“அரசாங்கம் நெல் பறிமுதல் என்ற போர்வையில் வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கின்றது.” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நெல் பறிமுதல் என்ற போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கின்றோம். அரிசி விலையினை அரசாங்கம் குறைக்கவேண்டுமானால் முதலில் இலட்சக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கிவைத்துள்ள மில் உரிமையாளர்களிடம் இருந்து அதனை பறிமுதல் செய்ய வேண்டும்.
அதனைவிடுத்து வருடக்கணக்காக படிப்படியாக முன்னேறிவந்த அப்பாவி விவசாயிகளின் நெல்லை பறிக்கீன்றீர்கள் என்றால் அது எந்த வகையில் நியாயம்..?
விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை விற்பனைசெய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கப்போவதில்லை. மேலும், நாட்டில் அரசி விலையினை தீர்மானிக்கும் செயற்பாடுகளை விவசாயிகள் செய்யவில்லை. அவர்கள் தங்களது நெல்லை வைத்து வேறு தொழில்கள் செய்யலாம்.
இந்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்ட விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்குள் விதைநெல்லை உற்பத்திசெய்யமுடியாதா.? எனக்கேட்டவர்கள் இன்று விதைநெல்லுக்காக வைத்திருந்த நெல்லைக்கூட பறித்துக்கொண்டுசெல்கின்றார்கள் என்றால் இது எந்தவகையில் நியாயமானது.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் இலங்கைக்கான பணிப்பாளருடன் கதைத்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இருந்தால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து இது தொடர்பில் கூறியிருக்கின்றோம். தெற்கில் இலட்சக்கணக்கான மூடைகளை வைத்திருக்கும் பல நெல் ஆலைகள்,அரசியல்வாதிகளிடம் உள்ளன.
அதனையெல்லாம் விட்டுவிட்டு இங்குள்ள விவசாயிகளின் நெல் ஆலைகளுக்கு சீல்வைத்து, அந்த நெல்லை இவ்வாறான அரசியல்வாதிகளின் நெல் ஆலைகளுக்குத்தான் குறைந்த விலையில் வழங்கப்போகின்றீர்கள் என்ற சந்தேகம் கூட எங்களிடம் உள்ளது. ஆகவே, உடனடியாக இந்த திட்டத்தினை நிறுத்தவேண்டும். எதிர்காலத்தில் அட்டைகளைக்கொடுத்தே அரசி போன்ற பொருட்களை வாங்கவேண்டிய நிலையேற்படும்.
எங்கள் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நெல்லை பறித்து எடுத்தால் அவர்களும் அந்த அட்டையுடனேயே திரியவேண்டிய நிலைவரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.