28

28

“225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தியவன்னா ஓயாவில் தள்ளிவிட வேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் உள்ளது. – ரணில் விக்கிமசிங்ஹ

“225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தியவன்னா ஓயாவில் தள்ளிவிட வேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் உள்ளது.”  என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியமைக்காக நீக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சம்பிரதாயமாக முன்னெடுக்கப்படும் அரசியலை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். மதம், இனம் ஆகிவற்றை பிரதானமாகக் கொண்டு அரசியல் ஈடுபடுகின்றமை, தீர்வை வழங்காமல் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவது உள்ளிட்ட செயற்பாடுகள் பிரயோசனமற்றவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தியவன்னா ஓயாவில் தள்ளிவிட வேண்டும் என்ற எண்ணமே தற்போது மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அந்த நிலைப்பாடு சாதாரணமானதாகும். காரணம் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கம் மாத்திரமல்ல எந்தவொரு அரசியல் கட்சியும் இதனை செய்யவில்லை. இதனை நினைவில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி அந்த நிலைக்கு தள்ளப்படக் கூடாது.

எந்த சந்தர்ப்பத்திலும் புதிதாக சிந்தித்து புதியவற்றை செய்வது ஐக்கிய தேசிய கட்சி ஆகும். ஐக்கிய தேசிய கட்சிக்கு இதற்கான தீர்வுகளை வழங்க முடியும். தற்போதுள்ள நிலைமையிலிருந்து மீள்வதே இன்று முதன்மை தேவையாகவுள்ளது. அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பினை வழங்க வேண்டும். 2019 ஆம் தேர்தல் பிரசாரத்தின் போதும் இதனையே கூறினோம்.

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம், கல்வி முறைமை மற்றும் பொருளாதாரம் மேம்பாட்டு உள்ளிட்டவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். விவசாயம் , மீன்பிடி உள்ளிட்டவை அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இறந்த காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.

நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியவர்களே அரசியலில் இருக்க வேண்டும். அத்தோடு இளம் முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபாய தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.” – எம்.எ.சுமந்திரன் குற்றச்சாட்டு !

துமிந்தவின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.எ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது,

“அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை அனைவருக்கும் மகிழ்ச்சியானதொரு விடயமாகும். எனினும், ஏனைய அரசியல் கைதிகளை ஏன் அரசாங்கம் விடுதலை செய்யவில்லை என்பது தொடர்பாக எனக்கு தெரியவில்லை.

இதேவேளை மரணத் தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்தமையானது கண்டனத்துக்குரிய விடயமாகும். இந்த செயற்பாடு நீதிமன்ற சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது.

மேலும் நாட்டின் ஜனாதிபதி, தன்னுடைய அதிகாரத்தை இவ்விடயத்தில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.” – ஜனாதிபதி உறுதி !

ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை நோக்கமாகக் கொண்டு, சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்துள்ளார்.

நேற்று (27.06.2021) முற்பகல் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது ,

இந்நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, விவசாயிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. இரசாயனப் பசளை பயன்பாட்டின் காரணமாக, நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிறுநீரக நோய் உள்ளிட்ட பல தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் ஏராளமானவையாகும்.

இரசாயன உர இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிக தொகையை அரசாங்கம் செலவிடுகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் அப் பணத்தை நாட்டின் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் முடியுமாக இருக்குமென்று ஜனாதிபதி, மகா சங்கத்தினரிடம் சுட்டிக் காட்டினார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர், அரச அதிகாரிகள் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பின்நிற்காத காரணத்தினால், குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும் கடந்த அரசாங்க காலத்தில் அதிகாரிகள் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைப்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அரசாங்கத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்காலத்தில் தண்டனை பெற வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரிகள் தயங்குவதாகவும் குறிப்பிட்டார். எனவே நாட்டில் பெருமளவு வேலைத்திட்டங்கள் முடங்கிய நிலையில் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“வீதி வேலைகள் செய்வதற்கான தொழிலாளர்களை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டுமா..? ” – எம்.ஏ. சுமந்திரன் கேள்வி !

“சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவது வெளிச்சமாகியுள்ளது.எமது கடல்வளத்தை வெளிநாட்டவர்கள் சுரண்டும் நிலை உருவாகியுள்ளது” என  தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  என தெரிவித்துள்ளார்.
பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் மக்களின் நிலைப்பாடுகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பூநகரி கௌதாரிமுனை கடல் பரப்பில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடும் சீன நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், மற்றம் எஸ்.சிறிதரன் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.
இதன்போது கடலட்டையில் ஈடுபட்டுவரும் நிறுவனம் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து முடிவு எடுப்பதாக மக்களிற்கு தெரிவித்தனர்.
தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த எம் சுமந்திரன்,
சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விடயத்தை பார்ப்பதற்காக நாங்கள் சென்றிருந்தோம். குறித்த அமைவிடம் மக்களிற்கு தெரியாத மறைவிடமாக அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தினர் அரியாலையில் தமது அலுவலகத்தை வைத்துள்ளனர் என்ற விபரத்தினையும் நாங்கள் சேகரித்துள்ளோம். சட்டவிரோதமான அனுமதி கடல் தொழில் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு ஒருவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால், இந்த நாட்டிலே சீன ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
நேற்றைய தினம் குடத்தனையில் உள்ள எனது வீட்டுக்கு சென்று திரும்புகின்றபோது வீதி அபிவிருத்தி பணிகளில் சீனர்கள் நின்றார்கள். நான் படம் எடுத்து வைத்துள்ளேன். வீதி வேலை செய்வதற்கு தொழிலாளிகள்கூட எங்கள் ஊரில் எடுக்காமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து உபயோகிக்கின்றார்கள்.
இந்த  விடயங்களை நாங்கள் முழுமையாக வெளிப்படுத்தவுள்ளோம். இது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள். எங்கள் மக்களுடைய கடல் வளத்தை சுரண்டுவதும், கடல் அட்டைகள் பிடிப்பது தொடர்பிலும் பல தடவைகள் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது.
வெளி இடங்களிலிருந்து எந்து தொழிலை செய்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தார்கள். இப்பொழுது வெளி இடங்கள் என்று சொல்வதற்கு அப்பால் வெளிநாடுகளிலிருந்து தூர பிரதேசங்களிலிருந்து இதற்கென்று ஆட்கள் வருவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பின்னணிகளை வெகு விரைவிலே நாங்கள் வெளிப்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி – பதவியை இராஜினாமா செய்தார் சுவீடன் பிரதமர் !

சுவீடன் நாட்டில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன், பிரதமர் ஸ்டீபன் லோபன் (வயது 63) மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில், 181 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இராஜினாமா செய்துவிட்டு புதிய அரசு அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், பிரதமர் ஸ்டீபன் லோபன் தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார். பிரதமர் லோபன் பதவி விலகினாலும், புதிய அரசு அமையும் வரை, அவர் தலைமையிலான நிர்வாகம் வழக்கமான பணிகளை மேற்கொள்ளும்.
இதுபற்றி ஸ்டீபன் லோபன் கூறுகையில், கொரோனா தொற்று கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது சிறந்த முடிவல்ல என்று கூறினார். மாற்று தலைமையை முடிவு செய்யாமல், தனக்கு எதிராக வாக்களித்ததாக ஸ்டீபன் லோபன் குற்றம்சாட்டினார்.

