“ராஜபக்ஷ வியாபார நிறுவனம், தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை விற்கின்றது.” என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
“ஜனாதிபதி, பிரதமர் மற்றும் புதிய நிதியமைச்சர் ஆகியோர், தமக்கு பணத்தை தேடும் வழி தெரியும் என கூறினாலும் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பணத்தை தேடும் வழியே தெரியுமென்பதை நாங்கள் நன்கு அறிவோம். சொந்த கணக்குகளில் வைப்பிலிடுவதில் அவர்களுக்கு நிகர், அவர்களே. நாட்டுக்கான நிதியை அவர்களுக்கு திரட்ட தெரியாது.
நாட்டுக்காக நிதியை திரட்டும் முறைமை, நாட்டின் கடனை செலுத்தபணம் தேடும் முறைமை தொடர்பில் அவர்களுக்கு தெளிவு உள்ளதா என்பது தொடர்பான கேள்வி இப்போதும் எழுகிறது. நாட்டின் நெருக்கடிக்கு பிரதான காரணம் கொரோனா என தொடர்ச்சியாக அரசாங்கம் தெரிவிக்கிறது, கொரோனா இல்லாவிட்டால் எமக்கு இந்த நெருக்கடி இல்லை என்கின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் இறக்குமதி, கட்டுமானப் பணிகளுக்கான மூலப் பொருள்கள் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளன. அவ்வாறு செய்தும் டொலர் நெருக்கடியிலேயே நாம் இருக்கிறோம். அரசாங்கம் இந் நெருக்கடி தொடர்பில் எதிர்வரும் மாதங்களுக்கு எவ்வாறு செயற்பட போகின்றது என்பதை, நாட்டுக்கு சொல்ல வேண்டும். இப்போது ராஜபக்ஷ வியாபார நிறுவனம், தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை விற்கின்றது. இதுவா அரசாங்கத்தின் கொள்கை,என நாம் கேட்கின்றாம்.
கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆனதும் மெஜிக் செய்வார் என்றனர். ஆனால், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதிப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று இப்போது சொல்கின்றனர்.அவரது அமெரிக்கா முறையைப் பயன்படுத்தியாவது இந்த நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.