20

20

பாடத்திட்டங்களை முடிக்காமல் பரீட்சையை வைப்பீர்களா..? – சஜித் பிரேமதாச கேள்வி !

முழுமையான பாடத்திட்டங்கள் நிறைவடையாத நிலையிலும் ஒன்லைன் கற்றலில் சிக்கல்கள் காணப்படும் சூழலிலும் பரீட்சை குறித்து ஒரு முடிவை எவ்வாறு எட்டினீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை சில மாதங்களுக்குள் முடிக்க முடியுமா..?  என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

பாடத்திட்டங்களை முடித்த பின்னர் பரீட்சைகள் குறித்து முடிவு எட்டுவதே புத்திசாலித்தனமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தடுப்பூசியை மாணவர்களுக்கு வழங்குவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லாத நிலையில் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்றும் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

“மலையக சிறுமி இறப்பு விடயத்துக்கு அதிக முக்கியத்துவம் வேண்டாம்.” – அமைச்சர் சரத் வீரசேகர

மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் பதியுதீன் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “கடந்த வாரம் மலையகச் சிறுமி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலே எரியுண்டு மரணித்திருக்கிறார்.

பொறுப்புவாய்ந்த ஒரு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், சமூகத்தை வழிநடத்துபவர் என்ற ரீதியில் மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் பதியுதீன் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே நேரத்தில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 16 வயதான, ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்த விடயம், சிறுபான்மையினரை உள்ளடக்கியதாக இருப்பதால், இந்த விடயம் தொடர்பில், அதிகமாக விளம்பரப்படுத்தப்படக்கூடாது, குறிப்பாக அரசியல் மயமாக்கப்படக்கூடாது. அளவுக்கு அதிமான முக்கியத்துவத்தை வழங்கவேண்டாம்  எனவும்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

“நாடு இப்போது நான்காவது அலையின் விளிம்பில் உள்ளது.” – மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

கொரோனா வைரஸின் நான்காவது அலையின் ஆரம்பத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ,

மேலும் மக்கள் தொகையில் 8% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசிகளில் மட்டும் நம்பிக்கை வைப்பதன் மூலம் முன்னேற முடியாது என்றும் குறிப்பிட்டார்.

டெல்டா வைரஸ் மாறுபாடு வேகமாக பரவி வருவதாகவும், நாடு இப்போது நான்காவது அலையின் விளிம்பில் உள்ளது என்றும் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த காலகட்டத்தில் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நான்காவது அலையைத் தடுக்கவும் பொதுமக்களும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“இணைய பாவனை சிறுவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளது.” – அஜித் ரோஹண

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இணையம் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் துஷ்பிரயோகம், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் அவமானம் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்ய மூன்றில் ஒருபகுதியினர் முன்வருவதில்லை என குறிப்பிட்டார்.

யூடியூப், வைபர், வாட்ஸ்அப், ஐஎம்ஓ, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக வலைத் தளங்கள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சமூகத்தில் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையிலாத் தீர்மானம் தோற்கடிப்பு !

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையிலாத் தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம்பிக்கையிலாத் தீர்மானதிற்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இரண்டு நாட்கள் விவாதம் இடம்பெற்ற நிலையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் செலுத்தப்பட்ட நிலையில் 91 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையிலாத் தீர்மானம் தேற்கடிக்கப்பட்டது.

13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – துறவி உட்பட நால்வர் கைது !

இலங்கையில் நாளுக்கு நாள் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரலித்து வருகின்றது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்படுகின்ற போதிலும் கூட துஷ்பிரயோகங்கள் எண்ணிக்கை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளதாக அண்மையில் கல்வியமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (என்சிபிஏ) விஷேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஒரு துறவி மற்றும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டனர்.

ராஜகிரியாவில் உள்ள ஓர் ஆலயத்தின் 39 வயதான தலைமை அதிகாரி மற்றும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 352இன் கீழ் வயது குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்களுக்கு விளக்கமறியலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

“ரிசாத் பதியுதீனின் வீட்டில் தீயிட்டு உயிரிழந்துள்ள மலையக சிறுமி பற்றி ஏன் எதிர்க்கட்சியினர் வாய் திறக்கிறார்கள் இல்லை.” – இராஜாங்க அமைச்சர் கேள்வி !

