August

August

21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் !

பக்டீரியா மற்றும் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் வைத்து சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் துறை சிறப்பு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேக்கு முகக்கவசத் தயாரிப்பாளர் சமன் ஹெட்டியாராச்சி தான் தயாரித்த முகக்கவசத்தை வழங்கி வைத்தார்.

பெருங்காயம், சிடார், கறுவாப்பட்டை, பாவட்டை வேர், சிவப்பு வெங்காயம், மரமஞ்சள், வேப்பிலை, கராம்பு, இஞ்சி, பச்சை மஞ்சள் ஆகியவை உட்பட 21 மூலிகைகள் உள்ளடங்கியதாக முகக் கவசத்தை தயாரித்துள்ளதாக சமன் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருக்க 21 இலங்கையர்கள் விருப்பம் !

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து இதுவரை 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு பயண அனுமதி பெற்ற அனைவரும் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என நம்புவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றுவரை, அறுபத்தாறு இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் ஏழு பேர் வெளியேற்றப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இருபத்தி ஒன்று இலங்கையர்கள் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் தங்கி இருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இலங்கை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் மனிதாபிமான நிலைமை குறித்து கவலை கொண்டுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக சர்வதேச நாணய நிதியத்தை பயன்படுத்துங்கள்.” – அமெரிக்கா வலியுறுத்தல் !

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தை கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

உறுதியான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் மாற்றங்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் நிதியமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஆபத்து தொடர்பாகவும் விவாதித்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன் இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கவலை தொடர்பாகவும் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் தற்போது சிறந்த ஆரோக்கிய நிலையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வளங்களைப் பயன்படுத்துவதே இதற்கான தீர்வு என தாம் நம்புவதாகவும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் 2020 – இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் !

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது இரண்டாவது பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

F64 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் சமித் துவான் கொடிதுவக்குவினால் இந்த வெண்கலப் பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களுள் எட்டாயிரத்துக்கும் அதிகமான கொவிட் மரணங்கள் !

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்றின் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 596 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பெருமளவான மரணங்கள் மூன்றாவது அலையிலேயே பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 5 நாட்களுக்குள் மாத்திரம் 1,041 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இம்மரணங்கள் பதிவாகியுள்ளன.

24ஆம் திகதி 214 பேரும், 25ஆம் திகதி 209 பேரும், 26ஆம் திகதி 214 பேரும், 27ஆம் திகதி 212 பேரும், 28 ஆம் திகதி 192 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

“மக்களை தியாகம் செய்யச்சொல்ல அரசுக்கு தகுதி இல்லை.” – ரணில் விக்ரமசிங்க

தியாகங்களை செய்ய வேண்டும் என மக்களிடமே கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து குறித்து நேற்று (29.08.2021) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் பேசிய அவர் ,

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த நிபுணர்கள்கள் குழுவை நியமிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளமையும் ரணில் விக்ரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த கோரிக்கையை இலங்கையை தவிர்ந்த ஏனைய நாடுகள் நிறைவேற்றியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆகவே இந்த சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட்டின் பிதாமகன் டொன் பிரட்மென் சாதனையை முறியடிக்க தயாராகும் ஜோ ரூட் !

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் தொடரின் மூன்று போட்டிகள் நிறைவுக்குவந்த நிலையில் இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் 3 டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் அடங்கலாக இதுவரை 500க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்து ஏராளமான சாதனைகளை படைக்க தயாராகிவிட்டார்.

10 cricketers whom Sir Don Bradman rubbed the wrong way - Cricket Country

இந்த நிலையில் கிரிக்கெட்டின் பிதாமகன் டொன் பிரட்மென் சாதனையையும் ரூட் முறியடிப்பார் என நம்பப்படுகிறது.

ஒரு ஆண்டில், ஒரு குறித்த ஒரு வீரர், குறித்த ஒரு அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை பிரட்மன் 71 ஆண்டுகளாக வைத்திருக்கிறார். பிரட்மன் இங்கிலாந்து அணிக்கைதிராக 1930 ம் ஆண்டில் 9 இன்னிங்ஸ்களில் 974 ஓட்டங்களை ஒரே ஆண்டிலேயே விளாசித் தள்ளினார்.

இந்தியாவுக்கு எதிராக இதுவரை ஜோ ரூட் 13 இன்னிங்ஸ்களில் மொத்தம் 875 ஓட்டங்களை பெற்றுள்ளார், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் இருக்கும் நிலையில் 100 ஓட்டங்களை பெற்றுக் கொள்வாராக  இருந்தால், 71 ஆண்டு கால சாதனையை முறியடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஒரு ஆண்டில் அதிகமான டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் என்ற மொகம்மட் யூசுப்பின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 390 ஓட்டங்கள் தேவையான நிலையில் இந்த ஆண்டில் சாதனை புத்தகங்கள் எல்லாவற்றிலும் தன் பெயரை பதித்து விடுவார் என்றே எதிர்பார்கப்படுகிறது.

வீடுகளில் மரணமடைந்த 06 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் மீட்பு !

கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு வீட்டினுள் சிகிச்சை அளிக்கும் முறை சாதகமான பெறுபேற்றை தந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன அண்மையில்  தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் , கட்டான பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மரணமடைந்த அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றாலேயே மரணமடைந்துள்ளனர் என்று நீர்கொழும்பு வைத்தியசாலையின் அறிக்கைகள் தெரிவிப்பதாக, கட்டான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஏ.யூ.டி குலத்திலக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் ஆண்கள் நால்வரும் பெண்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“உயிர் பிரிவதற்குள் சரி எங்களுடைய உறவுகளை கண்ணில் காட்டி விடுங்கள்.” – இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று  சர்வதேசத்திடம் நீதிகோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்  வீடுகளில் இருந்தவாறே அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள அதேவேளை முல்லைத்தீவு  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை சற்று முன்னர் மேற்கொண்டிருந்தனர்  இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்

கருத்து தெரிவித்த முல்லைத்தீவு  வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர் பிரபாகரன் றஞ்சனா  அவர்கள் மேலும் தெரிவித்த போது ,

இன்றைய தினம் ஆவணி 30 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்றைய நாளில் ஒவ்வொரு வருடமும் பாரியளவில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்தோம் ஆனால் இம்முறை கொவிட் 19 காரணமாக சுகாதார பிரிவினரால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் பயணத்தடை காரணமாக நாங்கள் இன்றைய தினம் வீதியில் போராட்டங்களை நடத்த முடியாததால்  ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் வீடுகளிலேயே ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை செய்து கொண்டிருக்கின்றோம்.

போர் முடிந்து பன்னிரெண்டு வருடங்கள் கடந்த காலத்திலும் இன்று வரை எங்களுடைய உறவுகளை தேடி 12 வருட காலமாக நாங்கள் போராடிக்கொண்டு இருக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் 38 வது கூட்டத் தொடரிலிருந்து எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சென்று எங்களுடைய பிரச்சினைகளை சொல்லி அதற்கான தீர்வுகளை பெற்றுத் தருமாறு கோரியும்  ஐக்கிய நாடுகள் சபை கூட இன்று வரை எமது கோரிக்கைக்கு செவி சாய்த்து இதுவரை எந்தவித பதில்களையும் தரவில்லை.

இன்று முல்லைத்தீவில் 1635 நாளாக தொடர் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. கொரோனா  தொற்று காரணமாக அனைவரும்  துன்பப்பட்டு கொண்டிருக்கின்ற நேரம் எங்களுடைய உறவுகளை தேடி நாங்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். காணாமல் போனோர் அலுவலகங்கள் மக்களுக்கு தெரியாமல் இரகசியமான முறையில் உருவாக்கப்படுவதன் மர்மம் என்ன  என்பது  கூட விளங்காமல் இருக்கின்றது. அதனை விட இந்த அரசாங்கத்தினுடைய அமைச்சரவை அமைச்சர்கள் கூறுகிறார்கள் எங்களுடைய  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வெளிநாடுகளில் இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள் அவர்களுக்கு தெரியாமல் எங்களுடைய உறவுகள் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு இல்லை எனவே அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இருந்தால் எங்களுடைய உறவினர்கள் உடைய பெயர் பட்டியலை வெளியிடுங்கள்.

அதனை விடவும் வீடுகளுக்கு வருகின்ற புலனாய்வாளர்கள் பெற்றோர்களை மிரட்டி உங்களுடைய பிள்ளைகள்  கொழும்பில் இருக்கிறார்கள் வாருங்கள் அவர்களைக் கூட்டிக்கொண்டு சென்று காட்டுகிறோம் . என்றும்  உங்களுக்கு உதவி செய்கின்றோம். வீடு கட்டித் தருகிறோம் இதர உதவிகளை செய்கிறோம் என்றும்  கூறுகின்றார்கள். எனவே இந்த இடத்தில் நான் முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் என்னுடைய மகனை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தது போல ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்கள் இதுவரை காலமும் அவருடைய கையில் ஒப்படைத்தவர்களை என்ன செய்தார்கள்

இவ்வாறு கொழும்பிலிருந்து புலனாய்வுப் பிரிவினர் வருகை தந்து எனக்கு சொன்னார்கள்  என்னுடைய மகன் கொழும்பில் இருக்கிறார் வாருங்கள் பார்ப்போம் என்று கூறினார்கள். ஆனால் அங்கு அவர் இருப்பதை படத்தை கொண்டு வந்து காட்டுமாறு அல்லது தொலைபேசி ஊடாக அவரோடு கலந்துரையாடுவதற்கு ஒழுங்கு செய்து தருமாறு கடந்த மாதம் 31ம் திகதி வந்தவர்களிடம் கோரியிருந்தேன் . இன்றுவரை எந்தவிதமான பதிலும் இல்லை.

