20

20

“நாட்டை நீண்ட காலத்துக்கு மூடிவைக்கும் நிலையேற்படலாம். தயாராகுங்கள்.” – – மக்களுக்கான உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ !

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரமில்லை 30 வயதிற்கு மேற்பட்ட 43 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் விஷேட உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தான், இலங்கைக்குத் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்காக, கடந்த காலங்களில் நான் விசேட ஆர்வம் காட்டியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன், இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் உரையாடினேன். மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களுக்கு, நான் தனிப்பட்ட ரீதியில் கடிதங்களை அனுப்பினேன். தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் நாடுகளுடன், நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாகவும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் கலந்துரையாடினோம். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை, எமது அதிகாரிகள் நேரடியாகத் தொடர்புகொண்டனர்.

எமது நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென்ற என்னுடைய தேவையின் காரணமாகவே, இந்த அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
இந்த முயற்சிகளின் பலனாகவே, தற்போது ஒவ்வொரு மாதமும், எமக்குத் தேவையான தடுப்பூசிகள், பாரியளவில் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன.

எமக்கு முதன் முதலாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியே கிடைக்கப்பெற்றது.  அதன் பின்னர், சீனா உற்பத்தி செய்த சினோஃபாம் தடுப்பூசி எமக்குக் கிடைக்கப்பெற்றாலும், அந்தத் தடுப்பூசிக்கு, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) அனுமதி கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பொதுமக்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கும் பணி, சுமார் ஒரு மாதகாலம் தாமதமானது. எவ்வாறெனினும், இவ்வாண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல், சினோஃபாம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. தவிர, அமெரிக்காவிடம் இருந்து ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளும் ஜப்பானிலிருந்து அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளும், ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதால், தடுப்பூசி ஏற்றும் நாடுகளின் பட்டியலில், நாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம். இம்மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், ஒரு கோடியே இருபது இலட்சத்து பத்தொன்பது ஆயிரத்து நூற்று தொண்ணூற்று மூன்று (12,019,193) பேருக்கு, முதலாவது அலகு தடுப்பூசியை வழங்கியுள்ளோம்.

அதேவேளை, ஐம்பத்து ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரத்து நூற்று எண்பத்தைந்து (5,124,185) பேருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்கியுள்ளோம். தவிர, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்காக, மேலும் சுமார் மூன்று மில்லியன் தடுப்பூசிகள், கைவசம் எம்மிடம் இருக்கின்றன. இன்னும் மேலதிகமாக மூன்று மில்லியன் தடுப்பூசிகள், இம்மாத இறுதியில் கிடைக்கவுள்ளன.

இது வரையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதோடு, அவர்களில் 43 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குள், 81 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையும் உள்ளது. செப்டெம்பர் 10ஆம் திகதிக்குள், 100 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்க முடியும்.

அந்த நிலைமையுடன், தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைவடையும். நாட்டிலுள்ள முன்வரிசைச் சுகாதார ஊழியர்கள், துறைமுகம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவையாளர்கள், பாதுகாப்புத் தரப்பினர், தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் நாம் தடுப்பூசி ஏற்றியுள்ளோம். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கூட, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றியுள்ளோம். இதற்கு மேலதிகமாக, 30 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு மில்லியன் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

நாடு முழுவதிலும் மகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், கிராம சேவகர் பிரிவுகளைத் தனிமைப்படுத்தல், ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தல், அரச சேவையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைத்தல், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தடுத்தல், சில வர்த்தக நடவடிக்கைகளை மூடிவிடல், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை நிறுத்துதல், மதஸ்தலங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தடுத்தல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளைத் தொடர்ந்தும் நாம் அமுல்படுத்தி வருகின்றோம்.

கொவிட் 19 தொற்றுப் பரவல் முதலாம் அலையின் போது நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அதனை வெற்றிகரமாக முறியடிக்க எம்மால் முடிந்தது. அப்போதைய சந்தர்ப்பத்தில், அது தவிர வேறு வழிகள் இருக்காத பட்சத்திலேயே, அவ்வாறான தீர்க்கமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டது.

அதனால், நாட்டை சில மாதங்களுக்கு முழுமையாக மூட நேர்ந்தது. அவ்வாறான நடவடிக்கைகள் மூலம், முதலாவது அலையைக் கட்டுப்படுத்த முடிந்தது.
நாட்டை நாம் அடிக்கடி மூட நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். கொரோனா முதலாவது அலை ஏற்பட்ட காலப்பகுதியானது, இந்நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் காண்பித்த காலப்பகுதியாகும்.

விசேடமாக, இலங்கைக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாக ஈட்டித்தந்த ஆடைத் தொழிற்றுறையானது, இதனால் மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டது. அவர்களுக்கான ஏற்றுமதிக் கட்டளைகள் நிறுத்தப்பட்டன. இதனால், பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. ஏற்றுமதி வருமானம் இழக்கப்பட்டது.

