அண்மைய கால இலங்கை கிரிக்கெட்டின் போக்கு அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை என்பதே உண்மை. தொடர்ச்சியாக பல மூத்த வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக பலர் ஓய்வு பெற்றுக்கொண்டிருப்பதும் தொடர்ச்சியாகிவிட்டது.
ஒரு காலத்தில் உலக அளவில் இலங்கைக்கான அடையாளத்தை ஏற்படுத்தியதே இந்த கிரிக்கெட் தான் என்றால் மிகையல்ல. இன்றைய நிலையில் அதனுடைய தரம் மிகக்கீழான நிலையை அடைந்துள்ளது. இலங்கையின் பிரபலமான வீரர்கள் எல்லோரும் புறக்கணிக்கப்பட்டு வருவதுடன் இலங்கையில் எத்தனையோ உலகதரமான முன்னாள் வீரர்கள் இருக்க வெளிநாட்டு பயிற்சியாளர்களை இலங்கையில் பணிக்கமர்த்ததுகின்ற அளவுக்கு இலங்கை கிரிக்கெட்டின் உயர்மட்டத்தில் பூசல்கள் உள்ளன என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
இலங்கையின் முன்னாள் வீரர்கள் சிலர் அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து என பயிற்சிக்காக சென்றுகொண்டிருக்கின்றனர். ஆனால் நமது நாட்டு கிரிக்கெட் அணி படுபாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது தெளிவான வகையில் உட்பூசல்களை டையாளம் காட்டுகின்றது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை அணி வீரர் அஞ்சலோ மத்யூஸ் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரிவித்துள்ளமை கிரிக்கெட் ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாகவும், எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் 34 வயதான மத்யூஸ் தெரிவித்துள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் வீரர்களுடன் கிரிக்கெட் அணியை கொண்டு செல்வதற்கு இலங்கை அணி நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து அஞ்சலோ மத்யூஸ் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் உள்வாங்கப்படவில்லை.
2019 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கையின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்த அவர், 2018 ஆம் ஆண்டில் அவரது துடுப்பாட்ட சராசரியாக 52.50 ஆகவும், 2017 இல் 63.66 ஆகவும் இருந்தது.
இதேவேளை மத்யூஸின் பீல்டிங் மற்றும் உடற்பயிற்சி தரநிலைகள் 2020 ஆம் ஆண்டிலும் கணிசமாக முன்னேறியுள்ளன. இந்நிலையில் புதிய ஒப்பந்த முறைமை தொடர்பாக மத்யூஸ் மற்றும் பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆரம்பத்தில் எதிர்ப்பு காணப்பட்ட போதும் கூட இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடருக்காகப் பெயரிடப்பட்டிருந்த 30 இலங்கை வீரர்களில் 29 பேர் தொடருக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதே நிலையில் எஞ்சலோ மெத்தியூஸ் தம்மை மறு அறிவிப்பு வரையில் எந்த தொடரிலும் இணைக்க வேண்டாம் என்று கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.