09

09

போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை நிராகரித்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.

முக்கிய வடக்கு நகரமான குண்டூஸையும், சர்-இ-புல் மற்றும் டலோகானையும் தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன.

இதனிடையே தீவிரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் விமானங்கள் மீண்டும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

சமீபத்திய தாக்குதல்களில்  பல தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் தலையீடுக்கு எதிராக எச்சரித்தார்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் 20 ஆண்டுகால இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கிய பின்னர் வன்முறை அதிகரித்துள்ளது.

தலிபான் தீவிரவாதிகள் சமீபத்திய வாரங்களில் வேகமாக முன்னேறி வருகின்றனர். கிராமப்புறங்களின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய அவர்கள் இப்போது முக்கிய நகரங்களையும் குறிவைக்கின்றனர்.

பாலத்தின் தூணில் ஏறி செல்பி எடுக்க முற்பட்டவர் சடலமாக மீட்பு – யாழில் சம்பவம் !

செல்பி எடுப்பதற்காக பண்ணைப் பாலத்தின் தூணில் ஏறிய இளைஞர் ஒருவர் தவறி கடலில் வீழ்ந்து இறந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் நல்லூரைச் சேர்ந்த கௌதமன் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடலில் விழுந்த இளைஞரை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் தேடியபோதும் நேற்றுமீட்க முடியவில்லை. நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் காணாமல் போனவரை தேடும் பணிகள் கைவிடப்பட்ட நிலையில் இன்று குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முதல்நாள் அமர்வில் இலங்கை விவகாரம் !

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் 48 வது அமர்வின் தொடக்க நாளான செப்டம்பர் 13 ஆம் திகதி நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்கவுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்றதான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதன் பின்னணியில் பேரவையின் தீர்மானம் 30/1 மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் பெப்ரவரி மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிக கொரோனா மரணங்கள் – ஒரே நாளில் நூற்றுக்கணக்கான உயிர்பலி !

இலங்கையில் நேற்றைய தினம்  (08) மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தகவலை சுகாதார சேவைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு !

16 வயதுடைய சிறுமியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரின் பிணை விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை மற்றும் சகோதரர், தரகர் உள்ளிட்ட நால்வருக்கும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பாக குறித்த நால்வரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“ஆசிரியர்கள் பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.” – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகுவது என்பது பழிவாங்கும் செயற்பாடாகவே கருதப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்கமும் நாடும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக, திட்டமிட்டபடி பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

எனவே அவர்கள் பாடத்திட்டத்தை உள்ளடக்க ஒன்லைன் கல்வி முறையை சார்ந்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் கூறினார்.

இருப்பினும், தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, மாணவர்களுக்கான ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாதுள்ளது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

சம்பள உயர்வு கிடைக்கும் வரை கற்பிக்கமாட்டோம் – வவுனியா மாவட்ட ஆசிரியர் சங்கம் உறுதி !

கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ள நிலையில் இணையவழி மூலமாகவே மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எனினும் சம்பள உயர்வு தொடர்பான விடயங்களால் அரசுடன் மோதுண்டு வரும் ஆசிரியர் சங்கங்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதால் மாணவர்கள் பல இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். செப்டம்பரில் ஆரம்பிப்பதாக இருந்த பாடசாலைகள் ஆரம்பிப்பபது இன்னும் பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் முடிவுறுத்தப்படும் வரை அனைத்து விதமான கற்றல், கற்பித்தல் பணிகளிலிருந்தும் தற்காலிகமாக ஒதுங்கியிருப்பதாக வவுனியா மாவட்ட ஒண்றிணைந்த அதிபர் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் சந்தர்ப்பத்தில் வவுனியா மாவட்டத்திலும் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து ஒரு சம்மேளனத்தினை உருவாக்கியுள்ளோம். அதனூடாக போராட்டத்தினை வலுவுடையதாக மாற்றவேண்டிய தேவை எமக்குள்ளது.

குறிப்பாக பாடசாலையில் தினசரி வரவுகளை உறுதிப்படுத்தாது இருத்தல், தொலைபேசி மூலமாக தகவல்களை வழங்காதிருத்தல், கடமைநேரத்தில் பாடசாலைக்கு செல்லாதிருத்தல், போராட்டம் முடியும் வரை வீடுகளில் இருந்து பணியாற்றாமல் இருத்தல், ஆகிய தீர்மானங்களை இனிவரும் காலங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .இதேவேளை கொவிட் சூழலை கருத்தில் கொண்டு எமது போராட்ட வடிவங்களையும் மாற்றியுள்ளோம் என்றனர்.

குறித்த ஊடகசந்திப்பில் இலங்கை ஆசிரியர்சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைசங்கம், அதிபர் சங்கம், இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம், ஏகாபத்த குருசேவாசங்கம் ஆகியன கலந்து கொண்டிருந்தது.

கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா !

கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் பரவ ஆரம்பித்த அதே வேகத்தில் தற்போதும் பரவி வருவதுடன் புதிய திரிபுகளாகவும் பரவ ஆரமப்பித்துள்ளது. அண்மையில் கொரோனா தொற்றின் திரிபுப்பெற்ற டெல்டா, பீட்டா, லாம்ப்டா என்பன கண்டறியப்பட்டன. இதற்கு  மேலதிகமாக புதுவித திரிபுபெற்ற வைரசினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியாவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

பி.வன் 621 என்ற இந்த தொற்று தீவிரமாக அந்நாட்டில் பரவுகிறது.

