01

01

“சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்பு பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம்.” – சீன அதிபர் முழக்கம் !

“சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை. நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்.” என சீன அதிபர் ஜி ஜின்பிங்  தெரிவித்துள்ளார்.

latest tamil news

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று (01.07.2021)  கொண்டாடப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி கடந்த 1921-ம் ஆண்டு ஜூலை 1-ந் திகதி நிறுவப்பட்டது. நீண்ட உள்நாட்டு போருக்கு பிறகு அக்கட்சி 72 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை பிடித்தது. கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டையொட்டி இன்று தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் சுமார் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த பிரமாண்ட விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்ட போது ,

சீன மக்களின் தேசிய இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க கொண்டுள்ள பெரும் தீர்மானத்தையும், வலுவான விருப்பத்தையும், அசாதாரண திறனையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. எங்கள் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை பாதுகாப்பதற்கான அதிக திறன் மற்றும் நம்பகமான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன.

சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை. நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்.

சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்பு பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம். சீனாவை யாரும் அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம்.

சீன மக்கள் ஒரு போதும் எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் தங்களை ஒடுக்கவோ அல்லது அடிபணியவோ அனுமதிக்க மாட்டார்கள். அவ்வாறு செய்ய முயற்சிக்கும் எவரும் 1.4 பில்லியனுக்கும் அதிகமான சீன மக்களால் உருவாக்கப்பட்ட பெருஞ் சுவரில் மோத வைக்கப்படுவார்கள்.

தைவானை சீன நிலப்பரப்புடன் ஒருங்கிணைப்பது ஆளும் கட்சியின் வரலாற்று பணியாகும். தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை நாம் துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூச்சுக்காற்றை பரிசோதித்தே கொரோனா தொற்றை கண்டறியும் முககவசம்.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு புதிய பல  பரிசோதனைகளை உலகின் பல  ஆராய்ச்சி நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. பல முறைகள் வெற்றியளித்து நடைமுறைக்கும் வந்துள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் கொரோனாவுக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட முகக்கவசம் மூலமே மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன.

அந்தவகையில் கொரோனா வைரசை கண்டறியும் பிரத்யேக சென்சார் பொருத்தப்பட்ட முககவசங்களை இந்த நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த முககவசம் அணிபவரின் மூச்சுக்காற்றை பரிசோதித்தே இந்த சென்சார்கள் தொற்றை உறுதி செய்து விடுகின்றன. அணிந்தவருக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்ற முடிவை 90 நிமிடங்களில் இது வெளிப்படுத்துகிறது.

சிறிய மற்றும் எளிதில் அகற்றக்கூடிய இந்த சென்சார்களை மற்ற முகமூடிகளிலும் பொருத்த முடியும். இதைப்போல பிற வைரஸ்களை கண்டறியும் வகையிலும் இவற்றை மாற்றியமைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்தால் மட்டக்களப்பு அபிவிருத்தி அடையும்.” – பிரச்சன்ன ரணதுங்க

“எங்களுக்கு எந்தநாடு உதவிசெய்கின்றதோ..? அந்த நாட்டின் உதவியைப் பெற்று நாட்டுக்கான அபிவிருத்தியை மேற்கொள்ளுவோம்.”  என அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு விமானநிலையத்தினை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வேண்டுகோளுக்கு அமைய இங்கு வந்துள்ளோம். கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் போது விமான நிலையத்தின் தேவைப்பாடு தேவைப்படுகின்றது எனவே விமானநிலையத்தை அபிவிருத்தி செய்யவேண்டும்.

நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலத்தில் இடம்பெற்றதற்கு பொறுப்புக் கூறமுடியாது. இந்த இந்த விமானநிலையத்தை பல வருடங்களுக்கு முன் சர்வதேச விமானசர்வதேச விமானநிலையமாக அபிவிருத்தி செய்ய வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு அபிவிருத்தி செய்யப்படவில்லை அதேபோன்ற உள்ளூர் விமான சேவையும் அதை போலத்தான். எங்களால் இதனை இரண்டுவருடத்தில் செயற்படுத்தமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடம்.  சுற்றுலாத்துறையில் வரும் வருமானம் முழுநாட்டுக்கும் பபயன்படும்படியாக அது செயற்படுத்தப்படவேண்டும். எனவே நீண்டகாலமாக சுற்றுலா பயணிகள் தங்கி நிற்க கூடியதான சூழலை அமைக்கவேண்டும்.

ஒரு பிரதேசம் அபிவிருத்தியடையவேண்டும் என்றால் பெரிய ஹோட்டல் இருக்கவேண்டும். அவ்வாறு பெரிய ஹோட்டல்கள் இல்லாவிடில் கிழக்கு மாகாண இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருபவர்கள் இல்லாமல் போகும்.

