July

July

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட பின்பும் ஜயருவன் பண்டாரவுக்கு கொரோனா !

மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளரும், முன்னாள் சுகாதார அமைச்சின் பேச்சாளருமான வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் முதல் சுற்றில் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியையும், இரண்டாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியையும் பெற்றவர்.

இந்நிலையில் தொற்று உறுதியாகியதால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.” – சிங்களே அமைப்பு வலியுறுத்தல் !

“ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் வெட்கப்பட வேண்டும்.” என  சிங்களே அமைப்பின் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சோபித தேரர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது .

இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக நாடாளுமன்றில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் . மேலும் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்பாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு, பொலிஸார் மற்றும் அதிகாரிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள், கொலைகாரர்கள் மற்றும் திருடர்கள் போன்ற குற்றவாளிகள் நாடாளுமன்றத்தை தங்கள் அதிகார இடமாக மாற்றியுள்ளனர். அத்தோடு ரிஷாட் பதியுதீன் போன்றவர்களுக்காக நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

இதேவேளை ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணத்தை மறைக்க சதித்திட்டம் இடம்பெறுகிறது.

மேலும் சிறுமியின் மரணம் குறித்த முதல் பிரேத பரிசோதனையில் வசீம் தாஜுதீனின் பிரேத பரிசோதனைக்கு விசுவாசமாக இருந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளுக்காக கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட குற்றத்தில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பேராசிரியர் விடுதலை !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற வழக்கிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலைசெய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேன்முறையீட்டு மனு மீது விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.

இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இ. கண்ணன் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

இதன்போது வழக்குத் தொடுனரான சட்டமா அதிபர் சார்பில், குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய அரச சட்டவாதிவிண்ணப்பம் செய்தார். அதற்கு எதிரான வாதங்களை கண்ணதாசன் சார்பில் ஆயரான சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.

இதன்போது இந்த வழக்கில் மேலதிக சாட்சிகள் இன்மையால் வழக்கை நிறுத்திக்கொள்வதாக அரசசார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விரிவுரையாளர் கண்ணதாசன் அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து நீதிபதி கட்டளையிட்டார்.

473 கடல் உயிரினங்களை பலியெடுத்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து !

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் அண்மையில்  எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் என்ற தீ விபத்துக்குள்ளாகியிருந்தது. குறித்த கப்பலில் இருந்த டொன்கணக்கிலான இராசாயனப்பொருட்களும் – கழிவுகளும் எரிந்து கடலுடன் கலந்தன.

இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளால் 473 கடல் உயிரினங்கள் மரணித்துள்ளன என கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த பாதிப்புகளால் இதுவரையில் 417 ஆமைகளும், 48 டொல்பின்களும், 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்

வெளியானது சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கை அதிகம் பெறுவதற்கான காரணம்.. !

சினோபார்ம் தடுப்பூசியை பெறுவதை தவிர இலங்கைக்கு வேறு வழியிருக்கவில்லை என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித்வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மேற்குநாடுகளிலும் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதில் நீண்ட தாமதம் காணப்பட்டமையினாலேயே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கை நம்பியிருக்கவேண்டிய நிலையேற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது இராதந்திர உறவுகள் காரணமாக நாங்கள் சுலபமாக பெறக்கூடியதாகயிருந்து சினோபார்ம் என லலித்வீரதுங்க தெரிவித்துள்ளார். பைசர் மொடேர்னா தடுப்பூசிகள் அனேகமாக மேற்குலகுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன அவற்றை பெறுவதற்கு ஆசியநாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நான் இராதந்திர ரீதியில் தொடர்புகளை பேணுவதால் என்னால் இதனை செய்யமுடியும் எனவும் மேற்குலகிலிருந்து தடுப்பூசிகளை பெறுவது மிகவும் நீண்டகாலம் எடுக்கின்ற நடவடிக்கைஎனவும் தெரிவித்துள்ள அவர் எங்களால் அதுவரை காத்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் செயற்படும் அனைத்து பாலியல் ரீதியிலான இணையத்தளங்களையும் முடக்க நடவடிக்கை !

இலங்கைக்குள் செயற்படுகின்ற அனைத்து பாலியல் ரீதியிலான இணையத்தளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு மேலதிக நீதவான் லோஷனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல், இவ்வாறான இணையத்தளங்களுக்கான பெயர்களை பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் சேவை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும்  ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கல்கிஸ்ஸை பகுதியில் 15 வயதான சிறுமி, இணைய வழியாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள்

நேற்று இடம்பெற்ற போதே, கொழும்பு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மீண்டும் தோண்டியெடுக்கப்படுகிறது சிறுமி ஹிசாலினியின் உடல் !

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி தீக்காயங்களுடன் மரணமடைந்துள்ள சிறுமி ஹிசாலினியின் இரண்டாவது மரண பரிசோதனை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மரண பரிசோதனையை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விசேட மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பெயரிடப்பட்டு சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய நீதிமன்றத்தினால் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேற்படி மருத்துவர்கள் குழுவில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நீதிமன்ற மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் திருமதி ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட நீதிமன்ற மருத்துவ விஞ்ஞான பிரிவு தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான டாக்டர் சமீர குணவர்தன மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான விசேட நீதிமன்ற மருத்துவர் பிரபாத் சேரசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

டயகம பிரதேசத்தில் உள்ள சிறுமியின் புதைகுழியில் மேற்படி மருத்துவர் குழுவின் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சிறுமி ஹிசாலினியின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

அதற்கிணங்க அப்பகுதி தற்போது பொலிசாரின் தீவிர பாதுகாப்புக்கு உட்படு த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஒரே நாளில் மூவரை பலியெடுத்த கொரோனா !

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த (79 வயது) பெண் ஒருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த (80 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த (44 வயது) ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதன்படி வைரஸ் தொற்றினால் யாழ்ப்பாணத்தில் இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை துவம்சம் செய்த இலங்கை – மிரட்டிய BirthdayBoy ஹசரங்கா !

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 2 போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்தியா தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 14 ஓட்டங்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 36 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.
3வது போட்டியில் அபார வெற்றி - டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை
அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தசுன் ஷனகா 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 12 ஓட்டங்களுடனும், பானுகா 18 ஓட்டங்களுடனும்,  சமரவிக்ரமா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது. தனஞ்செய டி சில்வா 23 ஓட்டங்களுடனும் , ஹசரங்கா 14 ஓட்டங்களுடனும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இதன்மூலம் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளராக அஜித் ரோஹண !

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் வகிக்கும் பதவிகளுக்கு மேலதிகமாக இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஜூலை மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் மூன்று வருடங்களுக்கு குறித்த பதவிக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது பொலிஸ் ஊடக பேச்சாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.