August

August

‘யார் இவர்’

யார் இவர்:
இப்படிவத்தை நிரப்புவதற்கு முன் இதனைக் கவனமாக வாசித்து இதிலுள்ள வழிகாட்டலுக்கு அமைய நிரப்பவும். இதனை நிரப்புவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் தேவைப்படும். சிவப்பு புள்ளியிடப்பட்ட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். அவை நிரப்பப்படாவிட்டால் நீங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.

‘யார் இவர்’ அறிமுகம்: இலங்கைத் தமிழ் சமூக ஆளுமைகள் பற்றிய விபரத் திரட்டு. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழ்கின்ற; தமிழ் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களை, உழைக்கின்றவர்களை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி. தேசம் வெளியீட்டகம் மேற்கொள்ளும் இந்த விபரத்திரட்டு காலத்திற்குக் காலம் புதுப்பிக்கப்பட்டு தொகுத்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

நோக்கம்: எமது ஆளுமைகளை ஆவணப்படுத்துவதும் அடுத்த தலைமுறையினருக்கு எமது ஆளுமைகளை பற்றிய குறிப்புகளைக் கையளிப்பதுமே ‘யார் இவர்’ வெளியீட்டின் நோக்கம். மேலும் துறைசார்ந்த ஆளுமைகளிடையே ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தவும் தமிழ் சமூகத்தின் வாழ்நிலையை மேம்படுத்த நினைப்பவர்களிடையே ஒரு வலைப்பின்னளை ஏற்படுத்தி செயற்திறனை அதிகரிப்பதும் இதன் நோக்கமாக உள்ளது.

‘யார் இவர்’ குழு: நூலகவியலாளர் என் செல்வராஜா; ஊடகவியலாளர் த ஜெயபாலன்; ஆவணப் பதிவாளர் சி ஹம்சகௌரி; சமூக செயற்பாட்டாளர் க அரிமர்த்தனா.

தகவல் பாதுகாப்பு: நீங்கள் வழங்குகின்ற தகவல்களை ‘தேசம் பதிப்பகம்’ மட்டுமே கையாளும். வேறு எந்த நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படமாட்டாது. இதில் தங்களுடைய தொலைபேசி இலக்கங்கள் நீங்கள் வாழும் நாடுகளின் சர்வதேச தொடர்புக்கான இலக்கத்துடன் பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் விரும்பாத பட்சத்தில் உங்களுடைய தொலைபேசி இலக்கங்கள், மின் அஞ்சல் மற்றும் முகவரிகள் எதுவும் வெளியிடப்படமாட்டாது. ஆனால் தேசம் வெளியீட்டகம் தொடர்புகளை மேற்கொள்ள நீங்கள் மேற்கொண்ட விபரங்களை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

கவனிக்க: பதிவுகளை கேட்கப்பட்ட கேள்விக்கு அமைய சரியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சில பகுதிகளை in English / தமிழில் என்று குறிப்பாகக் கேட்டுள்ளோம். தயவு செய்து கேட்கப்பட்ட மொழியில் பதிவை மேற்கொள்ளவும். இப்படிவத்தை சமர்ப்பிற்கு முன் மீளவும் தகவலைச் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.

கால ஒழுங்கு: கல்வி, தொழில், வெளியீடுகள், விருதுகள் அனைத்தும் கால ஒழுங்கில் முன்னையவை முதலிலும் பின்னையவை இறுதியிலும் வரவேண்டும். வழங்கப்பட்ட உதாரணங்களைப் பின்பற்றி உங்கள் பதிவை ஒழுங்குமுறையில் பதிவிடவும். மேலும் காற்புள்ளி , அரைப்புள்ளி ; மற்றும் முற்றுப்புள்ளி . என்பவற்றை உதாரணத்திற்கு அமைய பயன்படுத்தவும்.

‘யார் இவர்’ ஆவணப்படுத்தல் சர்வதேச ஆவணப்பதிவு விதிமுறைக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதால் தயவு செய்து பதிவுகளை வழங்கப்பட்ட உதாரணங்களைப் பின்பற்றி அதற்கு அமைய மேற்கொள்ளவும். ஆங்கிலத்தில் பதிவிடும் போது சின்ன எழுத்தையே (small letters) பிரதானமாகப் பயன்படுத்தவும். முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தில் (Capital Letters) அமையலாம்.

