04

Friday, August 6, 2021

04

“எனக்கும், கோலிக்கும் இடையிலான நட்பு கிரிக்கெட்டை விட ஆழமானது.” – வில்லியம்சன் நெகிழ்ச்சி !

“எனக்கும், கோலிக்கும் இடையிலான நட்பு கிரிக்கெட்டை விட ஆழமானது.” என நியூசிலாந்து  கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதும் நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன், இந்திய அணித்லைவர் விராட் கோலியின் நெஞ்சோடு சாய்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
எதிரணி தலைவரை அரவணைத்தது ஏன் என்பது குறித்து வில்லியம்சன் அளித்த சுவாரஸ்யமான பேட்டி வருமாறு:
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது மிகச் சிறந்த தருணம். இந்தியாவுக்கு எதிராக எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் அது கடினமாக இருக்கும் என்பது தெரியும். அதனால் கடும் முயற்சியை வெளிப்படுத்த வேண்டி இருந்தது.
போட்டி முழுவதும் ஒரு கத்தியின் விளிம்பில் இருப்பது போல் உணர்ந்தேன். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கோப்பை அதிர்ஷ்டம் எங்களுக்கு கிட்டியது. ஆட்டம் முடிந்ததும் கோலியின் தோளோடு ஏன் சாய்ந்தேன் என்று கேட்கிறீர்கள்.
எனக்கும், கோலிக்கும் இடையிலான நட்புறவு பல ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டது. எங்களது நட்புறவு கிரிக்கெட்டை விட ஆழமானது. அது எங்கள் இருவருக்கும் தெரியும். அதன் வெளிப்பாடு தான் அந்த இனிமையான கட்டித்தழுவல் என்றார்.

15 வயது சிறுமியை இணையத்தினூடாக விற்பனை செய்த விவகாரம் – 26 பேர் வரை கைது – தேடுதல் தொடர்கிறது !

15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த இணைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் குறித்த இணைதளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை, நல்லூருவ பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இணையதளத்தின் கணக்காளராக கடமையாற்றிய பிலியந்தல, அளுபொலந்த பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரை இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 16 பேரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழையால் தப்பித்த இலங்கை – கைவிடப்பட்டது மூன்றாவது போட்டி !

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டதை அடுத்து தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது போட்டி இன்றைய தினம் இடம்பெற்ற போது தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் நடுவர்களால் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். இங்கிலாந்து அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட சோம் கரண் 4 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

எவ்வாறாயினும், தொடர்ந்து மழை பெய்ததால் இங்கிலாந்து அணிக்கு துடுப்பெடுத்தாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்தனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இலங்கை முன்னதாக இருபதுக்கு இருபது போட்டித்தொடரையும் முழுமையாக இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

40 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – இலங்கையில் இது வரை 2 62 795 பேர் பாதிப்பு !

2019 இறுதி தொடங்கி பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.42 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.85 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.86 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.16 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 77 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதே நேரம் இலங்கையை பொறுத்தவரை  இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 33 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 62 ஆயிரத்து 795  பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லையில் முகக்கவசம் அணியாத இளைஞனை தாக்கிய இராணுவ சிப்பாய் – இராணுவத்துடன் முரண்பட்ட பொது மக்கள் !

முகக் கவசம் அணிந்து செல்லாத இளைஞன் ஒருவர் மீது, இராணுவ வீரர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில், இன்று (04) இடம்பெற்றுள்ளது.

இதனால், அப்பகுதியில், பெரும் பதற்றம் நிலவியது. ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த இளைஞன் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆனந்தபுரம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக இரணைப்பாலை சந்திக்கு, குறித்த இளைஞன் மாஸ்க் அணியாது சென்றுள்ளார்.

இதன்போது, அப்பகுதியில் கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவர், அவ்விளைஞனை அழைத்து, அணிந்து செல்லுமாறு கூறி குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது

இச்சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள், இராணுவத்தினருடன் முரண்பட்டதுடன், மாஸ்க் அணியாத காரணத்தால் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முடியுமா என வினவினர்.

இதனால், அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், குறித்த இடத்திலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட இளைஞன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு, சிகிச்சை பெறச் சென்றுள்ளார். இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவை உலுக்கிய டெல்டா இலங்கையிலும் – 19 பேர் அடையாளம் !