பின்லேடனை தியாகி என இம்ரான்கான் வாய் தவறியே சொல்லிவிட்டார் – பாகிஸ்தானின் தகவல் துறை மந்திரி

2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தினர். ஒசாமா, அங்குப் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்தநிலையில் , பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  கடந்த ஆண்டு உரையாற்றிய அந்நாட்டு  பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு வந்த அமெரிக்கர்கள், தியாகி ஒசாமா பின்லேடனைக் கொன்றனர்” என்று  பேசியிருந்தார். இம்ரான்கானின் இந்த பேச்சு சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.
இம்ரான்கான் மேற்கண்டவாறு பேசி ஏறத்தாழ ஒரு ஆண்டு ஆன நிலையில்,  இது குறித்து பாகிஸ்தானின் தகவல் துறை மந்திரி ஃபவாத் சவுத்ரி கூறுகையில்,
“இம்ரான் கான் வாய் தவறியே அவ்வாறு பேசிவிட்டார். ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுகிறது. அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

மார்ச் 09 ஆம் திகதி ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக, மார்ச் மாதம் 16 ஆம் திகதி அசாத் சாலி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் நடு வீதியில் புகைபிடித்துக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் – வெடித்தது புதிய சர்ச்சை !

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் தொடருக்கு சென்ற  இலங்கை அணி வீரர்கள் வீதி ஒன்றில் புகைப்பிடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இலங்கை அணி உப தலைவர் குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நடு வீதியில் புகைபிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளது.

அத்துடன் தனுஸ்க குணதிலகவும் இவர்களுடன் இருப்பது தெரிகிறது. கொரோனா பாதுகாப்புக்கு உட்பட்டு சுற்றுலா சென்றுள்ள வீரர்கள் அதனை மீறி செயற்பட்டுள்ளார்களா எனவும் வீடியோவில் உள்ள விடயம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

“இனத்தின் விடுதலைக்காக போராடி சிறையில் இருக்கும் எம்மவர்களை  மீட்க தொடர் அழுத்தங்களை பிரயோகிப்போம்.” – இரா.சாணக்கியன்

“இனத்தின் விடுதலைக்காக போராடி சிறையில் இருக்கும் எம்மவர்களை  மீட்க தொடர் அழுத்தங்களை பிரயோகிப்போம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் தான் அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை. இது தொடர்பில் அரசுடன் இணைந்திருக்கும் பிரதிநிதிகள் உரிமை கோரும் விதமாக சில முகநூல் பதிவுகள், அறிக்கைகளை விடுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் நாடாளுமன்றம் தொடங்கி ஒருவருடமாகியும் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர்கள் அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தமும் கொடுத்ததாக நாங்கள் அறியவில்லை. நாங்கள் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் கேள்வி எழுப்பும் போதுகூட எங்கள் கருத்துகளைக் குழப்பும் செயற்பாடுகளையே அவர்கள் செய்திருந்தார்கள்.

தற்போது இடம்பெற்ற அரசியற் கைதிகள் சிலரின் விடுதலை வரவேற்ககத்தக்க ஒரு நல்ல விடயம். பதினாறு அரசியற் கைதிகளை விடுவித்தமை வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும் ஏனையவர்ககளையும் விடுவிக்கும் வரையில் எங்கள் அழுத்தங்களைக் குறைக்க மாட்டோம். நாங்கள் தொடர்ச்சியாக எங்கள் அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

மேற்படி விடுவிக்கப்படவர்களின் வழக்குகள் 2015 தொடக்கம் 2020ம் ஆண்டு காலப்பகுதியில் தான் முடிவுக்கு வந்திருக்கின்றது. கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகத் தான் அரசியற் கைதிகளின் விடுதலை தற்போது சாத்தியமாக்கப்பட்டிருக்கின்றது.  அந்த வழக்குகள் முடிந்த காரணத்தினால் தான் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கக் கூடிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், இன்னும் பலர் சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் வேதனையான விடயமே.

அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்படப் போகிறார்கள் என்று சொன்னவுடன் எத்தனையோ தாய்மார், மனைவி, குழந்தைகள், சகோதரங்கள் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக பதினாறு பேர் மாத்திரம் தான் வெளியில் வந்திருக்கின்றார்கள். அது எமது உறவுகள் பலருக்கு ஏமாற்றமாக இருந்தாலும், சிறையில் இருக்கும் ஏனையவர்களையும் விடுதலை செய்வதற்காக நாங்கள் சில சில போராட்டங்களையும், அழுத்தங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

அத்துடன் குறிப்பாக வடக்கு கிழக்கிலே அரசியற் கைதிகளின் விடுதலையுடன் சேர்த்து முகநூல்களில் பதிவுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர்களின் விடுதலைக்காவும் அரசியற் கைதிகளின் விடுதலைக்குச் சமாந்தரமாகக் குரல் கொடுக்க வேண்டும். ஏனெனில் பல தாய்மார்கள் என்னை வந்து சந்திக்கின்ற போதும் கூட விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மகன்மார் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்துகின்றார்கள்.

இந்த விடயங்களையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். பல இளைஞர்களைக் கைது செய்து தற்போது ஒரு வருடமாகவும் போகின்றது. இவ்வாறே விட்டுக் கொண்டிருந்தால் இருபது வருடங்கள் வரைக்கும் இதுபோன்றே சிறையில் வைத்திருப்பார்கள். முகநூலில் பதிவிட்ட குற்றச்சாட்டுக்காக சிறையில் ஒரு வருடம் இருப்பதென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். அந்த வகையில் இவர்களின் விடுதலைக்காவும் தொடர்ச்சியாக நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.

துமிந்த சில்வா அவர்களின் விடுதலையை நியாயப்படுத்தும் முகமாக அவர்களின் கீழ் இயங்கும் சில ஊடகங்கள் செயற்படுகின்றன. அவ்வாறான ஊடகம் தற்போதையை ஜனாதிபதியை ஜனாதிபதியாக்குவதற்கும் தற்போதைய அரசாங்கத்தினை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கும் கடுமையாகப் பாடுபட்ட ஒரு ஊடகம். ஆனால் கடந்த சில மாதங்களாக அரசினை தாக்கி அரசிற்கு எதிரான செய்திகளை வெளியிட்டதை அவதானிக்க முடிந்தது. நாட்டிலே மக்களின் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க ஒரு நடிகையைக் கைது செய்தது தான் பெரிய பிரச்சினை போன்று வெளிப்படுத்தி அரசிற்கு பாரிய அழுத்தங்களைக் கொடுக்கும் முகமாகச் செயற்பட்டது. அந்த நேரத்திலே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது துமிந்த சில்வா அவர்களை விடுதலை செய்வதற்காக ஒரு நாடகமமாக இது இருக்கலாம் என்று. அது போலவே நடந்து விட்டது.

தற்போது அவரை விடுதலை செய்ததற்கு அவர் போதியளவு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதாக அமைச்சர் நாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்ததாகச் சொல்லி உயர்நீதிமன்ற நீதியரசர்களினால் தண்டனை வழங்கிய ஒருவர் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானதாக இருந்தால். போராட்ட காலத்தில் ஏதோவொரு அடிப்படையில் கைது செய்து பல வருடங்களாகச் சிறையில் வாடும் அரசியற் கைதிகள் அனைவரையும் ஏன் இதுவரை விடுதலை செய்யவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கின்றது.

ஏனெனில் இன்று அரசியற் கைதிகள் என்று நாங்கள் கூறும் எவருமே தங்களின் சொந்தத் தேவைக்காகவோ, தனிப்பட்ட நலனுக்காகவோ தாக்கியவர்களோ அல்லது கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தவர்களோ அல்ல. அவர்கள் எதோவொரு விதத்தில் தங்களின் இனத்தின் விடிவுக்காகப் போராடிய குற்றச்சாட்டில் சில சில தவறுகளுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். தன்னுடைய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்னும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலைசெய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவிதித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது.

