10 வயதும் மூன்று மாதங்களேயான சிறுமியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில், 60 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அளுத்கம சீனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார். அளுத்கம கனேகம பிரதேசத்தில், தனது வீட்டில் வைத்தே, சிறுமியை பல தடவைகள் சந்தேகநபர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டது.
சம்பவத்தை அடுத்து, பிரதேசத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்த அந்த நபர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்.
தனது சட்டத்தரணியின் ஊடாக, அளுத்கம பொலிஸ் நிலையத்தில் இன்று (17) சரணடைந்தார். 60 வயதான சந்தேகநபர், சிறுமியின் தந்தையின் மாமா ஆவார்.
நெருங்கிய உறவினரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் முதல், சிறுமியை பாலியல் வன்புணர்வுக்க உட்படுத்தி வந்துள்ளார். தனது வீட்டுக்கு விளையாடுவதற்கு வருகைதந்த போதே சந்தேகநபர், பல தடவைகள் வன்புணர்ந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரை பொலிஸார் தேடியுள்ளனர். எனினும், அவர், அப்பிரதேசத்தில் இருந்தே தலைமறைவாகிவிட்டார். கொழும்பில் தலைமறைவான அந்நபர், தனியார் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். அதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. அதன்பின்னர், சட்டத்தரணியின் ஊடாக, பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார்.
அதன்பின்னர், தர்ஹா நகரில் இருக்கும் இராணுவத்தின் கொரோனா சிகிச்சை மையத்துக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.