14

14

“ஆப்கன் மக்கள் மீது வன்முறை மற்றும் போர் விழுவதை அனுமதிக்க மாட்டேன்.” – ஆப்கானிஸ்தான் அதிபர்

ஆப்கானிஸ்தான்  மக்கள் மீது போர் தொடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்ஹானி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்ஹானி தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். தலிபான்கள் தலைநகர் காபூலை விரைவில் கைபற்றுவார்கள் என்ற கணிப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து ஆப்கான் அதிபர் அஷ்ரப்கானி கூறும்போது,

“ஆப்கன் மக்கள் மீது வன்முறை மற்றும் போர் விழுவதை அனுமதிக்க மாட்டேன். ஸ்திரத்தன்மை நிலை நிறுத்தப்படும். இதனை அதிபராக உறுதியளிக்கிறேன். அதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கடந்த 20 வருடங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு நான் மீண்டும் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்னர், வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள்  ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்  கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர். சுமார் 60,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

இதே நேரம் , தலிபான்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் சுமார் 20,000 ஆப்கானியர்களை கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செஞ்சோலை நினைவஞ்சலியை நடத்த விடாது இடையூறு செய்த காவல்துறையினர் !

கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி, முல்லைத்தீவு- வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது விமானப் படை நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர். 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழந்திருந்தனர்.

இன்று குறித்த சம்பவம் நடந்ததன் 15ஆவது ஆண்டு நினைவு நாளாகும். வருடாவருடம் குறித்த இடத்தில் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்ட போதும் கூட இன்று  படுகொலை நடந்த இடத்தில் இறந்த பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த, பெற்றோருக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தடை விதித்துள்ளனர்.

மேலும் முல்லைத்தீவு- வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர்  மற்றும் புலனாய்வுத்துறையினர் உள்ளிட்ட பலரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை, உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் சிலர், அங்கு வருகை தந்திருந்த போதிலும்,  பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்த வளாகத்திற்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்கு, இராணுவம் மற்றும்  பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக, கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, செஞ்சோலை படுகொலையின் 15 ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் பதாகை முன்பாக சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும்  நிகழ்வு தொடர்பாக தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார், நினைவேந்தலை குழப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவைகளை மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் முல்லைத்தீவு – கள்ளப்பாடு,  வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

 

“மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட காவல்படை விவகாரம்.” – தங்களை பாதுகாத்து விடுமாறு இளைஞர்கள் டக்ளஸ்தேவானந்தாவிடம் அடைக்கலம் !

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனினால்   உருவாக்கப்பட்ட, வரி வசூலிப்பு மற்றும் வீதிகளில் குப்பை போடுவோர், உமிழ்நீர் துப்புவோருக்கு தண்டம் அறவிடுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக  உருவாக்கப்பட்ட அணியினருக்கு வழங்கப்பட்ட சீருடை, புலிகளின் காவல் துறையின் சீருடையை ஒத்தவகையில் இருந்தமை தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, யாழ். மாநகர முதல்வர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலமைகளை தெளிவுபடுத்திய நிலையில் நீதிமன்றின் ஊடாக யாழ் முதல்வர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், குறித்த அணியின் உறுப்பினர்களாக உள்வாங்கப்படடிருந்த தங்களை பல்வேறு தரப்புக்களும் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைப்பதாகவும், தாங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருவது போன்று உணர்வதாகவும் தெரிவித்திருக்கும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள ஐவரும், தமக்கு கௌரவமான அச்ச சூழல் அற்ற எதிர்காலத்தினை உறுதிப்படுத்தி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் , பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 5 பேரும் நேற்று முன்தினம்(12.08.2021) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து உதவி கோரியிருந்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

யாழ். முதல்வர் மணிவண்ணனினால் வரி மற்றும் தண்டம் அறவீடு போன்றவற்றிற்காக  உருவாக்கப்பட்ட குறித்த அணியுடன் சம்மந்தப்பட்ட ஐந்து இளைஞர்களும் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் எதிர்காலம் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறான செயற்பாடுகளின் போது, கடந்த கால அனுபவங்களையும் தற்போதைய சூழலையும் நிதானமாக ஆராய்ந்து செயற்பட வேண்டும். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதால் பலன் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எவ்வாறாயினும், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் இதுதொடர்பாக கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கு கௌரவமான எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும்  என்று தெரிவித்தார்.

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்.” – நியமனம் வழங்கி சாதி ஒழிப்பை முக்கிய கட்டத்துக்கு நகர்த்திய மு.க.ஸ்டாலின்!

தமிழ்நா்டில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறிவந்த பெரியார், 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இதற்காக கிளர்ச்சி ஒன்றை அறிவித்தார்.

தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் இந்தப் போராட்டம் நடக்குமென்றும் திருநீறு பூசித்தான் கோயில்களில் நுழையலாம் என்றால் தொண்டர்கள் பூசிக்கொள்ளலாம் என்றும் பெரியார் கூறினார்.

இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் பெரியார் தன் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார். தற்போதைய திமுக அரசு இதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுத்தது.

இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

மேலும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.

 

விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட கைக்குண்டு – முன்னாள்போராளி கைது !

