22

22

சீனாவில் வரலாறு காணாத மழை – மூன்றரை லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் பாதிப்பு !

சீனாவில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், வெள்ள பாதிப்பில் சிக்‍கி 30க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவின் ஹென்னான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கனமழை காரணமாக கயங்கர வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டது. ஒரு வருடத்தில் பெய்யும் மழை, மூன்று நாட்களில் கொட்டித் ​தீர்த்ததால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஷெங்ஷெள நகரில் மட்டும் மூன்று நாட்களில் 62 சென்டி மீட்டர் மழை பதிவானது.

இந்நிலையில், மழை பாதிப்பில் சிக்‍கி உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 33ஐக்‍ கடந்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் மூன்றரை லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்‍கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ஆளுங்கட்சியுடன் இணைந்து மாவட்ட அபிவிருத்திக்கான நகர்வுகளை நானும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் மேற்கொள்கின்றோம்.” – வியாழேந்திரன்

“ஆளுங்கட்சியுடன் இணைந்து மாவட்ட அபிவிருத்திக்கான நகர்வுகளை நானும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் மேற்கொள்கின்றோம்.” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில ஊடக நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றன. நாங்கள் ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம். ஆனால் ஒரு சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடும்போது அறிந்து கொண்டு, அது தொடர்பில் எம்மிடமும் கேட்டு பதிவிடுங்கள் என அவர்  தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், டெப் கணனிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளுக்கு 778 டெப் கணனிகள் வழங்கு வைக்கும் நிகழ்வு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,

பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் நானும் இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களுக்குமாக 3943 டெப் கணனிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் நாம் கல்வித்துறைசார் வளர்ச்சியை மேம்படுத்துத்துவதற்காக பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆளும் கட்சியில் இருக்கின்ற நாங்கள் ஒவ்வொரு துறைசார்ந்த வினைத்திறன் மிக்க சேவையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினூடாக பெற்றுக் கொடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கனை முன்னெடுத்து வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் கல்வி தொடர்பான விடயங்களை முதலாவதாக ஆராயப்படும் விடயமாக நாம் கொண்டு வந்திருக்கின்றோம்.

அடுத்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி தமிழருக்கானது இந்த வாய்ப்பை தாரை வார்க்கத் துணைபோகும் தமிழ் தலைவர்கள் என தெரிவித்து என்னுடைய பெயரையும், பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனின் பெயரையும் இட்டு கல்விச் சமூகம் கிழக்கு மாகாணம் என எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளது. மாவட்டத்திலே சிரேஸ்ட நிலையிலுள்ளவர்களை அடுத்தடுத்து பதவி நிலைகளுக்குத் கொண்டு வந்தால்தான் அடுத்தடுத்து எம்மவர்களுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.

இவ்வாறான விடயங்களை நாசமாக்கியவர்கள் இந்த மாவட்டத்தினுடைய முன்னாள் அரசியல்வாதிகள்தான். கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகத்துக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தற்போதும் அதற்குரிய கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை பரப்புவோரை கண்டுபிடிக்க நடவடிக்கை !

மொடர்னா கொவிட் தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை பரப்புவோரை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் செய்த முறைப்பட்டுக்கமைய இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மொடர்னா கொவிட் தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் மற்றும் நெனோ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது எனவும் சமூக ஊடகங்களில் சில தவறான செய்திகள் பரப்பப்படுவதாக குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.

“மகளின் இறப்பு தொடர்பான விடயங்களை திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்.” – ஹிஸாளினியின் தாய் கண்ணீர் !