அண்மையில் இந்தியாவில் பரவி பெரும் உயிராபத்துக்களை ஏற்படுத்தியிருந்த டெல்டாவகை கொரோனா இலங்கையில் பரவக்கூடாது என்பதற்காக சுகாதாரத்துறையினரால் பல்வேறுபட்ட முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட  நாட்டில் இதுவரை டெல்டா வைரஸ் தொற்றுடன் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

முதன்முதலாக டெல்டா வைரஸ் தொற்றுடன் தெமட்டகொடையைச் சேர்ந்த ஐவர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஏனைய 14 பேரும் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இனங்காணப்பட்ட நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோரிடம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளோரை அடையாளம் காண்பதற்காக எழுமாற்றாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷவால் முடியாத அதிசயத்தை நிகழ்த்தப்போகிறாராம் பஷில் .. !

அண்மைய நாட்களில் இலங்கை அரசியலில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள விடயம் பஷில்ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை தொடர்பானதாகும். ஆளும் தரப்பில்  ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் ஆசனத்துக்கு பதிலாக பஷில் நாடாளுமன்றம் வருவதாக தெரிகிறது. மேலும் அவருக்கான அமைச்சுப்பதவி ஒன்றும் வழங்கப்படும் என் பதில் மாற்றுக்கருத்து இல்லை. இங்கு முரணாக தெரிவது ஆளும் தரப்பினர் பஷிலின் நாடாளுமன்ற வருகைக்காக கூறும் காரணம் அவருடைய வருகை நாட்டினுடய பொருளாதாரத்தை சீர்தூக்கி நிறுத்தும் என்பதாகவே உள்ளது.

பஷில்ராஜபக்ஷ நாடாளுமன்றம் வந்தால் தான் அரசு இலாகாவே முறையாக இயங்குமென்றால் பெரமுன சார்பாக அவரையே ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கலாம்.   எதற்கு வீணாக கோட்டபாயராஜபக்ஷவை நிறுத்தி அத்தனை லட்சம் மக்களுடைய பெரும்பான்மை வாக்குகளை பெற்றுவிட்டு இன்று ஏதோ போல பஷில்ராஜபக்ஷதான் மீட்பர் போல புராணம் பாடிக்கொண்டிருப்பது மறைமுகமாக அவர்களே கோட்டாபாய ராஜபக்ஷவின் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பது போலவே படுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன என்ன எல்லாம் சொல்லப்போகிறார்கள் என்று..!

இந்நிலையில் “தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகைக்கு பின்னர் அரசியல் மட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை குறித்து எதிர் தரப்பினரே அதிக அச்சம் கொண்டுள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பொருளாதார விவகாரங்களை இவரே பொறுப்பேற்றார். அக்காலக்கட்டத்தில் பல சவால்கள் காணப்பட்டன. அனைத்து சலால்களுக்கும் மத்தியில் தேசிய பொருளாதாரம் சீரான நிலையில் முன்னேற்றமடைந்தது.

அரசாங்கம் தோல்வி என எவராலும் குறிப்பிட முடியாது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அரசாங்கம் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் அபிவிருத்தி செயற்திட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்கிறது. நாட்டின் அபிவிருத்தி பணிகள் எக்காரணிகளுக்காகவும் தடைப்படாது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அமையும். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று பலமான அமைச்சு பதவியை பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் பல முறை எடுத்துரைத்துள்ளார்கள். சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை செயற்படுத்த வேண்டுமாயின் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று அரசியலில் செல்வாக்கு செலுத்த வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ இவ்வாரம் நாடாளுமன்ற உறுப்பினாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது நாடாளுமன்ற வருகையை தொடர்ந்து அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சி உறுப்பினர்கள் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒரு சில பங்காளி கட்சி தலைவர்களின் செயற்பாடுகள் கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் அமைகிறது என்றார்.

யாழில் இடம்பெற்ற வாள் வெட்டுடன் தொடர்புடையோர் கைது – ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணமாம் !

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைக்கு ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் படப்பிடிப்பு நிலையம் ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் காவல்துறையினர் கூறினர்.

