19

19

இலங்கையில் ஒரேநாளில் 186 கொரோனா மரணங்கள் – உயிர்பலி 6,790 ஆக உயர்வு !

இலங்கையில் நேற்றைய தினம்(18) கொவிட் தொற்றால் 186 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6,790 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்று 3,806 பேர் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஒரே நாளில் நாட்டில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் !

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தின் வைத்திய பிரிவினால் நடமாடும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (19) யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதற்கட்டமாக இன்றைய தினம் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகர் பகுதிகளை உள்ளடக்கி இந்த வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது. யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் போது தடுப்பூசியினை பெறாதோர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுங்கள் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்கு அறிவுறுத்தினார்.

தற்போது மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. தடுப்பூசியினை பெற விருப்பம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு நிலைமை வேண்டாம் நாடு பூராகவும் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. எனவே எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தடுப்பூசியினை கட்டாயமாக பெற வேண்டும் என்றும் இராணுவ கட்டளைத் தளபதி வலியுறுத்தினார்.

கடந்த காலத்தில் தடுப்பூசி தொடர்பில் பயத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் இனி அந்த பயத்தை தவிர்த்து தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுங்கள். நாடு பூராகவும் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு விடயத்தினை கூற விரும்புகின்றேன். சுகாதார அமைச்சின் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள். ஊடகங்களில் வெளிவரும் சுகாதார நடைமுறைகள் அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுங்கள், ஒன்றுகூடல்களை தவிருங்கள்.

தற்போதைய நிலையில் மாகாணங்களுக்கிடையில் சுகாதார நடைமுறைகளை மீறி போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ் சேவைகளை நிறுத்துவதற்கு பொலிசாருடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹெரோயின் உள்ளிட்ட எல்லா போதைப்பொருட்களுக்கும் முழுமையான தடை – தலிபான்களின் அதிரடியான 05 அறிவிப்பு !

பெண்கள் உரிமை மற்றும் தூதரகப்  பாதுகாப்பு உட்பட முக்கிய 5 வாக்குறுதிகளைத் தலிபான்கள்  அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் தலிபான்கள் அறிவித்துள்ள 5 முக்கிய வாக்குறுதிகள்

பெண்களுக்கு உரிமை

பெண்கள் வேலைக்குச் செல்லவும், படிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இஸ்லாம் விதிகளின்படிதான் அது செயல்படுத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

1996 – 2001ஆம் ஆண்டும் தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமை கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பொது மன்னிப்பு

எங்களுக்கு எதிராக இருந்த அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குகிறோம். அரசுப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூதரகங்களுக்குப் பாதுகாப்பு

வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரகங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.

தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அனைத்து நாடுகளுடனும் சிறந்த ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரும்புகிறது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கன் மண்ணை அந்நியர் பயன்படுத்த அனுமதியோம்

ஆப்கானிஸ்தான் மண்ணை அந்நியர் பயன்படுத்த நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என்றுதலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பில் ஈடுபட்ட ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்கப் படைகள், பின்னர் அங்கு 20 ஆண்டு காலம் நடைபெற்ற தலிபான்களுக்கு எதிரான போரில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருட்களுக்குத் தடை

தலிபான்கள் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளனர்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி – அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு !

டி20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒக்டோபர் 17-ம் திகதி முதல் நவம்பர் 14-ம் திகதி வரை நடைபெறும் என்றும், அதற்கான போட்டியை அட்டவணையையும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் 10-ந்தகதிக்குள் டி20 உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் அணிகள், வீரர்களை பட்டியலை அறிவிக்க வேண்டும். நியூசிலாந்து அணி ஏற்கனவே வீரர்கள்  பட்டியலை அறிவித்துள்ளது. இந்நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய ஆடவர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி வருமாறு:-
ஆரோன் பிஞ்ச் (தலைவர்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ் (துணைத்தலைவர்), மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசில்வுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்சல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்லிஸ்.
டேனியல் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.

ஹெய்டி நிலநடுக்கம் – உயிர்ப்பலி 2,189 ஆக உயர்வு !

ஹெய்டியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2,189 ஆக அதிகரித்துள்ளது.