இந்தியா,  அமெரிக்கா போன்ற பல நாடுகள் உதவி செய்கின்றது உதவி செய்கின்ற பல நாடுகளில் இருந்து உதவிகளை பெறுகின்றோம். சீனா முன்னிற்பது ஏன் என கேட்கின்றீர்கள்..? ஆனால் யாராவது யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றதுஎன்று கேடகின்றீர்களா? சீன பிரச்சனை எங்களுக்கு இல்லை. எதிர்கட்சிக்குத்தான் எங்களுக்கு பிரச்சினை.  எந்தநாடு உதவிசெய்கின்றதோ அந்த உதவியைப் பெற்று அபிவிருத்தியை மேற்கொள்ளுவோம். இதற்கும் சீனா உதவி செய்ய இருந்தால் நாங்கள் அதனையும் பெற்றுக் கொள்ளுவோம்

யுத்தம் இடம்பெற்றபோது வட-கிழக்கில் சிறுவர்கள் கழுத்தில் சையனட்குப்பியுடன் இருந்தார்கள். அந்த சிறுவர்கள் பாhடசாலை சென்றது இந்த யுத்தம் முடிந்த பின்னர். வடக்கில் வசந்தம்,  கிழக்கில் வசந்தம் திட்டத்தை செய்தது பசில்ராஜபக்ஷ. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் 5 வருடம் ஆட்சி செய்தது ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் நாங்கள் கிழக்கில் வடக்கில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேவேளை பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்தால் இந்த பிரதேசம் அபிவிருத்தி அடையும் என்ற பாரிய நம்பிக்கை இருக்கின்றது. எனவே அவர் வருவது இந்த பிரதேசத்திற்கு மிகவும் நல்லது.” என்றார்.

“ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்திருந்தால் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்திருப்போம்.” – சஜித் பிரேமதாஸ

“ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்திருந்தால் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்திருப்போம்.” என  எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது நல்லாட்சி அரசில் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தோம். அவர்களில் பலருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தியிருந்தோம். எனினும், இறுதியில் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாத துரதிஷ்ட நிலைமை ஏற்பட்டது.

நல்லாட்சி அரசுக்குள் இருந்த முரண்பாடுகள் மற்றும் அன்று எதிரணிப் பக்கம் இருந்த மஹிந்த ராஜபக்ச அணியினரின் எதிர்ப்புக்கள் காரணமாக அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்திருந்தால் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்திருப்போம். தேர்தல் காலங்களில் இந்த வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கியிருந்தோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை புனர்வாழ்வளித்து விடுதலை செய்த ராஜபக்ச அரசு, விடுதலைப்புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றும் அவர்களின் கட்டளையின் பிரகாரம் செயற்பட்ட தமிழ் இளைஞர்களை நீண்டகாலமாகச் சிறைகளில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அரச தரப்பினர் உள்ளிட்ட அரசியல் வாதிகளை கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விரைவில் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தமக்கு விசுவாசமான மரண தண்டனைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விரைவில் விடுதலை செய்ய வேண்டும்.” என்றார்.

“வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் எனது வட்ஸ்அப் எண்ணுக்கு தகவல்களை வழங்குங்கள்.” – யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வீடுகளுக்குள் அத்துமீறும் வாள்வெட்டுக் கும்பங்கள் அங்குள்ளோரை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு சில நாட்களுக்குள்ளேயு பல வாள்வெட்டு மற்றும் வன்முறைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயிடம் வினவிய போது அவர் ,

, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.

அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் காவலரண்களை அதிகரிக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன்.

அத்துடன், சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் விசாரணைகளை இடம்பெறுகின்றன.

பொதுமகன் ஒருவர் தனது முறைப்பாட்டை ஏற்க பொலிஸ் நிலையத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் எனது வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் அனுப்பியிருந்தார். அவரது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அத்துடன், முறைப்பாட்டாளர்கள் பலரது முறைப்பாடுகள் தேங்கிக் கிடைக்கின்றன. அவை தொடர்பில் எனது கண்காணிப்பின் கீழ் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் வன்முறைச் சம்பவங்கள், பொலிஸ் அலுவலகர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எனது 0718 592 200 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு தகவல்களை வழங்கினால் உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தல் வழங்குவேன் என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.

“சில வாரங்களுக்கு முன்பு இந்தியா அனுபவித்ததை விட பாரிய அழிவை இலங்கை விரைவில் அனுபவிக்கும்.” – உபுல் ரோஹன எச்சரிக்கை !

“டெல்டாவை கட்டுப்படுத்த  சரியான செயற்திட்டம் எதுவும் இல்லை என்றால், சில வாரங்களுக்கு முன்பு இந்தியா அனுபவித்ததை இலங்கை விரைவில் அனுபவிக்கும்.” என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

டெல்டா என அழைக்கப்படும் பயங்கரமான இந்திய மாறுபாடுடைய கொரோனாவின் அறிகுறியுடைய சில தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேற்குறித்த எச்சரிக்கையை சுகாதார பரிசோதகர் சங்கம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளாவது,

டெல்டா என அழைக்கப்படும் பயங்கரமான இந்திய மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை.

