10

10

சீனாவின் தடுப்பூசியை பெற்றவர்கள் பிரான்ஸ் நுழையத்தடை – அதிருப்தியில் இலங்கையர்கள் !

தடுப்பூசி தொடர்பான அரசியல் நகர்வுகள் மிகத்தீவிரமடைய ஆரமப்பித்துள்ள நிலையில் உலக வல்லரசுகள் தடுப்பூசியை கொண்டு தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்படுகின்றன. முக்கியமாக அமெரிக்கா, பிரித்தானியா , ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தம்முடைய தடுப்பூசியை ஏனையநாடுகளுக்கு வழங்குவதன் ஊடாக தமது ஆதிக்கத்தை உலக அரங்கில் பலப்படுத்த ஆரம்பித்துள்ளன.

இந்தப்போட்டியில் சீனாவின் ஆதிக்கம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை விட மிகத்தீவிரமாக வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ள நிலையில் இம்முறை நடைபெற்ற ஜி7 நாடுகளின் மாநாட்டில் கூட இதுவே பெரும்வாதமாகியிருந்தது.

இந்த பின்னணியில் சீனாவின் தடுப்பூசிகளை பெற்றவர்களை ஐரோப்பிய  – அமெரிக்க நாடுகளில் புகவிடாது தடுப்பது போன்றதான ஒரு வாதம் தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை பிரான்ஸ் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாக அறிய முடிகின்றது.

 

சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் கதவடைத்துள்ளது.
உலகில் சீனத்தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு பயணத்தடை விதிக்கின்ற முதல்நாடாக பிரான்ஸ் காணப்படுகின்றது.

சீனத்தடுப்பூசி தவிர ஏனைய தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் தமது நாட்டிற்குப் பயணிக்கத் தடையில்லை என்றும் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இலங்கை முழுவதுமே அதிகமாக சீனத்தடுப்பூசியான சைனாபோரம் போடப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பான அதிருப்தியை இலங்கையர்கள் பலரும் தமது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவேற்றிவருகின்றனர்.

அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார் யாழ். மாநகர முதல்வர் – மணிவண்ணனுக்கு எதிராக அவருடைய கட்சியினரே போராட்டம் !

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் செயற்பாட்டை கண்டித்து இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக தாம் உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டு உள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் தமக்கான உரிய தீர்வு விரைந்து கிடைக்காதவிடத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“ஆசிரியர்களின் சம்பள உயர்வு தற்போதைக்கு சாத்தியமில்லை ” – கல்வி அமைச்சர்

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கடந்த 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு வழங்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று அமைச்சர்கள் கூறியதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்த முடிவு எடுக்கப்பட்டால், அது மற்ற பொது ஊழியர்களின் இணையான சேவைகளையும் பாதிக்கும். எனவே, முழு பொது சேவைக்கும் போதுமான சிந்தனை அளித்து அனைவருக்கும் நியாயமான ஒரு தீர்வை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து பொதுச் சேவைகளுக்கும் நீதி வழங்கும் வகையில் நிரந்தரத் தீர்வை வழங்குவதே அமைச்சரவை அமைச்சர்களின் முடிவாகும்.

“நாட்டின் தற்போதைய கடுமையான சுகாதார நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொண்டு வர அமைச்சரவை அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாட்டில் தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, அனைத்து அரசாங்க வருமானமும் சரிந்துவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை வாழ வைப்பது அவசியம் . அமைச்சர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேவைகளைப் பாராட்டியுள்ளனர் மற்றும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பிரச்சினைக்கு முடிவை வழங்குவதே அமைச்சரவை அமைச்சர்களின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

“பூமியில் மனித இனம் வாழ்வதற்கான சூழல் இல்லாது போகவுள்ளது.” – ஐபிபிசி அதிர்ச்சி அறிக்கை !

பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை கடக்கும் சூழல் ஏற்பட்டால் மனித இனம் வாழ்வதற்கான சூழல் இல்லாமலாகிவிடும் என்று ஐபிபிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அரசுகளுக்கு இடையிலான குழு வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால நிலை மாற்றம் என்பது உண்மை என்றும், மனித நடவடிக்கைகளால் பூமியின் வெப்ப நிலை அதிகரிக்கிறது என்பதற்கு சந்தேகமில்லாத ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐபிபிசி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “

பூமியின் வெப்ப நிலை 1.1 டிகி செல்சியஸாக அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2040 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிடும். பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை தாண்டினால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு மனித இனங்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடினமான சூழல் உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பூமியில் கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வு அதிகரிக்கும் பட்சத்தில் பூமியின் நில அமைப்பும், கடலும் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கும் திறனை இழக்கும். இதனால் கடல், பனிப்பாறைகள், கடல் நீர்மட்ட உயர்வில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத நிலை உண்டாகும்” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தியாவை பொறுத்தவரை கால நிலை மாற்றத்தின் காரணமாக வருகின்ற பத்தாண்டுகளில் வெப்ப அலைகள், வறட்சி, மழை பொழிவு, சூறாவளிகளை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

மோசமாகிக்கொண்டிருக்கும் மக்களின் மனநிலை – தங்கச் சங்கிலிக்காக தாயின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த மகன் !

