தி அதன்மூலமாக அவர்களும் வரவேண்டும் என அனைவரும் கேட்டுக்கொண்டால் அதனை நாங்கள் பரிசீலிக்கத்தயார் என்றார்.

“சமூக ஊடகங்களில் உடனடியாக நான் கடத்தப்பட்ட தகவல் வெளியாகாவிட்டால் என்னை கொலை செய்திருப்பார்கள்.”- அசேல சம்பத்

குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் பொதுமுகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் , ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையின் விடுதலையின் பின்பு ஊடகங்களிடம் பேசிய அவர்,

வாழ்க்கையில் முதல்தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் ,நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன். வீட்டிலிருந்தவேளை எனது வாயை பொத்தி இழுத்துச் சென்றார்கள் – எனது மூத்த மகன் அதனை பார்த்தார். இது தொடர்பான சி.சி.டிவி காட்சிகள் எனது அயல்வீட்டில் உள்ளன.

நான் வீட்டியே இருந்தேன்,நான் இந்த நாட்டின் பிரஜை. அதிகாரிகள் சீருடையின் உரிய காரணம் இன்றி என்னை இழுத்துச் சென்றனர். பத்துபேருக்கு மேல் வந்திருந்தனர், எனது கையில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,எனது விரலில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,

இந்த சாரத்துடன் தான் என்னை கொழும்பிற்கு அழைத்துச்சென்றார்கள். ரிசாட் பதியுதீன் எனக்கு இந்த ரீசேர்ட்டை தந்தார், பொடி லசி எனக்கு குளிப்பதற்கான சவர்க்காரத்தை தந்தார்,

சமூக ஊடகங்களில் உடனடியாக நான் கடத்தப்பட்ட தகவல் வெளியாகாவிட்டால் என்னை கொலை செய்திருப்பார்கள்.

இதேவேளை அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.

facebook ஊடாக கேவலப்படுத்திய நண்பர்களை சிலுவையில் வைத்து ஆணி அடித்து சித்திரவதை செய்த நபர் !

முகப்புத்தகம் ஊடாக நபர் ஒருவரை கேவலத்திற்கு உட்படுத்திய இருவரை கடத்திச் சென்று கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்த சந்தேகநபர், அவர்களை அம்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்று சிலுவைப்போன்ற பலகைகளில் இருவரையும் வைத்து ஆணி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அம்பிட்டிய பிரதேசத்தில் ஆலயம் ஒன்றை நடத்திச் செல்லும் 30 வயதுடைய துஷ்மந்த என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் நண்பர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 44 மற்றும் 38 வயதான இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களை தேடி பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கேரளாவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – தடுப்பதற்காக முதல் மந்திரி பினராயி விஜயன் நடவடிக்கை !

இந்தியாவின் கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன.

வரதட்சணை கொடுமை, பெண்களிடம் அத்துமீறல், சிறுமிகளிடம் தகாத முறையில் நடத்தல் போன்ற குற்றங்கள் அதிக அளவு நடந்தது. கேரள காவல்துறையினருக்கு  இது தொடர்பான புகார்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதை அடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சிறப்பு மையம் ஒன்றை கேரள அரசு தொடங்கியுள்ளது.

மேலும் இந்த மையத்தில் வாட்ஸ்-அப் மூலமும், தொலைபேசி மூலமும் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த மையம் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே கேரளா முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தது.

இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் அவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் இக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளது.

இதன்மூலம் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லா விட்டால் இந்தியாவுக்கு செல்லுங்கள் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ காட்டம் !

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே, கொவிட் தடுப்பூசி போட மறுப்பவர்களை கைது செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அந்நாட்டு  ‘தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கொவிட் தொற்று மோசமாகப் பரவி வருகிறது. கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் பலரும் தடுப்பூசி போட மறுக்கின்றனர். தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்ய நேரிடும். கைது செய்து, தடுப்பூசி போடுவோம். ஏற்கெனவே பெருந்தொற்று பேரிடரால் அவதியுற்றிருக்கும் எங்களுக்கு, தடுப்பூசி போட மாட்டேன் எனக் கூறுபவர்கள் மேலும் மேலும் சுமை கொடுக்கின்றீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நான் இவ்வளவு எடுத்துரைத்த பிறகும், உங்களுக்கு தடுப்பூசி வேண்டாமென்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். இந்தியாவுக்குச் செல்லுங்கள், அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் செல்லுங்கள், அமெரிக்காவுக்குக் கூட செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பூநகரி கௌதாரிமுனை கடற்பகுதியில் சீனர்களின் அதிகரிக்கும் செயற்பாடுகள் – மீட்டுத்தாருங்கள் என மக்கள் கோரிக்கை !

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை கடலை, சீனர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

யாழ்ப்பாணத்தவர்களின் பெயரில் அனுமதி வழங்கப்பட்டுபுதிதாக ஆரம்பிக்கப்பட்ட கடலட்டை பண்ணை ஒன்றில் சீனர்கள் பலர் நிரந்தரமாக தங்கி நின்று பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இந்த கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ள போதிலும் பூநகரி பிரதேச செலாளரினதோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினதோ அனுமதி எதுவும் பெற்ப்படவில்லை.

இந்தக் கடலட்டை பண்ணை தொடர்பாக, பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனிடம் வினவிய போது, கடலட்டை பண்ணைக்கு, தம்மிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

எனினும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதி யாழ்ப்பாணத்தவர்கள் மூவரின் பெயரில் வழங்கப்பட்டுள்ள போதிலும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து சீன நாட்டவரே அதிகம் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.