08

08

381 நிமிடங்கள் – 278 பந்துகள் – 37 ஓட்டங்கள் – போட்டியை சமனாக்கிய ஹசிம் அம்லா !

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்வீரர் ஹசிம் அம்லா. இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றாலும் இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். அதிரடியாகவும், அதேநேரத்தில் அணிக்கு தேவை என்றால் தடுப்பட்டம் ஆடுவதிலும் கைதேரந்தவர்.
கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். குரூப் 2, சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹம்ப்ஷைர்- சர்ரே அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த ஹம்ப்ஷைர் 488 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் விளையாடிய சர்ரே அணி முதல் இன்னிங்சில் 72 ஓட்டங்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. ஹசிம் அம்லா 29 ஓட்டங்களும், ரியான் பட்டேல் 11ஓட்டங்களும் சேர்த்தனர்.
பாலோ-ஆன் ஆன சர்ரே, 2-வது இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. 6 ஓட்டங்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது சர்ரே. அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். போட்டியில் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து கொண்ட அம்லா, எப்படியும் போட்டியை டிரா நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். தடுப்பாட்டம் என்றால் அப்படியொரு தடுப்பாட்டம். முதல் 100 பந்துகளில் 3 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார். 126-வது பந்தில்தான் முதல் பவுண்டரி அடித்தார்.
381 நிமிடங்கள் களத்தில் நின்று 278 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. 104 ஓவர்களை சந்தித்த சர்ரே அணி 8 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. சுமார் 6 மணிநேரம், 21 நிமிடங்கள் களத்தில் போராடி அணியை டிராவில் முடித்து வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 13.30 ஆகும்.
இது அவரின் மிகச்சிறந்த மெதுவான ஆட்டம் இல்லை. 2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் டி வில்லியர்ஸுடன் இணைந்து போட்டியை டிராவாக்க போராடினர். 244 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டிரைக் ரேட் 10.24 ஆகும். இதுவே அவரின் மிகக்சிறந்த தடுப்பாட்டமாகும். இந்த போட்டியில் டி வில்லியர்ஸ் 297 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இருந்தாலும் போட்டியை டிரா ஆக்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

“பஷில் ராஜபக்ஷவின் வருகை எமது அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியுள்ளது.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகழ்ச்சி !

“பஷில் ராஜபக்ஷவின் வருகை எமது அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியுள்ளது.” என  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“நிதி அமைச்சராகப் பதவியேற்றுள்ள பஷில் ராஜபக்ஷவின் ஆளுமை என்பது எமது மக்களினால் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.

அவ்வாறான ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் பதவியேற்றுள்ளமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலிலும்  பயணித்துக் கொண்டிருக்கும்  எமது அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது.

அதேபோன்று, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பான நம்பிக்கையையும் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

மேலும், கடந்த காலங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்து, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட வேலைத் திட்டங்களும், எம்மால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்புக்களும் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நிலையான இடத்தினை பிடித்திருக்கின்றமையினால், அவரின் தற்போதைய பதவியேற்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் இறையாண்மைக்கும் – அரசியலமைப்புக்கும் புறம்பான வகையில் பதவியேற்றுள்ள பஷில்ராஜபக்ஷ !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் நிதியமைச்சராகவும் இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில்  பசில் ராஜபக்ஷவின் நியமனமானது அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் முற்றிலும் புறம்பானது என மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சுட்டிக்காட்யுள்ளது.

இந்த விடயம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட ரீதியான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேசியபட்டியல் ஆகியவற்றில் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்காத பசில் ராஜபக்ஷ, தற்போது வெற்றிடமாகியிருக்கும் தேசியபட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பதானது அரசியலமைப்புக்கும் இறையாண்மையையும் முற்றிலும் முரணான செயற்பாடாகும் என விமர்சிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தமையினால் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதியை இழந்திருந்தார் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும் என்று அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடந்த பொதுத் தேர்தலின்போது, இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தமையினால் நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதியை பசில் ராஜபக்ஷ இழக்கவேண்டியேற்பட்டது. இந்த நிலையில், வெற்றிடமாகியிருக்கும் தேசியபட்டியல் ஆசனத்திற்கு தற்போது பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையானது இலங்கை மக்களின் இறையாண்மையைப் புறக்கணிப்பதாகவும் அந்த நிலையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

“நியுசிலாந்தில் பிரதமர் உரையாற்ற இரண்டு நிமிடமும் இலங்கையில் 69 நிமிடமும் எடுத்தது. ஆதலால் இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.” – இரா.சாணக்கியன்

அரசாங்கத்தில் உள்ள இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(07.07.2021) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இளைஞர் யுவதிகளுக்கு அதிக சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். இலங்கையில் இன்று பென்சன் வாங்கிய பின்னர் நாட்டுக்கு சேவையாற்றும் முறையொன்று உருவாகியுள்ளது. 60 வருடங்கள் தமது குடும்பத்துக்காக உழைத்து அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை பெற்றுவிட்டு, பென்சன் வாங்கிய பின்னர் தான் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் சிலர் உள்ளனர்.

