July

July

“தீவிரமாக பரவும் டெல்டா. இரண்டு தடுப்பூசிகளுமே பயனற்றவை.” – அமெரிக்கா அதிர்ச்சி அறிக்கை !

இந்தியாவில் பி.1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டி உள்ளது. இந்த வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையில் அதிக கைவரிசை காட்டியது.

டெல்டா வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.டி.சி. என்னும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை ஊடகங்களில் கசிந்துள்ளன. அதில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அறிக்கையில் ,

“டெல்டா வைரஸ் பெரியம்மை போல எளிதாக பரவும், கடுமையாக பாதிக்கும். மேலும், தடுப்பூசி போடாதவர்கள் என்ன வேகத்தில் பரப்புவார்களோ, அதே வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் டெல்டா வைரசை பரப்புவார்கள். இது மெர்ஸ், சார்ஸ், எபோலா, ஜலதோஷம், பருவ காய்ச்சல், சிற்றம்மை போல வேகமாக பரவுகிற வைரஸ் ஆகும். இது பெரியம்மை போல தொற்றும். அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள். தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது. ஆனால் தொற்றை தடுப்பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனைத்தான் கொண்டுள்ளன.” என குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுபற்றி சி.டி.சி.யின். இயக்குனர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை கூறுகையில், “2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தொற்று பாதிப்புக்குள்ளாகிறபோது, தடுப்பூசி போடாமல் தொற்று பாதிப்புக்குள்ளாகிறவர்கள் போலவே மூக்கிலும், தொண்டையிலும் அதிகளவிலான வைரசை சுமந்து செல்வார்கள். சிற்றம்மை, பெரியம்மை போல மிகவும் பரவுகிற வைரஸ் டெல்டா வைரஸ். பள்ளிக்கூடங்களில், மாணவர்கள், ஊழியர்கள், வருகிறவர்கள் என அனைவரும் கண்டிப்பாக முககவசத்தை எல்லா நேரமும் அணிந்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தா கைது !

கம்பஹா மாவட்டத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாத்தா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஷேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி அவரது தாய், தந்தை மற்றும் 5 வயது தங்கையுடன் வாழ்ந்து வந்திருந்துடன் பெற்றோர் வேலைக்கும் செல்லும் சந்தர்ப்பத்தில் சிறுமி பாட்டி அவர்களது வீட்டிற்கு பாதுகாப்பிற்காக வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி சிறுமியின் பெரியம்மாவிற்கு சுகயீனம் ஏற்பட்ட காரணத்தினால் பாட்டி வௌியில் சென்ற சந்தர்ப்பத்தில் தாத்தாவை பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமி தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதி இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் சிறுமியின் தாய் அவரது தந்தையிடம் இது தொடர்பில் விசாரித்த சந்தர்ப்பத்தில் அவரை தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து 62 வயதுடைய குறித்த சிறுமியின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிஷாளினி படுகொலைக்கு நீதி கேட்பவர்கள் மிருசுவில் சிறுமியை கொலை செய்த இராணுவ அதிகாரி விடுதலையான போது ஏன் கேள்வி கேட்கவில்லை.? – சாணக்கியன் கேள்வி

ஹிஷாளினி படுகொலைக்கு நீதி கேட்பவர்கள் மிருசுவில் சிறுமியை கொலை செய்த இராணுவ அதிகாரி விடுதலையான போது ஏன் நீதி கேட்கவில்லை.? என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த ஜுலை 25ம் திகதி இலங்கையில் எரிவாயுவின் விலை தீர்மானிக்கப்பட்டது. அதன்படி யாழ் மாவட்டத்தில் எரிவாயுவின் விலை 1259.00 ரூபா, மட்டக்களப்பில் 1250.00 ரூபா . ஆனால் அதே எரிவாயு கொழும்பில் 1130.00, கம்பஹாவிலே 1150.00 ரூபா.

வடக்கு கிழக்கிலே இருக்கும் எட்டு நிருவாக மாவட்டங்களுக்குமே எரிவாயுவின் விலை ஆகக் கூடியதாக இருக்கின்றது. பொருளாதார அபிவிருத்தி மற்றும் மாவட்ட மக்களின் அடிப்படை வருமானம் என்ற ரீதியில் பார்க்கும் போது வடக்கு கிழக்கு தான் மிகக் குறைந்த நிலையில் இருக்கின்றது. இந்த விலை வித்தியாசங்களுக்கான காரணம் தொடர்பில் விசாரித்த போது உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து மாவட்டங்களின் போக்குவரத்து தூரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். வடக்கு கிழக்கில் எரிவாயுவினை உற்பத்தி செய்யாமல் விட்டது எங்களினதோ, மக்களினதோ பிரச்சினை அல்ல. கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசத்தில் எரிவாயுவினை உற்பத்தி செய்து விட்டு எமது பிரதேசங்களுக்கு மாத்திரம் இவ்வாறு விலை அதிகமாகச் சொல்லுவது எந்த விதத்தில் நியாயமானது.

வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டாலும் மக்களின் செலவை மேலும் மேலும் அதிகரிக்கும் செயற்திட்டத்தைத் தான் இந்த அரசாங்கம் செய்கின்றது.

சாட் பதியுதீன் விட்டில் தீக்காயங்களுக்காகி மரணித்த சிறுமி தொடர்பான விடயத்தில் அச்சிறுமிக்கு நீதி கிடைக்கப்பட வேண்டும். அதன் உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்று வடக்கு கிழக்கிலே முதலாவதாகக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நானே. ஆனால் இன்று இந்த விடயத்தை வைத்து ஒருசிலர் அரசியல் செய்வதற்கு முயற்சி செய்வதென்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இது தொடர்பில் ஆளுங்கட்சியில் இருப்பவர்களும், அமைச்சர்களும் வீதியில் இறங்கி நியாயம் வேண்டும் என்று கேட்பதை எவ்வாறு சொல்வதென்று தெரியாமல் இருக்கின்றது. அமைச்சர்கள் அமைச்சரவையிலே இதனைப் பற்றிப் பேசாமல் சுதந்திர சதுக்கத்தில் நீதி கோரிய போராட்டம் செய்வதென்பது முழுமையான ஒரு அரசியற் செயற்திட்டமாகவே பார்க்க முடிகின்றது.

இது தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் உள்ள பிரச்சினை அல்ல. உண்மையிலயே ஒரு சிறுமியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், இது இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருப்பதற்கு சிறுவர் பாதுகாப்பு போன்ற பிரிவுகளை நாங்கள் பலப்படுத்த வேண்டும். சிறுவர்களை வேலைக்கு வைப்பது தொடர்பான சட்டங்களில் மாற்றம் வேண்டும். இவற்றின் மூலமாக அந்தச் சிறுமிக்குரிய நியாயத்தினைக் கோர வேண்டும். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. யார் செய்திருந்தாலும் தவறு தவறுதான்.

ஆனால் இதனை இரு சமூகங்களுக்குமிடையிலான குழப்பமாக மாற்றுவதற்கு முயற்சியெடுப்பது ஒரு தவறான விடயம்.

நான் ஆரம்பத்தில் சொன்னது போல் எரிவாயு விலை அதிகரித்தமை தொடர்பில் அரசாங்கத்தோடு இருப்பவர்கள் இதுவரை ஒரு வசனம் கூடத் தெரிவித்தாக நான் அறியவில்லை. ஆனால் இரண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் நடக்கும் போது மாத்திரம் ஆர்ப்பாட்டங்கள் செய்வதென்பது வேடிக்கையானதே.

நேற்று ஒரு குறிப்பிட்ட கட்சியினர் இவ்விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் சிறுமிக்காக நியாயம் கோரி ஆர்ப்பாட்டம் செய்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். எமது மாவட்டத்தில் இடம்பெற்ற மேலும் பல துஸ்பிரயோகப் படுகொலைகளும் நியாயம் கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் நானும் அதில் கலந்து கொள்கின்றேன்.

இந்த விடயங்களுக்கும் சேர்த்து ஆர்ப்பாட்டம் செய்வோம். 2008.09.17ம் திகதி வதா எனப்படும் பொறியியலாளரின் மனைவி ஆறுமாத குழந்தையின் தாய் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 2000.09.18ம் திகதி மண்டூரில் ஒரு பெண் அரச உத்தியோகத்தருக்கு என்ன நடந்தது என்று மட்டக்களப்பு மக்களுக்குத் தெரியும். 2006.01.29ம் திகதி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிள்ளைகள் வெலிகந்தையில் கொல்லப்பட்டிருந்தனர். பிறேமினிக்கு என்ன நடந்தது என்பதையும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் நீதி கேட்க வேண்டும். 2009.05.28 தினோசிக்கா கோட்டமுனையில் 03ம் ஆண்டு படித்த சிறுமி என்று இந்தப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டு செல்லும். இவ்வாறான பெண்கள், சிறுமியர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து நீதியினைக் கேட்பதற்கு முன்வாருங்கள் சேர்ந்து நீதியைக் கேட்கலாம்.

அத்துடன், அண்மையில் கௌரவ இராஜாங்க அமைச்சரின் பாதுகாவலரால் அவரது வீட்டுக் முன்பாக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்பதும் இதுவரை தெரியாது. அதற்கும் நீதி கோர வேண்டும்.

சிறுமியின் அமரணத்திற்கு நீதி வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதனை விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். ஆனால் இதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்பது தான் என்னுடைய கருத்து.

மிருசுவில் படுகொலையில் சிறுமியைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்காவை பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுவித்த போது இன்றைய இந்த சிறு சிறு ஆர்ப்பாட்டங்களைச் செய்து இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் இந்த ஒட்டுக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எங்கே இருந்தார்கள்?

