14

14

முல்லைத்தீவில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இளைஞர்குழு – ஐவர் படுகாயம் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் இளம் குடும்ப பெண்ணொருவர் இரண்டு ஆண்கள் என மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் ,

13.07.2021 அன்று வள்ளுவர்புரம் கிராமத்தில் இளைஞர் குழுக்கழுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டாக மாறியுள்ளது. கஞ்சா பாவனையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் குழு அங்கிருந்த உந்துருளிகள்,பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளதுடன் இளம் குடும்பபெண் ஒருவர் மீதும் மேலும் இரண்டு ஆண்கள் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளது.

இதன் போது படுகாயமடைந்த இளம் குடும்ப பெண் மற்றும் இரண்டு ஆண்கள் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மூவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுடன் சம்மந்தப்பட்ட 5 பேரை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் பலரை கைதுசெய்யவுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

வள்ளுவர்புரம்,றெட்பான,கிராமங்களில் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பாவனை அதிகரித்து வருவதாகவும் இவர்களால் பல்வேறு சமூக விரோத செயல்களும் பெண்கள் மீதான சேட்டைகளும் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

“தொடரலையான போராட்டங்களின் பின்னணியில் யார் என்பது எமக்கு தெரியும்.” – சரத் வீரசேகர

“போராட்டங்கள் அலையாக திரண்டுள்ளமையின் நோக்கத்தை நன்கு அறிவோம். சுகாதார தரப்பினரது கோரிக்கைகளுக்கு அமையவே போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் தற்போது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளார்கள். போராட்டம் அலை போல் திரண்டுள்ளது என்றே குறிப்பிட வேண்டும். பேச்சு சுதந்திரம், மற்றும் ஒன்று கூடல் ஜனநாயக உரிமையாக காணப்படுகிறது. இதனை இவர்கள் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் பூகோள மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தை நாமும் தற்போது எதிர்க் கொண்டுள்ளோம். நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது. இதன் காரணமாக ஒன்று கூடல் மற்றும் போராட்டங்களில் ஈடுப்படுவதற்கு மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு தரப்பினர் கடந்த வாரம் பாராளுமன்ற சுற்று வட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணான வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். பொது சுகாதார சேவை அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமையவே அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். .இதனை தவறு என எவராலும் குறிப்பிட முடியாது.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல விடயங்களையும், முக்கிய பண்டிகைகளையும் கொண்டாடாமல் தியாகம் செய்துள்ளார்கள். பண்டிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் எவரும் வீதிக்கிறங்கி போராடவில்லை. . தற்போதைய போராட்டங்கள் குறுகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு காணப்படுகிறது.

போராட்டகாரர்கள் எல்லை மீறி செயற்பட்டதன் காரணமாகவே பொலிஸார் அவர்களை கைது செய்தார்கள். நல்லாட்சி அரசாங்கம் போராட்டத்தை அடக்கிய வகையில் நாம் செயற்படவில்லை. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டமை சுகாதார தாரப்பினரது பரிந்துரைகளுக்கு அமையவே இடம் பெற்றது. ஆகவே பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு ஒரு சிலரது பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஒட்டு மொத்த மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. தனிமைப்படுத்தல் சட்டம் விரிவுப்படுத்தப்பட்ட வகையில் செயற்படுத்தப்படும். என்றார்.

இலங்கையில் நடைமுறைக்கு வருகிறது பசுவதை தடை !

நாட்டில் பசு வதையை முழுமையாக தடை செய்வதற்கான சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உறுதிப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலம் அடுத்துவரும் சில வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பௌத்த சாசன அமைச்சர் என்ற அடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர், சட்டமூலத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதையடுத்து, ஏழு நாட்களின் பின்னர் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும்.

இதற்கமைவான, எண்ணக்கரு பத்திரத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வாய்ப்பு தாருங்கள் – தெரிவுக்குழுவுக்கு தினேஷ் சந்திமால் கடிதம் !

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வாவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், இலங்கையில் இதுவரை உருவாகிய சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களின் திறமையுடன் தனது திறமையை ஒப்பிடும் வகையிலான தரவுகளை சந்திமால் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்குாிய பூரண தகுதியை கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தமது திறமை தொடர்பில் கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு தெரியப்படுத்தல் மற்றும் தமது கிரிக்கெட் பயணத்தின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு அக்குழுவுக்கு சந்தர்ப்பம் வழங்குதல் என்பனவே இக்கடிதத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தமது தார்மீக நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை என்றும், கடந்த கால கிரிக்கெட் வாழ்க்கையில் தனது தகுதிகள் சிறந்த நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அணியின் ஏனைய வீரர்களின் திறமையை மாத்திரம் கருத்திற்கொண்டதாகவும், அணியில் விளையாடிய காலப்பகுதியில் எடுத்த அனைத்து தீர்மானங்களையும், முதலில் அணி மற்றும் நாடு என்று சிந்தித்தே எடுத்ததாகவும் சந்திமால் தெரிவித்துள்ளார்.

தனக்கு விடுக்கப்படும் அழைப்பின் பிரகாரம் தான் எந்தவொரு தயக்கமும் இன்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடத்திலும் துடுப்பாடியுள்ளதாக சந்திமால் மேலும் தெரிவித்தார்.