ஆகவே இவ்வாறு அரசாங்கத்தின் இந்த இழுத்தடிப்பு செயற்பாடுகளை தவிர்த்து இந்த கொரோனா காலத்தில் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற உறவுகள் இங்கு நாங்கள் கஷ்டப்படுகிறது போல் அவர்களும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள் எனவே அவர்களை விடுதலை செய்தால் எங்களுடைய உயிர் பிரிவதற்கு முன் எங்களுடைய குடும்பங்களுடன் இணைந்து வாழ முடியும்  . எனவும் ஐக்கிய நாடுகள் சபை வருகின்ற நாற்பத்தி எட்டாவது கூட்டத் தொடரிலேனும்  எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடைய பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசாங்கத்திற்கு ஒரு  அழுத்தம் கொடுத்து ஒரு நல்ல பதிலை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

“வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை. தமிழர் தாயகத்தினை அழிப்பதற்கான அரசினுடைய சதிவலை.” – கனகரத்தினம் சுகாஸ்

தமிழ் மக்களினுடைய எதிர்கால சந்ததியை அழிப்பதற்காக அரசு  ஆதரவோடு, போதைப் பொருட்கள் குவிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதிக போதைப் பொருள் தமிழர் பகுதிகளை இலக்கு வைத்து இலங்கை கடற்படையின் பாதுகாப்பை மீறி எவ்வாறு கடத்தி வரப்படுகின்றது? இதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்பது தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உண்மையில் இது ஆழமாக ஆராயப்பட வேண்டியதொரு விடயம். ஏனென்றால், இலங்கை அரசினுடைய கடற்படை, கடந்த காலத்தில் மிக மிக வலுவாக, இறுக்கமாக செயற்பட்டதாக கூறப்பட்டது. விடுதலைப் புலிகளினுடைய கடற் போக்குவரத்தையும், அவர்கள் கடலினூடாக ஆயுதங்களை கொண்டு வந்ததையும், இலங்கை கடற்படை முறியடித்ததாக இலங்கை அரசு பெருமையோடு பீத்தி வந்தது.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொண்டு வருவதை இலங்கை கடற்படை முறியடித்தது உண்மை என்றால், ஆயுதம் ஏந்தாத நபர்கள் போதைப் பொருட்களை இலங்கைக்குள் கடத்துவதை இலங்கை கடற்படையால் இலகுவாக முறியடிக்க முடியும். ஆனால் அதையும் தாண்டி போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு இலகுவாக கொண்டு வரப்படுகின்றது என்றால், இங்கே சில கேள்விகள் எங்களுக்கு எழுகின்றன.

முதலாவது, போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை கடற்படையின் பாதுகாப்பை முறியடித்து கடத்துகிறார்களா?
இரண்டாவது, இலங்கை கடற்படை தனது கடற்பரப்பை பாதுகாக்கின்ற திறனை இழந்து விட்டதா?
மூன்றாவது, இலங்கை கடற்படையின் மறைமுக அனுமதியோடுதான், போதைப் பொருட்கள், தமிழர் தாயகப் பிரதேசத்துக்குள் கடத்தப்படுகின்றனவா? என்பது போன்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.

அதுவும், பல கடத்தல் சம்பவங்களின் போது, மூட்டை மூட்டையாக, போதைப் பொருட்கள் மீட்கப்படுகின்றன. ஆனால், சந்தேக நபர்கள் யாருமே கைது செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள். எங்களுக்கு எழுகின்ற கேள்வி, அப்படியானால், அந்த போதைப் பொருட்கள் படகிலே, தாங்களாகவே படகை வலித்து வருகின்றனவா? கடலுக்குள் போதைப் பொருட்களைக் கடத்தி வருகின்ற நபர்கள், எவ்வாறு? அவ்வளவு இலகுவாக மறைகிறார்கள் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகளாகவே இருக்கிறன.

இதனால்தான், நாங்கள் நியாயமாக சந்தேகப் படுகின்றோம். தமிழர் தாயகத்தை சிதைத்து எதிர்கால சந்ததியினுடைய விடுதலை உணர்வை தமிழ் தேசம் பற்றிய உணர்வுகளை சிதைப்பதற்காக, தமிழ் மக்களினுடைய எதிர்கால சந்ததியை அழிப்பதற்காக தமிழர் தாயகத்தை இலக்கு வைத்து அரசினுடைய மறைமுக அல்லது நேரடி ஆதரவோடு, போதைப் பொருட்கள் வடக்குக்குள், கிழக்குக்குள் குவிக்கப்படுகின்றதா? என்ற நியாயமான சந்தேகமும் ஏற்படுகிறது.

இவற்றை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டுமாக இருந்தால், இலங்கையினுடைய கடற்படையினுடைய வலு பற்றி நாங்கள் ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால், இலங்கையினுடைய கடற்படை வலுவாக இருப்பதாகவே, இலங்கையினுடைய கடற்படை அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட கடற்படை ஏன் போதைப்பொருள் கடத்தலை தடுக்கவில்லை அல்லது தடுக்க முடியாமல் இருக்கிறது என்பன எல்லாம் விடை தெரியாத கேள்விகளாகவே உள்ளன. ஆனால் என்னுடைய மேற்கூறிய பதிலுக்குள் அந்த விடை தெளிவாக உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.