4.5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாகக் கொண்டிருந்த சுமார் 3 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த சுற்றுலாத்துறையும் முழுமையாக ஸ்தம்பித்தது. இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் இதனால் இழக்கப்பட்டன. அடிக்கடி முன்னெடுக்கப்பட்ட நாட்டை முடக்கும் செயற்பாடுகள் காரணமாக, நிர்மாணத்துறைத் தொழிற்றுறைகளுக்கும் பாரிய அடி விழுந்தது. அவர்களுக்குத் தேவையானளவில் ஊழியர்களை வரவழைத்து வேலைகளை முன்னெடுக்க முடியாமல் போனது. தேவையான சந்தர்ப்பத்தில், மூலப்பொருட்களைத் தருவித்துக்கொள்ள முடியாமல் போனது. இந்தத் துறைக்காக நாம் எதிர்பார்த்திருந்த தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் அனைத்தும், கடந்த சுமார் ஒன்றரை வருடக் காலப்பகுதியில் இழக்க நேரிட்டது.

எமது தேசிய பொருளாதாரத்துக்கு மேலுமொரு உந்துசக்தியாக, சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் காணப்படுகின்றன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களும், இந்தக் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தடைகள் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால், அந்த நிறுவனங்களுக்கான வருமானங்கள் இழக்கப்பட்டு, அவற்றை நடத்துவதற்காக எடுக்கப்பட்ட கடன்களையும் ஊழியர்களுக்கான ஊதியத்தையும் வழங்க முடியாமல், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. லீஸிங் முறைமையில் வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்களால் அதனைச் செலுத்த முடியாமல் போனது. வீட்டுக் கடன் பெற்றவர்களால், அதனையும் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது.

இவை தவிர, 4.5 மில்லியனுக்கும் அதிகமான சுய தொழில்கள் மற்றும் நாளாந்தம் வருமானத்தைப் பெறுவோரின் வருமான வழிகள் என்பன முழுமையாக இல்லாமல் போயின. இதனால், அவர்களது வாழ்க்கை நிர்க்கதி நிலைமைக்குத் தள்ளப்பட்டது. இந்த அனைத்துவிதத் தடைகளுக்கு மத்தியிலும், மக்களை வாழ வைப்பதற்கான பொறுப்பு எமக்கு இருந்தது. அந்தப் பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கவில்லை.

கொரோனா காரணமாக நாட்டை முடக்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாளாந்த வருமானத்தை இழந்து நிர்க்கதிக்கு ஆளான மக்களுக்கு, 5,000 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்குவதற்காக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 30 பில்லியன் ரூபாயைச் செலவிட்டிருக்கிறோம். இதுவரையில், பல தடவைகள் இந்தச் செலவை அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களின் செலவுகளுக்கு மேலதிகமாக, தத்ததமது வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு, இரண்டு வாரக் காலத்துக்குத் தேவையான சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொதிகளை வழங்கி வருகிறோம். இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், 1.4 மில்லியனாகக் காணப்படும் அரச ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கவோ கொடுப்பனவுகளைக் கழிக்கவோ இல்லை.

எமக்கான அந்நியச் செலாவணி வருமானம் குறைந்த போதிலும், கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த அரசாங்கம் தவறவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் எடுக்கப்பட்டிருந்த கடன்கள் காரணமாக, வருடமொன்றுக்கு நாம், 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் தவணையாகச் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். அவற்றை, உரிய காலத்தில் செலுத்தியும் வருகின்றோம்.

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல. விசேடமாக, ஏற்றுமதித் தொழிற்றுறையில் ஈடுபட்டிருக்கும் ஆடைத் தொழிற்றுறைக்கு, பாரியளவு ஏற்றுமதிக் கட்டளைகள் கிடைத்துள்ளன. அந்தக் கட்டளைகளை உரிய நேர காலத்துக்கு வழங்க முடியாது போனால், பாரியளவு அந்நியச் செலாவணியை நாம் இழங்க வேண்டிய ஏற்படும்.

அதேபோன்று, வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பவும் நாம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இப்போதைய நிலைமையில், நாளாந்தம் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள், நாட்டுக்கு வருகை தரும் நிலைமை உருவாகியுள்ளது. நாட்டை முடக்கினால், சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதை, மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டி ஏற்படும்.

அதேபோன்று, நாளாந்த வருமானம் பெறுவோர், சிறு மற்றும் மத்தியதர வர்த்தக நடவடிக்கைகள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு, நாட்டை மூடுவதால் வழங்க வேண்டிய நிவாரணங்களை வழங்குவதிலும், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகச் சிக்கல் ஏற்படும்.

இந்த நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று இந்த உலகில் காணப்படும் ஒரு சில நாடுகளைத் தவிர்ந்த, பொருளாதார ரீதியாக வல்லரசுகளாக இருக்கும் நாடுகள் கூட, நாட்டைத் திறந்தே வைத்திருக்கின்றன.