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சிறுமியின் சம்பவம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்படுவதாக டயகம சிறுமியின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது மகள் இதற்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டாரா..?  என பொலிஸ் குழுவினர் தன்னிடம் கேட்டதாகவும், மகளுக்கு இதற்கு முன்னர் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என டயகம சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக பொலிஸ் குழுவினர் டயகம பகுதியிலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று பெற்றோர் உட்பட ஏனையோரிடம் விசாரித்ததன் பின்னர் ஊடக சந்திப்பில் சிறுமியின் தாயார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது பிள்ளையை தொழிலுக்காகவே அங்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவரது உடல் பிரேதப் பெட்டியிலேயே எமக்குக் கிடைத்தது. பிள்ளைக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் இங்கு வந்து அவர்கள் எழுப்புகின்ற கேள்விகளை எம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

எனது மகள் இதற்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டாரா? இங்கு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? தனியே எங்காவது அனுப்பினீர்களா..? என பொலிஸ் குழுவினர் தன்னிடம் கேட்டதாகவும் டயகம சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முக்கிய இடத்தில் இருக்கின்றவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றால், நாட்டில் இவ்வாறு எத்தனை சம்பவங்கள் வெளியில் தெரியாமல் இடம் பெறுகின்றன? எமது பிள்ளைக்கு நியாயம் கிடைக்கும் வரையில் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்த மாட்டேன் என்று எமது மகளின் உடல் மீது சபதம் எடுத்திருக்கிறேன் என டயகம சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

விஷன் 2030 – அரேபியாவின் புனித தலங்களில் பாதுகாப்பு பணிக்கமர்த்தப்பட்ட பெண்கள் !

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினாவில் இராணுவத்தில் உள்ள பெண்கள் பாதுகாவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியாவின் விஷன் 2030; பெண்கள் இராணுவப்படை உருவாக்கம்!

சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான். இவர், தனது நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார். பழமைவாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம் என அவர் நம்புகிறார். அதனால், விஷன் 2030 என்ற பெயரில் அவர் அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, இராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்தார்.
அந்த வரிசையில் மெக்கா, மெதினா புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண் வீராங்கனைகளைப் பணியமர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார்.

மெக்காவின் முதல் பெண் பாதுகாப்பு வீரர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார் மோனா என்ற இளம் பெண். ராணுவத்தின் காக்கி நிற சீருடை தான் அவர் அணிந்திருந்தார். ஆனால், அவரின் மேல்சட்டை இடுப்பு அளவுக்கு நீண்டிருந்தது, சற்றே தளர்வான கால்சட்டை, கறுப்பு தொப்பி, முகத்தை மறைக்க துணி என்று மோனா காட்சியளித்தார்.

மோனா அளித்தப் பேட்டியில், “நான் எனது தந்தையின் பாதையில் பயணிக்கிறேன். இன்று மிகவும் புனிதமான மெக்கா பெரு மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி” என்று கூறினார்.

“ஜோசப் ஸ்டாலின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் உதவினார்.” – மதுர விதானகே குற்றச்சாட்டு !

கொத்தலாவல பல்கலைகழக சட்டமூலம் பாரிய அதிர்வலைகளை கடந்த நாட்களில் ஏற்படுத்தியிருந்தது. முக்கியமாக அது இலங்கையின் கல்விக்கொள்கையை முழுமையாக சீரழித்து விடும் என்பதாக பல எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தது. இலங்கை ஆசிரியர் சங்கம் இது தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கைகளில் களமிறங்கியிருந்தது. முக்கியமாக இந்த சட்டமூலத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கியமான அங்கத்தவராகிய ஜோசப்ஸ்டாலின் கைதாகி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து எதிர்ப்புக்கள் இன்னும் அதிகமாகியிருந்தது.

இந்நிலையில் , இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் உதவினார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஸ்டாலின் உண்மையில் இலங்கை மாணவர்கள் மீதோ, ஆசிரியர்கள், கல்வி, நாட்டின் மீதோ கரிசனை கொண்டவரல்ல. கடந்த போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு கொழும்புக்கு வருவதற்காக வீதித்தடைகளை நீக்கச்சொன்ன ஒரு பயங்கரவாதி. இப்போதும் அவர் பயங்கரவாத செயற்பாட்டையே செய்கின்றார்.

அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதியையும், வரப்பிரசாதங்களையும் பெறுகின்றவர். அதுபற்றி இன்றும் நான் தகவல்களைப் பெற்றுவருகின்றேன். கடந்த வாரம் பெற்ற தகவல்களை வைத்து நான் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் விரைவில் சென்று தகவலளிக்கவுள்ளேன் என மதுர வித்தானகே எச்சரித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த  சிறுமி உயிரிழந்த சம்பவம் – ஆராய விசேட குழு நியமனம் !