எனவே இளைஞர் யுவதிகளுக்கு இளமை காலங்களில் சந்தர்ப்பங்களை பெற்றுகொடுங்கள். வேட்பு மனுத்தாக்கலில் மாத்திரம் 100க்கு 25 வீதம் இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதால் மாத்திரம் இளைஞர் யுவதிகளில் பிரதிநிதிததுவத்தை அதிகரிக்க முடியாது.

தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படவேண்டும்.  அதில் முறையொன்று இருக்கும் வரை அது சிரமமான விடயம். மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள், பணம் படைத்தோரிடம் போட்டியிட்டு சாதாரணமானவர்கள் வெற்றிபெற முடியாது.

தேர்தல் பிரசாரம் முக்கியமானது. பெண்களுக்கும் விசேட இடங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். சில பிரேதேசங்களில் பெண்  பிரதிநிதிக்கு பதிலாக அவர்களது கணவன்தான்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே வெற்றியளிக்கும் முறையொன்றை நாங்கள் உருவாக்க வேண்டும். உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் பின்லாந்தில் இளம் வயதுடைய பெண் பிரதமர் உள்ளார். இத்தாலி போன்ற நாடுகளில் 33 வயதில் நிதியமைச்சர் உள்ளார். நியுசிலாந்து பிரதமருக்கு 39 வயது. இலங்கையில் அவ்வாறான இளம் பிரதமர் ஒருவர் வர வேண்டும் என்று நான் நம்பிக்கை கொண்டு்ளேன்.

அரசாங்கத்தில் உள்ள இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம். துமிந்த திசாநாயக்க போன்றவர்கள் இலங்கையில் இளம் அமைச்சர்களாக உள்ளனர்.  அவ்வாறான இளம் தலைவர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும். கட்சி பேதங்களுக்கு அப்பால் இளைஞர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்ப வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கின்றேன்.  நாமல் ராஜபக்ஷவை பிரதமராக்க போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கட்சி பேதமின்றி இவ்வாறு இளஞர் ஒருவர் பிரதமரானால் எங்களுக்கும் விருப்பம். எனினும் நாமல் ராஜபக்ஷ மூன்றாவது சக்கரமாக பசில் உள்ளதாக கூறினார்.

எனினும், அந்த இடத்துக்கு அவர் வந்திருக்கமுடியும்.  இலங்கைக்கு இளம் பிரதமர் ஒருவர் வந்தால் நல்லது. நியுசிலாந்தில் பெண் பிரதமர் இரண்டு வருடங்களில் செய்த சேவையை இரண்டு நிமிடங்களில் கூறினார்.எமது நாட்டில் ஒரு வருடத்தில் செய்த சேவைகளை கூற 69 நிமிடங்கள் எடுத்தன. எனவே இளைஞர் யுவதிகளுக்கு இடமளிக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிறுத்தப்பட்டது அஸ்ட்ரா செனெகாவுக்கு பைஸர் செலுத்தும் திட்டம் !

அஸ்ட்ரா செனெகாவின் முதலாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு 2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 3 ஆம் வாரத்தில் 1.4 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன. இதன் காரணமாகவே பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் அஸ்ட்ரா செனெகாவின் முதலாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி – உடலில் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி !

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர், உடலில் தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொரளை பொலிஸார் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவுக்கு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தீ காயங்களுக்கு உள்ளான குறித்த சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சைப் பெறுவதாகவும், வாக்கு மூலம் ஒன்றினைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கவலைக் கிடமாக நிலைமை உள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

16 வயதான குறித்த சிறுமி, அட்டன் – டயகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்று உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் தமக்கு அறிவித்து முறையிட்டதாக பொரளை பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமி வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெளத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் தந்தை, தாய் மற்றும் குறித்த சிறுமியை வீட்டு வேலைக்கு கையளித்த நபர் மற்றும் வீட்டில் வேலை செய்த மற்றொரு ஆணின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந் நிலையில் குறித்த தீப்பரல் தொடர்பில் சேகரிக்கப்பட்டுள்ள சான்றுப் பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற அனுமதியளிக்குமாறு பொலிசார் கோரிய நிலையில் அதற்கு நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம அனுமதியளித்தார்.

மகிந்தவின் அமைச்சும் – பவித்ரா வன்னியாராச்சியின் ஆசனமும் பஷில் ராயபக்ஷவிடம் !