உலகின் சுற்றுலாத்துறை, படிப்படையாக வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. நாடுகளைத் திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் எமது நாடும், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, மீண்டும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகச் சரிவடையச் செய்யும் நிலைமைக்குச் செல்ல முடியாது.

இது, மாற்றுக் கருத்தாளர்கள், தொழிற்சங்கங்கள், வைத்தியர்கள், ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெறும் போட்டியோ மோதலோ அல்ல. நாம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது, இந்த முழு உலகமும் எதிர்கொண்டுள்ள தீவிரமான பிரச்சினையாகும். இன்று ஒவ்வொரு நாடும், புதிய பொதுமைப்படுத்தல் முறைமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் சரியாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஒட்சிசன் விநியோகம், இடைநிலை சிகிச்சை நிலையங்களை உருவாக்கல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செய்கின்ற போதிலும், நோயாளிகளை நிர்வகிப்பதென்பது, மருத்துவர்களின் பொறுப்பில் இருக்கின்றது. அதேபோன்று, இதுவரை காலமும் தமது உயிர்களைப் பணயம் வைத்துச் செயற்பட்டு வரும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரச் சேவை ஊழியர்களதும் சேவையை, நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அத்துடன், தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்துள்ள சுகாதாரத் துறையின் அனைத்துத் தரநிலை அதிகாரிகளுக்கும், நான் எனது மரியாதையைச் செலுத்துகின்றேன்.

இது, வேலைநிறுத்தம், போராட்டங்களுக்கான காலம் அல்லவென்பது தெளிவாகிறது. நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள். “

சுகாதாரத் துறையானது இப்பிரச்சினையை ஒரு கோணத்தில் மாத்திரம் பார்க்கின்ற போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் நாம், வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தல், ஊதியம் வழங்கல், நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை ஒரு குறையும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதற்காக, நமது நாட்டின் சிறு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிலும் பலர், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். அதேபோன்று, தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வாறான நாட்பட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவுடன், உரிய மருத்துவச் சிகிச்சைகளுக்கு உள்ளாக வேண்டும். அத்துடன், இவ்வாறான நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரை, வாரத்துக்கு ஒரு முறையேனும் அன்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறான முக்கியமான தருணத்தில், நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும், இந்தத் தீர்மானமிக்க நிலைமையைப் புரிந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். அதனால், ஒரு குழுவாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்துப் பணியாற்ற முன்வருமாறு, அனைவரிடமும் நான் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

“71ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் கையிருப்பில் உள்ளது – பதறாதீர்கள் ” – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

நாட்டில் ஒரு மாதத்துக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதால் வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டாமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அரசுக்கு எதிரான நபர்களின் அறிக்கைகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

நாட்டில் கிடைக்கத்தக்க எரிபொருள் அளவு குறித்த தகவலை நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி 71ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல், 99ஆயிரம் மெட்ரிக் தொன் ஓட்டோ டீசலை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கையிருப்பில் வைத்துள்ளது.

கொவிட் நிலைமைக்கு முன் நாட்டில் 5500 மெட்ரிக் தொன் ஓட்டோ டீசல் மற்றும் 3300 மெட்ரிக்தொன் பெற்றோல் என்பன தினமும் பயன்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

“ஆப்கானிஸ்தான் மக்களுக்காக எல்லைகளை திறந்து வையுங்கள்.” – UNHCR  கோரிக்கை !

ஆப்கானிஸ்தான் மக்களுக்காக அண்டை நாடுகள் தங்களின் எல்லையைத் திறந்து வைக்குமாறு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் UNHCR  கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுக்குள் வந்தபிறகு அங்கிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த திங்கள் ஆப்கன் விமான நிலையத்தில் மக்கள் அலைகடலென திரண்டதும் அங்கிருந்து விமானத்தில் தொற்றியவாறு உயிர்பிழைக்க முயற்சித்து தோற்றதும் உலக நாடுகளை உறையவைத்துள்ளது.

அங்கிருந்து இன்னமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முற்படுகின்றனர். ஆனால், விமானநிலையம் செல்ல முடியாது தலிபான்கள்  மக்களை விரட்டியடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்காக தங்களின் எல்லைகளைத் திறந்துவைக்க வேண்டுமென்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபியா மன்டூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “ஆப்கானிஸ்தான் மக்களில் பெரிம்பாலோனார் வழக்கமான பாதைகள் வழியாக நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இன்று அங்கு ஆபத்தான சூழலில் இருப்பவர்களுக்கு முறையாக வெளியேற வாய்ப்பில்லாமல் இருக்கிறது. ஆகையால் நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கும் பதற்றமானன சூழலைக் கருத்தில் கொண்டு அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்காக எல்லைகளைத் திறந்து வைக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 9000 பேரை அமெரிக்கா மீட்டுள்ளது. இவர்கள் அனைவரும் காபூல் விமானநிலையம் வாயிலாக வெளியேறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தங்களின் ஆட்சி 1996ல் இருந்ததுபோல் இருக்காது. இஸ்லாமிய சட்டத்துக்கு இணங்க பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்றெல்லாம் கூறினர் தலிபான்கள். ஆனால், அங்கு நிலைமை மாறவில்லை எனக் கூறுகிறது ஐ.நா.,வின் ஆராய்ச்சிக் குழு. தலிபான்கள் அச்சுறுத்தல் குறித்து  ஐ.நா சார்பாக நார்வேஜியன் சென்டர் ஃபார் குளோபல் அனாலிஸிஸ் இந்த ஆவணத்தை எழுதியுள்ளது.