மேலுள்ள பதிவிடும் முறையயைப் பின்பற்றுவதன் மூலம் எமக்கு ஏற்படும் வேலைப்பழுவை நீங்கள் குறைக்க முடியும். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

இறுதியாக, இப்படிவத்தை பூர்த்தி செய்து அதனைச் சமர்ப்பித்த பின்; உங்கள் புகைப்படம் ஒன்றை, உங்கள் முழுப்பெயருடன் whoiswhotamil@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

த ஜெயபாலன் (தேசம்)
‘யார் இவர்’ வெளியீட்டுக் குழு
whoiswhotamil@gmail.com

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeN0GSPSE8FyXiZ03VUzqAMQ5eNTIdkScXdX15q8LjGqojlUw/viewform

குறிப்பு: இப்படிவத்தை நிரப்புவதற்கு முன் கவனமாக வாசித்து இதிலுள்ள வழிகாட்டலுக்கு அமைய நிரப்பவும். இதனை நிரப்புவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் தேவைப்படும். சிவப்பு புள்ளியிடப்பட்ட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். அவை நிரப்பப்படாவிட்டால் நீங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.

தொலைக்காட்சித் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கியுடன் தலிபான்கள் – பெருகும் எதிர்ப்பலைகள் !

தொலைக்காட்சித் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கியுடன் தலிபான்கள் நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், ஆப்கனில் இன்னமும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

அந்த வகையில், தலிபான் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரைக் கடந்த 17-ம் திகதி நேர்காணல் செய்த டோலோ சேனலின் பெண் பத்திரிகையாளர் பேஹஸ்டா அர்கான்ட் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் செய்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளருக்குப் பின்புறத்தில் கையில் துப்பாக்கியுடன் தலிபான்கள் இருக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

அவ்வீடியோவில் ஆப்கன் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவர், தலிபான் தலைவர் ஒருவரை நேர்காணல் செய்கிறார். அப்போது அந்தத் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் வரிசையாக அவருக்குப் பின்னால் நிற்கின்றனர்.

இந்த வீடியோவைக் குறிப்பிட்டு ஈரான் பத்திரிகையாளர் மசிஹ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதனை நிஜம் என்று நம்ப முடியவில்லை. தொகுப்பாளருக்குப் பின்னால் தலிபான்கள் நின்று கொண்டு ஆப்கன் மக்கள் பயம் கொள்ள வேண்டாம் என்று கூற வைக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்களின் பயத்திற்கு தலிபான்களே காரணம். இதுவே அதற்கான சான்றாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

“24 வருட காலப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கியுள்ளோம்.” – அமைச்சர் தினேஸ் குனவர்தன

24 வருடங்களாக தீர்க்கப்படாத அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் என கல்வி அமைச்சர் தினேஸ் குனவர்தன தெரிவித்தார்.

அத்தோடு, சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் உடனான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை ஆசிரியர் சங்கம் நிராகரித்துள்ளதா என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சுற்றறிக்கை முதலானவை இன்னும் வெளிவரவில்லை என்றும் அவை வெளிவந்த பின்னர் ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் 24 வருடங்களாக தீர்க்கப்படாத இந்த பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழி வகுக்கும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய் !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதற்கமைய மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 204.89 ரூபாயாக அதிகரித்துள்ளது.

“விடுதலைப்புலிகள் செய்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையால் நான் வெட்கித்தலை குனிகிறேன்.” – எம்.ஏ. சுமந்திரன்

“முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். அந்தக் குற்றம் தமிழ் மக்களின் பெயரினாலே நடத்தப்பட்டது. இதனாலேயே நான் வெட்கித்தலை குனிகிறேன் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்கிறேன்.” என நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

 

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். நான் இப்படி சொன்னதற்கான காரணம் அது இனச் சுத்திகரிப்பு. விசேடமாக தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் சொல்கிறோம் இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என பல தடவைகள் நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் அதையும் திரிபுபடுத்தி இனப்படுகொலை நடக்கவில்லையென நான் சொல்வதாக தெரிவிக்கிறார்கள்.

அப்படியல்ல இனப்படுகொலை நடந்தது – ஆனால் அது நிரூபிப்பதற்கு மிகவும் கடினமான சர்வதேச குற்றம். இனப்படுகொலை நடந்ததென சொல்லி சர்வதேசத்தை ஏற்றுக்கொள்ள வைக்க முனைகின்ற நாங்கள் இனச் சுத்திகரிப்பு நடந்தது என்பதை மறுத்தால் சர்வதேசம் ஒருபோதும் எங்களை ஏற்றுக் கொள்ளாது.