31 வயது என்பது ஒரு வீரர் தனது திறமையை இழக்க வேண்டிய நேரம் அல்ல, மாறாக அதனைக் கூர்மைப்படுத்தும் நேரம். இந்த கடிதத்தின் மூலம், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளையும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்களையும் சந்திக்க வாய்ப்பு கோரியுள்ளதாக சந்திமால் தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தில், ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக, இந்த நேரத்தில் தமது எதிர்காலம் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து அந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டால், அதனை புறக்கணிக்காது உத்வேகத்துடன் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.

“பல சலசலப்புக்களை எதிர்கொண்டவன் நான், சுயநலப் பூச்சாண்டிகளினால் என்னுடைய மக்கள் நலச் செயற்பாடுகளை தடுக்க முடியாது.” – அமைச்சர் டக்ளஸ்

“பல சலசலப்புக்களை எதிர்கொண்டவன் நான், சுயநலப் பூச்சாண்டிகளினால் என்னுடைய மக்கள் நலச் செயற்பாடுகளை தடுக்க முடியாது.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை இன்று(07.14.2021) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம் எமது பிரதேச மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்களையும் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில், ஆய்வு ரீதியாகப் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள புரிதல் காரணமாக ஏராளமானோர் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஒன்றரை வருடங்களில் நூற்றுக்கணக்கான பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் ஆயிரக்கணக்கான பண்ணைகளை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான பண்ணைகளுக்கு இலட்சக்கணக்கான கடலட்டை குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்து வளர்க்க வேண்டிய தேவையுள்ளது.

இந்நிலையிலேயே, 2016, 2017 காலப் பகுதியில் அப்போதைய அரசாங்கத்திடம்  அனுமதிகளை பெற்று, அரியாலையில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை அமைத்த இலங்கை சீனக் கூட்டு நிறுவனம், கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்துள்ளனர். இதற்கு தேவையான சட்ட ரீதியான அனுமதிகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.

கடலட்டைப் பண்ணையைப் பொறுத்தவரையில் அவசியமான அனுமதிகளைப் பெற்று செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படும்.

எனவே, நாரா – நக்டா – கடற்றொழில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஆலோசனைகளைப் பெற்று மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாது என அடையாளப்படுத்தப்படுகின்ற இடங்களில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு தழுவல் அடிப்படையிலான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, எமது மக்களின் பொருளாதார நலன்களையும் நாட்டிற்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக இந்தியா, மாலைதீவு, பங்களாதேஸ், நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.

அண்மையில்கூட இந்தியத் தூதுவரை சந்தித்து எமது கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியிருக்கின்றேன்.  அதேபோன்று முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் கோரியுள்ளேன். இவ்வாறான நிலையில்தான், கடந்த அரசாங்கத்தினால் நாட்டினுள் செயற்பட அனுமதி அளிக்கப்பட்ட குயிலான் நிறுவனம் கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்திருக்கின்றது.

இதுதொடர்பாக நேரடியாக நிலைமைகள் ஆராயப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி எமது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதிப்பில்லாத தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

மேலும், கௌதாரிமுனை கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான சுயநலப் பூச்சாண்டிகளினால் என்னுடைய மக்கள் நலச் செயற்பாடுகளை தடுக்க முடியாது. மக்களுக்கு தேவையானதையும் சரியானதையும் செய்வதற்கு எதிராக எத்தகைய எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயங்கப் போவதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான பல சலசலப்புக்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.“ எனவும் தெரிவித்துள்ளார்.

“தமது கோரிக்கைக்காக ஆசிரியர் சங்கம் 43 இலட்சம் மாணவர்களை பகடையாக பயன்படுத்துகின்றது.” – கெஹெலிய ரம்புக்வெல்ல காட்டம் !

கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கு 43 இலட்சம் மாணவர்களை பகடையாக வைப்பது எந்தளவுக்கு நியாயமானது ..? என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆசிரியர் சங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் செய்யப்பட்டனர். இதன் போது ஆசிரியர் சங்கத்தலைவரான ஜோசப்ஸ்டாலினும் கைதாகியிருந்தார்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் அவர்கள் விடுவிக்கப்படாது தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கம் தன்னுஐடய கற்பித்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்து பல இடங்களில் இணைய வழி கற்றல் நடைபெறாதுள்ளது.
இந்நிலையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது.
இக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் இணையவழிக் கல்வி நடவடிக்கைளிலிருந்து விலகியுள்ளமை படுமோசமான செயற்பாடாகவே கருத வேண்டும் , கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கு 43 இலட்சம் மாணவர்களை பகடையாக வைப்பது எந்தளவுக்கு நியாயமாகும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இலங்கை ஆசிரிய சங்கத்தினரும், தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொவிட் -19 வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு போராட்டங்கள் மற்றும் ஒன்றுகூடலுக்கு மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளன.

அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு புறம்பாகவே இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் தொடர்பிலான தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை. சுகாதார தரப்பினரது பரிந்துரைகளுக்கமையவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் எவ்வித அரசியல் நோக்கங்களும், தலையீடுகளும் காணப்படவில்லை.

தனிமைப்படுத்தலிலுள்ளவர்கள் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதினால் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். அதற்கான பல வழிமுறைகள் காணப்படுகின்றன. இவர்களுக்கு சார்பாக ஆசிரியர்கள் இணையவழிக்கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளமை முற்றிலும் தவறான செயற்பாடாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வித் துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்த பிரத்தியேக தொலைக்காட்சி அலைவரிசைகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.