08

08

உண்மைகள் உறங்குவதில்லை: மனம் திறந்து பேசுகின்றார் தோழர் யோகன் கண்ணமுத்து!

ஈழ விடுதலைப் போராட்டம் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – புளொட் – தோழர் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம்

1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட, அதன் பின் பிறந்த தலைமுறையினர் தான் அசோக் யோகன் கண்ணமுத்து. 1957இல் பிறந்த இவர் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தோடு தவழந்து, நடந்து, இளைஞனாகி ஆயதமேந்திப் போராடி அதிஸ்டவசமாக உயிர்தப்பி தற்போது தனது சாட்சியத்தை தேசம்நெற் இணையத்தில் பதிவு செய்ய முன்வந்துள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டிருந்த தோழர் யோகன் கண்ணமுத்து: தமிழீழ விடுதலைப் போராட்டச் சூழல், தமிழீழ விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட பிளவு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உருவாக்கம், மட்டக்களப்புச் சிறையுடைப்பு, கழகத்தினுள் இடம்பெற்ற பிளவுகள், தீப்பொறி, ஈஎன்டிஎல்எப் ஆகிய அமைப்புகளின் உருவாக்கம் என பல்வேறு விடயங்கள் பற்றியும் பதிவு செய்கின்றார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்த தோழர் யோகன் கண்ணமுத்து விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடனும் வெவ்வேறு தளங்களில் பயணித்தவர். சகோதரப் படுகொலைகள், பழிவாங்கல் செயற்பாடுகள் என போராட்டத்தின் பல்வேறு அம்சங்ளையும் அவர் இங்கு பதிவு செய்ய முற்பட்டு உள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னணிப் போராளியான இவர் விடுதலைப் போராட்டம் பற்றிய இன்னுமொரு கோணத்தையும் பதிவு செய்கின்றார்.

இது தொடர்பாக வாசகர்களாகிய உங்களுக்கு ஈழப்போராட்ட வரலாறு தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் அவற்றை இங்கு பதிவு செய்தால் அக்கேள்விகளுக்கான பதிலையும் பெற்றுக்கொண்டு இந்த வரலாற்றுத் தொடரை மேலும் காத்திரமானதாக ஆக்க முடியும்.

இப்பதிவு தற்போதைய புதிய தலைமுறையினருக்கு எமது விடுதலைப் போராட்டம் பற்றி மறைக்கப்பட்ட அல்லது அறிந்திராத பக்கங்களை எடுத்துக்காட்டும்.

அடுத்த வாரம் முதல் தேசம்நெற் இணையத் தளத்தில் இவருடைய நேர்காணல் பதிவு தொடராக எழுத்திலும் காணொலியாகவும் வெளிவரும்.

உலக நாடுகளுக்கு 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் – உதவிக்கரம் நீட்டுகிறது சீனா !

இந்த ஆண்டு இறுதிக்குள் உலக நாடுகளுக்கு 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக  சர்வதேச தடுப்பூசி ஒத்துழைப்பு மாநாட்டில் கருத்து தெரிவித்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்  உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், சீனா இதுவரை 770 மில்லியன் டோஸ்களை மற்ற நாடுகளுக்கு விநியோகித்ததனையும் அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும், உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் தடுப்பூசி விநியோகத் திட்டத்திற்கு புதிய 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உறுதிப்பாட்டையும் ஜனாதிபதி ஷி ஜின்பிங்  அறிவித்தார்.

சீனா இதுவரை 1.7 பில்லியன் அளவுகளை 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட வயது வந்தோருக்கு நிர்வகித்துள்ளது. ஆண்டு இறுதிக்குள் 70 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே இலக்கு.

உலக சுகாதார அமைப்பு. சமீபத்தில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், அதிக நாடுகளில் முதல் கொவிட் அளவுகள் கிடைக்கு முன் பணக்கார நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பூஸ்டர்களை (மூன்றாவது டோஸ்) வழங்குவதை கைவிடுமாறு நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்தது பார்சிலோனாவுடனான ஒப்பந்த காலம் – கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி !