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிக்காவல்துறைமா அதிபர் பிரியந்த லியனகேயின் தலைமையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் வழிகாட்டலில் பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 3 பிரதான சந்தேக நபர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

கோண்டாவில் வன்முறைக்கு காரணம் ஆவா; ஜி குழுவை இலக்கு வைத்துத் தாக்குதல் |  Muthalvan News

யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் கொக்குவில் வராகி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மூவரிடமும் முன்னெடுத்த விசாரணையில் சம்பவ தினத்தன்று 6 மோட்டார் சைக்கிள்களில் 16 பேர் இணைந்து இந்த வன்முறையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது…

ஆவா குழுவிலிருந்து பிரிந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜி குழு என்று ஆரம்பித்தனர். அவர்கள் ஜி குழுவுக்கு பாடல் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டனர்.

அதனாலேயே அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்த ஒளிப்பதிவு நிலையத்துக்கு தீவைத்ததாகும் ஜி குழுவைச் சேர்ந்தோருக்கு வாளினால் வெட்டியதாகவும் பிரதான சந்தேக நபர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரிடமிருந்து 3 கஜேந்திர வாள்களும் 2 சாதாரண வாள்களும் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டன.

மேலும் தெல்லிப்பழை, காங்கேசன்துறை, பொம்மைவெளி, கோண்டாவிலைச் சேர்ந்த 13 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்துள்ளவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

பிரதான சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் – என்றனர்.

மூன்று வயதில் ஞானப்பால் குடித்து விடுதலை கீதம் பாடிய மேதகு நாயனார்! – த.ஜெயபாலன்

ஞானப்பால் குடித்து தேவரம் பாடிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குப் பிறகு விடுதலை கீதம்  பாடியவர் மேதகு நாயனார். மேதகு என்ற இந்தப் பெயரை நக்கல் நளினத்துக்காக வைத்தார்களா இல்லை உண்மையிலேயே நேர்மையுடன் தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டதா என்பது  தெரியவில்லை. ஆனால் மேதகு படம் ஒரு ஆளுமையுடைய வரலாற்றை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

அந்தப் படத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் எதுவுமே தெரியாத சிலரே உருவாக்கியுள்ளனர். அந்தப் படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள், நடந்த சம்பவங்கள் பற்றிய எவ்வித ஆய்வும் இல்லாமல், சகட்டுமேனிக்கு காட்சிப்படுத்தப்பட்டு, ஒரு வரலாற்றுக் குப்பையாக்கி உள்ளனர். மழைக்கு முளைக்கும் காளான்களைப் போன்று பலர் வரலாற்றைப் பதிவு செய்கிறோம் என்ற பெயரில் தங்கள் தேவைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்குமேற்ப வரலாற்றைச் சோடிக்கலாம் எனக் கருதுகின்றனர். அதற்கு மேதகு நல்லதொரு உதாரணம்.

படத்தின் தலைப்பில் இருந்து இறுதிவரை படம் உயிரோட்டமாக இல்லை. சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்களுடைய கட்டாயத்தின்படி எடுக்கப்பட்ட படமாகவே தெரிகின்றது. உலகத்தில் எத்தனையோ தலைவர்களுடைய ஆளுமைகளுடைய படங்கள் தத்துரூபமாக எடுக்கபட்டு; காலத்தால் அழியாத வரலாற்று ஆவணங்களாக அமைந்து; பல விருதுகளையும் வென்றுள்ளன. ஆனால் மேதகு படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பிரச்சாரவாடை தாங்க முடியவில்லை. உலகில் எந்தத் தலைவரதும், ஆளுமையினதும் வரலாறும் இவ்வளவு பிரச்சாரவாடையுடன் உண்மைக்குப் பிறம்பாகப் பதிவு செய்யப்படவில்லை. உண்மையான தலைவர்களுக்கு செயற்கையாக விம்பம் கட்டவேண்டிய அவசியமும்  இல்லை. பிரச்சாரமும் தேவையில்லை.