கைக்குண்டு ஒன்றை விற்பனைக்காக எடுத்துச் சென்ற முன்னாள் போராளி ஒருவரை களுவாஞ்சிக்குடியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர், அம்பாறை- திருக்கோவிலில் இருந்து மட்டக்களப்பு- காத்தான்குடி பகுதிக்கு கைக்குண்டு ஒன்றினை எடுத்துச் சென்ற வேளையிலேயே விசேட அதிரடிப்படையினரால் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த  இரகசிய தகவலுக்கமைய  குறித்த சந்தேகநபரை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினர்  கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்  நேற்றைய தினம் குறித்த நபர் வீட்டில் இருந்து மோட்டர்சைக்கிளில் கைக்குண்டு ஒன்றை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் விற்பனைக்காக எடுத்துக் கொண்டு பிரயாணித்த வேளையில் புலனாய்வு பிரிவினர், அவரை பின் தொடர்ந்துள்ளனர்.

இவ்வாறு புலனாய்வு பிரிவினர் பின்தொடர்வதை கண்ட சந்தேகநபர், எடுத்துவந்த குண்டை அந்தபகுதியில் எறிந்துவிட்டு தப்பியோட முயற்சித்தபோது, அவரை விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வு பிரிவினரும் சுற்றிவளைத்து,  மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர் எனவும் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனியார் வைத்தியசாலைகளில் அதிகபட்ச கட்டணத்தை மீறினால் முறைப்பாடு செய்ய விஷேட எண் !

தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கான அதிகபட்ச கட்டணத்தை வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பி.சி.ஆர் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 6,500 ரூபா மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 2,000 ரூபாவாக விலைக்கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக் கட்டணம், நேற்று மாலை முதல் நடைமுறையில் உள்ளதுடன், இந்த பரிசோதனைகளுக்கு இதற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்படால், 1917 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

“இலங்கையில் கொரோனாப்படுகொலைகள் அரங்கேறவுள்ளது.” – எச்சரிக்கிறார் சமூக மருத்துவத்துறை நிபுணர் !

இலங்கையை உடன் முடக்கிக் கொரோனா மரணங்களைத் தடுக்கத் தவறும் பட்சத்தில் நாட்டில் கொரோனாப் படுகொலையே இடம்பெறும் என்று சமூக மருத்துவத்துறை நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயத்தில் இப்போது தீர்மானம் எடுக்காது பொறுப்பை தட்டிக்கழிப்பதும், அதன் மூலமாக மக்களைக்  காப்பாற்றாது போவதும் ஒரு விதத்தில் படுகொலைக்குச் சமமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்தியாவை விட 10 மடங்கு அதிகமாக இலங்கையில் மரணங்கள் பதிவாகலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளது. இது எண்ணிக்கையில் அல்ல, வீதத்தில் கணிக்கப்பட வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி இந்தியாவை விட நான்கு மடங்கு வீதத்தால் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன.

அடுத்த மூன்று நான்கு வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும். எனவே, உடனடியாக நாட்டை முடக்கும் தீர்மானம் எடுத்து மரண எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போதுள்ள நிலையில் தரவுகளுக்கு அமைய, நாளாந்தம் 600 மரணங்கள் பதிவாகலாம். ஆனால், மாற்றங்களை முன்னெடுத்தால் மரணங்களைக் குறைக்க முடியும்.

எவ்வாறாயினும் நாளாந்தம் 150 மரணங்கள் பதிவாவதைத் தடுக்க முடியாது. இதனைவிட அதிகரிக்க இடமளிக்கக்கூடாது என்பதையே நாம் கூறுகின்றோம்.

இதனால் நாட்டை முடக்கினாலும் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னரே நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும் – என்றார்.

“நீங்கள் போரில் காணாமல் போய்விட்டதாக கூறுவோரில் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.” –  வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன

“இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில் பலர் வேறு பெயர்களில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர் எனது தகவல்கள் கிடைத்துள்ளன.” என  வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட போரின்போது அவர்கள் முறையற்ற வழிகளின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

காணாமல்போனதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான நபர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதை நிரூபிக்கத்  எம்மிடம் அறிக்கைகள் உள்ளன. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளிடம் இருந்து நாம் தகவல்களைக் கோரியுள்ளோம். எனினும், சில நாடுகள் அந்தத் தகவல்களை வழங்க மறுத்துள்ளன.

இலங்கையுடன் போருடன் தொடர்புடைய பரஸ்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடுகள் மட்டுமே அந்த விவரங்களை சட்டபூர்வமாக வழங்க முடியும். காணாமல்போனவர்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. ஆனால், காணாமல் போனவர்கள் இப்போது அவ்வாறு கேள்வி எழுப்பும் அமைப்புகளுடன் தொடர்புடைய நாடுகளிலேயே வாழ்கின்றனர்.

எங்களுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்பதை சர்வதேச அமைப்புகளை நம்ப வைக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். எவ்வாறாயினும் காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுச் சான்றிதழ்களை வழங்க அரசு ஏற்கனவே முன்வந்துள்ளது. ஆனால், உறவினர்கள் அதனை மறுத்துள்ளனர்.

அத்தோடு தமது உறவுகள் எங்கே, அவர்கள் இறந்துவிட்டார்களா? அல்லது உயிருடன் இருக்கிறார்களா? என்று விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காணாமல்போனவர்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. அதேவேளை, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அரசு கருதவும் முடியாது. எனவே, அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களைக் கொடுக்க முடியாது.

1988ஆம் ஆண்டில் காணாமல்போன நபர்கள் சிலர், சமீப ஆண்டுகளில் வீடு திரும்பினர் எனக் கூறப்படுகின்றது. நாங்கள் அவர்களின் இறப்புச் சான்றிதழ்களை வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்?” என்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.