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக 2000ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார்.
May be an image of 2 people, people standing and outdoors
சமீபத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்க கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக இதுவரை 672 கோல்கள் அடித்து உள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்தார். 34 வயது நிரம்பிய மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 34 டிராபிகளையும் பெற்றுத் தந்துள்ளார். 6 முறை பலோன் டி ஓர்  விருதை வென்றுள்ளார்.
மெஸ்சியின் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், அடுத்த சில வருடங்களுக்கு மெஸ்சியை தக்க வைத்து கொள்ள பார்சிலோனா கிளப் தயராக இருந்தது. இதற்கான ஒப்பந்தமும் தயாராகின. ஆனால் நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதனால் பார்சிலோனா அணிக்கான மெஸ்சியின் பயணம் முடிவுக்கு வந்தது.
May be an image of 3 people, outdoors and text that says "kut BARCELON BULGARIA III LEO MESSI"
இந்நிலையில், மெஸ்சி இன்று பார்சிலோனா கிளப்புக்கு சொந்தமான கேம் நவ் ஸ்டேடியத்தில் செய்தியாளர்களை சந்தித்தித்தார். அப்போது, பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதை உறுதி செய்தார். அணியில் இருந்து விலகுவதாக அவர் கூறியபோது கண்களில் கண்ணீர் பெருகியது.
மெஸ்சியை வழியனுப்புவதற்காக ஸ்டேடியத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றனர். அவர்களில் பலர் மெஸ்சியின் ராசியான 10ம் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்திருந்தனர்.

முடிவடைந்தது ஒலிம்பிக் – டோக்கியோவில் ஆரம்பித்தது கொரோனா அலை !

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்திகதியில் இருந்து இன்று வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் டோக்கியோவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக தினசரி பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. உச்சக்கட்டமாக கடந்த வியாழக்கிழமை 5,042 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று 4,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இதற்கு முன் இதுபோன்று அதிக அளவில் பாதிவானது கிடையாதாம்.
டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கியதில் இருந்தே டோக்கியோ நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த முப்படையினரையும் களமிறக்க திட்டம் !

கொரோனாவை கட்டுப்படுத்த முப்படையினரையும் ஈடுபடுத்த திட்டம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பதற்காக முப்படையினர், சுகாதாரப் பிரிவில் ஓய்வுபெற்றுச் சென்ற அதிகாரிகள் மற்றும் தனியார் பிரிவில் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“கொரோனாத் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு போதிய அம்புலன்ஸ் வசதிகள் இல்லையாயின் பிரதேச மட்டத்தில் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மரண எண்ணிக்கை அதிகரிப்பதால் தொற்றாளர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைக் கண்காணிப்புக்குள் உட்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

“மந்திர பாணி, மந்திர சட்டி கோமாளி வேலைகளை கைவிடுங்கள் எனக்கூறியும் அரச தரப்பில் எவரும் என் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை.” – மனோ ஆதங்கம் !

“மந்திர பாணி, மந்திர சட்டி கோமாளி வேலைகளை கைவிடுங்கள் எனக்கூறியும் அரச தரப்பில் எவரும் என் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை.” என  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தடுப்பூசி தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட போது,

“நான் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யவில்லை. நானும் அப்படிதான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். கொழும்பு ஜிந்துபிட்டி மாநகர சபை பொது வைத்திய வாரியத்தில், ஜூன் 21ஆம் திகதியன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது, நானும் அங்கு போய், அவ்வேளையில் அங்கிருந்த சினோபார்ம் தடுப்பூசியைத்தான் போட்டுக்கொண்டேன்.

இராணுவ வைத்தியசாலையில் எம்.பிக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அங்கு நான் போகவில்லை. அவ்வளவுதான். இதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. கொரோனா அனர்த்தத்தைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள்” என நாம் கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புலம்பியும், இந்த அரசு, பல கோமாளி வேலைகளை செய்து காலத்தை ஓட்டியது.

கடந்த வருடம் மார்ச் மாதம் அலரி மாளிகையில் பிரதமர் நடத்திய கொரோனா தடுப்பு தொடர்பான கட்சித் தலைவர்கள் கூட்டத்தையடுத்து, “இந்நாடு ஒரு தீவு. இதனால், எங்களுக்கு நான்கு புறம் கடல் என்ற இயற்கை அரண் இருக்கின்றது. ஆகவேதான் நோயாளிகள் குறைவாக இருக்கிறார்கள். ஆனால், நோயாளிகளுடன் பழகிய முதற்தொற்றாளர்கள் 40 ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். அவர்களை உடன் கண்காணியுங்கள்” என்று நான் கூறினேன்.