இனசுத்திகரிப்பு நடந்தது என்பது வெளிப்படையாக தெரிகின்ற ஒரு விடயமாக நான் இன்னொரு உதாரணத்தையும் கூறுகிறேன்.

2007ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது திடீரென ஒரு நாள் அதிகாலையில் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கின்ற தமிழர்களை வெளியேற்றுமாறு ஒரு பணிப்புரையை வழங்கி பேருந்துகளிலே எல்லாரும் ஏற்றப்பட்டு வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கே நாங்கள் உடனடியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அன்று காலையிலேயே பத்து மணிக்கு அதை தடுத்து நிறுத்துகின்ற ஒரு உத்தரவை நான் பெற்றிருந்தேன். வவுனியாவிற்கு பேருந்துகள் போய் சேருவதற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு திரும்பவும் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள். அது குறித்து சர்வதேசத்திலே மிக மோசமான விமர்சனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த காரணத்தினாலே அப்போது பிரதமராக இருந்த ரட்ண சிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்திலே மன்னிப்பு கோரினார்.

இலங்கையிலேயே ஒரு பிரதம மந்திரி மக்களிடம் மன்னிப்பு கோரியது அது ஒரு தடவை. ஏன் அவ்வாறு மன்னிப்பு கோரினார் என்றால் அது ஒரு இனசுத்திகரிப்பிற்கான நடவடிக்கை என்று நாங்கள் நீதிமன்றத்திலே சொல்லியிருந்தோம்.

உலக நாடுகள் அதனை ஏற்றிருந்தன. அங்கே நடந்தது என்ன? கொழும்பிலே வாழ்ந்த அத்தனை தமிழர்களையும் வெளியேற்றவில்லை. குறித்த சிறிய எண்ணிக்கையான விடுதிகளிலே இருந்தவர்களை வெளியேற்றியதையே இனசுத்திகரிப்பு என்று சர்வதேசம் சொல்லியிருக்கிறது. அது தான் இனசுத்திகரிப்பிற்கான வரைவிலக்கணமாக இருந்தது.

ஆனால் இலங்கையிலே வடக்கிலே நடந்தது முற்றுமுழுதாக, பரம்பரையாக வாழ்ந்துவந்த ஒருவரையும் விடாமல் அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு. அது இல்லையென்று சொன்னால் சொல்பவர் சட்டம் தெரியாதவராக இருக்க வேண்டும். சர்வதேச குற்றங்களிலே இன்னொரு மோசமான குற்றம் இனச் சுத்திகரிப்பு எனவும் குறிப்பிடுள்ளார்.

காணாமலாக்கப்பட்டோரும் இலங்கையர்களே – விரைவில் கண்டுபிடியுங்கள் என ஜனாதிபதி உத்தரவு !

காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டு நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட போது ,

அதாவது, கடந்த அரசாங்கத்தை போலல்லாது காணாமல் போனோர் அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்பாக கண்காணித்து, இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாக அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமற்போனவர்கள் எந்த காரணத்திற்காக காணாமல்போனார்கள் என்பதை பற்றி விசாரிக்க தேவையில்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் அனைவரும் இலங்கை பிரஜை என்பதை மனதில் வைத்து, இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமையை உறுத்திப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் அலிசப்ரி  சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்தபோதிலும் இன்னும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதானது, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒருவர் எத்தகைய சூழலில் காணாமல் போனார்கள் எனபதை பார்க்காது, காணாமற்போனோரை அடையாளம் கண்டு இழப்பீட்டை வழங்குவோம் என அமைச்சர் அலிசப்ரி உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி – அரசசேவைகளிற்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்த திட்டம் !

அரசாங்கம் எதிர்கொண்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை கடுமையாக முன்னெடுப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொவிட் பெருந்தொற்று காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதால் அரசவருமானம் பெருமளவு குறைந்துள்ளது தொடர்ச்சியான செலவுகளிற்கு கூட அதுபோதுமானதாகயில்லை என நிதியமைச்சர் பசில்ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் சுகாதாரதுறையில் ஏற்பட்ட மேலதிக செலவீனங்கள் நிவாரணம் வழங்குதல் போன்றவை காரணமாக இந்த ஆண்டுக்கான செலவீனங்கள் மதிப்பிடப்பட்டதை விட அதிகமாகயிருக்கும் என நிதியமைச்சர் அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார்.


நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதிலும் ஆரம்பிக்கப்படாத கட்டுமானதிட்டங்கள் போன்றவற்றை நிறுத்துமாறு நிதியமைச்சு அமைச்சுகளிற்கு அறிவுறுத்தியுள்ளது.
அரசசேவைகளிற்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது

முடிவுக்கு வந்தது 20 வருட போர் – ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார் இறுதி இராணுவ வீரர் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக செய்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரி்க்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உறுதிபூண்டது. அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றின. ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி , புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டன.

ஆனால் தோல்வி கண்ட தாலிபன்கள் மெல்ல தங்களை பலப்படுத்திக் கொண்டனர். போர் ஆண்டுக்குக் கணக்கில் நீண்டது. தாலிபன்கள் தங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தினர். இருதரப்பிலும் நடந்த போரில் கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், அப்பாவி மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். இறுதிவரை அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.

 

இதையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் படிப்படியாக விலக்கப்படும் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியா கவந்த ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் திகதிக்குள்  அமெரிக்கப்படைகள்  முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து மெரிக்க படைகள் முழுமையாக வெளிேயறத் தொடங்கியதையடுத்து, தலிபன்கள், பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி, முழுமையாக தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த 15-ம் தேதி ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் முழுமையாக வந்தது.

இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படைகள் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் வெளியேற வேண்டும் என்பதால், அந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பே, அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம், காபூல் ஹமீது கர்சாய் விமானநிலையத்திலிருந்து இன்று வெளிேயறியது.

இதுகுறித்து அமெரிக்க மத்தியப்படையின் காமாண்டர் ஜெனரல் ஃபிராங் மெக்கென்ஸி நிருபர்களிடம் கூறியதாவது:

“ ஆப்கானிஸ்தானிலிருந்து  அமெரிக்கப்படைகள்  முழுமையாக வெளியேறிவிட்டன என்பதை இந்த நேரத்தில் அறிவிக்கிறேன். இதன் மூலம் அமெரிக்க மக்கள், ஆப்கான் மக்கள், பிறநாட்டவர் என அனைவரையும் வெளியேற்றும் திட்டமும் நிறைவடைந்தது, 20 ஆண்டுகாலப் போரும் முடிந்தது. அமெரிக்க அரசைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஆப்கானிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டனர்.

கடைசியாகப் புறப்பட்ட விமானத்தில் அமெரிக்க மக்கள் யாருமில்லை. ராணுவத்தினர் அனைவரும் வெளியேறிவிட்டனர். தகுதியான ஆப்கான் மக்கள், அமெரிக்கர்கள் யாரேனும் இருந்தால், இன்று வரை வெளியேற வாய்ப்பு வழங்கப்படும். 20 ஆண்டுகால போர் சில மணிநேரங்களில் முடிவுக்குவர உள்ளது.

இது சாதாரணப் போர் அல்ல, இந்த போரில் 2,461 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். கடந்த வாரம் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூர்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிலிருந்து  அமெரிக்கப்படைகள்  வெளியேறியதை தலிபான்கள் வரவேற்றுள்ளனர். தலிபான்கள் பெர்சிய மொழியில் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ அனைத்து முஜாகிதீன்கள், வீரர்கள், நம்முடைய தேச மக்களுக்கு வாழ்த்துகள். இன்று, அனைத்து வெளிநாட்டவர்களும் நம் தேசத்தைவிட்டு, தியாக பூமியைவிட்டு வெளியேறிவிட்டனர்.

 

யாழ். குருநகர் இளைஞன் படுபொலை சம்பவம் – காவல் நிலையத்தில் சரணடைந்த 6 பேர் !

குருநகர் இளைஞன் கொலையின் முதன்மை சந்தேக நபர்  உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். குருநகர் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெரன் (வயது-24) என்பவர் படுகாயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சம்பவ தினத்தன்று நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு குழு அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர்களான பாசையூர் ரெமியின் சகோதரர்களைத் தேடி தீவகம் உட்பட பல இடங்களில் காவல்துறையினர் தேடுதல் நடத்தினர்.

இந்த 9 நாள்களின் பின்னர் முதன்மை சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். எனினும் முதன்மை சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவர் இன்று சரணடைந்தவர்களில் இல்லை என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவித்தன.