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஊடகங்களும் கவனம் செலுத்த வேண்டும். நான் சொல்லுகின்ற விடயங்கள் ஊடகங்களில் வருகின்ற போது வேறு விதமாகப் பிரசுரிக்கப்படுகின்றது. ஊடகங்களுக்கு நாங்கள் சொல்ல முடியாது இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று. ஊடகத்திற்கான சுதந்திரம் எப்போதும் இருக்க வேண்டும். நாங்களும் ஜனாதிபதியைப் போன்று ஊடகங்களை அடக்குவதற்காகக் சொல்லவில்லை.

மட்டக்களப்பில் அத்துமீறிய காணி அபகரிப்பினை பெரும்பான்மையினர் முன்னெடுக்கும்போது, அதனை தடுத்து நிறுத்தமுடியாத நிலையிலேயே இங்குள்ள அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் அதிகரிக்கும் வறட்சி – மக்களுக்கு இராணுவத்தினர் நீர் விநியோகம் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் உள்ள இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கேப்பாப்புலவு சூரிபுரம், பிரம்படி மற்றும் பிலக் குடியிருப்பு போன்ற பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

இதேபோன்று ,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் கரைதுறைப்பற்று பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் இராணுவத்தினர் பவுசர் மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. அலுவலகம் மீது தலிபான்கள் தாக்குதல் !

மேற்கு ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நா. அலுவலகம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கி கொள்வது என அமெரிக்க அரசு முடிவு செய்தது.

எனினும், திட்டமிட்டபடி கடந்த முதலாம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக தள்ளி போனது. இதன்பின் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹெராட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை ‘தலிபான்கள்’ தாக்கியதால் ஆப்கானிஸ்தான் பொலிஸார் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் சில அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அவுஸ்ரேலியாவில் களமிறக்கப்பட்ட இராணுவம் !

கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவுவதற்காக அவுஸ்ரேலியா அரசாங்கம், சிட்னிக்கு நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.

ஜூன் மாதம் தொடங்கிய டெல்டா மாறுபாடு கிட்டத்தட்ட 3,000 தொற்றுநோய்களை உருவாக்கியது மற்றும் ஒன்பது இறப்புகளுக்கு வழிவகுத்தது.

அவுஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள், திங்கட்கிழமை நிராயுதபாணியான ரோந்துப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் வார இறுதியில் பயிற்சி பெறுவார்கள். ஆனால், இராணுவ தலையீடு அவசியமா என்று பலர் கேள்வி எழுப்பினர்.

முடக்கநிலை கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் ஒகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்தியாவசிய உடற்பயிற்சி, ஷாப்பிங், கவனிப்பு மற்றும் பிற காரணங்களைத் தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வாரங்கள் முடக்கப்பட்ட போதிலும், நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அதிகாரிகள் 170 புதிய தொற்றுகளை வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்.

10 கிமீ (6.2 மைல்) பயண வரம்பை உள்ளடக்கிய விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய இராணுவ வீரர்கள் கண்கானிப்பில் ஈடுபடுவார்கள்.

“சிறுமி ஹிஷாளினி மரணத்துடன் தொடர்புடையோர் பாரபட்சம் காட்டப்படாது தண்டிக்கப்பட வேண்டும்.” – சஜித் பிரேமதாச வலியறுத்தல் !

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது,

“ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் எந்தவொரு குறுக்கீடும் இல்லாத வகையில் கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். தேவையான சட்ட விதிகளை அமுல்படுத்துவதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை வலுப்படுத்துவது அரசாங்கம் உட்பட அனைவரினதும் பொறுப்பாகும்.

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் நேற்றைய தினம் விடுதலை !

பல ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் தமது வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் தருமராசா, வவுனியாவைச் சேர்ந்த ஜோசப் செபஸ்ரியான், கிளிநொச்சியை சேர்ந்த நடராசா சர்வேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கண்ணதாசன் ஆகியோரே மேற்படி விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களில் நடேசன் தருமராசா தனது ஒருவருட புனர்வாழ்வை முடித்து இயல்புவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த சமயம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருடன் ஜோசப் செபஸ்ரியான் என்பவரும் கைது செய்யப்பட்டு இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்தவகையில் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து எட்டு வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதே வேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு நடராசா சர்வேஸ்வரன் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் இன்று நிரபராதியென இனங்காணப்பட்டு நீதிமன்றினால் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

இதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். புனர்வாழ்வின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்த கண்ணதாசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேன்முறையீட்டு மனு மீது இரண்டு ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.

இந்த நிலையில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்றில் மீளவும் ஒப்படைக்கப்பட்டது.இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுனர் தரப்பு விண்ணப்பத்தை நிராகரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், எதிரியை விடுவித்து விடுதலை செய்து கட்டளையிட்டார்.

வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழு பெண் மீது தாக்குதல் – பருத்தித்துறையில் சம்பவம் !

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டு குழுவொன்றின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

திக்கம்- அல்வாய் பகுதியை சேர்ந்த வரோதயம் மேரி ஜோசப் என்ற பெண்ணே வாள் வெட்டுக் குழுவின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) மாலை, குறித்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த வாள்வெட்டு குழு, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அவரின் மீதும் வாள் வெட்டுத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர் கொரோனா தாக்கி மரணம் – யாழில் சம்பவம் !

கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது – 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.