ஹெய்டியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரிலிருந்து மேற்கே 125 கி.மீ தொலைவில் மையமாகக் கொண்டு் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி திடீரென ரிக்டர் அளவில் 7.2 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கத்தினால் ஏராளமான கட்டிடகள்,வீடுகள், வணிக வளாகங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலையில் இந்த நில நடுக்கத்தினால் பலியானவர்கள் எண்ணிக்கை 2, 189 ஆக அதிகரித்துள்ளது. 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 300-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நான்கு மாகாணங்களில் அவசர நிலையை  அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் ஹெய்டி அடிக்கடி இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பூஸ்டர் டோஸ் திட்டம் – உலக சுகாதார அமைப்பு கண்டனம் !

லட்சக்கணக்கான மக்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் உள்ளபோது, பூஸ்டர் டோஸ்களை வழங்க  பணக்கார நாடுகள் அவசரப்படுவதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.

வளர்ச்சியடையாத நாடுகளில் இன்னமும் கொரோனா தடுப்பூசிகள் ஒரு டோஸ் கூட செலுத்த முடியாத நிலையில், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் , பிரிட்டன் ஆகிய நாடுகள் பூஸ்டர் டோஸ்களுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் இதனை உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

“ஏற்கனவே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் வைத்திருக்கும் மக்களுக்கு கூடுதல் லைஃப் ஜாக்கெட்டுகளை வழங்க திட்டமிட்டு வருகிறோம்.

அதே வேளையில் ஒரு லைஃப் ஜாக்கெட் கூட இல்லாமல் மக்களை தவிக்க விட்டுள்ளோம். லட்சக்கணக்கான மக்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை கூட போடவில்லை. ஆனால் பணக்காரநாடுகள் பூஸ்டர் டோஸ்களுக்கு அவசரப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.

அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

“நாட்டை விட்டு வெளியேறும் போது ஒரு ஜோடி ஆடைகளும், உள்ளாடைகளும், ஒரு செருப்பும் மட்டுமே எடுத்துச் சென்றேன்.” – அஷ்ரப்கனி விளக்கம் !

தலிபான்களுக்கு அஞ்சி பெட்டி, பெட்டியாக பணத்துடன் நான் தஜிகிஸ்தானுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுவை அனைத்தும் பொய்யான தகவல் என்று பதவி விலகிய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கனி விளக்கம் அளி்த்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்து வெளிேயறத் தொடங்கியபின், மிகவிரைவாக ஆப்கானை தங்கள் வசம் தலிபான்கள்  கொண்டுவந்துள்ளனர்.

காபூல் நகருக்குள் தலிபான்கள்வந்துவிட்டதை உறுதி செய்த ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளிேயறி தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் அவர் வெளியேறும் போது 4 கார்கள் நிறைய பணத்தை எடுத்துச் சென்றதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தளம் தெரிவித்தது.

அதன்பின் அஷ்ரப் கானி தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ஆயுதங்கள் ஏந்திய தலிபான்கள் அல்லது 20 ஆண்டுகாலம் என் உயிரைக் காப்பாற்றிய அன்புக்குரிய தேசத்தை விட்டுச் செல்வதா என்ற ஊசலாட்டம் இருந்தது.

ஆனால், தலிபான் தீவிரவாதிகள் கத்தியின், துப்பாக்கி முனையில் நாட்டை வைத்துள்ளார்கள். அவர்களால் நாட்டு மக்களின் மனதை வெல்ல முடியாது. நான் வெளியேறாவிட்டால், ஏராளமான மக்கள் கொல்லப்படுவார்கள், காபூல் நகரம் சின்னபின்னாகும், மிகப்பெரிய மனிதப்பேரழிவு நிகழும், 60 லட்சம் மக்கள் வாழும் நகரம் ரத்தக்களறியாகும். காபூல் நகரை ரத்தக்களரியாக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி ஹெலிகாப்டரில் தப்பித்து தஜிகிஸ்தான் செல்லவி்ல்லை ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். இதை ஐக்கிய அரபு அமீரகம் அரசே தகவல் தெரிவித்து, மனித நேயஅடிப்படையில் அஷ்ரப் கனி தங்கவைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்முறையாக அதிபர் அஷ்ரப் கனி பேஸ்புக்கில் வீடியோவில் தன்னுடைய நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நான் 4 சூட்கேஸ் நிறைய டாலர்கள் அதாவது அரசின் 16.90 கோடி அமெரிக்க டாலர்களுடன் நான் ஹெலிகாப்டரில் தப்பித்துவிட்டதாகக் குற்றச்சாட்டு வெளியானது. அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. நான் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்லும்போது என்னுடன் ஒரு ஜோடி ஆடைகளும், உள்ளாடைகளும், ஒரு செருப்பும் மட்டுமே எடுத்துச் சென்றேன். எனக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவதும் முற்றிலும் பொய்யான தகவல்

