30

30

காலில் ஏற்பட்ட காயத்தால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து கண்ணீருடன் விலகிய செரீனா வில்லியம்ஸ் !

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டில் 3-வது வருவதும், மிக உயரியதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்த முறை கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதையொட்டி அங்கு முகாமிட்டுள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
பெலாரஸ் நாட்டின் அலைக்சண்ட்ரா ஸஸ்னோவிச்சை எதிர்த்து செரீனா வில்லியம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, டென்னிஸ் களத்தில் கால் சறுக்கியதால் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார்.
சிறிய முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து விளையாட முயற்சித்தார். 34 நிமிடங்கள் ஆடி 3-3 என்ற கணக்கில் இருந்த நிலையில், வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இதனால் முதல் சுற்றிலேயே நடப்பு விம்பிள்டன் தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். இதன் மூலம் 8-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்லும் செரீனா வில்லியம்ஸின் கனவு தகர்ந்தது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.25 கோடி அதிகரிப்பு !

சீனாவின் வூகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.25 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.71 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 79 ஆயிரத்து 900-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை !

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜேக்கப் ஜூமா தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த போதும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அவரை பதவி விலக வலியுறுத்தியது‌.

இதையடுத்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டு ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகளை பல மாதங்களாக விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் ஊழல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜேக்கப் ஜூமா கோர்ட்டை அவமதித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது‌. அப்போது ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

“இந்தியாவை சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்வதற்கு இலங்கை முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றது.” – சிறிதரன்

அண்9மய காலங்களில் இலங்கையின் கடல் வலயங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதானது மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் வடக்கின் கடற்பகுதிகளிலும் சீன ஆக்கிரமிப்பு தொடர்வதாக குற்றுஞ்சாட்டப்பட்டுள்ளது.

24188cf2 08bc 4283 97bf 037f78e37701

இந்நிலையில் இன்று கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் சீனாவின் கடல் அட்டை பண்ணை பார்வையிடுவதற்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் “இந்தியாவை சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்வதற்கு இலங்கை முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றது.” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அன்மைய நாட்களிலே சர்வதேச ரீதியாக பேசப்படும் ஓர் விடயமாக இலங்கையினுடைய தென் பகுதியிலே சீனாவின் உடைய அகலக் கால்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடக்கு பகுதியில் குறிப்பாக நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவுகளில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ள நிலையில் தற்பொழுது யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடலட்டை குஞ்சுகளை வளர்ப்பதாக கூறி உருவாக்கப்பட்ட அட்டை பண்ணை ஆனது தற்போது கிளிநொச்சியின் கௌதாரிமுனை என்னும் இடத்தில் எந்த அனுமதியும் இன்றி அந்த அட்டை பண்ணையை செய்து வருகின்றார்கள்.

அத்துடன் யாழ் பாசையூர் மீனவர்கள் கிளிநொச்சி கௌதாரிமுனை மீனவர்கள் கடலட்டை வளர்ப்பிற்கான முன் வைத்த உரிமங்கள் மறுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது சீனர்கள் செய்து வருவதுடன் இயற்கையாகவே இக்கடலில் வளர்கின்ற கடல் அட்டைகளை நிராகரித்து செயற்கையாக பிரோய்லர் கோழிகளுக்கு வைக்கும் மருந்துகளை போல் கடலட்டைகளுக்கு வைத்து விரைவான வளர்ச்சியை அடைய வைத்து அதனை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் சீனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றினை சாதாரணமாகப் பார்க்கும்போது சீனாவிற்கு கடல் அட்டை ஏற்றுமதி இடமாகத்தான் தெரியும் ஆனால் இதன் பின் பாரிய அளவு அரசியல் செயற்பாடுகள் உள்ளன.

அத்துடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குறித்த கடலட்டை பண்ணை தொடர்பாக சட்டரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.”  என தெரிவித்தார்.

 

இணையதளம் மூலம் 15 வயது சிறுமியை விற்பனை செய்த தாய் உட்பட 17 பேர் கைது – இவர்களுள் துறவி ஒருவரும் அடக்கம் !

இணையத்தளங்களின் மூலம் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலாளராக விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காக இதுவரை மொத்தம் 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் சிறுமியின் தாயார், சாரதிகள், துறவியொருவர் மற்றும் விளம்பரத்திற்காக வலைத்தளத்தை வடிவமைத்தவர்களும் உள்ளடங்குவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சிறிமியொருவர் பாலியல் நடவடிக்கைக்காக இணையத்தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக கல்கிஸை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து முதல் சந்தேக நபர் ஜூன் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் மொறட்டுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பணியகம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 16 பேர் தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெல்கொட பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கின் அனைத்து பாடசாலைகளிலும் சேதனப் பசளை மூலமான மாதிரி தோட்டம் அமைக்க நடவடிக்கை !