ஜனநாயகத்தை பற்றி பேசும் எதிர்க்கட்சியினர், ரிசாத் பதியுதீனின் வீட்டில் தீயிட்டு உயிரிழந்துள்ள மலையகத்தைச் சேர்ந்த சிறுமி குறித்து மௌனம் சாதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளதுடன் இந்த விடயத்தில் முதுகெலும்புடன் செயற்படுங்கள் எனவும் எதிர்க்க்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்  இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்தகாலத்தில் ஜனநாயகத்தை பற்றி பேசியவர்கள், எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் றிசாட் பதியுதீனின் வீட்டில் சிறுமி ஒருவர் தீயிட்டு உயிரிழந்துள்ளார். இது பற்றி நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தை பேசவில்லை. எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர் ஒருவரது வீட்டில்தான் இந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமி உயிரிழந்துள்ளமை மாத்திரமல்லாது பொலிஸ் விசாரணைகளில் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முடிந்தால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அவரை வெளியேற்றுங்கள். குறைந்தப்பட்சம் தற்காலிகமாகவேனும் தடை விதியுங்கள்.

கடந்த காலத்தில் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தீர்கள். ஆனால், எதிர்கட்சிகளாக ஐ.தே.கவும், ஜே.வி.பியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த சிறுமி பற்றி ஒருவார்த்தையைக்கூட பேசவில்லை.

முடிந்தால் இந்த விடயத்தில் முதுகெலும்புடன் செயற்படுங்களென கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

இலங்கையில் இணைய ரீதியிலான பாலியல் தொழிலுக்கு 27000 பெண்கள் பதிவு – வெளியான அதிர்ச்சி தகவல் !

இலங்கையில் இணையத்தளங்கள் ஊடாக பாலியல் ரீதியிலான தொழிலுக்காக விற்பனை செய்வதற்கு சுமார் 27000 பெண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது.

இவர்களில் பலரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இவர்களில் சிலர் தனியார் துறை மற்றும் அரச துறைகளில் தொழில் புரிந்து ஓய்வு நேரங்களில் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களில் பலரும் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குறைந்த வயது யுவதிகள் தொடக்கம் 40, 45 வயதுக்கு இடைப்பட்டவர்களும் இதில் காணப்படுகின்றனர்.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 48 பேர் பலி !

கொரோனா வைரஸினால் மேலும் 48 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்கள் 28 பேரும் பெண்கள் 20 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 86 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 61 ஆயிரத்து 848 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 20 ஆயிரத்து 744 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

“யாழ் மக்களின் பொறுப்பற்ற செயலாலே புதிய கொரோனா கொத்தணி.” – சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டு !

“வடக்கில் யாழ் மாவட்டத்தில் உருவாகியுள்ள கொரோனா கொத்தணிகளுக்கு மக்களின் பொறுப்பற்ற செயல்களே காரணம்.” என  கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பருத்தித்துறை கொத்தணி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கொரோனாத் தொற்றுப் பரவலால் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது முகக்கவசங்களைக் கட்டாயம் அணிய வேண்டும்.   ஆனால், பல இடங்களில் முகக்கவசங்களை நாடிகளுக்குக் கீழே விட்டுக்கொண்டு மக்கள் வெளியில் பயணிக்கின்றனர். இதில் யாழ். மாவட்ட மக்களும் விதிவிலக்கல்லர்.

கொரோனாவின் முதலாம், இரண்டாம் அலைகளைக் கட்டுப்படுத்த வடக்கு மக்கள் குறிப்பாக யாழ். மக்கள் முழு ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள். ஆனால், மூன்றாம் அலையின்போது யாழ். மக்களின் பொறுப்பற்ற செயல்கள் அதிகரித்துள்ளன.

இதனால் யாழ். மாவட்டத்தில் மூன்றாம் அலையில் அதிகளவு கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. பல இடங்களில் கொத்தணிகள் உருவாகி பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்கள் சிலர் இரகசியமாக வெளியேறி வேறு பிரதேசங்களுக்குச் சென்று அன்றாட தொழில்களில் ஈடுபடுகின்றனர். இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் ஆகியோரின் புலானாய்வுத் தகவல்கள் மூலமும், சுகாதாரப் பிரிவினரின் முறைப்பாடுகள் ஊடாகவும் இதனை நாம்  அறிந்துகொண்டோம்.

எனவே, யாழ். மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்த முன்களப் பணியாளர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வடக்கில் யாழ். மாவட்ட மக்களுக்கே அதிகளவு கொரோனாத் தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். இங்கு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அதிகம் என்றபடியால் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம். மேலும், தடுப்பூசிகள் வழங்கப்படும் – என்றார்.