அவ்வேளையில், நோயாளிகள் 40 ஆயிரம் பேர் இருப்பதாக நான் பொய் சொல்லி நாட்டைக் குழப்புகின்றேன் என்று சொல்லி, அரசுதரப்பு அரசியல்வாதிகளான எஸ்.பி. திஸாநாயக்க, உதய கம்மன்பில ஆகியோர் என்னைத் திட்டினார்கள். ஜிநானந்த தேரர் என்ற அரசு சார்பு பௌத்த பிக்கு என்னைக் கைது செய்யும்படி சி.ஐ.டியில் புகார் செய்தார்.

பொலிஸ் என்னை விசாரிக்கவோ, கைது செய்யவோ வரவில்லை. ஆனால், இன்று அந்த முட்டாள் அரசியல்வாதிகளின் ஆட்டங்கள் முடித்துள்ளன. அந்த முட்டாள் பிக்குவையும் காணோம். அதன்பிறகு இன்றைய அரசு, பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில ஆகிய அமைச்சர்களைக் கொண்டு, ‘மந்திர’ சட்டியை களனி கங்கையில் போட்டு, தம்மிக்க என்பவரின் நாட்டு வைத்திய பாணியை நாடாளுமன்றம் வரை கொண்டு வந்து வயதான சபாநாயகருக்கும், வயதாகும் சுகாதார அமைச்சருக்கும் பருக்கி, ஒரு வருடத்தை வீணடித்து, மக்களின் மரணங்களுக்கும், துன்பங்களுக்கும், அழுகுரல்களுக்கும், கண்ணீருக்கும் காரணமாகி விட்டது.

இன்று, நமது நாட்டுக்கு இலவசமாக அல்லது போட்டி நிறைந்த உலக நிலைமைகளில் விலைக்காகவது, பெருந்தொகை தடுப்பூசிகளையும், அவற்றை விலைக்கு வாங்க நிதி உதவிகளையும் தந்த இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நட்பு நாடுகளுக்கும், ஐநா, உலக சுகாதார ஸ்தாபனம், உலக வங்கி. ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய அமைப்புகளுக்கும் நன்றி.

ஆகவே, இன்று தரப்படும் தடுப்பூசிகள் இந்த அரசால் தரப்படுபவை அல்ல. மேற்கண்ட நட்பு நாடுகளும், நட்பு உலக அமைப்புகளுமே அவற்றை தருகின்றன. தரப்பட்ட தடுப்பூசிகளை நமது நாட்டு, சுகாதாரத்துறை மருத்துவ ஊழியர்களும், இராணுவத்தினரும் மிக சிறப்பாக மின்னல் வேகத்தில் மக்களுக்கு செலுத்துகின்றனர்.

24 மணித்தியாலங்களில், இவர்கள் 48 மணித்தியால வேலைகளை படுவேகமாகச் செய்கிறார்கள். இவர்களுக்கு நன்றி கூற முழு நாடும் கடமைப்பட்டுள்ளது.

இந்த மந்திர பாணி, மந்திர சட்டி கோமாளி வேலைகளை கைவிட்டு, கடந்த வருடமே இன்று போல் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொடுத்து இருந்தால், இந்நேரம் முழுநாடும் தடுப்பூசிகளைப் பெற்றிருக்கும். அவற்றை இவர்கள் சிறப்பாகச் செய்து முடித்து இருப்பார்கள். நான்கு புறமும் கடல் என்ற, இயற்கை அரண் கொண்ட ஒரு தீவான எமது நாடு, உலகில் கொரோனாவை முறியடித்த முதல் நாடாக வெற்றிக்கொடி நாட்டியிருக்கும்.

எது எப்படி இருந்தாலும், இந்த வேளையில், சுகாதாரத்துறை மருத்துவ ஊழியர்களுக்கும், இராணுவத்தினருக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கும் முகமாக, நாம் கொரோனாத் தடுப்பூசிகளின் வர்த்தகப் பெயர்களைக் கேட்டு நிற்காமல் இருப்பதை போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனாத் தடுப்பூசிகளின் வர்த்தகப் பெயர்களைப் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். இவை பற்றிய கருத்துகள், வழமையான மருந்து வர்த்தக உலகப் போட்டா போட்டி விவகாரம். உள்நாட்டில் வாழ்வதற்கும், வெளிநாடு செல்வதற்கும் முதலில் உயிர் வாழ வேண்டும். ஆகவே, தடுப்பூசிகளின் வர்த்தகப் பெயர்களை மறந்து விட்டு, தடுப்பூசியை தாமதிக்காமல் போட்டுக்கொள்ளுங்கள். குறிப்பாக கொழும்பு மக்கள் இனியும் தாமதம் செய்ய வேண்டாம். இங்கே அனர்த்தம் வெளியே சொல்லப்படுவதை விட அதிகம் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன்.