“பொதுசன வாக்கெடுப்பினை நடாத்தி தமிழ் மக்களுடைய தலைவிதியை தீர்மானியுங்கள்.” – எம்.கே. சிவாஜிலிங்கம்

“வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே  ஒரு பொதுசன வாக்கெடுப்பினை நடாத்தி தமிழ் மக்களுடைய தலைவிதியை சர்வதேச நாடுகள் ஐ.நா.வினுடைய ஏற்பாட்டிலே,  ஐ.நா.வினுடைய மேற்பார்வையிலேயே செய்யப்படவேண்டும்.” என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்று ஆகஸ்ட் 30 உலக காணமல் ஆக்கப்ட்டோர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும்நிலையில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலுமு் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாக ,

இன்றைய தினம் உலக கட்டாயமாக காணாமல் செய்யபட்டோர்களுக்கான நாள். இலங்கை தீவை பொறுத்த வரையில் உலகிலே இன்றைக்கு கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இது எங்களுடைய போராட்டங்கள் தீவிரமடைந்த காலத்திலேயே 1970 களில் ஒரு சிலராகவும் 1980 களில் ஒரு சில டசின் கணக்காகவும் காணப்பட்ட விடயங்கள் 1990 களில் இன்னும் தீவிரமடைந்து நூற்று கணக்கிலே சென்ற நிலமையிலே 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆயிரக்கணக்கில் காணாமல் போகின்ற நிலைமை உருவாக்கப்பட்டு 2009 கொடிய போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் இது வரை தமிழ் தரப்பில் இருந்து கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 20000 என ஐக்கிய நாடுகளில் மனித உரிமை பேரவைக்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில் தெரிவிக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை இன்னும் சற்று அதிகமாக இருக்கலாம். போர் நடைபெற்று கொண்டிருந்த பொழுது பல இடங்களிலே கிழக்கு மாகாணம் வடக்கிலே முல்லைத்தீவு யாழ்ப்பாண மாவட்டங்களில் 600 பேருக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள்.

1996 இல் காணாமல் போனோர் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அஞ்சப்படுகின்ற சூழ்நிலையிலே தான் 2009 ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின் சுமார் 6500 பேரை இராணுவத்தினரிடம் அவர்களது மனைவிமாரோ பெற்றோரோ சகோதரர்களோ கையளித்தவர்களை பற்றி கூட இன்னும் எந்த விதமான தகவல்களும் இல்லை. இந்த சூழ் நிலையின் பின் தான் இவர்களை கண்டு பிடிக்க எத்தனை குழுக்களை நியமித்து இருந்தாலும் அதிலிருந்து பின் வாங்கினார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே 30/1 என்ற தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணை வழங்கியதாக இலங்கை அரசு சொன்னாலும் அதன் பிறகு அவர்கள் பின் வாங்கினார்கள். இந்த சூழ் நிலையில் தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி வருட கணக்கில் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு ஏற குறைய 2000 நாட்கள் வீதிகளில் இருந்து போராடி வருகிறார்கள்.

சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம்தான் நீதி கிடைக்க முடியும்.  அதனை பெறுவதற்கு நாங்கள் முனைப்பு காட்ட வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளிகளை நிறுத்தாத வரை இதற்கான நீதி கிடைக்க வாய்ப்பில்லை. இல்லாவிட்டாலும் கூட அதை நோக்கி பயணிக்கின்ற  விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

இழைக்கப்பட்ட இனப் படுகொலை, போர்க்குற்றங்கள்,  மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக ஈடு  செய்தி நீதி ( பரிகார நீதி )வடக்கு கிழக்கு மாகாணங்களிலே  ஒரு பொதுசன வாக்கெடுப்பினை நடாத்தி தமிழ் மக்களுடைய தலைவிதியை சர்வதேச நாடுகள் ஐ.நா.வினுடைய ஏற்பாட்டிலே,  ஐ.நா.வினுடைய மேற்பார்வையிலேயே செய்யப்படவேண்டும்.

இதுதான் அரசியல் தீர்வுக்கான வழி காணாமல் போகச் செய்யப்பட்ட அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்களுடைய நீதியும், நிவாரணமும், இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நிலையை நோக்கி இந்த தினத்திலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே அவர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ற விடயத்திற்க்கு இன்னும்  சில குறுகிய காலத்துக்குள்ளே  நீதி கிடைக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றுள்ளது.