காந்தியின் வரலாற்றை மகாத்மா என்ற பெயரில் படமாக்கவில்லை. காரணம் அத்தலைவர்களுக்கு பிரச்சாரம் தேவைப்பட்டிருக்கவில்லை. தலைவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. இதுவரை இவ்வுலகில் தலைவர்களாக கொள்ளப்பட்டவர்களில் தீபெத் மக்களுக்காக குரல்கொடுக்கும் தலய்லாமா மட்டுமே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் சிறுபிராயம் முதல் சமயகட்டுப்பாடுகளோடு வாழ்பவராகவும்  உள்ளார். ஏனைய தலைவர்கள் சாமானியர்களாகப் பிறந்து தலைவர்களாக ஆகினர். அவர்கள் சாதாரண மனிதருக்குள்ள பண்புகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் தாங்கள் எப்போதும் சரியாக இருந்ததாகவோ சுத்தமான சுவாமிப் பிள்ளைகளாக வாழ்ந்ததாகவோ குறிப்பிடவில்லை. தங்கள் ஆளுமைகளினால் தங்களை ஆளுமைகளாக நிறுவினர். அவர்கள் தங்களைப் பற்றிய விம்பங்களைக் கட்டமைக்கவில்லை. அதனால் அவர்கள் சர்வதேச அளவிலும் பல்வேறு தரப்பினராலும் ஆளுமைகளாக தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வே பிரபாகரனையும் பொறுத்தவரை அவர்கள் தங்கள் brand name யை – unique selling pointயை செயற்கையாகக் கட்டமைக்க முயல்கின்றனர். அந்த முயற்சியின் ஒரு அம்சமே மேதகு.

படத்தில் சம்பவம் நடந்த திகதியையும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் வைத்துக்கொண்டு கதைகள் புனையப்பட்டு உள்ளது. இப்படத்தில் உண்மையின் வறுமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனுடைய வரலாறு – நேர்மையாக் பதிவு செய்யப்பட முடியுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. புலிக்குட்டிகளின் விசிலடிச்சான் குஞ்சுகளின் தலையீடு இல்லாமல் காத்திரமாக எடுக்கக் கூடிய ஒரு படைப்பாளியினாலேயே அவ்வாறானதொரு சிறந்த படைப்பைத் தர முடியும்.

பூலான் தேவியின் வரலாறு திரைப்படமாக்கப்பட்டது. அத்திரைப்படத்தில் பூலான் தேவியின் வரலாற்றின் ஒவ்வொரு பகுதியும் மிக நேர்மையுடன் நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டது. பிரித்தானியாவின் சனல் போர் பில்ம்ஸ் இனால் தயாரிக்கப்பட்ட இப்படத்தை சேகர் கபூர் இயக்கி இருந்தார். அதேபோல் சந்தோஸ் சிவனின் ‘தி ரெறறிஸ்ற்’ திரைப்படம் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு தற்கொலைக் கொலையாளியின் உணர்வை மையமாக வைத்து உயிரோட்டமாக அப்படம் தயாரிக்கப்பட்டது. அப்படத்தில் அத்தற்கொலைப் போராளி இன்னொரு போராளியுடன் உறவுகொள்வதை மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் வைத்துக்கொண்டு, இயக்கத்தில் அப்படி நடப்பதில்லை என்று மனித உணர்வுகளைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக விமர்சனங்களை முன் வைத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏதோ பிரபாகரன் பிறக்கின்ற போதே அவர் விடுதலை உணர்வோடு பிறந்து மூன்று வயதிலேயே ‘தமிரின் தாகம் தமிழீழத் தாயகம்’ சொன்னார் என்பது போலவே தான் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அத்திரைப்படம்  பதிவு செய்கின்ற துரையப்பா கொலை வரையான காலகட்டத்தில் வே பிரபாகரன் ஒரு ஆர்வக்கோளாறுடைய இளைஞர். பிரபாகரனுக்கு தம்பி என்ற பெயர் வரக்காரணமே அவர் இருந்தவர்கள் எல்லோரிலும் இளையவராக இருந்ததும்  அவரை யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்ததும் வரலாறு. குட்டி மணி தங்கத்துரை போன்றவர்கள் அதனாலேயே ‘மல்லி’ என அழைத்தனர். பிரபாகரனுடன் தம்பி நிலைத்துக்கொண்டது. படத்துக்கு தம்பி என்ற பெயரே மிகப்பொருத்தமாக அமைந்திருக்கும்.