நான் தஜிகிஸ்தானில் இல்லை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன்.என்னுடைய அரசியல் வாழ்க்கையையும், என்னுடைய குணத்தையும் அழிப்பதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருவது தொடர்பாக பேச்சு நடத்திவருகிறேன் விரைவில் நாடு திரும்புவேன். ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்ததால்தான்,  தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் நான் தொடர்ந்து தங்கியிருந்தால், காபூல் நகரம் சிரியா, ஏமன் போன்று மாறியிருக்கும். நான் தொடர்ந்து அதிபராக இருந்திருந்தால், அப்பாவி மக்கள் என் கண்முன்னே தலிபான்களால் தூக்கில் தொங்கவிடப்பட்டிருப்பார்கள். இது நம்முடைய வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக இருக்கும்.

இதுபோன்று இறப்பதற்கு நான் அஞ்சவில்லை, ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு அவமதிப்பு வருவதை நான் ஏற்கமாட்டேன். ஆப்கானிஸ்தான்  ரத்தக்களரியாக மாறுவதைத் தவிர்க்கவே நான் நாட்டைவிட்டு வெளியேறினேன்.

நாட்டின் அரசியல் நிலையை சீர் செய்ய முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், தலிபான்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவாக இருக்கிறேன்.

இவ்வாறுஅஷ்ரப் கனி  தெரிவித்தார்

தலிபான்கள் தொடர்பில் ரணில்விக்கிரமசிங்க அரசிடம் விடுத்துள்ள வேண்டுகோள் – ஏற்குமா ஆளும்தரப்பு..?

ஆப்கானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது.தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

ஆப்கான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது. காபுலில் உள்ள தூதரகத்தை இலங்கை மூடவேண்டும். ஆப்கானிற்கான பயணங்களை கட்டுப்படுத்தவேண்டும். பமியான் புத்தரின் சிலையை அழித்தது தலிபான்களே என்பதை மறந்து விடக்கூடாது. 

அந்த பிராந்தியத்திலிருந்து அகற்றப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்.
ஏற்கனவே உலகம் பெருந்தொற்றின் பிடியில் சிக்குண்டுள்ளது. தற்போது உலகம் இன்னொரு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது.  தலிபான் ஆப்கானை ஆட்சி செய்த காலத்திலேயே செப்டம்பர் 11 தாக்குதலிற்கு காரணமான அல்ஹைதா உட்பட பல ஜிகாத் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டன .

புதிய தலிபான் அரசாங்கத்தின் கீழ் ஆப்கான் மீண்டும் பயங்கரவாதிகளும் ஜிகாத் தீவிரவாதிகளிற்குமான தளமாக மாறக்கூடும்.   உலக நாடுகளின் மீதான தாக்குதலையும் குரானை தவறாக அர்த்தப்படுத்தியவர்களையும் இலங்கை அங்கீகரிக்க முடியாது. இதன் காரணமாக பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளிற்கும் ஏனைய நாடுகளிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது- தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் உரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு என்ன..? – ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியுடன் பேசிய பிரதமர் மகிந்த !

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் உரையாடியுள்ளார்.

இந்த தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியிடம் பேசிய பிரதமர், நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து விசாரித்ததுடன், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இலங்கை தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதே நேரம் , ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும் ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சகத்தை முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை இலங்கை பின்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

SARRC பிராந்தியத்தில் உள்ள நாடு என்பதால் ஆப்கானிஸ்தானின் நிலைமையை இலங்கை கவனத்தில் எடுத்துள்ளது என்றும் டலஸ் அழகப்பெரும கூறினார்.

தலிபான்கள் தலைமையில் ஆப்கானிஸ்தானில் உருவாகும் அரசாங்கம் குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு விவாதித்து அறிவிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

இதேநேரம், ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முயன்று வருவதால் இலங்கை வருத்தமடைவதாகவும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற ஜனாதிபதி அஷ்ரப் எங்கே ..? – உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற ஜனாதிபதி அஷ்ரப் கனி தமது நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகொப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.‌

மேலும், அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்தன.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.