06

06

“ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயார்.” – இஸ்ரேல் அறிவிப்பு !

லண்டனில் செயற்பட்டு வரும் ஸோடியாக் மாரிடைம் நிறுவனத்தின் எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல் ஓமனுக்கு அருகே அரபிக் கடலில் கடந்த வாரம் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளானது. இதில் பிரித்தானியா மற்றும் ரோமேனியாவை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

ஸோடியாக் மாரிடைம் லண்டனில் செயற்பட்டு வந்தாலும், அந்த நிறுவனம் இஸ்ரேலைச் சேர்ந்த ஏயல் ஓஃப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். லைபிரீயக் கொடியேற்றிச் சென்ற எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் கப்பல், ஜப்பானுக்குச் சொந்தமானதாகும்.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இந்நிலையில், தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பெஞ்சமின் கான்ட்ஸ்,

‘எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் தயாராக உள்ளது.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி உலகின் மற்ற நாடுகளும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார்.

பெஞ்சமின் கான்ட்ஸின் இந்த எச்சரிக்கை குறித்து ஈரான் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதே நேரம் “இஸ்ரேல் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம்’ என, நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

ஊடகவியலாளர்களை தொடர்ந்து இலக்கு வைக்கும் தலிபான்களின் துப்பாக்கிகள் – அரசு ஊடக மையத் தலைவர் சுட்டுக்கொலை !

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அரசு சார் கட்டிடங்களையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் – தலிபான்கள் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியமாக தலிபான் தீவிரவாத குழுக்கள் ஊடகவியலாளர்களை தொடர்ச்சியாக இலக்கு வைப்பதை காண முடிகின்றது. அண்மையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் – பாதுகாப்புப் படைகள் இடையே நடந்த சண்டையில் இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் (ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்) உயிரிழந்திருந்தார்.  இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மையத் தலைவர் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

 

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு ஊடக மையத்தின் இயக்குநராக இருந்து வந்தவர் தவா கான் மேனாபால். இவர் அரசாங்க செய்திக் குறிப்புகளை உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்தார். இந்நிலையில் அவரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகையில், “மேனாபாலை நாங்கள் தான் சுட்டுக் கொன்றோம். அவர் எங்களுக்கு எதிராக அரசு வெளியிடும் செய்திகளை ஊடகங்களுக்குக் கொண்டு சேர்த்தார். அவருடைய செய்கைக்காக அவரை தண்டித்துள்ளோம்” என்று கூறினார். இருப்பினும், இந்தப் படுகொலை குறித்து மேலதிக விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

 

அமேசான் நிறுவனரை பின்தள்ளி உலகின் மிகப்பெரிய பணக்காரரானார் பெர்னார்ட் அர்னால்ட் !

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார் லூயி உய்ட்டன் நிறுவன உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட்.  இதுவரை  ஜெஃப்பெசோஸ் இந்த இடத்தில் இருந்தார்.

இவருக்குச் சொந்தமான 70 பிராண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

லூயி உய்ட்டன் எனும் ஆடம்பர பொருட்களின் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட். 198.2 பில்லியன் டொலர் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவ்வப்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது 72 வயதான பெர்னார்ட் அர்னால்ட் உலகப் பணக்காரர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப்பெசோஸ் 194.9 பில்லியன் டாலர்களுக்கு அதிபதியாக உள்ளார். 2020 ஆம் ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளும் லாக்டவுனில் இருந்தபோது ஆன்லைன் வர்த்தகம் வாயிலாக 38% வருவாய் ஈட்டியுள்ளது அமேசான்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லாவின் எலோன் மஸ்க் 50வது இடத்தில் இருக்கிறார்.

“இராணுவத்தின் கீழ் முன்பள்ளிகளை வைத்துள்ள மிக விசித்திரமான நாடு இலங்கையே.” – சபையில் சி.சிறீதரன் !

“இராணுவத்தின் கீழ் முன்பள்ளிகளை வைத்துள்ள மிக விசித்திரமான நாடு இலங்கையே.” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் நேற்று உரையாற்றும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஆசிரியர் சமூகத்தின் போராட்டம் நியாயமானது. அதற்கு அரசு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை இந்த அரசு துரத்திக்கொண்டு திரிகின்றது. அவருக்கு ஏதேனும் ஒன்று நடந்தால் அதற்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

இந்த நெருக்கடியைக் கையாள சுபோதினி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஊடாக ஆசிரியர் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆணைக்குழுவின் அறிக்கையையும் கல்வி அமைச்சே உருவாக்கியிருந்தது.

ஆகவே, சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே ஆசிரியர் சங்கங்கள் கேட்கின்றன.