“பெற்றோர்களே பிள்ளைகளை கவனியுங்கள் – 13 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 12வயது தம்பி தொடர்பில் வவுனியா பொலிஸார் அதிருப்தி !

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது அக்காவை 12 வயதுடைய தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த 13 வயதுடைய சிறுமி வயிற்றுவலி காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது குறித்த சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வைத்தியர்கள் வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பித்தமையினை அடுத்து ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளில் தனது தம்பி தன்னை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக சிறுமியளித்த வாக்குமூலத்தின் பிரகாரம் 12 வயதுடைய தம்பி ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது சூம் செயலிகள் மூலம் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுவதினால் சிறுவர்கள் மத்தியில் தொலைபேசி பாவனை அதிகரித்து எனினும் பிள்ளைகளின் தொலைபேசிகள் தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்தமையும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இளம் குடும்பஸ்தர் ஒரு குழந்தையின் தந்தை வீதி விபத்தில் மரணம்! தெற்காசியாவில் இலங்கையின் வீதிகளே ஆபத்து நிறைந்தது – உலகவங்கி

ரமணன் என்றழைக்கப்படும் காண்டீபன் ஜெகநாதன் (44) விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓகஸ்ட் 8இல் மரணமடைந்தார். இளம் குடும்பத்தவரான ஒரு குழந்தையின் தந்தையான காண்டிபன் வாகரை டிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர். ஓகஸ்ட் 2 இல் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது மாங்கேணி பகுதியில் விபத்துக்கு உள்ளானார். அவருக்குப் பின்னால் வந்த டயலக் நிறுவனத்தின் வான் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்தது. அவ்வாகனத்தை ஓட்டி வந்த 21 வயது இளைஞர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இலங்கையின் வீதிகளில் தினமும் எண்மர் மரணிப்பதாகவும் 22 பேர் காயமடைவதாகவும் வீதி போக்குவரத்து விபத்துப் பற்றி உலக வங்கி மேற்கொண்ட புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இவ்விபத்துக்களில் மூன்றில் ஒரு மரணங்கள் பாதசாரிகளிலும் 50 வீத மரணங்கள் இரு அல்லது முச்சக்கர வாகனப் பாவனையாளர்களிலும் நிகழ்வதாகவும் இப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இலங்கையின் வீதிகளில் 2011 – 18 ஆண்டுகளுக்கு இடையே வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 67 வீதத்தால் அதிகரித்து உள்ளது. இந்த அதீத அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படாவிட்டால் வீதிகளின் விபத்து தொடர்ந்தும் அதிகரிக்கும் என உலக வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு, பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள், வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தை, வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமை, பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இலங்கையில் ஒரு இலட்சம் மக்களுக்கு ஆண்டுக்கு 17 பேர் வீதி விபத்துக்களில் மரணமடைகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகின்றது. கூடுதல் வருமானம் உள்ள நாடுகளைக் காட்டிலும் இது இருமடங்கு அதிகமானதாக உள்ளது. வீதிப் பாதுகாப்பு அதிகமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வீதி விபத்துக்களில் மரணிப்பவர்களின் வீதம் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது. தெற்காவியாவிலேயே இலங்கையின் வீதிகளே ஆபத்து நிறைந்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

வீதி விபத்துக்கள் தொடர்பாக கிழக்கு இலங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பதிவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 19 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் பெரும்பாலும் நகர்ப்புற வீதிகளில் மரணத்துக்கு காயத்திற்கு உள்ளாவதாக தெரியவருகின்றது. பீதாம்பரம் ஜெபரா, செல்லத்துரை பிரசாத் ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வில் 35வீதமான மரணங்கள், காயங்கள் தலைக்கவசம் அணியாததால் அல்லது தலைக்கவசம் அணிந்தும் அதன் பட்டியயை கொழுவி விடாததால் ஏற்படுவதாக தெரியவருகின்றது. காயப்பட்டவர்கள் அல்லது மரணமடைந்தவர்களில் 25 வீதமானவர்கள் மது மற்றும் போதைப் பொருள் பாவனையின் பாதிப்பாலும் 17 வீதமானவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற விபத்துக்களில் 70 வீதத்துக்கும் மேற்பட்டவை மோட்டார் சைக்கிள் விபத்து என்றும் இவர்களில் 70 வீதமானவை தலையில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்படுபவை என்றும் தெரியவருகின்றது. ரமணனின் விபத்தும் தலையில் ஏற்பட்ட பலத்த அடியினால் ஏற்பட்ட இரத்தக் கசிவே அவருடைய மரணத்திற்கு இட்டுச் சென்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இவ்வாறான சம்பவங்கள் எமது வீதிகளில் நாளாந்த நிகழ்வாகி வருவதால் பாதசாரிகளும் சைக்கிள் மற்றம் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களும் அவதானமாகச் செயற்படுவது அவசியம் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவரின் மாமி தேசம்நெற்க்கு தகவல் தருகையில் நல்ல எதிர்காலத்தைக் கொண்டிருந்த ரமணனின் திடீர் இழப்பினால் குடும்பமே அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்தார். பாரிஸில் வாழும் இவர் எமது இளம் தலைமுறையின் உயிர்கள் இவ்வாறு வீதிகளில் இழக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தலைக் கவசம் தலைமுறையைக் காப்பாற்றும்!