இன்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொருளாதார கொள்கைகள் மற்றுத் திட்டமிடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதுவரை காலமும் நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ச கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றத்தை அடுத்து நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் முன் வரிசையில் அவருக்கு 9 வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த ஆசனம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சுகாதார அமைச்சருக்கு 10வது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2018 புலிப்பாட்டுடன் பிரச்சாரம் செய்த கௌரவ.அங்கஜன் இராமநாதன் – பயங்கரவாதத்தை வென்ற தலைவர் என பஷில் ராஜபக்ஷவுக்கு பாராட்டு !

தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். இதற்கமைய நிதி அமைச்சராக அவர் பதவி ஏற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

May be an image of 2 people

இந்த நிலையில் அமைச்சராக பதவியேற்றுள்ள பஷில்ராஜபக்ஷவை பெருமைப்படுத்தி யாழ்.நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் வெகுவாக புகழ்து முகநூல் தளத்தில் பதிவையொன்றையிட்டுள்ளார். வடக்கிற்கு வசந்தத்தை கொண்டுவந்தவர் – பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவித்த உன்னத தலைவர் என்றெல்லாம் குறித்த பதிவில் புகழ்ந்துள்ளார் அங்கஜன் இராமநாதன்.

 

இவ்வாறு புகழ்ந்து தள்ளியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  தான் 2018 தேர்தல் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஒன்றின் போது விடுதலைப்புலிகளின் பாடலை ஒலிபரப்பி பெரிய சர்ச்சையில் மாட்டிக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் பெரும்பூகம்பமாகியிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் 2018ல்  பேசியிருந்த சீ.வி.கே சிவஞானம் போராட்டத்தில் தொடர்புபடாதவர்கள் அதனை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் எனக்குறிப்பிட்டிருந்தார்.  இதற்கு பதிலளித்திருந்த அங்கஜன் இராமநாதன் “அது எங்களுக்கான  போராட்டம். உணரவுப்போராட்டம். உரிமைப்போராட்டம். அதில் தமிழர்களாக  எங்களுக்கெல்லாம் பங்கு இருக்கிறது எனக்கூறியிருந்த அதே அங்கஜன் இராமநாதன் தான் பஷில்ராஜபக்ஷவை பெருமைப்படுத்தி பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவித்த உன்னத தலைவர் என பாராட்டியுள்ளார்.

 

இரட்டை வேடம் போடுவது போன்றது தான் இதுவும். ஒன்று கோட்டுக்கு அந்தப்பக்கம் நில்லுங்கள் நேரடியாக – வலிமையாக ஆயுதப்போராட்டத்தை எதிருங்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போல. தவறு என்றால் தவறு தான்.  ஆயுதப்போராட்டம் தவறு என்றால் அது பற்றி புகழும் பாடலும் தவறே.

ஓட்டுக்காக யாழில் ஒரு அரசியல் முகம் – தென்னிலங்கையில் ஒரு அரசியல் முகம் என்றெல்லாம் காட்டாதீர்கள். இல்லாது விடின் கோட்டிற்கு இந்தப்பக்கம் நில்லுங்கள் வழமையான சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல  போலித்தேசியம் பேசிக்கொண்டு நில்லுங்கள். நடுநிலமை என்ற பெயரில் ஏதோ போல செயற்படாதீர்கள்.

குறித்த பாடலில் ஆயுதக்கலாச்சாரத்தயோ புலிகளயோ ஊக்குவிப்பது போல இல்லை எனவும் அது தமிழர்களின் உணர்ச்சிப்பாடல் இல்லை எனவும் அவர் அன்று சப்பைக்கட்டு கட்டியிருந்தார்.  அந்தப்பாடலின் வரிகள் வருமாறு

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍.இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா. தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம் உந்தன். தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம் அழுவதன்றி உனக்கு . வேறு மொழியுமில்லையாம் இன்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம் .அகதி யாகியே தெருவினோரமாய் திரிவதேனடாஅடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா. இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா. அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா . அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா . இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா . இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா .புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா . புலிகள் சேனையோ டெழுந்து நின்றுமே தடைகள் மீறட. தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா.”

என்றதாக அந்தப்பாடல் அமைந்திருக்கும்.

இது சிந்தனைக்கு மட்டுமே . மற்றும் படி கட்டுரையானது தனிப்பட்ட எந்த அரசியல் நோக்கமும் கொண்டதல்ல. ஒரு அரசியல் கொள்கை இருக்குமாயின் அதில் தெளிவாக நடை போடுங்கள். அபிவிருத்தியே உங்களை மக்கள் தெரிவு செய்தமைக்கான காரணம். அதற்கான நகர்வுகளை ஆரோக்கியமான தளத்தில் மேற்கொள்ளுங்கள்.