அதன்மூலம் படுவேகமாகப் பரவி வரும் டெல்டா கொரோனா கிருமிகளில் இருந்து உங்களையும், நாட்டையும் பாதுகாக்க முடியும்” – என்றார்.

“இலங்கை கொவிட் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.” – கையை விரித்தது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் !

நாட்டில் கொவிட் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலைக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது கம்பஹா உட்பட சில மாவட்டங்களில் 1000 இற்கு மேற்பட்ட நாளாந்த தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகவும் கொவிட் மரணங்கள் அதிகரித்து செல்லும் இந்த நிலமை தொடர்ச்சியாக சென்றால் கொவிட் தடுப்பு மையங்களை அமைப்பதற்கு பதிலாக தகன மேடைகளையே அமைக்க வேண்டியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றினால் இந்த ஆண்டு இறுதிக்குள் 23000 மரணங்கள் நிகழக்கூடும் என்று அமெரிக்காவின் வொஷிண்டன் பல்கலைக்கழகம் தெரிவி்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தாய் மற்றும் குழந்தையை தீயிட்டு எரித்துக்கொலை செய்த வவுனியா இளைஞர் !

இரட்டை கொலையுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் வவுனியா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா முருகனூர் பகுதியில் வசித்த தாயும், சிறுகுழந்தையும் காணாமல் போயிருந்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய வவுனியா காவற்துறையினரால்  இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார். குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட விசாரணையில் அவர் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
குறித்த தாய் மற்றும் அவரது குழந்தையை தானே கொலை செய்து தீயிட்டு எரித்ததாக அவர் காவற்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வாக்கு மூலத்திற்கமைய முருகனூர் பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டிற்கு நேற்றையதினம் சென்ற காவற்துறையினர் அங்கு பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  உயிரிழந்த பெண் யாழ்-கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர் அவரது காதலன் என காவற்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இதே வேளை கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முடிவுக்கு வந்தது டோக்கியோ ஒலிம்பிக் – இறுதிவரை ஒலிம்பிக்கிலும் தொடர்ந்த சீனா – அமெரிக்க பதக்கப் போர் !

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் திகதி தொடங்கி  நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறின.
Which Country Has The Biggest Olympic Team? Team USA Dominates 2021  Olympics Roster
போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில்,நூற்றுக்கணக்கான போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் களமிறங்கிய அமெரிக்கா 2020 ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக மூன்றாவது கோடைக்கால விளையாட்டுக்கான தங்கப் பதக்க அட்டவணையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

இன்று 39 தங்கப் பதக்கத்துடன் சீனாவை பின்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இதற்கு அமைய முதல் இடத்திலுள்ள அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கல பதக்கங்களுமாக மொத்தம் 113 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

சீனா 38 தங்கம் 32 வெள்ளி 18 வெண்கல பதக்கங்களைப் பெற்று 88 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. போட்டிகளை நடத்தும் ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி. 17 வெண்கல பதங்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இதேவேளை, பிரித்தானியா 22 தங்கம், 21 வெள்ளி மற்றும் 25 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று நான்காவது இடத்திலுள்ளது. ரஷ்ய ஒலிம்பிக் குழு 20 தங்கப் பதக்கங்களுடன் 5வது இடத்திலும் அவுஸ்ரேலியா 17 தங்கப் பதக்கங்களுடன் 6 ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ள.

அயல்நாடான இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 48வது இடத்தினை பெற்றிருந்தது.

“பண்டாரநாயக்கவின் தியாகங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் எனது மகனுக்கு இல்லை.” – சந்திரிக்கா குமாரதுங்க

தனது மகன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர், இவ்வாறான தவறான செய்திகள் மூலம் மக்கள் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசியலில் நுழைய விமுக்தி குமாரதுங்கவுக்கு ஆர்வமோ விருப்பமோ இல்லை என்றும் பண்டாரநாயக்கவின் தியாகங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் சந்திரிக்கா குமாரதுங்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய அமைப்பு அரசியல் மட்டுமல்ல என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.