இந்த நாட்டின் முன்பள்ளி ஆசிரியர்களை சிவில் பாதுகாப்புப் பிரிவின் கீழ் வைத்துள்ளனர். இராணுவத்தின் கீழ் முன்பள்ளிகளை வைத்துள்ள மிக விசித்திரமான நாடு இலங்கையே. இதுதான் ஆசியாவின் ஆச்சரியம் என்றார்.

“துயரம், கண்ணீர் மற்றும் வலியின் மீதெழும் மக்களின் போராட்டங்களை அரசால் தடுக்க முடியாது.” – சஜித் பிரேமதாஸ

“துயரம், கண்ணீர் மற்றும் வலியின் மீதெழும் மக்களின் போராட்டங்களை அரசால் தடுக்க முடியாது.” என எதிர்க் கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் மீது அரசாங்கம் மிருகத்தனமாக கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலவசக் கல்விக்காக போராடிய மாணவர் ஆர்வலர்களை கைது செய்வது அதன் ஒரு படியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தின் ஏற்ப்பாட்டாளர் வசந்த முதலிகே, ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அமில சந்தீப உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்று பார்வையிட்டுள்ளார்.

அதன் பின்னர் ஊடகங்களக்குகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும்.

நாட்டின் பிரச்சினைகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு முன், அவற்றைத் உள்ளக ரீதியாக தீர்ப்பதே எனது கொள்கை. நாட்டில் கொரோனா பேரழிவு ஆபத்து காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பவற்றை மக்களின் நலன் கருதி தற்காலிகமாக சிறிது காலத்திற்கு நிறுத்தப்படுகின்றது.

என்றாலும் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிரான செயற்பாடுகளை தாம் நிறுத்தப்போவதில்லை.

கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றம் அருகே நடத்திய போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் ஆர்வலர்களின் நிலை குறித்தும் அவர் கேட்டறிந்துள்ளார்.

பெண் ஒருவரை கொலைசெய்து மூட்டையாக கட்டி கடை முன்னால் வைத்துவிட்டு சென்ற இளைஞன் கைது !

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் பெண்ணொருவரை கொலை செய்து, உரைப்பையொன்றினுள் இட்டு மூட்டையாக கட்டி, கடை ஒன்றின் முன்னால் வைத்துவிட்டு சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை சேர்ந்த சித்தி லைலா (55 வயது) என்ற பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர், கடை ஒன்றை நடாத்தி வருவதுடன் உயிரிழந்த பெண்ணுக்கும் அவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.

மேலும் சம்பவதினமான நேற்று (வியாழக்கிழமை) இரவு, குறித்த இளைஞன் பெண்ணிடம் சென்று பணம் கேட்டபோது இடம்பெற்ற வாக்குவாதத்தின் எதிரொலியாக அவரை கொலை செய்து, உரைப்பையில் இட்டு எடுத்துச் சென்று, நண்பன் ஒருவரின் கடைக்கு முன்னாள் மூட்டையை வைத்துவிட்டு, இது இருக்கட்டும் வந்து எடுக்கின்றேன் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

குறித்த மூட்டையை வைத்துவிட்டு சென்ற நண்பன் நீண்ட நேரமாகியும் எடுக்க வரவில்லை என்ற சந்தேகத்தில் மூடையை திறந்தபோது, அதில் சடலம் ஒன்று இருப்பதை அவர் கண்டுள்ளார்.

அதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு  அறிவிக்கப்பட்டதையடுத்து  அவ்விடத்திற்கு வருகை  தந்த பொலிஸார் மேற்கொண்ட மேலதிக  விசாரணையின் அடிப்படையில், 28 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

“ஓடுவதற்காகப் பயன்படுத்தப்படும் பாதணியை வீட்டில் வைத்து விட்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்ற இலங்கை வீராங்கனை.” – நாமல் ராஜபக்ஷ காட்டம் !

இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்ட வேண்டுமென்ற மனநிலையில் வீர,வீராங்கனைகள் இல்லை. இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய வீராங்கனை ஒருவர் ஓடுவதற்காகப் பயன்படுத்தப்படும் பாதணியை வீட்டில் வைத்து விட்டு சென்றுள்ளார். எனவே விளையாட்டு வீர, வீராங்கனைகளின் ஒழுக்க விதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இளைஞர், விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறிய அமைச்சர் நாமல் ராஜபக்ச மேலும் கூறுகையில்,

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீர, வீராங்கனைகளில் மூன்று பேர் மட்டுமே தகுதி காண் அடிப்படையில் தெரிவானவர்கள். ஏனையவர்கள் வைல்ட் கார்ட் அடிப்படையில் தெரிவானவர்கள். இவர்களில் தகுதிகாண் அடிப்படையில் தெரிவானவர்களுக்கு 30 இலட்சம் ரூபாவும் வைல்ட் கார்ட் அடிப்படையில் தெரிவானவர்களுக்கு 20 இலட்சம் ரூபாவும் பயிற்சியாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாவும் வழங்கினோம். இவர்களை சினமன் ஹார்டன் ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைத்திருந்தோம்.

இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டுவதற்கு உரிய மனநிலையில் வீர, வீராங்கனைகள் இல்லை. தேசிய மட்டத்தில் போட்டிகளில் வெற்றியீட்டுவதே அவர்களின் பிரதான இலக்காக உள்ளது. அதனைத் தாண்டிச் செல்லும் மனநிலை கிடையாது. இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய வீராங்கனை ஓடுவதற்காக பயன்படுத்தப்படும் பாதணியை வீட்டில் வைத்து விட்டுச் சென்றுள்ளார். எனவே விளையாட்டு வீர, வீராங்கனைகளின் ஒழுக்க விதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனை ஒருவர் அணிந்திருந்த உடை தொடர்பில் சமூக வலையத்தளங்களில் வெளியிடப்பட்ட சர்சையான கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளோம். சில வீரர்கள் தாம் வழமையாக அணியும் உடையை அணிவதாக ஒலிம்பிக் குழுவிடம் கூறியுள்ளனர். அவ்வாறு இடம்பெற முடியாது. வீர, வீராங்கனைகளில் நடத்தை விதிகளே இதற்குக் காரணமாகும். இது தொடர்பில் நாம் உரிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். நடத்தை விதிகளை பாராளுமன்றத்தில் சட்டமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாம் ஜப்பான் சென்றது தொடர்பில் விமர்சிக்கப்படுகின்றது. ரொஷான் ரணசிங்க எம்.பி. தொழில் ரீதியாக ஜப்பான் சென்றார். அவரின் பணத்தில் தான் நான் ஜப்பான் சென்றேன். நாம் அரசுக்கு செலவு வைப்பதில்லை.

இதேவேளை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெற்றிகொள்ள ஒரு நாடு 10 முதல் 15 வருடங்கள் தயாராகின்றது. இம்முறை ஜப்பானும் அவ்வாறானதொரு முறைமையைப் பின்பற்றியே பதக்கங்களை வெற்றி கொண்டு வருகிறது. எமது நாட்டில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வேலைத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்க நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விளையாட்டுக் கவுன்சில் ஊடாக 2032ஆம் ஆண்டு வரையான பத்தாண்டு திட்டமொன்றின் வழியாக இந்த இலக்கை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம். ஒலிம்பிக் போட்டிகளை மையப்படுத்திய நீண்டகால திட்டமொன்று செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் நாம் பதக்கங்களை வெற்றிகொள்வதற்கான போட்டிகளை அடையாளம் காண வேண்டும். துப்பாக்கிச் சூடு, பளு தூக்கல் உட்பட பல்வேறு விளையாட்டுகளை அடையாளம் கண்டுள்ளோம். வெளிநாடுகளுக்கு அனுப்பி இவர்களுக்கு பயிற்சியை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் 5 பேர் இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்று விக்கப்படுகின்றனர்.

அதேபோன்று போட்டியாளர்களும் வெற்றியை இலக்கு வைத்த மன உறுதியுடன் தமது விளையாட்டை முன்னெடுக்க வேண்டும். வீரர்களின் மன வலிமையை பலப்படுத்தும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. விளையாட்டு சங்கங்களை நெறிப்படுத்த விசேட சட்டமூலமொன்றை ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம். ஆகவே, குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளுடன் எமது வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என்றார்.

16 சிசிரீவி கமராக்கள் எதிலும் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் பதிவாகவில்லை – விசாரணைகள் ஆரம்பம் !

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சிசிரீவி கமராக்கள் எவற்றிலும் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட சிசிரீவி ஆய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று குறித்த கமராக்களை பரிசோதித்திருந்த நிலையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அவற்றில் இரண்டு கமராக்கள் செயலிழந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்குள் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கமராக்களே இவ்வாறு செயலிழந்து காணப்பட்டதுடன், அதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிர் கொல்லும் டெல்டா – வைத்தியசாலைகளில் இறந்துகொண்டிருக்கும் தொற்றாளர்கள்!

இலங்கையில் தற்சமயம் கொரோனா தொற்று பரவிவருவது குறித்து இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நாடாளுமன்றத்தில் நேற்று எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறிய போது,

வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்ற கோவிட் நோயாளர்கள் பலருக்கும் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் அடுத்த வாரத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குதி செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.

விசேடமாக டெல்டா தொற்று பரவியமை காரணமாக பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வைத்தியசாலையிலேயே உயிரிழக்கும் அவல நிலைமை ஏற்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டமானது மிகவும் பாரிய அச்சறுத்தலை சுகாதாரக் கட்டமைப்புக்கு ஏற்படுத்துவதால் போராட்டங்களை கைவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.