கொரோனா பரவல் நாட்டில் தொடங்கியதிலிருந்து பின்பற்றி வரும் செயற்திட்டத்தையே அரசாங்கம் தொடர்கிறது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள புதிய செயற்திட்டத்தை முன்னெடுக்கவில்லை.

ஏற்கனவே பல பகுதிகளில் பரவியிருக்கும் இந்திய மாறுபாடு நாட்டில் அதிகமான பகுதிகளுக்கு பரவியுள்ளதா..? என்பதை தீர்மானிக்க சரியான ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது.

சரியான செயற்திட்டம் எதுவும் இல்லை என்றால், சில வாரங்களுக்கு முன்பு இந்தியா அனுபவித்ததை இலங்கை விரைவில் அனுபவிக்கும்.அரசாங்கம் நிலைமையை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாவிட்டால் ஒரு பெரிய அழிவை தவிர்க்க முடியாது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களில் மக்களின் நடத்தை மிகவும் ஏமாற்றமளிக்கும் விதமாக மோசமாக உள்ளது. COVID-19 இன் ஆபத்து சமூகத்திலிருந்து மறைந்துவிட்டதைப் போல மக்கள் நடந்துகொள்கிறார்கள் என்றும் ஆபத்து இன்னும் வீரியமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட 15 வயது சிறுமி – மிகிந்தலை பிரதேச சபை உப தலைவரும் கைது !

இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட 15 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய மற்றும் அதற்கு உதவிப் புரிந்த குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய மற்றும் அதற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இதுவரை 21 பேர் கைதாகியுள்ளனர்.

நேற்று (30) கைதானவர்களில் மிகிந்தலை பிரதேச சபை உப தலைவர் மற்றும் வியாபாரி ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த சிறுமியை இணையத்தின் ஊடாக விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மூவரும் இன்று (01) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, நேற்று வெள்ளவத்தை பகுதியில் ஆண் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்று (30) 17 பேரும் அதற்கு முன்னர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் பிள்ளையின் தாய் மற்றும் சிறுமியை விற்பனை செய்த நபரின் இரண்டாம் மனைவி, சிறுமியை விற்பனைக்காக ஒவ்வொரு இடங்களுக்கும் கொண்டுச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிகள் இருவர் அத்துடன் சிறுமியை விற்க விளம்பரம் தயாரித்தவரும் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தளம் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக குறித்த சிறுமி ஏற்கனவே 3 மாதங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், அதாவது 10 ஆயிரம் 15 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணத்துக்காக குறித்த சிறுமி விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

யாழ்.கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் – பல மணி நேர போராட்டத்தின் பின்பு இணைக்கப்பட்ட இளைஞனின் கை !

யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீள பொருத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை (Plastic Surgery) வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன், மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள் தாதியர்கள் என அனைவரினதும் கூட்டு சேவையினால் கை துண்டாடப்பட்டவருக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

குறித்த வீட்டில் ஸ்ரூடியோ ஒன்றினை நடத்தி வந்தவர்கள் தங்கியிருந்தபோது 6 பேர்கொண்ட குழுவினர் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த கும்பல் வீட்டைத் தாக்கியும் குறித்த ஸ்ரூடியோ அமைந்திருக்கும் பகுதியை தீமூட்டி கொளுத்தியும் சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

படுகாயமடைந்தவரின் வெட்டப்பட்ட கைக்கான குருதி ஓட்டம் தடைப்பட்டு உடலில் ஏனைய பகுதிகளில் காயங்களும் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவருக்கு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்களினால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள் – சந்தேகநபர்கள் கைதானதாய் தகவல் இல்லை ..?

இலங்கையின் வட பகுதியில் நாளுக்குநாள் வன்முறைக்கலாச்சாரம் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கின்றது. வாள் வெட்டு தொடர்பான சம்பவங்கள் பொதுவெளியில் இடம்பெறுகின்ற அளவுக்கு வன்முறைக்குழுவினர் தைரியமானவர்களாக உள்ளனரா..? அல்லது பொலிஸாரினுடைய பலவீனமான தன்மை காரணமாக இந்த குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றனவா எனத்தெரியவில்லை.  குறிப்பாக யாழில். அண்மைக்காலமாக வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் வாள்வெட்டு சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(புதன்கிழமை) மீசாலை – புத்துார் சந்தியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணித்த குறித்த இளைஞன் மீசாலை – புத்துார் சந்தியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இளைஞனை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் தலை, கை, கால் ஆகியவற்றில் காயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜூனில் எகிறிய கொரோனா சாவு; ஆராய நிபுணர் குழு

இலங்கையில் ஜூன் மாதத்தில் மாத்திரம் 1500 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தக் கணிசமான அதிகரிப்புக்கான காரணத்தை ஆராய்வதற்காக சுகாதார நிபுணர்களைக் கொண்ட சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் இலங்கையில் மே மாதத்தில் 806 கொரோனா உயிரிழப்புக்களும், ஏப்ரல் மாதத்தில் 110 கொரோனா உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.