“தடுப்பூசி வழங்குவதை இலக்காகக் கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை இலக்காகக் கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி, செப்டம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர், அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கி முடிக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை பின்வருமாறு…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி…

• தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறக்கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தல்
• அத்தியாவசிய மற்றும் ஏற்றுமதிச் சேவைகள் தொடரும்

இன்று (20) இரவு 10.00 மணி முதல் இம்மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை, நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்.

இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை இலக்காகக் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், செப்டம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர், அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கி முடிக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கிராமிய கொவிட் ஒழிப்புக் குழுக்கள் மூலம் இந்த நபர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி ஏற்ற, 23ஆம் திகதி திங்கட் கிழமைக்கு முன்னர் சுகாதாரப் பிரிவுக்கு அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

மேலும், 1906 என்ற அவசர இலக்கத்துக்கு அல்லது தேசிய கொவிட் ஒழிப்பு மையத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசித் திட்டத்தை, இராணுவத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்படி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில், விவசாயம், ஆடை மற்றும் நிர்மாணத் தொழில்கள், ஏற்றுமதித் தொழில்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகள், விமான நிலையங்கள் மற்றும் விமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் பேணவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை அமுல்படுத்துமாறும், ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கினார்.

இக்காலப்பகுதியில், சுதேச மருந்துகளை கிராமிய மற்றும் நகர மட்டத்தில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

உதவி செய்ய முன்வாருங்கள் – வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி கோரிக்கை !

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்தார்.

அவுஸ்ரேலியாவின் மெல்பர்னிலுள்ள சிங்கள வானொலி ஒன்றுடனான உரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதாவது, நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை வழங்குமாறு  அவர் கோரியுள்ளார்.

மேலும், ஒட்சிசன் தட்டுப்பாடும் நிலவுகிறது. இவற்றை பெற்றுக்கொடுக்குமாறும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுள்ளார்.

இதேவேளை, மூன்று இலட்சத்து அறுபது ஆயிரம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகக்கவசங்களை சுற்றுச்சூழலில் வீசினால் கைது !

covid 19 அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருந்தாலும் கூட மறுபக்கம் கொரோனாவிற்காக பயன்படுத்தும் முகக்கவசங்கள் பாவனையின் பின் சுற்றாடலுக்கு மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. தெருக்கள் தொடங்கி பொது இடங்கள் வரை அனைத்து இடங்கிலும் இந்த முகக்கவசங்கள் தான் கிடக்கின்றன. சாதாரணமாக பார்த்தால் குப்பை தானே என்று தோன்றலாம் உண்மை அதுவல்ல. அது நாம் எவ்வளவு சமூக பொறுப்பானவர்கள் என்பதையும் – சுற்றாடலை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதையும்  காட்டுகின்றது. இது தொடர்பில் அபொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவை நம் அனைவருக்கும் உள்ளது.

இந்நிலையில் , கொவிட் அச்சுறுத்தலால் அணியப்படும் முகக்கவசங்களை சுற்றுச்சூழலில் வீசுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு  காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முறையற்ற விதத்தில் சுற்றுச்சூழலில் முகக்கவசங்கள் வீசப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! பள்ளிப் படிப்பும் பதின்மப் பருவமும்!!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 02) (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர் நீங்கள் உங்கள் கிராமம் பற்றிச் சொல்லவில்லை. உங்களின் கிராமத்தின் சூழலை பற்றி சொல்லுங்கள். அதன் சனத்தொகை போன்ற விபரங்களைக் கூறுங்கள்.

அசோக்: என் களுதாவளைக் கிராமம் இயற்கைச் சூழலும் பசுமைகளையும் குளங்களையும் விவசாய தொழிலையும் கொண்டது. சனத்தொகை கூடிய கிராமங்களில் ஒன்று. வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய கிராமம்.

வெற்றிலை செய்கைக்கு பெயர் போனது. ஒரு கிராமியப்பாட்டு உண்டு ‘களுதாவளை வெற்றிலைக்கும் காலிப் பாக்குக்கும் சிவந்ததுகா உன் உதடு’ என்று.

தேசம்: வழிபாட்டு முறைகள்,..