அன்றைய சூழலில் இருந்த அரசியல் பின்னணியைக் கூட படம் தவறவிட்டுவிட்டது. துரையப்பாவை துரோகியாக்கியது தமிழர் விடுதலைக் கூட்டணி. பிரபாகரன் உட்பட்ட இளைஞர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆவா குறூப். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் இல்லை என்று சொல்ல பிரபாகரன் போன்றவர்கள் துரையப்பாவை படுகொலை செய்தனர். தமிழீழ கோசத்தை கண்டு பிடித்து பிரபாகரன் போன்ற இளைஞர்களின் கையில் கொடுத்ததே தமிழர் விடுதலைக் கூட்டணி. பிரபாகரன் ஒன்றும் விடுதலை உணர்வோடு பிறந்து வளர்ந்து போராட வரவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தூண்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர். அவர் விடுதலைப் போராட்ட புத்தகம் எல்லாம் படித்தார் என்பது சற்று ஓவர். ஆனந்தவிகடன் குமுதம் கல்கி படித்ததாகவே வே பிரபாகரன்  நேர்காணல் ஒன்றிலேயே சொல்லி உள்ளார்.

பிரபாகரன் தீயிட்டு கொழுத்திய பஸ் வண்டி கூட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியாகத் தெரியவில்லை. தமிழகத்தில் ஓடும் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் பஸ் வண்டியே கொழுத்தப்பட்டது.

இதெல்லாவற்றுக்கும் மேலாக தமிழாராச்சி மாநாட்டைச் சித்தரித்த காட்சி அமைப்புகள் மிக மோசமானவை. யாழ்ப்பாண தமிழராய்ச்சி மாநாடு மண்டபத்தினுள்  நடத்த முடியாமல் முத்தவெளி மைதானத்தில் மக்கள் திரண்டனர். ஆனால் படத்திலோ நூற்றுக்கும் குறைவான மக்கள் மத்தியில் புத்தகவெளியீடு நடப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக கடல்வழியாக வந்திருந்த இரா ஜனர்த்தனன் உரையாற்ற திட்டமிட்டு இருந்தமையாலேயே பொலிஸார் அங்கு செல்லப்பணிக்கப்பட்டனர். அப்பொலிஸ் அதிகாரி மேலே நோக்கித் துப்பாக்கிச்சூட்டை நடாத்த மின்சாரக் கம்பி அறுந்து இரும்புக் கம்பியில் வீழ்ந்தது. அப்போது அந்த இருப்புக் கம்பியில் கையைப் பிடித்துக்கொண்டு நின்றவர்களே மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டடனர். அன்று மரணித்த ஒன்பது பேர் மின்சாரம் தாக்கியும் இன்னுமொருவர் மாரடைப்பாலும் மரணமானதாக பிரேத பரிசோதணையிலும் உறுதிப்படுத்தப்பட்டது. மேதகு வில் காட்டப்பட்டது போல் யாரும் பொலிஸாரால் தாக்கப்பட்டு மரணிக்கவில்லை.

வரலாற்றை எப்படியும் புனையலாம் எப்படியும் திரிக்கலாம் என்று எம்மத்திலயில் இன்றும் சிலர் நம்புகின்றனர். அவர்களுக்கு பாடம் வரலாறே பாடம் கற்றுக்கொடுக்கும் என்பதில்  சந்தேகம் இல்லை. வே பிரபாகரன் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எத்தனையோ படுகொலைகளைச் செய்தும் இன்றுவரை அவர்களுடைய வரலாற்றை துடைத்தெறிய முடியவில்லை. ஆண்டுதோறும் நினைவுக் கூட்டங்கள் நடைபெறுகின்றது. ஆனால் வே பிரபாகரனுக்கு எவ்வித ஞாபகார்த்த நிகழ்வுகளும் இல்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு அமைய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. வே பிரபாகரன் மே 18 இல் கொல்லப்பட்டாரா மே 19 இல் கொல்லப்பட்டாரா எப்போது கொல்லப்பட்டார் அல்லது இன்னும் இருக்கின்றாரா என்பதற்கே அவ்வமைப்பு விடைகாணவில்லை.

பயணத் தடை மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையானது, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.