பாடசாலைகள் ஆரம்பித்தவுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சேதனப் பசளை மூலமான மாதிரி தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (30) நடைபெற்ற கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ எடுத்த முடிவை உண்மையாக்குவதற்கு இது செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

இந்த புதிய விடயத்தை மாணவர்களின் இதயங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம், நாட்டின் எதிர்கால தலைமுறை நிச்சயமாக நிலையான விவசாயத்தை நோக்கி நகரும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இது குறித்து அனைத்து அதிபர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சேதனப் பசளை செய்கை விவசாயம் தொடர்பில் மாணவர்களுக்கு கற்பிக்க பாடசாலை பாடத்திட்டத்தில் வாரத்துக்கு ஒரு நேரமாவது சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

காதலித்த இளைஞனால் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற சிறுமியை முத்தமிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் !

நெலுவ மேல் கிகும்மடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் தனது தாயுடன் நேற்றைய தினம் (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்காக நெலுவ பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.

விசாரணைகளுக்காக தன்னையும் தனது மகளையும் இரவு வரையில் பொலிஸ் நிலையத்தில் தங்கி இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர்கள் அங்கு தங்கியிருந்துள்ளனர்.

எவ்வாறாயினும், இன்று (30) காலை கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாம் தங்கியிருந்த அறைக்கு வந்து தனது மகளை முத்தமிட்டதாக தாய் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ள சிறுமி இளைஞன் ஒருவனை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் அவரை சந்திக்க சென்றுள்ளார். இதன்போது, குறித்த இளைஞனால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இளைஞன் சிறுமியின் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணொளி மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி அச்சுறுத்தி குறித்த இளைஞன் சிறுமியை பல முறை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் அறிந்து கொண்ட பின்னர் இளைஞனை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ள நிலையில் இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக நேற்று பொலிஸ் நிலையம் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் முத்தமிட்ட குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“தமிழர்கள் என்றால் சிறையில் தள்ளிவிட்டு சீனர்களை சுதந்திரமாக செயற்பட விட்டுள்ளது அரசாங்கம்.” – செ.கஜேந்திரன் காட்டம் !

“தமிழர்களை பிடித்து சிறையில் அடைக்கும் அரசாங்கம்,  சீனர்கள் சுகபோகமாக வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(29.06.2021) பார்வையிட்டிருந்தனர். இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

‘கௌதாரிமுனை பகுதியில் சீனர் ஒருவரால் அமைக்கப்பட்ட கடலட்டைப் பண்ணையை பார்ப்பதற்காக வந்திருந்தோம். குறித்த பகுதி கௌதாரிமுனை கல்முனை பகுதி மக்கள் காலாதிகாலமாக தொழில் செய்து வருகின்ற இடமாக இருக்கின்றது. அவ்வாறு கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களின் சம்மதம் ஏதும் பெறப்படாமல் கடலட்டை வளர்ப்பதற்கும், அவர்கள் தங்குவதற்கான மிதக்கும் கொட்டகையும் அமைத்துள்ளார்கள். சகல வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அவ்வாறான இடத்திலேயே அந்த சீனர் கடலட்டை வளர்ப்பினை மேற்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எந்தவிதமான முறையான அனுமதிகளும் பெறப்படாமல் குறிப்பாக இந்த பிரதேச மீனவர்களின் சம்மதம் இல்லாமல் இந்த இடம் அவர்களிற்கு கடலட்டை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நீரியல் அபிவிருத்தி திணைக்களத்தின் அரியாலையில் இருக்கின்ற ஓர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டிருப்பதாக தகவல் இருக்கின்றது. ஆனால் எந்தவிதமான ஆவணமும் அவர்களால் காட்டப்படவில்லை. ஒரு வெளிநாட்டவர் எவ்வாறு இலகுவாக வந்து இந்த இடத்திலே இடத்தை பிடித்து கடலட்டை வளர்க்கின்ற செயற்பாடு இடம்பெறுகின்றது என்பது ஒரு கேள்வியாகின்றது. இதனை சட்டவிரோதமான நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். திஸ்ஸமகரகமவிலே சீன இராணுவத்தினருக்கு ஒப்பான உடையுடன் நின்று வேலைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில முறைப்பாடுகள் எழுந்ததை அடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. அது தொடர்பாக விசாரிப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆனால் இங்கே அது தொடர்பாக ஆட்சேபனைகள் எழுந்திருக்கின்ற போதிலும்கூட அந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அடைக்கும் அரசாங்கம், மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சீனர்கள் சுகபோகமாக வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை – 70க்கும் மேற்பட்டவர்கள் பலி !

கனடாவில் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் அதிக வெப்பத்தினால் கடந்த திங்கட்கிழமை முதல் இதுவரையில் 70க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் வயதானவர்கள்.

நேற்றையதினம் கனடாவின் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலையான 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை, பிரிட்டிஸ் கொலம்பியாவின் லிட்டன் நகரில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

கடலில் எரிந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ளால் இது வரை 200 கடல் வாழ் உயிரினங்கள் பலி !

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய, 176 ஆமைகள், 4 திமிங்கிலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பை அண்மித்தப் பகுதியில் கடந்த மாதம் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.