ஜனாதிபதி அவர்கள் தனது முதலாவது உரையிலே தெரிவித்திருந்தார் ஒரு நாடு ஒரு சட்டம் என்று. ஆனால் இங்கு ஒரு நாடு எத்தனையோ சட்டங்களாகப் போய்க்கொண்டிருப்பதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவத்தை இந்த வருடத்தில் நடந்த சம்வமாக தலைப்பில் வெளியிட்டுள்ள வலம்புரி – மோசமாகிப்போன தமிழ்பத்திரிகைகளின் தரம் – த.ஜெயபாலன்

‘கொரோனாவால் நான் இறந்தால் எனது பிள்ளையயை யார் பார்ப்பது? பெற்ற பிள்ளையயை 15 முறை குத்திக்கொன்ற யாழ்ப்பாணப் பெண்!’ என்ற தலைப்புச் செய்தியுடன் நேற்று வலம்புரி பத்திரிகை வெளியானது. இப்பத்திரிகையின் தலைப்புச் செய்தியின் படி மேற்படி சம்பவம் சிலதினங்களுக்கு முன் லண்டனில் நடைபெற்றிருக்க வேண்டும்.
May be an image of 2 people and text that says "கடழகன lampuri ஞாயிற்றுக்கிழமை (27.06.2021) தொலைபேசி 222 3378, 222 7829 ஒவி 190 கொரோனாவால் நான் இறந்தால் எனது பிள்ளையை யார் பார்ப்பது? பெற்ற பிள்ளையை 15 முறை குத்திக் கொன்ற யாழ்ப்பாணப் பெண் 4ு ழந் 15 (லண்டன்) இறந்தால் குழந்தை கொரோனா வைரஸால் தான் எப்படி வாழும் என்ற டைச் சட்டத்தின் 15 அமைச்சர் நாமல்"
ஆனால் இச்சம்பவம் ஓராண்டுக்கு முன்னதாக யூன் 30 2020 லண்டன் மிச்சத்தில் நடைபெற்றது. இச்சம்பவம் நடைபெற்ற திகதியும் பத்திரிகையின் உட்பக்கத்தில் வந்துள்ளது. ஒரு பத்திரிகையின் தலைப்புச் செய்தியயைக் கூட சரி பார்க்காமல் ஓராண்டு பழைய செய்தியை எழுதிய செய்தியாளர் அதனை சரிபார்க்காத ஒரு பத்திரிகை ஆசிரியர். இந்த நிலையில் தான் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் செய்தித் தரம் உள்ளது.
May be an image of 2 people and text that says "உலகம் செய்தி விண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப் பெண் Updated ஜன 31, 2019 © 13:26 Added ஜன 31, 2019 o 13:24 கருத்துகள் (31) You May Like Arthritis: A Simple Trick to Relieve Pain Easily (Joint Helper) Sponsored Links by Tabool 142 Shares Omaze Million Pound House Draw (Omaze) 31 Advertisement லண்டன்: முதன் முறையாக லண்டன் இலங்கை தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்."
ஒரு பதிப்பில் வருகின்ற செய்தியின் நிலை இதுவென்றால் இணையத் தளங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
‘விண்வெளிக்குச் செல்லும்முதல் தமிழ் பெண்’ என்ற தலைப்பில் தமிழக இணையத்தளம் தினமலர் யூன் 31 2019இல் ஒரு செய்தியயை வெளியிட்டு இருந்தது. இந்தச் செய்தி இலங்கையில் உள்ள பல இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்து. இச்செய்தி தினமலர் இணையத்தளத்தில் இன்னமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியின் அடிப்படையில் தென்மராட்சி பிரதேச சபையில் மாணவி சிபோன் ஞானகுலேந்திரன் என்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இச்செய்தி முற்றிலும் தவறானது. தமிழ் மாணவி மட்டுமல்ல எந்த மாணவியும் விண்வெளிப் பரிசோதணைகளில் ஈடுபட விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்காலத்தில் மாணவர்களை ஊக்குவிக்க பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட கல்வித் திட்டத்தின் ஒரு அங்கமாக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மாணவர்கள் இத்திட்டத்தில் பாடசாலைகளுடாக இணைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் வழங்கிய நூண்ணுயிர்கள், தாவரங்கள் பரீட்சார்த்தமாக விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின் மீளவும் பூமிக்கு கொண்டுவரப்பட்டு அவற்றைப் பரிசோதிப்பதே இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதுதொடர்பில் இரு மாணவிகளுடன் பிபிசி சில நிமிடங்கள் உரையாடி அதனை ஒளிபரப்புச் செய்திருந்தது. அந்த உரையாடலில் சிபோன் ஞானகுலேந்திரன் தனக்கு நுண்ணுயிர் கற்கைகளில் ஆர்வம் என்று தெரிவித்து இருந்தாரே அல்லாமல் விண்வெளிப் பயணத்தில் ஆர்மில்லை என்பதையும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் தினமலர் இணையமோ தனது செய்தியில் இவ்வாறு தெரிவித்து இருந்தது: “அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஒரு இலங்கை தமிழ் மாணவி. அவர் பெயர் “சியோபன் ஞானகுலேந்திரன்” . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்றுள்ளார்”. இது தான் தமிழ் ஊடகச் சூழலின் நிலை.
வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளரும் அதன் ஆசிரியரும் செய்தியின் தற்போதைய நிலையயைப் பற்றி சிறிதுகூட சிரத்தை எடுக்கவில்லை. இச்செய்தி இவ்வாரம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், கொலையாளியான தாய்க்கு எதிரான வழக்கின் தீர்ப்பு யூன் 24ம் திகதி நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அது பற்றிய எந்தக் குறிப்பும் வலம்புரி பத்திரிகைச் செய்தியில் வரவில்லை. ஏதோ கொரோனா மனநிலை பாதிப்பையும் ஏற்படுத்தி பிள்ளைகளையும் கொலை செய்யத் தூண்டும் என்ற விதத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வலம்புரி க்குழு செய்தியயைச் சோடித்து இருந்தது.
மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த சுதா சிவானந்தம் (36 வயது) செய்த செயலை ஒரு பாரிய சோக நிகழ்வு என்று விபரித்த நீதிபதி வென்டி ஜோசப் அவருக்கு காலவரையறையற்ற சிகிச்சை வழங்குமாறு தீர்ப்பளித்து உள்ளார். தன்னால் மேற்கொள்ளப்பட்ட கொலை சுயநினைவுடன் மேற்கொள்ளப்பட்டது அல்லவென்ற சுதா சிவானந்தம் தரப்பின் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. சுதாவின் கணவர் சிவானந்தம், சுதா ஒரு முன்ணுதாரணமான தாயாக இருந்ததை நீதிமன்றில் தெரிவித்து இருந்தார். தான் சம்பவத்தின் போது மகளைக் காயப்படுத்துவதாக துன்புறுத்துவதாக கருதவில்லை என்றும் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் கனவில் இருந்தாகவும் தெரிவித்தார்.
சுதா சிவானந்தத்திற்கு ஏற்பட்ட மனநோய் பற்றிய முழுமையான விபரம் அவருடைய மனநிலை மருத்துவர்களாலும் முறையாக அறியப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மோர்பிட் கொன்சேர்ன் என்ற ஒருவகை மனப்பிறழ்வுநிலையின் கட்டத்தில் சுதா சிவானந்தம் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தனக்கு கடுமையான ஆபத்து அல்லது மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். சம்பவதினத்திற்கு முதல் நாள் இரவு தனக்கு உயிராபத்து ஏற்பட்டால் பிள்ளைகளைப் பார்ப்பீர்களா என்றும் சுதா கேட்டதாக கணவர் சிவானந்தம் நீதிமன்றில் தெரிவித்து இருந்தார். இரு தாதிகளுடன் சுதாவும் நீதிமன்றுக்கு வந்திருந்தார்.
