11

11

பிரதேசசபை உறுப்பினர் சிவக்குமார் மரணம்: தற்கொலையா? கொலையா?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று காலை (July 11, 2021) கண்டெடுக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த, இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கள் யூலை 5 வவுனியா தோணிகல் பகுதியில் உதயச்சந்திரன் சஞ்ஜீவ், வீட்டிற்கு வெளியே காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். விபுலானந்தா கல்லூரியில் தரம் 10இல் கல்வி பயிலும் இம்மமாணவர் வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கச் சென்றவர் காலையில் வீட்டிற்கு வெளியே காயங்களுடன் மரணித்த நநிலையில் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு உள்ளாகவே பிரதேசசபை உறுப்பினர் சிவக்குமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று நிலையில் வந்து நிற்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகளின் எண்ணிக்கை, வன்செயல் நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் தமிழ் அரசியல் வாதிகள் யாரும் இதுபற்றி இதுவரை எவ்வித கவனமும் செலுத்தவில்லை. எவ்வித விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு இருக்கவும் இல்லலை. இந்நிலையில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருடைய மரணமே கொலையா? தற்கொலையா? என ஊசாலாடிக்கொண்டுள்ளது.

தங்களைச் சார்ந்த ஒரு இளம் அரசியல் வாதியின் மரணமே இவ்வாறு கேள்விக்குறியாகி நிற்பதைத் தொடர்ந்தாவது இந்த அரசியல் வாதிகள் சிந்திப்பார்களா? எனக் கேள்வி எழுப்புகின்றார் சாவகச்சேரியயைச் சேர்ந்த தேநீர்க்கடை உரிமையாளரான தவநேசன். தேசம்நெற்க்கு தவநேசன் மேலும் தெரிவிக்கையில் யாழ் நகர மேயரும் அவருடைய கட்சியினரும் முதலில் இந்த வன்முறை, தற்கொலை விடயங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களிடம் அதிகாரம் இல்லாவிட்டால் இதற்கு எதிரான போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், சிவகுமார் கஜேன் (வயது 28) ருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இவர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மேயர் மணிவண்ணனின் நெருங்கிய மற்றுமொரு உறுப்பினரான பார்தீபன் வரதராஜன் உடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. பார்தீபனுடைய முகநூலிலும் நல்லூர் பூங்கா பற்றிய பதிவே காணப்படுகின்றது. இறந்த சிவகுமார் பற்றிய எப்பதிவுகளும் இல்லை. மேயர் மணிவண்ணனின் முகநூலிலும் தனக்கு ஆதரவான பிரதேசசபை உறுப்பினரின் மரணம் தொடர்பான எவ்வித பதிவுகளும் காணப்படவில்லை.

அதேசமயம் தேசம்நெற் க்கு பிந்திக் கிடைத்த தகவல்களின் படி இவருடைய மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக பிரதேசசபையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விசாரணைகள் முடிவடையும் வரை உறுதியாக எந்த முடிவுக்கும் வர முடியாது எனத் அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்கொலையாக இருந்தால் அதற்கு என்ன காரணம் என்பதும் தெரியவரவில்லை. இவருக்கு திருமண நிச்சயம் நடந்திருப்பதாகவும் சில முகநூல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவான பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் ஓராண்டுக்கு முன்னதாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவருகின்றது. கோப்பாய் பிரதேச சபையைச் சேர்ந்தவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தற்கொலை தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மரணிக்கின்றனர் என்பது தற்செயலான நிகழ்வுகளா? அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது ஆராயப்பட வேண்டியதொன்று என கடந்த ஆண்டு மரணித்த கோப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் ஊரவரான, தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத பெண் தேசம்நெற் க்கு தெரிவித்தார்.

கொத்தலாவல பல்கலைகழக சட்டமூலத்துக்கு எதிராக திரும்பியுள்ள அமைச்சர் விமல்வீரவன்ச !