அசோக்: வழிபாட்டு முறை. பெருங்கோயில் என்றால் களுதாவளை விநாயகர் ஆலயம். முருகன் கோயில் இருக்கிறது. சிறு தெய்வ வழிபாடுகள் உண்டு. எழுவான்கரை என்றபடியால் ஒரு பக்கம் வங்காள விரிகுடா கடல். எமது கிராமம் கடலைச் சார்ந்து இருக்கும். கிராமத்தில் மூன்று குளங்கள், நீர்த்தேக்கங்கள் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து விவசாய காணிகள் இருக்கிறது. இங்கே நெற் பயிர்ச்செய்கையே மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கு அங்கால மட்டக்களப்பு வாவி. குளங்களைச் சுற்றி மருத மரங்கள் இருக்கின்றன. இயற்கையை தன்னகத்தே கொண்ட ஒரு அழகான கிராமம். கடல் கரையை அண்டிய பகுதியில் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் காடுகளும் பனை மரங்களும் இருக்கும். அதற்கு அங்கால எமது கிராமம். இப்போது அக் காடுகள் அழிக்கப்பட்டு விவசாயத்தை மேற்கொள்கிறார்கள். அங்கு இப்போது வெங்காயம், மிளகாய் போன்ற சிறு பயிர் செய்கையை மேற்கொள்கிறார்கள். விவசாயம் செய்வதற்கான இடமாக அது மாறிவிட்டது. நாட்டுக் கூத்தெல்லாம் என் கிராமத்தில் நடக்கும். இப்போது அருகிவிட்டது.

தேசம்: நீங்கள் சிறுபிள்ளையாக இருந்து வளர்ந்து வரும்போது உங்கள் அனுபவம் என்ன? உங்களின் ஆறு எழு வயதில் நடந்த சில சம்பவங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நம்புகின்றேன். அது தொடர்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

அசோக்: கிராமத்து சிறுவர்களுக்குரிய விளையாட்டுக்கள் அனைத்தையும் நான் விளையாடி இருக்கிறன். நிறைய சுதந்திரம். சிறு வயதில் வெறும் மேலோடு மேல் சட்டை இன்றியே திரிவேன். எங்கள் ஊர் குளங்களில் நீச்சல் அடிக்கிறது. கிட்டிப்புல் அடிப்பது கெற்றப்போல் அடிப்பது. எறி பந்து விளையாடுவது. கோயில் திருவிழாக்கள் என்றால் ஒரே கொண்டாட்டம்தான். சின்னவேட்டி கட்டி பக்திமானாக மாறிவிடுவேன். திருவெண்பாக்காலம் எனக்கு சந்தோசமான காலம். அம்மா கோயிலுக்கு வேறு எங்கு போனாலும் என்னை கூட்டிப் போவா. எனக்கு ஞாபகம் தெரிந்தவரை ஏழு எட்டு வயதுவரை காதில கடுக்கன் தோடு போட்டிருந்தேன். நிறைய ஞாபகங்கள் இருக்கு. நீண்டதாய் போய்விடும்.

தேசம்: உங்கள் கிராமத்திற்கே உரிய விளையாட்டு ஒன்றைப்பற்றி சொல்லியிருந்தீர்கள்.

அசோக்: ஆம் அதனை கொம்புமுறி விளையாட்டு என அழைப்பார்கள். இது கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையது. சிறுவர்களுக்குரியதல்ல. குடிகளுக்கு இடையிலான போட்டி விளையாட்டு. ஒரு காலத்தில எங்க கிராமத்தில பிரபலமாக விளையாடப்பட்டது. பெரிய விழாவாக சடங்காக கொண்டாடுவாங்க. கொம்புச்சந்தி என்ற இடமே உண்டு எங்க ஊரில.

தேசம்: உங்களின் இளமைக்கால கல்வியைப் பற்றி கூறுங்கள்.

அசோக்: அப்பாவின் பாடசாலையான இராமகிருஸ்ணன மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்றேன். நான் கொஞ்சம் சுட்டித்தனம் கொண்டவனாக இருந்தபடியால் ஆரம்பக்காலத்தில் கல்வியில் பெரிய நாட்டம் இருக்கவில்லை. அப்பாவும் தலைமை ஆசிரியராக இருந்தபடியால் எனக்கு அழுத்தங்கள் கூடுதலாக இருக்கவில்லை. இரண்டாம் வகுப்பிற்கு பிறகே எழுத வாசிக்க தொடங்கினேன்.

தேசம்: இன்றைக்கு இருக்கும் ஒரு அரசியல் சூழல் அன்றைக்கு ஏற்பட்ட தாக்கத்தினால் உண்டானதா என்று சொல்ல ஏதாவது ஒரு விடயம் உண்டா?