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலிலுள்ள குமாரவேலிய கிராமத்தில் தனது தாயாரின் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்த 45 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (10) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குமாரவேலிய கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பொன்னுத்துரை தவமணி என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் உயிரிழந்த பெண் அவரது மகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த தாயாரின் வீட்டுக்கு சென்ற மகன் தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கேட்டு சண்டை பிடித்துள்ளார்.
எனினும், தாயார் சங்கிலியை கொடுக்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து மகனுக்கும் தாயாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அங்கிருந்த கத்தியால் தாயாரின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தாயாரை வெட்டி கொலை செய்த 45 வயதுடைய மகனை கைது செய்ததுடன் சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

“சமூக ஊடகங்களில் வெளிவரும் கொரோனா மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்.” – சுகாதார அமைச்சு

சமூக ஊடகங்களில் வெளிவரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும் மருந்துகள் மற்றும் உணவு பொருட்களை பொது மக்கள் உண்ணுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தகைய பொருட்களை மருத்துவ பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவ பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

5 நாட்களில் 500ஐ நெருங்கிய உயிர்பலி – திணறும் இலங்கை !

இலங்கையில் கடந்த 5 நாட்களில் 495 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் . இவற்றுள் ஆகக்கூடுதலாக ஒரே நாளில் நேற்றுமுன்தினம் நூற்றுக்கும் அதிகமானோர் மரணமாகியிருந்தனர். இந்த அடிப்படையில்

08.ஆகஸ்ட் – 111 மரணங்கள்
07.ஆகஸ்ட் – 94 மரணங்கள்
06.ஆகஸ்ட் – 98 மரணங்கள்
05.ஆகஸ்ட் -98 மரணங்கள்
04.ஆகஸ்ட் – 94 மரணங்கள்

இன்னும் சில நாள்களில் நாட்டில் அன்றாடம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடக்கும். அத்துடன், நாளொன்றுக்கு இடம்பெறும் மரண எண்ணிக்கை ஆகக் குறைந்தது 200 ஆக இருக்கும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு, தற்போது முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலைமை, இன்னும் இரண்டொரு வாரங்களில் பன்மடங்குகளால் அதிகரித்து இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வாரத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் கோவிட் -19 சிகிச்சை வைத்தியசாலைகளாக மாற வாய்ப்புள்ளதாக, அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“நாட்டில் 38,000 தாதியர்கள் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்த இராணுவவீரர்கள் ஏன்..? – அரச தாதியர்கள் சங்கம் கேள்வி !

“நாட்டில் 38,000 தாதியர்கள் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்த இராணுவவீரர்கள் ஏன்..? என அரச தாதியர்கள் அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தால் நடத்தப்படும் 24 மணிநேர தடுப்பூசி நிலையங்களில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றாமல், இதுபோன்ற நிலையங்களில் தினமும் சுமார் 10,000 பேர் வரிசையில் நிற்கின்றனர்.

இவ்வாறான நடவடிக்கை கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் இந்த சூழல் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றது. இந்த நிலையங்கள் அனுபவமில்லாத இராணுவ ஊழியர்களால் நிர்வகிக்கப்படுவதே இந்த தாமதத்திற்கு காரணம் என்றும் இதன் காரணமாகவே தடுப்பூசி நடவடிக்கையை விரைவுபடுத்த முடியவில்லை.

ஆகவே இவற்றை கொழும்பில் உள்ள இலங்கை தேசிய வைத்தியசாலையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் இரண்டு மணி நேரத்திற்குள் 100,000 தடுப்பூசியை அனுபவமுள்ள தாதியர்கள் செலுத்த முடியும்.

நாட்டில் 38,000 தாதியர்கள் உள்ள நிலையில் இந்த தடுப்பூசி செயல்முறையை அரசாங்கம் ஏன் அவர்களிடம் ஒப்படைக்கவில்லை..? என்று கேள்வியெழுப்பியுள்ள அவர் ,  மேலும் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையை 100,000 ஆக அதிகரிக்கவும் முடக்க கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

“பொருட்களின் விலையை அதிகரித்து விற்றால் ஒருலட்சம் அபராதம்.” – வெளியாகிறது புதிய வர்த்தமானி !

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை 2,500 ரூபாயாக இருந்த அபராத தொகை ஒரு இலட்சம் ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.