கொத்தலாவல பல்கலைகழக சட்டமூலம் தொடர்பான எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. நாடு முழுமையான இராணுவமயமாக்கலை நோக்கி நகர்வதாக தொடர்ச்சியான அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த சட்டமூலம் தொடர்பாக அரசின் பங்காளிக்கட்சிகளுக்குள்ளேயே குழப்பம்  ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

முக்கியமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல்வீரவன்சவின் கட்சி உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சமல்ராஜபக்சவிடம் விமல்வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்  எனவும்  விமல்வீரவன்சவின் எதிர்ப்பு காரணமாக இந்த சட்டமூலத்தை ஆகஸ்ட்மாதம் வரை பிற்போட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனியார் பல்கலைகழகங்களை அமைப்பதை தங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது குறிப்பிட்ட ஏற்பாடுகளை அகற்றாமல் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவந்தால் அதனை எதிர்ப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“நான் பிறந்தபோது அமைச்சர் பதவியுடன் பிறக்கவில்லை.இறக்கும்போது அமைச்சர் பதவியை என்னுடன் கொண்டு செல்லப்போவதில்லை.” – அமைச்சர் உதயகம்மன்பில

“நான் பிறந்தபோது அமைச்சர் பதவியுடன் பிறக்கவில்லை.இறக்கும்போது அமைச்சர் பதவியை என்னுடன் கொண்டு செல்லப்போவதில்லை. எனவும் தான் அரசியல் அரங்கில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலைகள் குறித்து தான் அச்சமடையவில்லை.” என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நான் எப்போதும் எனது வாழ்க்கையில் எதற்கும் அச்சமடைந்ததில்லை, நீங்கள் நம்பாவிட்டால் எனது முகத்தில் அச்சம் கவலையை எப்போதாவது பார்த்தீர்களா என எனது தாயை கேளுங்கள். எனத்தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பசில்ராஜபக்ச ஆதரவளிப்பாரா..?  என்ற கேள்விக்கு நான் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்து பதில் அளிக்கமாட்டேன் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

நீங்கள் அமைதியாக இருப்பதன் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றீர்களா..? என்ற கேள்விக்கு அமைதியும் ஒரு செய்தியை சொல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் அமைச்சின் ஒரு பகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றனவே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நான் பிறந்தபோது அமைச்சர் பதவியுடன் பிறக்கவில்லை.இறக்கும்போது அமைச்சர் பதவியை என்னுடன் கொண்டு செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் பிரதமரின் பரிந்துரையின் கீழ் எந்த அமைச்சரையும் மாற்றலாம் அனைத்து அமைச்சர்களும் அதற்கு கட்டுப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இணையவழியில் விற்கப்பட்ட சிறுமி – தொடரும் கைதுகள் – காவல்துறை அதிகாரி கைது !

இலங்கையில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 15 வயதான சிறுமியை பாலியல் சுரண்டலை நோக்காக கொண்டு இணைய வழியாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பின் புறநகர்பகுதியில் 15 வயதான சிறுமியை இணைய வழியாக விற்பனை செய்தமை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை சுமார் 40 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சிலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் காவல்துறை அதிகாரி மற்றும் முன்னாள் வங்கியின் முகாமையாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரையும் கொழும்பு பிரதம நீதவான் முன், முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், மிஹிந்தலே பிரதேச சபையின் பிரதி தவிசாளர், வாகன ஓட்டுநர்கள், விளம்பரத்தை வடிவமைத்தவர், கப்பலின் கப்டன், கப்பல் பணியாளர்கள், இரத்தினக்கல் வியாபாரிகள், விளம்பரத்தை வெளியிட்ட இணையத்தளங்களின் நான்கு உரிமையாளர்கள்,  மாலைதீவின் முன்னாள் அமைச்சர் மொஹமட் அஷ்மாலி, சிறுமியை பாலியல் சுரண்டலுக்காக பயன்படுத்திய ஹோட்டலின் முகாமையாளர், ஸ்ரீலங்கா கடற்படையின் இதயநோயியல் நிபுணர் உள்ளிட்ட 37 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெல்டா வைரசுக்கு எதிராக போராடும் ஆற்றலுள்ள சினோபார்ம் தடுப்பூசி !

சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை குறித்த ஆய்வின் முடிவுகளை வௌியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து விஷேட பாதுகாப்பு வழங்குகின்றமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு !

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இவர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவிலிருந்து இலங்கை வந்தடைந்த 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் !

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (11.07.2021) காலை நாட்டை வந்தடைந்தன.

அதன்படி, குறித்த தடுப்பூசி தொகையை கொண்டு வருவதற்காக சென்ற இலங்கை விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளது.

அதே நேரம் நாட்டில் அடுத்த வாரத்தில் கொவிட் 19 வைரஸுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்தப்படி சீன தயாரிப்பான 20 லட்சம் சைனோபாம் கொவிட் தடுப்பூசிகளுக்கான மருந்து இன்று காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேபோன்று மேலும் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் மற்றுமொரு ஒரு தொகை தடுப்பூசிகளுக்கான மருந்து இந்த மாதத்தின் 3 ஆவது வாரத்தில் நாட்டிற்குக் கிடைக்கவிருப்பதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதத்தை அண்மிக்கும்போது நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணியை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் ரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவரான விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன மேலும் கூறினார்.

உலகின் குள்ளமான பசுவை பார்வையிட படையெடுக்கும் மக்கள்!

பங்களாதேஷில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண படையெடுக்கின்றனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீற்றர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணையில் ஒரு பசு உள்ளது. அதனை பார்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரண்டு வருகின்றனர். ராணி என பெயரிடப்பட்டு உள்ள அந்த பசு 51 சென்ரி மீற்றர் நீளமும் 26 கிலோகிராம் எடையுமுள்ளது.
இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது. கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசுவை விட இது 10 சென்ரி மீற்றர் குறைவு என்று அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ., என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாராத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோபா அமெரிக்க கால்பந்து தொடர் 2021 – 28 ஆண்டுகளுக்குப் பின்னர் சாதித்த ஆர்ஜெண்டினா !

கால்ப்பந்தாட்ட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கால்ப்பந்து தொடர்கள் இரண்டான யூரோ – கோபா நடைபெற்றுக்காண்டிருக்கின்றன. இந்நிலையில் ரசிகர்களின் விருப்புக்குரிய தொடரான கோபா அமெரிக்க கால்பந்து தொடர் இன்று காலை நிறைவுக்கு வந்திருக்கிறது.

அமெரிக்க கண்டத்தின் பிரபலமான பிரபல காலபந்து அணிகளான பிரேசில் மற்றும் ஆர்ஜெண்டினா அணிகள் போட்டியில் களமிறங்கின.

தியாகோ சில்வா தலைமையிலான நடப்புச் சம்பியனான பிரேசில் அணியும் மெஸ்ஸி தலைமையிலான  ஆர்ஜெண்டினா அணியும் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மோதின.

இந்த போட்டித் தொடரை பொறுத்தவரை 19 ஆட்டங்களில் தோல்வியை தழுவாத ஆர்ஜெண்டினா, 13 ஆட்டங்களில் தோல்வியையே தழுவாத பிரேசில் அணியும் மோதுகின்ற ஆட்டம் என்கின்ற காரணத்தால் ரசிகர்கள் மிக பெருவாரியாக இந்த போட்டியை எதிர்பார்த்து இருந்தனர் என்பதும் முக்கியமானது.

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 27-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் 1-0 எனும் அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கும் ஆர்ஜெண்டினா கோபா அமெரிக்க மகுடத்தை முடிசூட்டிக் கொண்டுள்ளது.நடப்புச் சம்பியனான பிரேசில் தங்கள் நாட்டில் இடம்பெற்ற போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் கிண்ணத்தை தக்கவைக்க முடியாது தோல்வியை தழுவியது இங்கே குறிப்பிடத்தக்கது.

1993 ஆம் ஆண்டு ஆர்ஜெண்டினா அணி கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் இப்போது மீண்டும் மெஸ்ஸி தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.