அசோக்: தமிழரசு கட்சியுடன் அப்பாவுக்கு இருந்த அரசியல் சூழல்தான். நான் நிறைய வாசிப்பேன். எனது வீடு ஒரு நூலகம். நிறைய நூல்கள் இருந்தன. எனது அண்ணாமார்களும் அக்காக்களும் வாசிப்பதில் நாட்டம் கொண்டவர்கள். ஒரு அண்ணா இருந்தவர் தியாகராஜா என்று. பெரியாரின் கொள்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அண்ணாவும் அவர் நண்பர்களும் அந்தக்காலத்தில் இலக்கிய சஞ்சிகை ஒன்றை எழுதி கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டாங்க. பெரியார் தொடர்புடைய எல்லா புத்தகங்களும் இந்தியாவில் இருந்து வரும். இந்தியாவில் இருந்து வரும் நிறைய சஞ்சிகைகளும் எங்கள் வீட்டில் கிடைக்கும். அப்பா பெரியார் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவர். அப்பா வித்தியாசமானவர். எல்லாவற்றையும் வாசிப்பார்.

நல்லதொரு உதாரணம் அப்பாவின்ர பாடசாலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமையாற்றினார். அவர் இடதுசாரிக்கட்சியில் இருந்தார். அவர் தேசாபிமானி என்ற பத்திரிகையை கொண்டு விற்பார். எங்கள் பாடசாலையிலேயே அதனை கொண்டு வந்து விற்பனை செய்வார். அதனையும் அப்பா வாசிப்பார்.

தேசம்: அந்த நேரம் உங்களின் பொழுது போக்குகள் எவை? வீட்டில் நிறையபேர் இருந்தாலும் வெளியில் போய் விளையாடுவதற்கான சூழல் மற்றும் நட்பு வட்டங்கள் எவ்வாறு இருந்தது?

அசோக்: நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே எங்கள் கிராமத்தில் படித்தேன். பின்னர் சிவானந்தா வித்தியாலயத்தில் படித்தேன். சிவானந்தா பாடசாலை மிகவும் கட்டுப்பாடான பாடசாலை. அங்கு நாங்க நினைத்த மாதிரி பெரிசா விளையாட முடியாது. லீவுநாட்களில் வீட்டுக்கு வருவேன். ஓரே விளையாட்டுத்தான். பொழுதுபோக்காக முத்திரை சேகரிக்கும் பழக்கம் இருந்தது.

தேசம்: உங்கள் ஊரில் இருந்து அப்பாடசாலை எவ்வளவு தூரம்?

அசோக்: ஊரில் இருந்து 16, 17 கிலோ மீற்றர் இருக்கும். விடுதியில் இருந்தே படித்தேன். இங்கு ஒருவருடம் கல்வி கற்றேன். விடுதியிலும் பாடசாலையிலும் மிகவும் கட்டுபாடுகள் இருந்தன. இந்த கட்டுப்பாடு எனக்கு கஸ்டமாகஇருந்தது. பிறகு வீட்டிலிருந்து போய் வந்தேன்.

இப்பாடசாலையில் சமஸ்கிருதமும் ஒரு பாடமாக இருந்தது. படிப்பும் ஒழுங்குகளும் முக்கியம் . ஒரு வருடத்தின் பின் அந்தப் பாடசாலைக்குச் செல்ல முடியாதெனத் தெரிவித்துவிட்டேன். ஆறாம் வகுப்பு மட்டும்தான் சிவானந்தா பாடசாலையில் கற்றேன். பின்னர் வந்தாறு மூலை மத்தியக் கல்லூரியில் கற்றேன். அந்தப் பாடசாலை எங்க ஊரிலிருந்து இருந்து 30 கிலோ மீற்றர் தூரம் இருக்கும்.அங்கேயும் விடுதியில் இருந்தே கல்வி கற்றேன்.

தேசம்: உங்கள் பகுதியில் அப்போது உயர்தரப் பாடசாலைகள் இல்லையா?

அசோக்: பாடசாலைகள் இருந்தன. என்றாலும் அப்பா விபுலானந்தரின் மேல் இருந்த அபிமானத்தில் சிவானந்தா வித்தியாலயத்தில் அந்தப் பாடசாலையில் சேர்த்தார். அங்கு கட்டுப்பாடு இறுக்கம் எனக்கு பிடிக்கவில்லை. அதற்குப்பிறகுதான் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் சேர்ந்தேன். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு வருவேன். எங்கள் ஊரில் கிராம சபையால் உருவாக்கப்பட்ட நூலகம் ஒன்று இருந்தது. அதில் இளந்தளிர் வாசகர் வட்டத்தை நா ங்க உருவாக்கினோம்.

தேசம்: உங்களுக்கு எத்தனை வயது?

அசோக்: அப்போது எனக்கு சுமார் 15, 16 வயதிருக்கும். அந்த வாசகர் வட்டத்தின் ஊடாக சிறியசிறிய கருத்தரங்குகள் நடத்துவோம். இளந்தளிர் வாசகர் வட்டத்தை உருவாக்கியமைக்கு காரணம் நாங்கள் விரும்பிய புத்தகங்களை வாசகர் வட்டத்தின் ஊடாக சிபாரிசு செய்யலாம். அதனூடாக நிறைய எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது. பாரதி நூற்றாண்டு விழாவை முதல் முதலாக இலங்கையில் செய்தவர்கள் நாங்கள் தான்.

இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாக்க காரணமாக இருந்தவர் வெல்லவூர் கோபால் அண்ணர். அதற்கு போஷகராக இருந்தவர். அவர்தான் எங்கள் ஆலோசகர். வழிகாட்டி. மிக அருமையானவர். இன்று குறிப்பிடத்தக்க வரலாற்று ஆய்வாளராக இலங்கையில் இருக்கிறார். அவர் மட்டக்களப்பு வரலாறு தொடர்பாக பல ஆய்வுகளை செய்துள்ளார். அவர் எங்கட கிராம ஆட்சி சபையின் காரியாலயத்தில பிரதம லிகிதராக இருந்தார். அவர் ஒரு கவிஞராக, எழுத்தாளராக இருந்தபடியால் அவரின் ஊக்கத்தினால இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாகியது.

தேசம்: அந்தக் காலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அசோக்: அவர்களை ஞாபகம் இருக்கிறது. பிற்காலத்தில் அவர்களில் பலர் என்னோடு இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டத்துடன் பயணித்தவர்களுடனான ஞாபகங்கள்?

அசோக்: ரவி, பேரின்பம், சீவரெத்தினம். இப்போ கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஜெயவரதன். செல்வரெத்தினம் காலமாகி விட்டார். ஜெயரெத்தினம். திருநா. மனோ- தவராஜா, பணிக்ஸ், நல்லிஸ் தயா, சிவஞானம், குணம் சந்திரன் இப்படி நிறையப் பேர்களை சொல்லலாம். இவர்களில் பலர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள். சிறைக்குச் சென்று நிறைய பிரச்சினைகளை எதிர்நோக்கினாங்க.. எனது கிராமத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனேகர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள்தான். என் நண்பன் ரவி பொலிசாரினால் கடும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டான். இன்றும் அதன் பாதிப்பிலிருந்து அவன் மீளமுடியவில்லை.

தேசம்: இந்த நீண்ட அரசியல் பயணத்தில் கலை இலக்கிய பயணத்திலும் இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் ஒரு முக்கியமான பங்கை வகித்துள்ளது.

அசோக்: ஆம் இளந்தளிர் வாசகர் வட்டம் எமக்கு வாசகர் வட்டம் மாத்திரமல்ல. கிராம அபிவிருத்தி, சிரமதானங்கள் விழாக்கள் கருத்தரங்குகள் செய்வதுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்துவோம். கிராமத்தில் நாங்கள் ஒரு வித்தியாசமான முன்னுதாரணங்களாக இருந்தோம். வெறும் படிப்புடன் இருக்காமல் சமூக சேவையிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது.

தேசம்: பதின்ம பருவத்திற்குரிய எல்லா விடயங்களிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்?

அசோக்: ஆம் பதின்ம பருவத்திற்குரிய எல்லாச் சேட்டைகளும் எங்களுக்கு இருந்தது. என்றாலும் அதற்குள் முழுமையாக அகப்படாமல் தப்பித்துக் கொண்டோம். நம்பலாம்! எங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இருந்தது. அந்த சமூக அக்கறையினால நாங்கள் காலப் போக்கில் அரசியலுக்குள்ளும் வந்தோம். பல்வேறு சஞ்சிகைகள், புத்தகங்கள் படித்தோம். இவைகள் எல்லாம் சேர்ந்து நாங்கள் அரசியல் மயப்படுவதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது.

தேசம்: அந்தச் சூழல் பெற்றோரால் ஊக்குவிக்கப்பட்டதா? உங்கள் பார்வை என்ன?

அசோக்: எனது குடும்பத்தில் சுதந்திரம் இருந்தது. படி, படி என்று பெரிதாக கட்டாயப்படுத்தவில்லை.

தேசம்: இந்த சுதந்திரம் உங்களின் மற்ற நண்பர்களுக்கும் இருந்ததா?

அசோக்: அப்படி சொல்லமுடியாது.

தேசம்: உங்கள் கிராமத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களோடு உங்கள் உறவு எப்படி இருந்தது ?
அசோக்: எமக்கும் ஒடுக்கப்பட்ட சமூகம் எனச் சொல்லப்படுகின்ற மக்களுக்கும் மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. இயல்பாகவே ஒரு நட்பு இருந்தது. ஆனால் எமது கிராமத்திற்குள் பழைய தலைமுறையினருக்கு முரண்பாடு இருந்தது. பாரதி நூற்றாண்டு விழாவில் அவங்கட நாடகம் ஒன்றை போடுவதற்கு இருந்த வேளையில் எமது கிராமத்தில் ஒரு சிலரால் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனையும் மீறி சித்திரைப் புத்தாண்டு விழாவில் மேடையேற்றினோம்.

