11

11

நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா மருந்துக்கான அனுமதிப்பத்திரம் இரத்து !

நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டார என்பவர் கொரோனா தடுப்புக்காக உருவாக்கியிருந்த தம்மிக்க பாணிக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர், வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை முறை தொடர்பாக இன்று (11.08.2021) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த பாணி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில், அதன் சம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனால் தம்மிக்க பாணிக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த மருந்து தொடர்பாக நாட்டுவைத்தியர் தம்மிக “தனது மருந்தை அருந்தினால் வாழ்நாளில் கொரோனா பாதிப்பு ஏற்படாது.” என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து குறித்த மருந்தை எடுத்துக்கொண்ட இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ராவன்னியாராச்சி கொரோனா தொற்றுக்கு உ்ளாகியிருந்தமை குறிப்பிடத்ததக்கது.

ஏதென்ஸில் தொடர்ந்து பரவும் காட்டுத்தீ – மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிரீஸ் பிரதமர் !

காட்டுத் தீ பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் தீவுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக காட்டுத் தீ பரவி வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் காட்டுத் தீ கிரீஸ் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து எரியும் காட்டுத் தீ காரணமாகப் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுப் பகுதியில் பரவிய தீ, மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ், கிரீஸ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சியில் பேசும்போது, “நாட்டு மக்களின் வலியை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்றேன். தங்களுடைய இடமும், வீடும் நெருப்புக்கு இரையாவதை யார் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் எங்களால் முயன்றதைச் செய்தோம். ஆனால் அது போதவில்லை. தோல்விகள் கண்டறிந்து விரைவில் சரிசெய்யப்படும். காட்டுத் தீயால் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்ய 500 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் தெரிவித்தார்.

“கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது.” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

“கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ள நேரத்தில், தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது.” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு முடிவை எட்ட வேண்டும். இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை . இத்தகைய நடவடிக்கை அரசாங்கத்தின் பிடிவாத அணுகுமுறையை தெளிவாகக் காட்டுகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அப்பாவி மக்களின் வாழ்க்கையில் அரசாங்கம் விளையாடுகிறது .

சந்தையில் எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் எரிபொருளை இறக்குமதி செய்வதில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இலங்கை கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.

மேலும் கொரோனா பரவுவல் உச்சத்தை எட்டியுள்ள நேரத்தில், தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்றும் படிப்படியாகவும் வெற்றிகரமாகவும் மக்களை பெரும் பேரிடரை நோக்கி தள்ளுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“நாட்டை உடனடியாக முடக்கினால் உங்களால் 1,200 பேரை காப்பாற்ற முடியும்.” – ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய பீட பேராசிரியர் !

நாளாந்தம் கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை 150 ஐ விட அதிகரிக்கலாம் என ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் சமூக நோய் பிரிவின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

நாட்டை உடனடியாக முடக்கினால் மாத்திரம் அடுத்த 20 நாட்களில் 1,200 பேர் பலியாகாமல் தடுக்க முடியும் என பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

தீர்மானம் எடுப்பதில் ஐந்து நாள் தாமதமானால் கூட குறைந்தது 700 பேராவது மரணிக்கலாம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாட்டில் நாளாந்தம் மரணிப்போரின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் 150 ஐ தாண்டும் என அவர் கடந்த 7 ஆம் திகதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உயிர் கொல்லும் ஆபத்தான ஆயுதங்களுடன் இரண்டு இளைஞர்கள் யாழில் கைது !

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதியில் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களை விட அதிகளவான வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. இந்த வன்முறைச்சம்பவத்தில் குற்றவாளிகளாகவும் – சந்தேகநபர்களாகவும் கைது செய்யப்படுவோர் பெரும்பாலும் 19 – 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களாக காணப்படுவது மிகவும் வேதனையான விடயமாகவுள்ளது.

இந்நிலையில் ஆபத்தான ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை, முள்ளி என்ற இடத்தில் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். அதே இடத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஜேந்திரா வாள் கோடாரி என்பன கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

“நாட்டை முடக்குங்கள் . இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம்.” – தாதியர் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை !

சுகாதார துறையினர் கொவிட் -19 தொற்றின் விளிம்பில் உள்ள நிலையில் அரசாங்கம் நாட்டை முடக்காவிடின், தாம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

1,000 க்கும் மேற்பட்ட தாதியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் இதுவரை சுகாதாரத் துறையில் சுமார் 5,000 பணியாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் ஒரு மருத்துவர் உட்பட மூன்று சுகாதாரத் துறை ஊழியர்கள் சமீபத்தில் இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதாரத் துறை நோய்வாய்ப்பட்டிருந்தால், நாடு ஒரு கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 1,000 க்கும் மேற்பட்ட தாதியர்கள் ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் 25 தாதியர்கள் , மாத்தறை மருத்துவமனையில் 8 தாதியர்கள் , கரவனெல்லாவில் 12 மற்றும் அனுராதபுரம் மருத்துவமனையில் 11 தாதியர்கள் கடந்த சில நாட்களில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை நோய்வாய்ப்பட்டால், முழு நாடும் ஆபத்தில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் முடக்கல் அறிவிக்கப்பட்டவுடன், சமூகத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களையும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

ஒரு நாளில் குறைந்தது 100,000 பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நாங்கள் பிசிஆர் சோதனைகளை முன்னெடுக்க முன்வருவோம். நாட்டில் 38,000 தாதியர்கள் உள்ளனர்.

சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தயாராக இருப்பதால், அரசாங்கம் நாட்டை முடக்குவதுடன், நிலைமை மோசமடைவதற்கு முன் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தடுப்பூசியினை முழுமையாக பெற்ற 23 பேர் மரணம் !

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 5,222 பேரில் 5,022 பேர் கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அஷேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 200 பேரில் 177 பேர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றவர்கள். ஏனைய 23 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இருப்பினும், இந்தத் தடுப்பூசி இரண்டையும் பெற்று உயிரிழந்தவர்களுக்கு ஏனைய நோய்கள் பல இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் என அடையாளம் காணப்பட்டு, இருப்பினும் நோய் அறிகுறிகள் தென்படாத 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கம்பஹா மாவட்டத்தில் இருப்பதாக நேற்று நடைபெற்ற மாவட்ட கொவிட் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ராஜபக்ஷக்கள் நினைத்தால் ஒரு உணவுமேசையிலேயே தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியும்.” – வேலுசாமி இராதாகிருஸ்ணன்

எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (11.08.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் பேசிய அவர்,

“தமிழர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவாரத்தையை நாம் இரண்டு விதமாக பாரக்கலாம்.

ஒன்று யுத்தத்திற்கு முன்பு இரண்டாவது யுத்தத்திற்கு பின்பு. யுத்தத்திற்கு முன்பு அரசாங்கம் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவாரத்தையும் தோல்வியில்தான் முடிவடைந்தது. அதற்கு இரண்டு தரப்பினரும் காரணம். யாரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. நீ பெரியவனா? நான் பெரியவனா என்ற போட்டியில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை யுத்தத்தின் பின்னரானது. உண்மையிலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமாக இருந்தால் அதனை முன்னாள் ஜனாதிபதி இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செய்திருக்க வேண்டும்.இதுவரை கடந்த 30 வருடங்களாக ஆட்சி செய்த எந்த ஒரு அரசாங்கமும் தமிழர் தரப்பு விடயங்களை இதய சுத்தியுடன் அனுகவில்லை என்பதே கசப்பான உண்மை.

ஆனால் இந்த அரசாங்கம் நினைத்தால் இந்த தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் .காரணம் பெரும்பான்மை பலம் முக்கிய பதவிகளில் உள்ள அனைவரும் ஒரே குடும்ப அங்கத்தவர்கள். ஒரு உணவு மேசையில் பேசி தீர்க்க முடியும். ஆனால் அதனை செய்வார்களா?

எனினும் வழமயான அதே நிலைதான் இந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு நடக்கும் என்றும் இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாதுஎன அவர் மேலும் தெரிவித்துள்ளார்.