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்திருந்தது. இது நாட்டின் பல பகுதிகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன். நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டம் மேலோங்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த  சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையில் இந்த குழுவை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நியமித்துள்ளார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று (வியாழக்கிழமை) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்தே, சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

“இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்த நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.” – அமைச்சர் டக்ளஸ்

“அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்த நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (22.07.2021) நடைபெற்ற  கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சீன நிறுவனத்திற்கு பூநகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.” – எம்.ஏ. சுமந்திரன்

“ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாகரசபை முதல்வர் ரி.சரவணபவான் மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு இன்று வியாழக்கிழமை (22) வந்தது அதில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை கடந்த பெப்பிரவரி நாங்கள் தான் ஆரம்பித்து வைத்தோம். ஆகவே மக்களுடைய போராட்டங்கள் அனைத்துக்கும் எங்களுடைய ஆதரவு இருக்கின்றது அரசாங்கம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவசரமாக மக்களிடம் இருந்த செல்வாக்கை முழுமையாக இழந்து நிற்கின்றது.

நாங்கள் எந்த நாட்டுக்கும் சாந்தவர்கள் அல்ல. எதிரானவர்களும் அல்ல ஆனால் இலங்கைவாழ் தமிழ் மக்களை பொறுத்தளவிலே எங்களுடைய அரசியல் பிரச்சனை சம்மந்தமாக இந்தியா தமிழ் மக்கள் சார்பிலே சர்வதேச உடன்படிக்கையை 1987 ம் ஆண்டு கைச்சாத்திட்டது அது முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. அதன்காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றோம் இந்திய அரசும் தொடர்ச்சியாக அதிலே உள்ள விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லிவருகின்றனர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகையிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தியாவினுடைய கரை எல்லை இலங்கை கரை எல்லை 30 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்றது. இந்தியாவினுடைய பாதுகாப்பு நிமிர்த்தமாக இந்தியா கரிசனையாக இருப்பது எவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விடயம்.

அதேவேளையிலே சீனா இலங்கைக்குள் வந்து காலடி எடுத்து வைக்கும் விடயமாக மற்றைய நாடுகள் விசேடமாக ஜனநாயகத்தை பேணுகின்ற மனித உரிமையை மதிக்கின்ற நாடுகள் இங்கே வந்து இலங்கை அரசாங்கத்தோடு நட்புறவு பேணி தங்களுடைய விழுமியங்களை பரப்புவது நல்ல விடையம்.

ஆனால் சீனாவை பெறுத்தவரையில் அங்கு ஜனநாயகம் இருப்பது எவருக்கும் தெரியாத விடயம் ஒரு கட்சி ஆட்சி. மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை மனித உரிமைகள் என்றால் அது என்னவென்று கேட்கின்ற அளவுக்குதான் சீனாவினுடைய நிலைப்பாடு

ஐ.நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக 2012 இருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா அந்த தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையிலே பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையிலே மனித உரிமை மீறல்களுக்கு அதிகமாக முகம் கொடுக்கின்றவர்கள் என்ற வகையிலே. ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையிலே. சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.

ஆகவே நாங்கள் உயரியதாக கருதுகின்ற விழுமியங்களை கொண்ட நாடுகள் இலங்கைக்கு அறிவுரை கூறுவது இலங்கையில் ஈடுபடுவது வரவேற்கதக்க விடயம் என்றார்.

“பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை.” – ஜனாதிபதி ஆணைக்குழு

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உட்பட சர்வதேசத்திலிருந்து இலங்கையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுததப்பட்டு வருகின்ற நிலையில் “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களை ஏற்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் ஆணைக்குழு மூன்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.


மூன்றுமாதங்களிற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிற்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாமலே தடுப்புக்காவல் உத்தரவை நீடிப்பதற்கான அதிகாரம் பாதுகாப்பு செயலாளருக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்று மாதங்களிற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விசேட பாதுகாப்புடன் அவர்களின் வீடுகள் அல்லது அவர்களின் பகுதிகளிற்குள் தடுத்துவைக்கும் விதத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.