நாடங்களில் அவங்க மிகத் திறமையானவங்க. என்ர நண்பன் ஆனைக்குட்டி சிவலிங்கம் அண்ணா கலைமன்றம் வைத்திருந்தார். நிறைய நல்ல நாடகங்கள் போடுவாங்க. நான் சனி, ஞாயிறு போனால் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பேன்.

எங்கு ஒடுக்கப்பட்ட சமூகம் இருக்கிறதோ, அங்கு சாதிய முரண்பாடு நிச்சயமாக இருக்கும். எங்க கிராமத்திலும் இந்த முரண்பாடு காணப்பட்டது. கோயிலுக்குள் போக முடியாது. எங்க பாடசாலையில் படிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்க கிராமத்தில் சைக்கிளில் ஓட முடியாது. அவ்வாறு சைக்கிளில் வந்தாலும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து உருட்டிக்கொண்டு போகவேண்டும். நான் அவர்களை சைக்கிளில் ஏற்றிச் செல்வேன். இப்படி என்ன செய்தாலும் எங்க கிராமத்தில் என்னை எதிர்ப்பவர்கள் குறைவு. அதற்கு எனது குடும்ப பின்னணியும் ஒரு காரணமாக அன்று இருந்திருக்கலாம். அவ்வாறான ஒரு சூழல்தான் நான் இருந்த போது இருந்தது. இப்போது நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.

அவங்க செய்யும் விழாக்கள் விசேடங்கள் எல்லாவற்றிக்கும் செல்வோம்.. நாடகம் போடுவார்கள். என் நண்பர்கள் அவங்கட நாடகங்களில் சேர்ந்து நடிப்பார்கள். என் அண்ணர் ஒருவர் தன் பிள்ளைகளை அவர்களிங்ர ஆரம்ப பாடசாலையில் சேர்த்தார். எனக்கு பல நண்பர்கள் அங்க இருந்தாங்க . அந்த நண்பர்களில் சில பேர் என்னோடு இயக்கத்திற்கு வந்தாங்க.

தேசம்: உங்களுக்கு இயல்பாகவே சாதி எதிர்ப்பு மனநிலை இருந்தது.

அசோக்: எனக்கு மாத்திரம் அல்ல என் நண்பர்களுக்கும் இருந்தது.

– தொடரும் –

 

விராட் கோலி மைதான ஒழுக்கம் தெரியாதவர் – இங்கிலாந்து வீரர் சாடல் !

லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது. கடைசி நாள் வரை திரிலிங்காக நகர்ந்த இந்த டெஸ்டில் இரு அணி வீரர்கள் இடையே வாக்குவாதம், சீண்டல்களை அவ்வப்போது பார்க்க முடிந்தது. இதை சுட்டிகாட்டி இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Nick Compton Hits Out At 'Foul-Mouthed' Virat Kohliஅவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மிகவும் இழிவாக பேசக்கூடிய ஒருவர் விராட் கோலி. 2012-ம் ஆண்டில் விளையாடி போது நானே மிரளும் அளவுக்கு அவர் என்னை நோக்கி அடுக்கடுக்காக வசைபாடினார். அதை ஒரு போதும் மறக்க முடியாது. அவரது இந்த செயலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை காட்டி விடும். சச்சின் தெண்டுல்கர், வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற தலைச்சிறந்த வீரர்கள் எல்லாம் களத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். அதற்கு நேர்மாறானவர் கோலி’ என்று சாடியுள்ளார்.
காம்ப்டனின் பதிவை கண்ட இந்திய ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை திட்டி வம்பு இழுத்தபோது எங்கு இருந்தீர்கள்? இந்த மோசமான நடத்தைக்கு உங்கள் ஊரில் என்ன பெயர்? தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் தனது கடைசி டெஸ்டில் ஆடிய போது அவரை பட்லர் வேண்டுமென்றே கிண்டல் செய்தாரே? அப்போது எங்கு இருந்தீர்கள் என்று சகட்டு மேனிக்கு காம்ப்டனை வறுத்தெடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் பெயரை மாற்றிய தலிபான்கள் – புதிய அடையாளங்களுடன் ஆப்கான் !

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் அந்த நாட்டு அரசை கைப்பற்றி உள்ளன.

புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்கள் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.

புதிய அரசின் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நினைவாக 102-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக (islamic emirate of afghanistan)  தலிபான்கள்பிரகடனம் செய்தனர். இதை தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முகைது தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் தலிபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக கடுமையான பண தட்டுப்பாடு, அதிகார வர்க்கத்தின் பற்றாக்குறை மற்றும் ஆயுதக்குழு ஒன்றின் எழுச்சி அச்சுறுத்தல் போன்றவை தலிபான்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

நாடு முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணமின்றி வறண்டுள்ளன. இறக்குமதியையே சார்ந்திருக்கும் ஆப்கானில் உணவு தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றால் சுமார் 3.8 கோடி மக்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அங்கு ஏற்கனவே இருந்த அரசுகள் எதிர்கொண்ட அதே சவால்களை தலிபான்களும் எதிர்கொள்ள நேரிட்டு உள்ளது.