28

28

வனிந்து ஹசரங்க – சர்வதேச தரப்படுத்தலில் இரண்டாமிடத்துக்கு முன்னேற்றம் !

T20 சர்வதேச தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று (புதன்கிழமை) சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி 720 புள்ளிகளுடன் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் தென்னாபிரிக்க அணியின் வீரர் தப்ரெஸ் ஷம்ஸி 792 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

முன்னர் இரண்டாவது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ரஷீத் கான் 3 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் ஜப்பான் சென்ற இராஜாங்க அமைச்சர்கள் மீது விசாரணை !

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்காக ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தேனுக விதானகமகே, டி.வி. சானக மற்றும் ரொஷன் ரணசிங்க ஆகியோர் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசியபோதே அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒலிம்பிக் போட்டியில் உத்தியோகப்பூர்வமாக பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் சென்ற மூவர் தொடர்பாகவும் தொடக்க விழாவில் இலங்கை தேசியக் கொடியைக் காட்டத் தவறியமை தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்படும்.

அரச செலவினங்களை முடிந்தவரை குறைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷக் கோரியிருந்த நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் இராஜாங்க அமைச்சர்களின் மகிழ்ச்சியான சுற்றுப்பயணம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

நிறுவனம் ஒன்றின் நிதியுதவி மூலமே அவர்கள் ஜப்பான் சென்றதாகவும் அரசாங்கம் அவர்களின் சுற்றுப்பயணத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடவில்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இருப்பினும் உண்மையை வெளிப்படுத்த விசாரணை அவசியம் என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

இருபது கோடியை அண்மிக்கும் உலக கொரோனா தொற்று – 41.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக  கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி வருகிறது.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.59 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17.76 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.41 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 85 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

மீண்டும் காட்டுத்தீயாய் பரவும் கொரோனா – மூன்று இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை !

நாட்டில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 1,919 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 301,811 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 271,855 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

“ராஜபக்சக்களின் அட்டூழியங்களுக்கு எதிராகவே நாடு முழுவதிலும் ஜனநாயகப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.” – சஜித் பிரேமதாஸ

“ராஜபக்சக்களின் அட்டூழியங்களுக்கு எதிராகவே நாடு முழுவதிலும் ஜனநாயகப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த அரசின் ஆட்சி கவிழும் நாள் வெகுதொலைவில் இல்லை.” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அதிபர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், தாதியர்கள், சுகாதாரப் பிரிவினர், பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்று அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து விட்டனர்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து அராஜக ஆட்சி நடத்தும் இந்த அரசை நாட்டிலுள்ள அனைவரும் வெறுத்து விட்டார்கள். அதனால் அவர்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடுகின்றார்கள்.

ராஜபக்ச அரசின் அடக்குமுறைகள் – அட்டூழியங்களுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்புகின்றார்கள். இவ்வாறான ஜனநாயகப் போராட்டங்களை நாம் மதிக்கின்றோம். இதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம்.

இந்த அரசின் ஆட்சி கவிழும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது இந்த ஜனநாயகப் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.

போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, நாட்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கலாம் என்று நினைத்தது. ஆனால், நாடு முழுவதிலும் இன்று அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன” – என்றார்.

18 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் !

எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகள் திறக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையில் மாணவர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, 18 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், சுகாதாரத்துறையின் விசேட நிபுணர்களுடன் இணைந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சீனாவையடுத்து இலங்கை மீதும் பொருளாதாரத்தடை விதித்த அமெரிக்கா !

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதேவேளை அதிகார வரம்பை மீறி பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

அதன்படி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்காவின் தடைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக ரஷ்யாவிலிருந்து பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள எஸ் -400 ஏவுகணைகளை பெற்றுக் கொண்டமை காரணமாக இந்தியாவும் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.