தீர்ப்பினையடுத்து சுதா சிவானந்தம் மீண்டும் மனநிலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு குடும்பத்தின் மோசமான சூழலை எவ்வித உணர்வுமின்றி ஒரு தமிழ் பத்திரிகை பரபரப்புச் செய்தியாக முயன்றதன் விளைவே இத்தலைப்பு. இப்பத்திரிகைகளின் தரம் இவ்வளவு மோசமாக இருக்கின்ற போது நாட்டில் ஜனநாயகம் சீரழிவும் தலைதூக்குவது தவிர்க்க முடியாதது. தவறுகளைத் தட்டிக்கேட்டுத் திருத்த வேண்டிய பத்திரிகைகளே தரம்தாழ்ந்து இருக்கின்ற போது இவர்களால் எவ்வாறு அரசியல்வாதிகளை கேள்விக்கு உட்படுத்த முடியும்.
இவ்வாறு தான் பொறுப்பற்ற ஊடகவியலாளர்களால் மே 31 1981இல் எரிக்கப்பட்ட யாழ்நூலகம் யூன் 1ம் திகதி எரிக்கப்பட்டதாக தவறாகப் பதிவு செய்யப்பட்டு இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தக் குழப்பத்தினூடாக இச்சம்பவங்களுடன் தொடர்புடைய அமைச்சர்கள் காமினி திஸ்ஸநாயக்கவும் சிறில்மத்தியூவும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மே 31 இரவு எரிக்கப்பட்ட நூலகம் யூன் ஒன்று காலை வரையும் எரிந்து கொண்டிருந்தது. அதனைச் செய்தியாக்கிய ஈழநாடு பத்திரிகை நூலகம் யூன் இரவு எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. யூன் அதிகாலை யூன் இரவாகி பின்னர் யூன் 2 இல் அப்பகுதிக்கு முதல் முறையாகச் சென்றவர்கள் முதல்நாள் தான் எரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளையே மாற்றி எழுத முற்பட்டுள்ளனர்.
இதேபோல் புளொட்டின் வரலாற்றை எழுதுவதாகக் கூறிக்கொண்டு ஆங்காங்கே தகவல்களைப் பொறுக்கி தனது அனுபவமாகச் சித்தரித்து ஒரு தொடரை எழுதிவருகின்றார் இந்திய உளவுத்துறையான றோவின் முகவர் வெற்றிச்செல்வன். அவர் இந்திய உளவுப் பிரிவுக்கு தனது விசுவாசத்தைகாட்ட றோவின் செயற்பாடுகளுக்கு வெள்ளையடித்து வருகின்றார். இவர் உமா மகேஸ்வரனின் கொலை, மாலை தீவு கைப்பற்றல் நடவடிக்கைகளின் போது இந்திய உளவுபடையான ரோவிற்கு எதுவுமே சம்பந்தம் இல்லாமல் அவர்கள் எல்லாம் விரல்சூப்பிக் கொண்டிருந்தனர் என்ற வகையில் பதிவுகளை எழுதிவருகின்றார். தன்னை முகவர் என்று எழுதுபவர்களை தொலைபேசியில் மிரட்டுவதும் அவர்களைப் பற்றி மோசமாக பதிவுகளை இடவதும் இவருடைய கைங்கரியமாக உள்ளது. இவருடைய பதிவுகளின் நம்பகத்தன்மையும் இவருடைய நேர்மைத்தன்மை பற்றியும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். தன்னுடைய பதிவுகளிலேயே இவர் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாகவும் குறிப்பான கால குறியீடுகள் இல்லாமல் சகட்டுமேனிக்கு தன் விருப்பு வெறுப்புப்படி எழுதி வருகின்றமையயை பலரும் தேசம்நெற்க்கு தெரிவித்து வருகின்றனர்.
ஊடகவியலாளனே வரலாற்றின் முதலாவது ஆசிரியன். ஆகவே பதிவுகளை மேற்கொள்வோர் வரலாற்றுக் கடமையை உணர்ந்து அதனைச் செய்ய வேண்டும்.